தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக கேரளப் பார்ப்பனர், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக ஆந்திரப் பார்ப்பனர், இந்த வரிசையில் இப்போது, 500 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைக் கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராகக் கர்நாடக மாநிலத்தவர். புதிய கல்விக் கொள்கை, நீட், நவோதயா பள்ளிகள் என நான்கு ஆண்டுகளில் கல்விக் கொள்கைகளை காவிக் கொள்கைகளாக மாற்றியமைக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டைக் குறிவைத்து வேகவேகமாகக் காவி மயமாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

தமிழர்களெல்லாம் ஒன்றுபட்டு உரிமைகளுக்காகப் போராடும் இவ்வேளையில் குறிப்பாகக் காவிரிக்காகத் தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்க, கல்வியில் கைவைத்திருக்கிறது மத்திய அரசு. அதிலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராக நியமனம் செய்து தமிழர்களை அவமானப்படுத்தியிருக்கிறது. அதோடு, உயர்கல்வியில் தமிழர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும் போக்காக இந்தி / சமஸ்கிருதத் திணிப்பு, வேத விஞ்ஞானம் என தொழில்நுட்பக் கல்விக்கும் காவி நிறம் பூசுகிறது.

தகுதி வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமி ஒதுக்கப்பட்டார். தமிழ் இசைக்காக அரும்பணியாற்றிய அவருக்கு இடமில்லை. ஹரிகதா நிகழ்த்திய ப்ரமிளா குருமூர்த்தி இப்போது துணைவேந்தர்.

சூரியநாராயண சாஸ்த்திரி பரிதிமாற்கலைஞராக மாறிய வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், தமிழை வழக்காடு மொழியாக ஆக்க கோரிக்கை வலுக்கும் இந்நேரத்தில் சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஆர்.எஸ்.எஸ் காரரான சூரியநாராயண சாஸ்திரி.

முனைவர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் அனந்த கிருஷ்ணன் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் துணைவேந்தர்களாக வலம் வந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா.

தேடல் குழுவில் (Search Committee) பிற மாநிலத்தவர்கள், துணை வேந்தர் நியமனத்தில் இது வரை நடந்திராத புதிய நடைமுறைகள். இதுதான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கண்கட்டி வித்தைகள்.

டெல்லி போன்ற இடங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் தமிழ் மாணவர்கள் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர்உயிர் பயத்தோடு தங்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். ஆனால் இங்கு துணைவேந்தராகவே மற்ற மாநிலத்தவர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

தொடரும் உரிமைப் பறிப்பையும்

படரும் காவிக் கலப்பையும்

கருப்பே வெல்லும்!

ஆட்டக்களத்தை வீழ்த்திய போராட்டக்களம்!

தமிழர்களெல்லாம் ஓரே குரலில் உரிமைகளுக்காகப் போராடி வரும் நிலையில், அதை திசைதிருப்ப IPL மூலம் முயற்சி நடந்தது. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் உரிமைக்குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி சேப்பாக்கம் ஆடுகளத்தில் சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே ஆட்டம் நடந்திருக்கலாம். ஆனால் உலகம் உற்று நோக்கியது உரிமைக்காகப் போராட்டம் நடத்திய தமிழர்களைத்தான். ஆதிக்கவாதிகள் வீசிய பந்தை நீதிக்காகப் போராடும் தமிழர்கள் விளாசியதில், பந்து சென்னையில் இருந்து புனேவுக்குப் பறந்துவிட்டது. இதுவே IPL வரலாற்றில் மிகப் பெரிய சிக்சர்!

வடக்கு பறிக்கிறது, தெற்கு பறிகொடுக்கிறது!

வருவாய் தரும் தென்மாநிலங்களை மீண்டும் சுரண்ட வழிவகை செய்து கொடுத்திருக்கிறது 15 ஆவது நிதிக்குழு. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ளாமல், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வைத் தீர்மானித்திருக்கிறது 15 ஆவது நிதிக்குழு. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகத் தமிழ் நாடு திகழ்கிறது என்பதை 2001ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசின் மத்திய திட்டக்குழு வெளியிட்ட National Human Development Repor, 2001 தேசிய மனித வளர்ச்சி அறிக்கை, “தமிழ்நாட்டில் இராமசாமி பெரியார் போன்ற தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமூகச் சீர்திருத்தங்களால் மக்கள் பொறுப்புள்ள பெற்றோர்களாகவும், குடும்பக்கட்டுப்பாட்டை எளிமையாக ஏற்றுக்கொள்பவர்களாகவும் மாற்றம் அடைந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறது. தந்தை பெரியாரால் நாங்கள் அடைந்த முன்னேற்றத்தை நீங்கள் அறுவடை செய்ய முயற்சிக்கிறீர்கள். எங்கள் கொள்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். எங்களைக் கொள்ளையடித்து கெடுக்காதீர்கள்.

Pin It