முரசொலியில் 27.06.14 அன்று, தலைவர் கலைஞர் எழுதியுள்ள மடல், தி.மு.கழக வரலாற்றில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. கழகத்தின் அடுத்த அடியை மிக நுட்பமாக எடுத்துக் காட்டுகிறது.

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதும், அதைக் கண்டு எதிரிகளை விட நம்மிடையே இருக்கின்ற ஒரு சில நண்பர்கள் எனப்படுவோர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்னும் வரிகளோடு அந்த மடல் தொடங்குகின்றது.

“வாள்போல் பகைவரை அஞ்சற்க                     அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு”

என்னும் குறளை இவ்விடத்தில் எண்ணத் தோன்றுகிறது. கேள்(உறவு) என்று கூறாமல், ‘கேள்போல்’ என்றார் வள்ளுவர். அதே போக்கில் ‘நண்பர்கள் எனப்படுவோர்’ என்கிறார் கலைஞர்.

தி.மு.கழகம் தேர்தலில் மூன்றாம் இடம், நான்காம் இடத்திற்குப் போய் விடும், தி.மு.கழகம் விரைவில் அழிந்து விடும் என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசியவர்கள், தி.மு.க.வினால் பல்வேறு பயன்களைப் பெற்றவர்களாகவும், பெரும் பதவிகளை வகித்தவர்களாகவும் உள்ளனர் என்பது எவ்வளவு வேதனையான செய்தி!

தேர்தல் தோல்வியினால் அன்று, தேர்தலுக்கு முன்பே கழகத்தின் தலைமை சில நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது என்பதை நாடறியும். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னும் அந்நிலை தொடர்கின்றது.

தி.மு.க. தேங்கிவிட்டது. எந்தச் சீர்திருத்தமும் இல்லை, பேனாவைக் கீழே வைத்துவிட்டுச் சாட்டையைக் கையில் எடுங்கள் என்றெல்லாம் எழுதியவர்கள், இன்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வரவேற்கவில்லை. மாற்றங்களால் தி.மு.க.விற்குப் பின்னடைவு என்றே இப்போது எழுதுகின்றார்கள். ‘குண்டக்க மண்டக்க’ என்று தளபதி ஸ்டாலின் மீது பழி சுமத்துகிறார்கள். தி.மு.க. என்ன செய்தாலும் அதனை எதிர்ப்பது என்னும் ஒருவிதமான ஒவ்வாமை நோய் அவர்களை ஒட்டிக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா செய்யும் அடாவடித் தனமான மாற்றங்களை எல்லாம் ‘துணிச்சல்’ என்றெழுதிப் பாராட்டும் சில ஊடகங்கள், தி.மு.க.வில் மாற்றம் வந்தால் ‘குழப்பம் - கொந்தளிப்பு’ என்று எழுதுகின்றனர்.

அமைச்சரிடமோ, கட்சிப் பொறுப்பாளர் களிடமோ எந்த விளக்கமும் கேட்காமல், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று செயல்படும் சர்வாதிகாரத்திற்குத் துணிச்சல் என்று பெயராம்! முறைப்படி அறுவர் குழு ஒன்றை அமைத்து, அதன் கருத்துகளைப் பெற்று, தலைமை நடவடிக்கையைத் தொடங்கினால் அதன் பெயர் குழப்பமாம்.

நேற்று வரை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கத்திற்கு ஊடகங்களில் எந்த முதன்மையும் இல்லை. ஆனால் தி.மு.க பொருளாளர் ஸ்டாலினைத் தாக்கி அவர் விடுத்துள்ள அறிக்கைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளது.

பொதுவாக ஊடகங்கள் தலைவரைப் பாராட்டியும், தளபதியைத் தாழ்த்தியும் வெளியிடுகின்ற கருத்துகளின் ‘சூட்சுமத் தைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்பதே தலைவர் மடல் கூறும் செய்தி என்பதை நம்மால் உணர முடிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஓய்வறியா உழைப்பாளியாக, கலைஞரின் மறு பிறப்பாகத் தளபதி சுழன்று சுழன்று பணியாற்றியதை உண்மையான கட்சித் தொண்டன் ஒவ்வொருவனும் அறிவான். அவருடைய உழைப்பு, வலி, வியர்வை எதனையும் எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரை உள்நோக்கத்தோடு குறை சொல்பவர்களை நாம் பொருட் படுத்த வேண்டிய தில்லை.

இது ஒருவித மான உத்தி. கட்சிக்காக உழைக்கும் ஒருவனைச் சோர்வடையச் செய்துவிட்டால், அடுத்துக் கட்சிப் பணி களைத் தோளில் தாங்குவதற்கு ஆளில் லாமல் போய்விடும் என்று நினைக்கின்ற மலிவான உத்தி. தளபதியின் உழைப்பைக் கழகமும், தலைமையும் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ள நிலையில், கட்சிக்கு வெளியில் பொதுமக்களிடமும், அவருக்கு நற்பெயர் பொலிந்திடும் இவ்வேளையில், இந்தத் தந்திரங்கள் எல்லாம் எடுபடா என்பதைத் தலைவரின் மடல் தக்க தருணத்தில் உணர்த்துகின்றது.

இவையெல்லாம் புதியவை அல்ல. திராவிட இயக்கத்தையும், கழகத்தையும் வீழ்த்தப் பலர், பல் காலங்கள் முயன்றனர்.

“திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்! அதை எத்தனை எத்தனையோ வம்பர்களும், வஞ்சகர்களும் வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள் தூளாகிப் போய்விட்டன” என்கிறார் கலைஞர். உண்மைதான்... ராஜாஜி, ம.பொ.சி., எம். கல்யாணசுந்தரம் போன்ற பெரிய தலைவர்கள் பலரே, பல நேரங்களில் தி.மு.க.வை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிப் பணியாற்றினர்.

“இனிமேல் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை, திராவிட இயக்கத்தினர்தான் என் முதல் எதிரிகள்” என்றார் ராஜாஜி.

ஓராண்டு காலம், தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார் ம.பொ.சி.

‘தி.மு.க.வை அழித்துவிட்டுத்தான் மறுவேலை’ என்று கிளம்பினார்கள், பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த எம். கல்யாணசுந்தரமும், பாலதண்டா யுதமும்!

என்ன ஆயிற்று இறுதியில்? ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோ, ம.பொ.சி.யின் தமிழரசுக் கட்சியோ, எம்.கே.யின் ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சியோ இன்று தமிழகத்தில் இல்லை. ஆனால், தி-.மு-.கழகம் இன்றும் வலிமையான கட்சியாக வலம் வந்து கொண்டுள்ளது.

அவ்வளவு பெரிய தலைவர்களாலேயே அழிக்க முடியாத, திராவிட இயக்கத்தை, தி.மு.கழகத்தைச் சின்னச் சின்ன மனிதர்களால் அழித்து விட முடியாது.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, தமிழ்த்தேசியம் பேசுவோர் சிலரும், தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் சிலரும் கூட, தி.மு.க.வைப் பூண்டோடு வேரறுத்துவிடக் காத்திருக்கின்றனர்.

“அது (திராவிட இயக்கம்) பப்பாளி மரம் போல. வேர், தடி, தண்டு, இலை, காய், பூ, எல்லாமே உள்ளீடற்றவை” என்று எழுதுகிறார், ‘மேதாவி’ எழுத்தாளர் ஜெயமோகன்.

அட, அசகாய சூரர்களே... உள்ளீடற்ற ஒரு மரத்தை, உங்களால் ஒரு நூற்றாண்டு கடந்தும் வெட்ட முடியவில்லையே, வெட்கமாயில்லையா?

திராவிட இயக்கம் பப்பாளி மரமன்று. அது ஓர் ஆலமரம். வேர்கள் நிலைக்கும்! விழுதுகள் தாங்கும்!

Pin It