வட இந்திய உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் சரியான ஊறுகாய்ப் பிரியர். தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து விடுதிப் பணியாளரிடம் ஊறுகாய் கேட்டார். Pickle, Pickle என அடுக்குத்தொடராகச் சொல்லி, சொல்லி விக்கல் வந்ததே தவிர Pickle வந்த பாடில்லை.

ஊறுகாய்க்கு இந்தியில் என்ன? அதை எப்படிக் கேட்டுப் பெறுவது என செய்வதறியாது அமைதியாகிவிட்டார்.

அடுத்த கணமே என்னுடைய குரல் “ ஹே பையா, ஆச்சார் லா வோ..” என ஒலித்தது. உடனே..ஊறுகாயும் மேசைக்கு வந்தது. என் நண்பனுக்கு வியப்பும் வந்தது?

எனக்கு எப்படி இந்தி தெரிந்தது? இப்படித்தான் தெரிந்தது...

ஆம், சுற்றுப்பயணங்களில் எப்போதும் என்னுடனே வைத்திருக்கும் செயலி Google Translate.

முதலில் Play Store சென்று Google Translate Download செய்து கொள்ளுங்கள். உலகில் பேசப்படும் முதன்மையான 103 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் அற்புதமான செயலி இது.

உதாரணமாக இந்தி பேசுவரிடம் “ உன் பெயரென்ன? “ என்று கேட்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதனை தமிழில் தட்டச்சு செய்யுங்கள்.. இப்போது கீழே உள்ளே கட்டத்தில் Hindi எனத் தேர்வு செய்யுங்கள். ”துமாரா நாம் கியா ஹே?” -அடுத்த நொடிப்பொழுதே வந்துவிடும் அவ்வளவுதான். இதனைக்கொண்டு உங்கள் கருத்துகளை உடனடியாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

எந்த மொழியைத் தேர்வு செய்கிறீர்களோ அந்த மொழியில் சொற்கள் ஆங்கிலத்தில் வந்துவிடும். கூடவே ஒரு ஒலிக்கோப்பும் (Audio File) இருக்கும். அதைத் தொட்டால் அந்த சொற்பதங்களை வாசித்துக் காண்பிக்கும். அந்த உச்சரிப்பைக் கொண்டே நீங்கள் பேசலாம்.

தமிழில் இருந்து பிற மொழிக்கும், பிற மொழியிலிருந்து தமிழுக்குமாக 103 மொழிகள் உடனடியாக மொழிபெயர்த்துத் தருகிறது. 52 மொழிகள் இணைய இணைப்பு இல்லாமலே இந்த செயலியைப் பயன்படுத்த முடியும்.

இப்போது இந்த செயலி இன்னும் மேம்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன் செய்துகொண்டு கேமராவைத் திறந்து கொள்ளுங்கள். பிற மொழி சொற்களைப் படம் பிடிப்பது போல் நீட்டுங்கள். பார்க்கும் போதே அந்த சொற்கள் தேவையான மொழிக்கு மாறியிருப்பதைக் காணலாம். இந்த வசதி இந்தி உள்ளிட்ட 53 மொழிகளுக்கு வந்துள்ளது. இன்னும் குறுகிய காலத்தில் தமிழுக்கும் வந்துவிடும்.

தாய்மொழிதான் தெரியும்; பிற மொழி தெரியாதே என வருத்தப்படுபவர் உண்டு. இனி உங்களுக்கு இந்தக் கவலை வேண்டாம். உங்கள் அச்சத்தை தொழில் நுட்பம் உடைத்தெறிகிறது. மொழி பெயர்ப்பில் எழுவாய், பயனிலை என்ற சிறு சிறு மாற்றங்கள் செய்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். தமிழ் உள்ளீடு கற்றுக்கொண்டு திருத்தங்களை நாமே கூட செய்யலாம். அவ்வாறு செய்தால் செம்மையான தமிழ் மொழி பெயர்ப்பு கிடைப்பது உறுதி. இதன் வழியாக பிறமொழி இலக்கியங்களை நம் மொழிக்கும், நமது படைப்புகளைப் பிற மொழிகளுக்கும் மொழிபெயர்ப்புச் செய்யும் காலமும் கனிந்து வருகிறது.

உலக மொழிகள் நம் உள்ளங்கைகளில் வந்துவிட்டன. யாதும் ஊரே யாவரும் கேளிர்! கணியன் கனவினை அறிவியல் சாத்தியமாக்கி வருகிறது. இந்த செயலியை நிறுவ கீழ்கண்டுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate

Pin It