வரலாற்று எழுதியல் என்பது சுவையாக, சுவாரசியமாக இருக்கலாம். அதற்கான தரவுகளைக் கண்டடையும் தேடல் என்பது மிக நீளமானது. மிகக் கடினமானது. அந்த வகையில் ஆட்சியராகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல் “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை”. சிந்துவெளிப் பண்பாட்டினைக் கண்டறிந்த 1924 முதல், பல்வேறு ஆய்வறிஞர்களால் சிந்துவெளிப் பண்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இப்பண்பாட்டின் வேரினைத் துல்லியமாகக் கண்டறியும் பெரும் சவாலை முன்வைத்து பயணித்த இவ்வாய்வாளர் அதனை வெற்றிகரமாக நிறைவும் செய்துள்ளார். தமிழ் இலக்கியம் படித்த இவ்வாய்வாளருக்கு சங்க இலக்கியம், இப்பண்பாட்டினை ஆராய பேருதவியாக இருந்துள்ளது. சிந்துவெளி குறித்து இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் அனைத்தையும் உள்வாங்கி பல்வேறு ஆய்வு உத்திகளைக் கையாண்டு நிகழ்த்தப்பெற்ற இவ்வாய்வு வரலாற்று ஆய்வுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வந்த தடம்: மனிதப் பயணத்தின் தொடக்கம்:

மனித குலம் உலகில் எவ்வாறெல்லாம் மாற்றங்களைப் பெற்று வளர்ந்து ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) என்று மனிதர்களை அறிவியல் குறிப்பிடும் நிலைக்கு வந்தார்கள் என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது இப்பகுதி. மனித குல தோற்றம், இடப்பெயர்வு உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசும் இப்பகுதி, சிந்துவெளி மக்கள் தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் நோக்கி வருகை புரிந்த வரலாற்றை சான்றுகளுடன் நிறுவுகிறது.journey of a civilization indus to vaigaiவெண்கலக் காலம் : உலகின் பண்டைய பண்பாடுகள்:

உலோகங்களின் பயன்பாடு என்பது நாகரிக மனித சமூகத்திற்கு எத்தகைய வளர்ச்சியை, வளத்தை வழங்கியது என்பதை பரக்கப் பேசுகிறது. குறிப்பாக மனித குலம் நாகரிகத்துடன் வாழத் தொடங்கிய காலத்தினை அந்தந்த நாகரிக சமூகத்தின் பெயர் கொண்டு வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். அந்த வகையில் சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம் ஆகியவை மிகப் பழமையான நாகரிகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, இவற்றைத் தொடர்ந்து அடையாளம் பெறும் சிந்து வெளி நாகரிகப் பகுதிகளான ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் 700 கிலோ மீட்டர் அளவு இடைவெளி இருப்பினும் இவ்விரு இடங்களிலும் கிடைத்த அகழ்வாய்வுப் பொருட்கள் ஒத்த தன்மையுடன் இருக்கும் தன்மையை மிக நேர்த்தியாக இப்பகுதியில் சுட்டிக் காட்டியுள்ளார் இவ்வாய்வாளர்.

சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் கிடைக்கப்பெற்ற சுடுமண் பெண் சிற்பங்கள் தாய்த் தெய்வ வழிபாட்டின் அடையாளங்களாக இருக்கலாம் என்ற ஆசிரியரின் கருத்தாக்கம் இவ்வாய்வின் போக்கினை அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்த உதவியாக அமைந்துள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

திராவிட மொழிக் குடும்பம் அக்குடும்ப மொழிகளின் தனித்தன்மை, சிந்துவெளிப் பண்பாடு பரவியிருந்த நிலப்பரப்போடு திராவிட மொழிக் குடும்ப நிலப்பரப்பு ஒத்திருப்பது அதன் நீட்சியாக தமிழ் நிலப்பரப்போடு இச்சிந்தனை மீள் நினைவுக்கு ஆட்பட்டிருப்பது என்று சிந்து சமவெளி பண்பாட்டினைக் கண்டடைவதற்கான தரவுகளை அடுக்கடுக்காக முன்வைத்து மிகக் கவனமாக நிறுவியுள்ளார் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள். சிந்துவெளி பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தவர்களின் கருதுகோள்களை முறையாக இப்பகுதி பேசுகிறது. சிந்துவெளி எழுத்துகள் ஆய்வாளர்களுக்கு இன்றும் புதிராக இருப்பதை முன்வைக்கும் அதேநேரத்தில் அப்பகுதிகளின் இடப்பெயர்கள், தனிமனிதர்களின் பெயர்களை சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு வலிமையானத் தரவுகளை முன்வைத்துள்ளது.

இடம்பெயரும் இடப்பெயர்கள்: பெயர்களின் பாதச்சுவடுகள் 

இந்தப் பெயரிடுதல் என்பது “மானுடம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது” (பக்.100) என்று குறிப்பிடும் இவர், பெயரிடுதல் எவ்வெவ் வகைகளில் அமைந்துள்ளன என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயரும் மக்கள் தங்களுடன் அந்த இடத்தின் பெயரையும் எவ்வாறு சுமந்து செல்கின்றனர் என்பதையும் அப்பெயரினைத் தாங்கள் குடிபுகும் பகுதிக்கு பெயராக இட்டு வழங்குவதையும் உலகளாவிய அளவில் பல்வேறு சான்றுகளுடன் நிறுவியுள்ளார் இந்நூலாசிரியர்.

பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு நிகழ்ந்த இடப்பெயர்வுகள் குறித்து சுவையான தகவல்களை இப்பகுதியில் காணமுடிகிறது. ஓஹையோவில் மட்டும் இரண்டு லண்டன்கள், அமெரிக்காவில் மொத்தம் 23 பாரிசுகள் என்று பல நாடுகளின் இடப்பெயர்கள் அம்மக்களோடு இடம்பெயர்ந்தது என்பதை இக்கட்டுரை மிக நுட்பமாகப் புலப்படுத்தியுள்ளது.

பண்டைய தமிழகமும் பழந்தமிழ் இலக்கியங்களும் தென்கோடியில் உறைந்துகிடக்கும் மீள் நினைவுகள்:

திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம், பரவல் என்ற இரண்டு புதிர் முடிச்சுகளுமே நமது வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடையவை என்ற கருத்தினை வலிமையாக நிறுவியுள்ளார்.  பண்டைத் தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழ் இலக்கியங்கள் ஊடாக காணக் கிடைப்பதை சங்க இலக்கியம், தொல்காப்பியம் வழி தெளிவாக இப்பகுதி பேசுகிறது.

சங்க இலக்கியப் பாடல்களில் காணக்கிடைக்கும் பறவைகளையும், விலங்குகளையும் குறித்த பதிவுகளைப் பெரும் ஆதாரமாகக் கொண்டு அவை வாழ்ந்த நிலப்பரப்புகள் சார்ந்து இவ்வாய்வை அடுத்தக்கட்டத்திற்கு மிக அழகாக நகர்த்திச் சென்றுள்ளார்.

“தென்னிந்தியாவுக்கு மட்டுமே உரித்தான தாவர வகைகள், விலங்குகள் பற்றிய நுட்பமான தகவல்கள் எதுவும் வடமொழி இலக்கியங்களில் இல்லை” (பக்.151). இக்குறிப்பு இவ்வாய்வின் வீச்சினை கூடுதல் வலிமையாக்கியுள்ளது. தேக்குமரம் பற்றி வேத இலக்கியங்களில் ஒரு குறிப்பு கூட இல்லை. ஏனெனில் தேக்குமரம் வேதகால ஆரியர்கள் பார்த்திராத ஒரு மரம் என்று மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்தியுள்ளார் இவ்வாய்வாளர்.

திராவிடக் கருதுகோளுக்குச் சான்றளிக்கும் சிந்துவெளி இடப்பெயர்கள்

“திராவிடர்கள் சிந்துவெளிப் பகுதிகளில் வாழ்ந்தார்கள். அம்மக்களின் பண்பாடு சுமார் 3900 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்தது என்றால், அப்பகுதியில் புழக்கத்தில் உள்ள சில இடப்பெயர்கள் அதற்குச் சாட்சியம் அளிக்கக்கூடும்” (பக்.161) என்ற கருத்தாக்கத்தினை முன்வைத்து இடப்பெயர்கள் பண்பாட்டோடு கொண்டிருக்கும் பிணைப்பினை மனித மனங்களோடு ஒட்டியிருக்கும் பான்மையினை அறிவியல் பூர்வமான தரவுகளோடும், அந்தந்த நிலப்பகுதிகளின் வரைபடங்களோடும் நிறுவுகின்றார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளின் பெயர்களில் இடப்பெயர்கள் வழக்கில் உள்ளதை பல லட்சம் பெயர்களுக்கிடையில் ஆய்ந்து கண்டறிந்திருப்பது சிந்துவெளி ஆய்வுலகிற்கு பெரும் வெளிச்சத்தினை பாய்ச்சியிருப்பதை மறுக்க முடியாது.

சங்க இலக்கியம் பரக்கப் பேசும் நன்னன், வேள்பாரி, அதியர், நள்ளி என்று ஒவ்வொரு குறுநிலத் தலைவர்களின் பின்புலமும், இலக்கியச் சான்றுடன் நின்று போகாமல் இன்று வழக்கிலுள்ள அவர்களின் பெயர்கள், அவர்களோடு தொடர்புடைய அடையாளங்கள் ஆகியவற்றை மிக ஆழமாகவும் ஆய்வுப்பூர்வமாகவும் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.இப்பெயர்களோடு கூடிய அவ்விடங்களை பெரும் உழைப்புடன் அடையாளப்படுத்தியுள்ளார் இவ்வாய்வாளர்.

சிந்துவெளி நகரங்களின் மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு, இருமைத்தன்மை: ஒரு திராவிடக் கருத்தியல்;

திராவிட மொழிகளில் மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு எனும் இருமைத் தன்மை காணப்படுவதை மொழியியல் கொண்டும், இலக்கியச் சான்றுகள் கொண்டும் தொல்தமிழ் கல்வெட்டு சான்றுகள் கொண்டும் இக்கட்டுரை தெளிவாக நிறுவியுள்ளது.

சிந்துவெளி நகரங்களின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகக் குறிக்கும் கோட்டை பற்றிய குறிப்புகளைச் சங்க இலக்கிய சொல்லாடல்களூடாக பயணித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரானிய எல்லைப் பகுதிகள் மட்டுமன்றி இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றினூடாக கவனமாக தேடிக் கண்டடைந்துள்ளார் இந்நூலாசிரியர்.

ஹரப்பா முதல் ஆடுகளம் வரை:

 சிந்துவெளியில் கோழிச் சண்டை நடைபெற்றதற்கான சான்றுகள் தொடங்கி ஆடுகளம் திரைப்படம் உட்பட அனைத்தையும் உள்ளிட்ட திராவிடப் பண்பாட்டின் அறுபடாத இழையைச் சுவையாக இப்பகுதி நமக்கு அடையாளம் காட்டியுள்ளது.

திராவிடச் சிவப்பு : சிந்துவெளிப் பண்பாட்டின் நிறக்குறியீடு;

தமிழ்க் கடவுளாகிய முருகனை சேயோன், செவ்வேள் என்றெல்லாம் அழைப்பதில் தொடங்கி, சிவப்பு நிறம் அவர்களின் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்ததை அடுக்கடுக்கான சான்றுகள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. “பொருட்புலத்தில் வெளிப்படும் நிறக்குறியீடு ஒரு திட்டமிட்ட செயல்பாடு” (பக்.388). இந்தத் தொடர் புலப்படுத்தும் பொருளென்பது மேலோட்டமானது அன்று. கால, அரசியல், சமூக, பண்பாட்டுப் பின்புலத்துடன் இதனை ஒப்ப வைத்து நோக்க, திராவிடப் பண்பாட்டோடு இந்நிறம் கொண்டிருக்கும் உறவினை புரிந்துகொள்ளமுடிகிறது. சிந்துவெளி மக்களின் புழங்கு பொருட்கள், அவர்கள் உருவாக்கிய உருவங்கள், கட்டிடங்கள் என்று அனைத்தினூடாக இந்நிறம் இழையோடுவதையும், திராவிட மரபிலிருந்து முற்றிலும் மாறான மரபு ஆரிய மரபு என்பதனையும் அட்டவணை கொண்டும் குறியீடுகள் மூலமும் தெளிவுபடுத்தியுள்ளார் இவ்வாய்வாளர். சிந்துவெளி மக்களின் செங்கல் பயன்பாடு ஆரியர்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதை மேன்மேலும் நிறுவியுள்ளது இப்பகுதி.

திராவிட குஜராத்; வேளிரின் நெடுவாயில்

சங்க இலக்கியப் பாடல்களில் காணக்கிடைக்கும் ஒட்டகம் பற்றிய அரிய காட்சிகளையும், தொல்காப்பியம்- பொருளதிகாரத்தில் காணும் மரபுச் சொற்களில் ஒட்டகம் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு பாலைவனத்தில் வாழும் இவ்விலங்கு குறித்தப் பதிவு செவ்விலக்கியத்தில் இடம்பெற்றதற்கான காரணங்களை ஆய்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் இவ்வாய்வாளர். சங்க இலக்கிய நூல்களான அகநானூறோ, சிறுபாணாற்றுப்படையோ மிக இயல்பாக ஒட்டகம் பற்றிய சித்தரிப்புகளை முன்வைத்த பாங்கு இவ்வாய்வாளரை சிந்திக்கத் தூண்டியுள்ளது. அதனடிப்படையில் கூர்மையான இவரின் ஆய்வுப் பார்வை ‘திராவிட குஜராத்’ என்ற பொருண்மையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.

திராவிட மகாராஷ்டிரா : நன்னனின் பொன்நிலம் என்ற பொருண்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. “சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிற பல்வேறு இடங்களின் பெயர்கள், குன்றுகளின் பெயர்கள், நதிகளின் பெயர்கள் மகாராஷ்ராவில் இன்று வரை எஞ்சியுள்ளன என்ற சான்றாதாரம் வியப்பை அளிக்கிறது” என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் அடுக்கடுக்கான தரவுகள் நம்மையும் பெரும் வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.

கொங்கு மற்றும் நகரத்தார் மரபுகளில் காணக் கிடைக்கும் சிந்துவெளிச் சுவடுகள்;

வணிகம், வேளாண்மை, புலம்பெயர்தல் போன்றவற்றோடு தொடர்புடைய இவர்களின் பண்பாட்டு இயங்கியலை பல்வேறு கோணங்களில் உறுதிப்படுத்தியுள்ளார் இந்நூலாசிரியர். இப்பொருண்மையின் தொடர்ச்சியாக இடம்பெறும் ‘நகரத்தார்’ வாழ்வியலை பல்வேறு ஆவணங்களோடு ஒப்பிட்டு விரிவாக விளக்கியுள்ளார். நகரத்தாரின் பயண வழிகளையும், அவர்களின் பண்பாட்டுத் தடங்களையும் இணைத்துப் பார்க்கும் அதே வேளையில் சங்க இலக்கியத்துடன் இவற்றை ஒப்பிட்டு காட்சிப்படுத்தியுள்ளார் இந்நூலாசிரியர்.

சிலம்பு; திராவிடப் பெருவெளியில் தாய்த்தெய்வங்கள்

சிந்து முதல் வைகை வரை எனும் ஆய்வுக் கட்டுரை சிந்துவெளி நிலப்பகுதி எங்கும் பரவியிருக்கும் கண்ணகி வழிபாட்டின் வீச்சினை பரக்கப் பேசுகிறது. சிந்து வெளிப் பகுதிகளில் காணக்கிடைக்கும் வழிபாட்டு முறைகளையும் அப்பகுதியில் வாழ்ந்த பெண்கள் சிலம்பு அணிந்தமையையும் சர் ஜான் மார்ஷல் அளித்துள்ள ஆவணங்களை மேற்கோள் காட்டி நிறுவியுள்ளார் இவ்வாய்வாளர். திராவிட நிலப்பகுதி எங்கும் புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று இடங்களின் பெயர்கள் காணப்படுவதை தெளிவுபடுத்தியுள்ளார்.கண்ணகி வழிபாட்டின் நீட்சியை இலக்கியத் தரவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் வழி அடையாளப்படுத்தியுள்ளார். கண்ணகி என்ற பெயர்கொண்ட தமிழ்நாட்டுப் பெண்களின் அடர்த்தியைக் காட்டும் வரைபடம் நம் தொல் மரபின் நீட்சியைக் காட்சிப்படுத்துகிறது.

வன்னியின் வேர்கள்: வாழ்வின் வரம்

சிந்துவெளிப் பொறிப்புகளிலும், சங்க இலக்கியங்களிலும் வன்னிமரம் பெற்றிருக்கும் பேரிடத்தை விளக்குகிறது இப்பகுதி. இனத்தின் பெயராகவும், அம்மக்களின் வாழ்வியல் அடையாளமாகவும் இம்மரம் விளங்குவதை பல்வேறு சான்றுகள் வழி தெளிவுபடுத்துகிறது இப்பகுதி.

ஆடுகளம்: விளையாட்டு எனும் வாழ்வியல்

மொகஞ்சதாரோவில் கிடைத்த, காளைகளோடு கூடிய முத்திரை, இன்றைய ஜல்லிக்கட்டுடன் ஒத்திருப்பதை சங்க இலக்கியச் சான்றுகளுடன் இணைத்து அதன் தடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர்களின் வீரத்தை பறைசாற்றும் பெரும் சான்றாக இந்த முத்திரை அமைந்துள்ளது.   

உருளும் பகடைகள்: கடந்த காலமும் பொழுது போக்கும்

சிந்துவெளிப் பண்பாட்டில் விளையாட்டும், அது சார்ந்து உருவாக்கப்பட்ட களிமண் பொம்மைகளும், சுடுமண் உருவங்களும் அம்மக்களின் வாழ்வியலை உணர்வுப் பூர்வமாக முன்வைக்கும் பேராவணமாக விளங்குவதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தரவுகளோடு முன்வைத்துள்ளனர். வாசர்களாகிய நாமும் சிந்துவெளியைப் புரிந்துகொள்ளவும், அம்மக்களின் வாழ்வியலோடு கூடிய ரசனையினைக் கண்டறியவும் இப்பகுதி பெரும் உதவியாக உள்ளது.

ஆதிச்சநல்லூரும் கீழடியும்: தொப்புள்கொடி

 இப்பகுதி புலப்படுத்தும் வரலாற்றுப் புரிதல் என்பது பெரும் தேடலின் விளைவு. ஆதிச்ச நல்லூர், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வின் விளைவாகக் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிந்துவெளியில் கிடைக்கப்பெற்ற சான்றுகளுடன் ஒத்திருப்பதை இணைத்து விரிவாக இவ்வியல் பேசுகிறது. மேலும் சங்க இலக்கியப் பாடல்கள் கூறும் விடயங்களை கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை நம்முள் ஒரு கிளர்ச்சியை, பெருமிதத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. “தொல்பொருள் ஆராய்ச்சியும், தொல் இலக்கியமும் கைகுலுக்கிக் கொள்ளும் புள்ளியாகக் கீழடி இருக்கிறது” என்ற ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் கூற்று இவ்வாய்வின் மைய இழை.தமிழி என்ற மைல்கல்லில் தொடங்கிய இத்தேடல் கீழடி வரை தொடரும் வரலாற்றினை இந்நூல் மிக நுட்பமாகவும் மிக ஆழமாகவும் பதிவுசெய்துள்ளது.

இவ்வாய்வாளரின் முப்பது ஆண்டுகால கடின உழைப்பின் பலனாக இவ்வாய்வு நூல் தமிழ்ச்சமூகத்திற்கு சாத்தியமாகியுள்ளது. இந்நூல் முழுமையும் காணக்கிடைக்கும் மேற்கோள்கள், வரைபடங்கள், சங்கப் பாடல்கள், அட்டவணைகள் என்று ஒவ்வொன்றும் சிந்துவெளி மக்கள் திராவிடர்களே என்பதை அழுத்தமாக பதிவுசெய்கின்றன. தான் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருண்மையை அதற்குரிய அறத்துடன் எழுதிச் சென்றுள்ளார் இவ்வாய்வாளர். இந்நூலின் மொழிநடையும் அதனூடான வரலாற்றுத் தரவுகளும் வாசிப்பினை இலகுவாக்குகின்றன.

தொடங்கிய புள்ளியிலிருந்து சற்றும் பிசகாமல் இவ்விழையைக் கொண்டு சேர்த்த பெருமை இவ்வாய்வாளரைச் சேரும். தொல் மரபின் நீட்சியை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தியுள்ளார். இனி வரும் ஆய்வாளர்களுக்கு இவ்வாய்வு நூல் பெரும் வழிகாட்டி. இலக்கியத் தரவுகளும் வரலாற்று ஆவணமாகப் பயன்படும் என்பதை ஆய்வுலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு பண்பாட்டின் பயணம்; சிந்து முதல் வைகை வரை என்ற இவ்வாய்வு நூல் தமிழ்ச் சமூகத்திற்கு இவ்வாய்வாளரின் பெருங்கொடை என்றால் அது மிகையில்லை..

- முனைவர் ஏ.இராஜலட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி புதுவை - 3.

Pin It