இந்தியாவின் மக்கள் தொகை 2001 இல் 102.7 கோடிப்பேர்.

உலக நாடுகளின் வளர்ச்சி விழுக்காடு என்பது பல காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அக் காரணிகளுள் முதன்மையானவற்றில் - 155 நாடுகளின் வரிசையில், இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி விழுக்காடு எந்த இடத்தில் உள்ளது?

1.     தரமான தொடக்கக்கல்வி      98 ஆவது இடம்

2.     சந்தைச் செயற்பாட்டில் 17     ஆவது இடம்

3.     மின் வசதி, சாலை வசதி போன்ற கட்டுமான வசதிகளில்     86     ஆவது இடம்

4.     வணிக நவீன வசதிகளில்     44 ஆவது இடம்

5.     புதுமை கண்டுபிடிப்புகளில்    39 ஆவது இடம்

இவற்றுடன் வறுமைக்கு ஆட்பட்டோர் 42 விழுக்காட்டினர் என உலக வங்கிக் கணக்குக் கூறுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசினர் 30 விழுக்காடு மக்கள் வறுமைக்கு ஆட்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். வறுமையின் அளவு கோல் என்ன? ஒரு தனி நபர் ஒரு நாளைக்கு ஒன்றே கால் டாலர் (ரூ. 55) சம்பாத்தியம் செய்வதே வறுமையின் அளவுகோல். ஆனால் அய்க்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் கணக்குப்படி - ஆரடவனைiஅநளேiடியேட ஞடிஎநசவல ஐனேநஒ ஆஞஐ - அடிப்படையில் இந்தியரில் 55 விழுக்காட்டினர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட இந்தியாவில் 2008 இல் இருந்த செல்வர்களின் எண்ணிக்கை 2009 இல் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது. குடியிருக்கும் வீட்டை நீக்கி, 10 இலட்சம் டாலர் மதிப்பீடு உள்ள சொத்துகளைப் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 2009 இல் 1,26,756 பேராக வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட பணக்காரர்களின் எண்ணிக்கை 2009 இல் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது; அடுத்து சப்பான், செருமனி, சீனா முதலான நாடுகளில் அதிகமாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டை நோக்கமாகக் கொண்டது. ஆனால் 7.2 முதல் 8.4 விழுக்காடு அளவே வளர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய அரசே ஒத்துக்கொள்கிறது. இச்சூழலில் தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்கள் 50 இலட்சம். மிகவும் ஏழைக் குடும்பங்கள் 12 இலட்சம் இருப்பதாகத் தமிழக அரசே ஒத்துக்கொள்கிறது.

ஏழ்மைக்கோடு, வறுமைக்கோடு என்பவை பற்றி இந்திய அரசும், மாநில அரசுகளும் அளிக்கும் புள்ளி விவரங்களுக்கும், உலக நாடுகள் அவை வளர்ச்சி பற்றிய நிறுவனமும், உலக வங்கியும் அளிக்கும் புள்ளி விவரங்களுக்கும் இடையில் 30ரூ, 42ரூ, 55ரூ என்ற தன்மையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் எது உண்மை என யார் தீர்மானிப்பது?

வளர்ச்சி நிலையைக் குறித்திட கார்கள் உற்பத்திப் பெருக்கம், இரு சக்கர வாகனங்கள் உற்பத்திப் பெருக்கம் இவற்றை அரசு குறிப்பிடுகிறது. முதலில் கார் உற்பத்திப் பெருக்கத்தால் வெகு மக்களின் வேலையில்லாத திண்டாட்டமும், அதன் விளைவான வறுமையும் எப்படி நீங்கும். கார்கள் உற்பத்தியாலும், பயன்பாட்டினாலும் நடுத்தரக் குடும்பத்தினரும், மாதச் சம்பளக்காரர்களும் கார்களைக் கடனுக்கு வாங்கிக் கொண்டு, புதிய கடன்காரர்களாக ஆகின்றனர். பெரிய, சிறிய நகரங்களில் கார்கள், மற்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது; நோய்கள் பெருகுகின்றன.

கார் உற்பத்தித் தொழிற் சாலைகளை அமைக்க வேண்டி அயல் நாட்டினர், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள வேளாண் நிலங்களை ஈன விலைக்கு வாங்கித் தடையில்லா மின்வசதி, வரி இல்லாத உற்பத்தி விடுமுறை வசதி இவற்றைக் கொண்டு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வழி அமைக்கிறார்கள்.

அதே போல் இந்தியாவில் கைப்பேசி வைத்திருப்போர், இன்று, 65.25 கோடிப்பேர் உள்ளனர் என்பது வளர்ச்சி விழுக்காட்டின் அடையாளம் என்று அரசு கூறுகிறது. நாடோடிகளான நரிக்குறவர், தெருப்பிச்சைக்காரர், கை வண்டி இழுப்போர், மூட்டை தூக்குவோர் கூட வசதி, தேவை, நாகரிகத்தின் அடையாளம் என்பதால் கைப்பேசி வைத்துள்ளனர். சில குடும்பத்தார் தலைக்கு ஒரு பேசி வைத்துள்ளனர். அதே போல் ஒரே குடும்பத்தார் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள், இரு சக்கர வண்டிகளை வைத்துள்ளனர்.

இப்படிப்பட்ட நாட்டில், பசியால் பட்டினி கிடக்கும் மக்கள் அதிகம் உள்ள 88 நாடுகள் பட்டியலில், இந்தியா 66வது இடத்தில் உள்ளது. இன்றைய இந்தியாவில் தானியங்களை இருப்பு வைத்திடப் போதுமான கிடங்குகள் இன்மையால் 67,000 டன் உணவு தானியம் புழுத்துப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாத கேடு ஏற்பட்டுவிட்டது.

மொத்த அரிசி, கோதுமை தானிய உற்பத்தி 17 கோடி டன். இதில் விற்கப்பட வேண்டியது 12 கோடி டன். அரசு கொள்முதல் செய்யும் தானியம் 8 கோடி டன். இதில் 2.2 கோடி டன் தானியத்தைச் சேமித்து வைப்பதற்கான கிடங்கு வசதிகள் இல்லை. எனவே மழையாலும், வெயிலாலும், எலிகளின் தொல்லை யாலும், அதிகாரிகளின் ஊழலாலும், தானிய வணிகர் களின் திருட்டாலும் - அரசு கிடங்குகளிலுள்ள தானியம் வீணாகிவிட்டது. அப்படி வீணாகாமல் ஏழைகளுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, 12.08.2010 இல் இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு ஆணையிட்டது.

ஆனால், இந்திய அரசு வறுமையை ஒழிப்பதில் போதிய கவலை எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் சொந்த நிலங்களை ஈன விலைக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வாழ இடம் இன்றித் தவிக்கும் பழங்குடி மக்களையும் ஏழைகளையும் “கிளர்ச்சிக்காரர்கள்”, “ஆயுதப் போராளிகள்”, “மாவோ தீவிரவாதிகள்” எனப் பெயரிட்டு அவர்கள் பேரில் காவலர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், சிறப்புப்படைப் பிரிவினர் ஆகியோரை ஏவிக்கொன்று குவிக்கவே இந்திய அரசு முயல்கிறது. தன் தரைப் படையையும், வான் படையையும் மேலும் மேலும் வலிமைப்படுதுவதில் முனைப்பாக உள்ளது.

அமெரிக்கா, இரஷ்யா, இங்கிலாந்து முதலான நாடுகளிலிருந்து நவீன ஆய்தங்களையும், வானூர்திகளையும் வாங்கிக் குவிக்கிறது.

2002-2009 காலத்தில் எட்டு ஆண்டுகளில் 32,400 கோடி டாலருக்கு ஆய்தங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு, 14,200 கோடி டாலருக்கு ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. வளரும் நாடுகளில் ஆய்தங்களை வாங்குவதில் சவுதி அரேபியா, முதலாவது நாடாகவும், இந்தியா இரண்டாவது நாடாகவும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளிலும் செல்வம் பெருகிறது. ஆனால், செல்வம் சிலரிடம் மட்டுமே குவிகிறது. பெரிய எண்ணிக்கையிலான உழைப்பாளி மக்கள் எழுத்தறிவு மறுக்கப்பட்டவர்களாகவும், வாழ்க்கை வசதிகள் மறுக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஈன நிலையை எதிர்த்துப் போராடும் எழைகளும், மாவோ இயப் போராளிகளும் நசுக்கப்படு கின்றனர்.

மாவோஇயப் போராளிகள் சத்தீஷ்கரிலும், பீகாரிலும் மய்யங் கொண்டு 03.05.2010க்கும் 29.07.2010க்கும் இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியப் படையினையும் பொதுமக்களையும் கொன்றுள்ளனர்; இரயிலைக் கவிழ்த்து 149 பயணிகளைக் கொன்றுள்ளனர். இவர்களை அடக்குவதற்கு மேலும் மேலும் படைகளை அப்பகுதிகளுக்கு இந்திய அரசு அனுப்புகிறது; ஆய்தங்களைக் கீழே போட்டுவிட்டுப் பேச்சு வார்த்தைக்கு வர அழைக்கிறது; சிலரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்திட மய்ய அரசு ஆய்வுக்குழு, மாநில அரசுகளின் ஆய்வுக் குழுக்கள் இவற்றை அமர்த்துகிறது. ஆனால் அப்பகுதிகளில் எந்த உருப்படியான வளர்ச்சித் திட்டத்தையும் வகுக்கவோ, செயற்படுத்தவோ இந்திய அரசு முன் வரவில்லை.

இந்த ஏகாதிபத்தியப் போக்கை எதிர்த்துப் போராட ஏற்ற ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் வறியவர்களிடம் உண்டாக்கிட ஏற்ற செயல்பாடுகளைப் பொதுவுடைமை பேசுவோர் மேற்கொள்ளவில்லை. இந்தத் திசை நோக்கி எல்லோரும் முயன்றாலன்றி இந்தியரில் எழுத்தறிவு மறுக்கப்பட்டோரும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டோரும் விடுதலை பெற இயலாது.

வே.ஆனைமுத்து