mk stalin in assemblyவரும் காலம் கணினியுகம் என்பதை அறிந்து 30 ஆண்டுகளுக்கும் முன்பே மேல்நிலைக் கல்வியிலேயே கணினிக் கல்வியை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்தவர் கலைஞர். அப்படித்தான் மேல்நிலைக்கல்வியில் அறிவியல் படித்த மாணவர்கள் மருத்துவம் படிக்க இந்தியாவிலேயே ஒற்றைச்சாளர முறைக் கலந்தாய்வை நடைமுறைப் படுத்தினார் கலைஞர். அதுதான் இன்றைக்கு குக்கிராமங்கள் வரை சிறப்பான சுகாதாரக் கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது.

இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் பாடமே தேவையில்லை நாங்கள் சொல்லுகிறப் பாடத்தைத் தனியார் கோச்சிங் சென்டரில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தி, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் படித்துத் தேர்வானால் போதும், மருத்துவம் படிக்க முடியும் என்கிற நீட் தேர்வைக் கல்வி சமூகரீதியாக மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியிருக்கிற யாராலும் நியாயப் படுத்த முடியாது என்கிறோம். இந்தச் சூழ்ச்சியான வர்ணாஸ்ரம தர்மத்தைத்தான் அறிவுத் தீண்டாமை என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் சமத்துவ சமூகநீதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அனிதா தனது உயிரை மாய்த்துப் போராடியும் 2017ஆம் ஆண்டு அனிதாவின் பிரேத பரிசோதனை நடக்கும் போதே தமிழ்நாட்டில் நீட்தேர்வும் நடந்தது. இந்தக் கொடுமையைத் தடுப்பதற்குத் துணிவற்று டில்லியின் தாழ்பணிந்து கிடந்த பழனிசாமியும், பன்னீரும்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையக் காரணமான சமூக அநீதிக் குற்றவாளிகள் என்பதை அவர்கள் மறுக்கலாம் ஆனால், காலம் குறித்து வைத்திருக்கிறது.

நீட் தேர்வை ஒழிப்போம் என்ற வாக்குறுதியைச் சொல்லி திமுக வெற்றி பெற்றுவிட்டது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதானே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த விருப்ப! அதனால்தானே திமுக ஆட்சிக்கு வந்தது! அதைத்தானே திமுக அரசும் தமிழ்நாடு சட்டமன்றமும் தீர்மானமாக நிறைவேற்றி சட்டப்படி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது! இந்தத் தீர்மானத்தைத்தானே அதிமுகவும் ஆதரித்தது!

142 நாட்களுக்குப் பிறகு ஆளுநர் இந்தத் தீர்மானத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். முறையாக இந்தத் தீர்மானத்தை அவர் குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பியிருக்க வேண்டும். மாறாக நமக்கே அனுப்பிவிட்டுப் பாகுபாடு பற்றியும் கிராமப்புற மாணவர்கள் பற்றியும் கண்ணீர் வடித்திருக்கிறார் ஆளுநர். இதை நீலிக்கண்ணீர் என்பதா, முதலைக் கண்ணீர் என்பதா, என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

உண்மையிலேயே சமூகநீதியின் மீதும், நீட் எதிர்ப்புக் குரலின் மீதும் அதிமுகவிற்கு அக்கறை இருந்திருக்குமானால், அவர்கள் ஆளுநரின் செயலை அல்லவா கண்டித்திருக்க வேண்டும்? மாறாக ஆளுநரின் சட்டவிரோத செயல்பாட்டிற்கு வெஞ்சாமரம் வீசியபடி திமுகவைக் கண்டிக்கிறார்கள் என்றால், சமூகநீதிக்கான இயக்கங்கள் இந்தக் கும்பலை அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும்.

1972 இல் டில்லியின் சூழ்ச்சியால் பிரசவித்து 1987இல் அதே டில்லியின் தயவால் காப்பாற்றப்பட்டு 2016இல் மீண்டும் அதே டில்லியின் ரகசியத் தொடர்புகளால் பாதுகாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இப்போது திருவாளர்கள் பழனிசாமியும் பன்னீரும் சமூகநீதிக்கு எதிராகப் பேசுவதோ, நீட்டை ஆதரிப்பதோ, ஆளுநரைப் பாதுகாக்க முயற்சிப்பதோ வியப்பானதில்லை. இவர்கள் வடவர்களின் வழியில் வரலாற்றைத் திரிப்பதும் வியப்பில்லை.

 இந்த நீட் தேர்வு முறை எங்கள் கல்வியின் கட்டமைப்பையும், சுகாதரக் கட்டமைப்பையும் மட்டுமல்ல நூற்றாண்டுகளாக நாங்கள் கட்டிக் காத்து வருகிற சமூகக் கட்டமைப்பையே சிதைக்கிறது. நாங்கள் மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று சொன்ன பெரியாரின் வார்ப்புகள்! எங்கள் அடையாளத்தை சிதைக்கும் பகைவரின் முயற்சியை சினங்கொண்டு தடுக்கும் போரில் சமரசமின்றிச் சமராடுவோம்! எனவே நீட் தேர்வை மட்டுமல்ல சமூகநீதிக்கு எதிரான எந்த ஒரு சூழ்ச்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஓங்கி முழங்கியிருக்கிறார் நமது முதல்வர்! இதுதான் நீதிக்கட்சியின் நீட்சியான முழக்கம்!

நமது பணி நமக்கான உரிமைகளைக் காக்கும் பணி! போராளிகள் எப்போதும் புல்லுருவிகளைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதுதான் வரலாறு! வரலாற்று நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க! வாழ்க!

- காசு.நாகராஜன்

Pin It