இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்து பேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை இலங்கை அரசு நடத்திய போது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதிவரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று முறியடித்தவர் கருணாநிதி என்பது விவரமறிந்த தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.

"அய்யகோ! ஈழத் தமிழினம் அங்கே அழிகிறதே...'' என்று சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டுவிட்டு, டெல்லி அரசிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் # அழுத்தம் கொடுப்பதுபோல் நாடகம் நடத்தி # போரை தடையின்றித் தொடர எல்லா வகையிலும் உதவியர் கருணாநிதி என்பதற்கு அவர் கடற்கரையில் நடத்திய சில மணி நேர பட்டினிப் போராட்டம் ஒன்றே சான்றாகும்.

2009ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை சென்னை கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு சென்று ஒரு படுக்கை ஏற்பாடு செய்து போரை நிறுத்து என்ற ஒற்றை கோரிக்கையுடன் கருணாநிதி பட்டினிப் போராட்டத்தைத் திடீரென்று தொடங்கியபோது, இதுவும் அவர் அரங்கேற்றும் ஒரு நாடகம் என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை # அவரை நன்கறிந்த அரசியலாளர்களைத் தவிர. ஆனால் இவர் பட்டினிப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே, அதிகாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து கொழும்புவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு செல்கிறது.

இந்தியாவின் அயலுறவுச் செயலராக இருந்த (தற்போது தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்) சிவ்சங்கர் மேனன், தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தை முழு வெறியுடன் நடத்திக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். நமக்கு ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது என்று கூறி விட்டு, தமிழக முதல்வர் போர் நிறுத்தம் செய்யக்கோரி பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக சிவசங்கர் மேனன் கூறுகிறார். அதைக் கேட்ட கோத்தபய ராஜபக்ஷே, உடனடியாகதான் அதிபர் ராஜபக்ஷேவிடம் பேசுவதாகவும், பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியை தொடங்கியதாகவும் பதில் கூறுகிறார்.

தமிழ்நாட்டிலுள்ளோருக்கு அண்ணா சமாதியில் கருணாநிதி சென்று படுத்த பிறகுதான் அவர் போராட்டம் பற்றித் தெரிய வந்தது. அவரது மனைவிக்குக் கூட அதுபற்றித் தெரியவில்லை. ஆனால், டெல்லியில் இருந்த சிவ்சங்கர் மேனனுக்கு முன்னரே தெரிந்து, அவர் கோத்தபய ராஜபக்சவை உஷார் படுத்துகிறார்! உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கினோம். அதிபரிடம் பேசினோம். இந்திய அரசை தொடர்பு கொண்டு விவாதித்தோம்.

மிகச் சுலபமாக பிரச்சனைக்குத் தீர்வு கண்டோம் என்று போர் முடிந்த பிறகு கோத்தபய ராஜபக்ச ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறினார். போர் நிறுத்தப்பட்டதாக சிதம்பரம் கூறினார்! எப்படி பிரச்சனையை சமாளித்தார்கள்? பட்டினி போராட்டத்தை கருணாநிதி துவங்கி ஒரு 4 மணி நேரம் ஆகியிருக்கும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போரை நிறுத்த ராஜபக்ஷே ஒப்புக் கொண்டு விட்டார் என்று செய்தி சொன்னாராம். உடனே போர் நின்று விட்டது என்று துள்ளி எழுந்த கருணாநிதி மதிய உணவிற்கு வீட்டிற்குத் திரும்பினார்.

அதே நேரத்தில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ராஜபகச்வின் செய்தித் தொடர்பாளர், போர் நிறுத்தப்படவில்லை, கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றுதான் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அந்தச் செய்தி அதே நாள் மாலை நாளிதழ்களில் வந்தது! ஆனால் கருணாநிதி கூறினார் "போர் நிறுத்தப்பட்டு விட்டது'' என்று!

Pin It