ஆகஸ்ட் 15ஆம் நாள், 75 ஆவது விடுதலை நாள் என்பதால் அதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல வேண்டுகோள்தான். ஆனாலும் அந்தக் கொடிகள் கைத்தறியிலோ கதரிலோ இல்லாமல், பாலிஸ்டரில் இருக்கும் என்பதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. நடுவில் அசோகச் சக்கரத்திற்குப் பதிலாக அதானியின் முகத்தைப் பதிக்காமல் இருக்கிற வரையில் மகிழ்ச்சிதான்.

national flag 252போகட்டும், இப்போது எழுந்துள்ள இன்னொரு பெரிய சிக்கல் பற்றி நாம் பேச வேண்டி இருக்கிறது. பல ஊர்களில், குறிப்பாகச் சின்னச் சின்ன ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று ஊரில் இருக்கும் சாதி வெறியர்கள் சிலர் தடை போடுகின்றனர். அதே சாதியைச் சேர்ந்த ஜனநாயகவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பட்டியலின மக்களே ஏற்ற வேண்டும் என்று கூறும் நிலையையும் நாம் பார்க்கிறோம்.

இது ஒரு பெரும் சிக்கலாகப் பல சிற்றூர்களில் தலையெடுத்து இருக்கிறது. தேசியக் கொடியிலும் இப்படிச் சாதியக் கறைகள் படிந்து கிடப்பது ஒரு பெரிய அவமானம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

யார் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள்தான் கொடியேற்ற வேண்டும், தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

சமூக நீதியை நிலைநாட்ட இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசை நாம் பாராட்டுகிறோம். அதே வேளையில், இதற்கு இப்படி ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய நிலையில்தான் நான் இருக்கிறோம் என்பது வேதனை நிரம்பிய செய்திதான்.

சில ஊர்களில் இந்தச் சிக்கல் தீர்ந்து விட்டது பல்வேறு கட்சிகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து அனைவருடனும் பேசி நியாயமான, சமத்துவமான முடிவைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் சில ஊர்களில் அந்தச் சிக்கல் இன்னும் தீராமல் இருக்கிறது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட இடங்களில் அரசு தலையிட்டுச் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டுதான் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டி இருக்கிறது.

அரசியல் விடுதலையைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம் நாடு இன்னும் சமூக, பண்பாட்டு விடுதலைத் தளங்களில் ஊடாடிக் கொண்டேதான் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி என்னும் நச்சு மரத்தை எதிர்த்து நாம் போராட வேண்டி இருக்குமோ தெரியவில்லை. எத்தனை காலமானாலும் எவ்வளவு கடுமையான நிலைகளைச் சந்தித்தாலும், சாதியின் சல்லி வேர்களைக் கிள்ளி எறியும் வரை போராட்டம் தொடர வேண்டும்.

திராவிட இயக்கம் சென்ற நூற்றாண்டில் தொடக்கி வைத்த இந்த சமூக நீதிப் போர் இன்னும் தொடர்கிறது. இறுதி வெற்றியை எட்டும் வரையில் தொடரும். இறுதியில் வெல்லும்.

- சுப.வீரபாண்டியன்

Pin It