எதற்காக இந்திய நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கடந்த 16, 17 நாள்களில் வேலை நிறுத்தம் செய்தார்கள்? அவர்கள் ஊதிய உயர்வு கேட்டு அவ்வப்போது செய்வதுதானே என்கிறீர்களா? இல்லை. தங்கள் ஊதியத்தைக் கடந்து தங்கள் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஆளும் ஒன்றிய அரசின் நகர்வுகளைத் தடுக்கவே அவர்கள் போராடுகிறார்கள்.
ஒன்றிய அரசு நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கிகளைத் தனியாருக்கு விற்கும் மசோதாவைத் தாக்கல் செய்ய இருப்பதாகக் கசிந்த தகவலும் அதை ஒட்டி நடந்த பேச்சு வார்த்தைத் தோல்வியாலும் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டுச் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. நாட்டின் பொருளாதாரத் தூண்களாக இருக்கும் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க ஏன் ஒன்றிய அரசு முனைகிறது?
பெரும் பணக்காரர்களின் ‘இலேவாதேவி’ என்று சொல்லப்பட்ட கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக, பெரும் பணக்காரர்களால் நடத்தப்பட்டு வந்த 15 வங்கிகளை 1969இல் ஒரு துணிச்சலான நகர்வாக அன்றையப் பிரதமர் திரு.இந்திரா காந்தி அவர்கள் நாட்டுடைமை ஆக்கினார்கள். அதனால் நாட்டின் பொருளாதாரம் கீழ் நோக்கிப் பாயத் தொடங்கியது. ஒன்றிய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஏழ்மை அகற்றும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான நிதி பொதுவுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் மூலமே பங்கீடு செய்யப்பட்டது.
இலட்சக் கணக்கான இந்தியக் கிராமங்களில் பொதுத் துறை வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. நகரங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு எல்லா பொதுத்துறை வங்கிகளும் கிளைகள் தொடங்கின. இலட்சக் கணக்கான இளைஞர்களுக்கு அவற்றில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் வங்கிகளில் நுழைந்து தங்கள் சிறு சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கினார்கள். அதன் மூலம் அவர்களின் வேளாண்மை, சிறு, குறு தொழில்கள், கல்வி, ஆகியவற்றிற்கு வங்கிகளின் கடன் உதவிகளும் கிடைத்தன. கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்த அவர்கள் வாழ்க்கை மீட்கப்பட்டது. இந்திய நாடு தன்னுடைய ஏழ்மை நிலையிலிருந்து மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது.
இது புரட்சி அல்லவா? விடுதலை பெற்று 2 பத்தாண்டுகள் தேசத்தின் நிர்மாணப் பணிகள் செய்த பின்னரான அடுத்த 2 பத்தாண்டுகள் இந்த நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றது வங்கிகளால்தான். 1970கள் தொடங்கி 1990 வரை சென்ற இந்த வளர்ச்சி, அடுத்து மூன்று சூறாவளிகளைச் சந்தித்தது. ஆம்! -உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும்! -அவை இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் வழிகளாக உலகவங்கி மற்றும் பன்னாட்டுப் பொருளியல் நிதியத்தால் இந்திய ஆட்சியாளர்களுக்குக் காட்டப்பட்டன.
அதையொட்டி “Prudential Norms” எனப்படும் பன்னாட்டு தணிக்கையியல் கோட்பாடுகளை இந்தியா மீது திணித்தது உலக வங்கி. அதன் படி, வங்கிகளில் நிலுவையிலிருந்தக் கடன்கள் மூன்றே தவணைகள் தள்ளிப் போனாலும் வாராக் கடன்களாக வகைப்பட்டன. சட்ட
நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளவும், சொத்துகளை முடக்கவும், வாராக் கடன் காலம் வரை அவற்றுக்கென இலாபத்திலிருந்து ஒரு தொகையை ஒதுக்கீடு செய்யவும் வங்கிகள் பணிக்கப்பட்டன. அப்போதிருந்தே வங்கிகள் நட்டக் கணக்கைத்தான் காட்டி வருகின்றன.
இதில் நகைமுரண் என்னவென்றால், அரசியல் அழுத்தத்தால் பெரு வணிகர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்களே வாராக்கடன் பட்டியலில் 80% த்தை ஆக்கிரமித்தன. இதன் விளைவுகளை வங்கிகளின் பலவீனமாக அறிவித்து, மீண்டும் பெரு வணிகர்களிடமே வங்கிகளைத் தாரை வார்க்கும் சூழ்ச்சியை, தன் முதல், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே பா.ஜ.க. முன்னெடுத்தது. தனியார்மயமாக்கலுக்கு தனி துறையையே அறிவித்தது. அப்போது தொடங்கி, வங்கி ஊழியர்களின் போராட்டம், 25 ஆண்டு காலமாகத் தீவிரமாகி வருகிறது.
இந்தச் சூழலில்தான் பொதுத்துறை ஊழியர்களின் தோள்களின் மீது இதைத் தடுத்து நிறுத்தும் கடமை வந்து விழுந்திருக்கிறது. வங்கிகளை இணைத்துப் பன்னாட்டு வங்கிகளுக்கு இணையான ஐந்தே பெரிய வங்கிகளாக மாற்றுவோம் என்றார்கள். பல வங்கிகளை இணைத்தும் விட்டார்கள். இப்போது அதையும் தனியாருக்குத் தாரை வார்ப்போம் என்று இறங்கியுள்ளார்கள்.
ஓய்வூதிய இழப்பு, ஊதிய ஒப்பந்தப் பின்னடைவு, ஆட் குறைப்பு, பணிச்சுமை அதிகரிப்பு, அத்தியாவசியச் சேவைக்குரிய நெருக்கடிகள் என வங்கி ஊழியர்கள் தாங்கொணாத் துயரில் உழல்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றில் மட்டும் இந்தியா முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் அலுவலர்களும் உயிரிழந்துள்ளனர். பலர் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துள்ளனர். இருப்பினும் தங்களைப் போன்ற எதிர்கால ஊழியர்களின் நலன், இந்த நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு, பொதுத் துறைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக வீதியில் இறங்கியுள்ளார்கள்.
ஒன்றிய அரசின் பொருளாதாரத் திட்டங்களை முன்மொழிவதிலும், முன்னோடி மாநிலமாக நடைமுறைப் படுத்துவதிலும், முந்தி நிற்கும் தமிழ்நாடு அரசு, அறத்துடன் இந்தப் போராட்டத்தை ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளது. வங்கி ஊழியர்களின் போராட்டம் வெல்லட்டும்! பொதுத் துறை மீண்டெழட்டும்!
- சாரதாதேவி