ஆய்வுப் பேரறிஞர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் படித்தது பத்தாம் வகுப்பு மட்டுமே.

வெறும் திண்ணைப் பள்ளியில் மட்டுமே படித்துவிட்டு பண்டிதர் ஆனவர், ஆய்வறிஞர், தலைசிறந்த உரைவேந்தர்களுள் ஒருவர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

namuvengakasamiஇவரின் இயற்பெயர் சிவப்பிரகாசம். ஆனால் இவர் ந.மு.வேங்கடசாமி என்றே தமிழுலகில் நிலைபெற்ற புகழைப் பெற்றிருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், நடுக்காவேரி இவரின் சொந்த ஊர்.

தாயார் தைலம்மாள், தந்தை முத்துசாமி.

இவர்களின் ஐந்தாம் மகன் சிவப்பிரகாசம் என்ற வேங்கடசாமி.

1884ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் பிறந்தார்.

சிறு வயதில் அக்காலத் திண்ணைப் பள்ளியில் படித்தார். இக்கால நான்காம் வகுப்புக்குச் சமமான படிப்பு அது.

திண்ணைப் பள்ளியிலும், தந்தையிடமும் எண்சுவடி, குழிமாற்று, நெடுங்கணக்கு, இலக்கம், நெல்லிலக்கம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, வெற்றிவேட்கை, இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது போன்றவைகளைக் கற்றுத் தேர்ந்தார்.

இவரின் தந்தை வேளாண் தொழில் செய்பவர். அதனால் பகலில் தந்தைக்கு உதவியாக கழனியில் வேலை செய்வதுடன், இரவில் படிக்கத் தொடங்கினார்.

இவருக்கு ஆசிரியர் என்று யாரும் இல்லை. ஆசிரியர் துணையின்றி நன்னூல் உள்பட தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும் கற்றார்.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை அவர்கள் அச்சங்கத்தின் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி ஒன்றையும் நிறுவி இருந்தார். அக்கல்லூரியில் மூவகைத் தேர்வுகள் இருந்தன.

1. நுழைவுப் பண்டிதம் (பிரவேசப்பண்டிதம்)

2. இடைநிலைப் பண்டிதம் (பாலபண்டிதம்)

3. பண்டிதம்

ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டிய இப்பண்டிதர் படிப்பை 1905-1907 வரை மூன்று ஆண்டுகளில் முடித்து முதல் மாணவராகத் தேறினார் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.

இவர் அக்கல்லூரியில் படிக்கவில்லை. மாறாக தனித்தேர்வராகத் தேர்வு எழுதினார்.

இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாண்டித்துரையார், இவருக்குத் தங்கத்தாலான அணி ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்.

கோவை தூய மைக்கேல் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர், எஸ்.பி.ஜி. கல்லூரின் தமிழாசிரியர், திருச்சி பிசப் கல்லூரியின் தலைமைத் தமிழாசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய இவர் -

தமிழவேள் உமாமகேசுவரனார் பரிந்துரையில், கரந்தைத் தமிழ்கல்லூரியின் முதல்வராகப் பெறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

உ.வே.சாமிநாதரால் ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டுவரப்பட்ட அடியார்க்கு நல்லார், அரும்பதவுரைகாரர் ஆகியோரின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரத்திற்கு மிகச் சிறந்த உரை எழுதியவர் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.

அதைத் தொடர்ந்து மணிமேகலைக்கும் உரை எழுதினார். மணிமேகலையில் காணும் 30 காதைகளுள் ‘விழாவறை காதை’ தொடக்கம் ‘வஞ்சிமாநகர் புக்க காதை’ வரையான 26 காதைகளுக்கு இவர் உரை எழுதினார்.

எஞ்சிய நான்கு காதைகளுக்கு உரை எழுத இவரின் நலிவுற்ற உடல்நிலை காரணமாக முடியாமல் போனது. இந்நான்கு காதைகளுக்கும் உரை எழுதியவர் உரை வேந்தர் ஔவை சு.துரைசாமி அவர்கள்.

இவ்விரு காப்பியங்களுக்கும் ந.மு.வேங்கடசாமி அவர்கள் உரை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர் பாகனேரி மு.காசி விசுவநாதன்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநாநூறு உள்பட தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவைகளுக்கும் உரை எழுதியிருக்கிறார்.

‘சேரன் செங்குட்டுவன்’ என்ற சிறப்பான நூலை எழுதியவர் மூ.இராகவய்யங்கார். இவரின் இன்னொரு நூல் ‘வேளிர் வரலாறு’

இந்நூலைப் படித்த வேங்கடசாமி அவர்கள் அதிலுள்ள வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் தானும் ஒரு ‘வேளிர் வரலாறு’ நூலை எழுதினார். இந்நூலைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டது.

வேளிர் வரலாறு - சோழர் வரலாறு - கள்ளர் சரித்திரம் - நக்கீரர் - கபிலர் - கண்ணகி வரலாறும், கற்பும் மாண்பும் - கட்டுரைத் திரட்டு போன்ற நூல்கள் எழுதியிருக்கிறார்.

இவற்றுள் ‘நக்கீரர்’ என்ற நூல் இலண்டன் பல்கலைக் கழகத்திலும், காசி இந்துப் பல்கலைக் கழகத்திலும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளர் சரித்திரம் ஒரு சமூகம் சார்ந்த நூலாக இருந்தாலும், அது தமிழக மக்களின் வரலாறாக இருக்கிறது.

கலைஞர் அவர்கள் தான் எழுதிய ‘தென் பாண்டிச் சிங்கம்’ என்ற வரலாற்றுக் கதையின் முன்னுரையில், “தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற திரு ந.மு.வே.நாட்டார் அவர்களின் ‘கள்ளர் சரித்திரத்தின்’ துணை கொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டு இருப்பது கருதத்தக்கது.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தை சரவண முதலியார் அவர்களும், ந.மு.வேங்கடசாமி அவர்களும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து ‘திருவிளையாடல் புராண’த்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். ந.மு.வேங்கடசாமி சிறந்த சைவநெறியாளர். சென்னை மயிலாப்பூர் சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக ஓராண்டு பொறுப்பு வகித்து இருக்கிறார்.

தமிழுக்கு வேற்று மொழிச் சொற்கள் தேவையில்லை. தமிழ் தனித்து இயங்கும். ஒருவேளை வேற்று மொழிச் சொற்கள் தேவைபட்டால் என்ன செய்வது?

தமிழில் உள்ள வேர் சொற்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்க அல்லது கண்டுபிடிக்கத் தாமதமானால், வேற்று மொழிச் சொற்களைத் தமிழின் ஒலி இயல் இயல்புக்கு ஏற்பத் திரித்து வழங்க வேண்டும். எடுத்துக்காட்டு: ஜீசஸ் - இயேசு, ஜேக்கப் - யாகோபு என்று விளக்கம் தருகிறார் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940 ஆம் ஆண்டு இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ந.மு.வேங்கடசாமி அவர்கள் வீட்டிற்குச் சென்று சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களின் சில ஐயங்களுக்குப் பாடம் கேட்டுச் சென்றுள்ளார் என்று ஒரு தகவல் இருக்கிறது.

தஞ்சையிலோ அல்லது திருச்சியிலோ ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைத்து விட வேண்டும் என்று 1922 காலகட்டங்களில் கடும் முயற்சி எடுத்தார். இருந்தும் முயற்சி பலன் தரவில்லை, தோல்வியாகவே முடிந்தது.

1980ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றியபொழுது அதைப்பார்க்க ந.மு.வேங்கடசாமி அவர்கள் உயிருடன் இல்லை.

ஆம்! 1944ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 28ஆம் நாள், நாவலர் ந.மு.வேங்கடசாமி அவர்களின் பெரும் புலமையின் மீது காதல் கொண்ட மரணம், அவரை ஆரத்தழுவி அழைத்துக்கொண்டு போய்விட்டது.

மறக்கமுடியுமா          

இவரை நாம் மறக்க முடியுமா

Pin It