thirumavelan book 253‘‘காரிருளால் சூரியன்தான்

மறைவ துண்டோ

கறைச்சேற்றால் தாமரையின்

வாசம் போமோ”

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

வரலாறு, மாமனிதர்களையே நினைவில் வைத்துக் கொள்கிறது. அத்தகைய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றில் எத்தனை முறை பொய் என்னும் சேறு வாரி இறைக்கப்பட்டாலும், உண்மை என்னும் தெள்ளிய நீர் அச்சேற்றை நீக்குகிறது.

தந்தை பெரியார் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல. அவர் மறைந்து 40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர் மீதான அவதூறுகளுக்குப் பஞ்சமில்லை.

தந்தை பெரியாரின் சித்தாந்தம் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட ஒன்று. பொய்யர்களின் புரட்டு மொழியால், சித்தாந்தம் வீழ்ந்து விடாது. இக்காரணத்தால்தான், சிறிது காலத்திற்கு முன்பு பெரியார் சிலை குறித்துப் பொருந்தா வாசகங்களைப் பேசியவனை எதிர்த்துத் தமிழகமே கனன்று எழுந்தது.

காலங்காலமாகப் பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே ஆதரவானவர் என்பது. இக்குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தக்க பதிலாகத் தற்போது வெளிவந்துள்ளது, திருமாவேலன் எழுதிய ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ என்னும் நூல்.

ஏற்கனவே இப்பொருள் குறித்து, ‘தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் (தஞ்சை ஆடலரசன்), நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் (திருநீலகண்டன்) போன்ற நூல்கள் வந்திருக்கும் நிலையில், இந்நூல் மிக விரிவான விளக்கங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது.

தந்தை பெரியார் மீதான குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்தும் நூலாசிரியர், அவை எல்லாவற்றையும் தகுந்த சான்றுகளோடு மறுக்கிறார். பல குற்றச் சாட்டுகளுக்குத் தந்தை பெரியாரின் வாசகங்களிலிருந்தே விடை தருவதோடு, உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புபவர்களைக் கடுமையாகச் சாடுகிறார். முக்கியமாக, கீழ்வெண்மணி மற்றும் முதுகுளத்தூர் நிகழ்வுகள் தொடர்பாகத் தந்தை பெரியார் மீதான அவதூறுகளை எண்ணற்ற சான்றுகள் மூலம் தகர்த்தெறிகிறார். கீழ்வெண்மணி நிகழ்வில், அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசின் நேர்மையான நிலைப்பாடுகளையும் தக்க சான்றுகளோடு நிறுவுகிறார். எண்ணற்ற ஆதார நூல்களின் உதவியோடு, பத்தாண்டுக்கும் மேலான உழைப்பில் உருவாகியுள்ள இந்நூல், நூலன்று, தந்தை பெரியாரின் மீதான அவதூறுகளை அழித்தொழிக்கும் வேல் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

ஆசிரியர்: ப.திருமாவேலன்

வெளியீடு: நற்றிணைப் பதிப்பகம், சென்னை 5

விலை: ரூ.300

(இம்மாதம் 27ஆம் தேதி வரையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழாவில் இந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.)

Pin It