periyar 350யாரும் செய்வதற்கு முன்வராததால், தன் தோள்மேல் போட்டுக்கொண்டு இந்தக் காரியங்களைச் செய்கிறேன் என்று சொல்வார் தந்தை பெரியார்.

காரியமாற்றுவதில் மட்டுமன்று, சிந்தனையிலும் அப்படித்தான். யாரும் சிந்திக்கவோ, சொல்லவோ தயங்குகின்ற கருத்தைத் துணிச்சலாகவும், நேர்மையாகவும் சொல்பவர்.

அதற்கு அவர் வைத்துக்கொண்ட வரையறை, ‘மக்கள் மேம்பாடு’ என்பது மட்டுமே.

1969ஆம் ஆண்டு காரைக்குடியில் ஒரு கூட்டம். காரைக்குடியைச் சேர்ந்த என்.ஆர்.சாமி, மரக்கடை சுப்ரமணியம் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்.

மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கி வீணாய்ப் போகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே, திராவிடர் கழகம் சார்பில், ‘மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு’ ஒன்றினை நடத்த வேண்டும் என்றார் பெரியார்.

மாநாட்டிற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இப்போதே கொடுக்கலாம் என்றும் அறிவித்தார். அய்யாவே நேரிடையாக அறிவித்த பிறகு சும்மா இருக்க முடியுமா?

கழகத் தோழர்கள் அந்த இடத்திலேயே, 11, 101, 201, என்று அவரவர் வசதிக்கேற்ப அய்யாவிடம் கொடுத்தனர். கூட்டத்தைக் கேட்க மாணவர்கள் சிலரும் வந்திருந்தனர்.

அவர்களும் தங்களுக்குள் பணம் திரட்டி, 21 ரூபாய் கொடுத்தார்கள். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று, பெயர்களோடு கணக்கு எழுதப்பட்டது. திடீரென அய்யா ஓர் அறிவிப்புச் செய்தார்.

‘எல்லோரும் நன்கொடை கொடுத்தீங்க. சந்தோஷம். இப்ப யார் யாரு எவ்வளவு கொடுத்தீங்கன்னு படிக்கச் சொல்றேன். வந்து, நீங்க கொடுத்த பணத்த திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார். அதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அய்யா சொன்னார், ‘ மூடநம்பிக்கைய ஒழிக்கிறதுக்காக மாநாடு போடணும்னு சொன்னேன்.

அதுக்குத்தான் நன்கொடையும் கேட்டேன். ஆனா, கொடுத்தவங்க அத்தனைபேரும் என்ன செஞ்சீங்க? 101, 201, 11, 21ன்னு கொடுத்தீங்க. ஏன் பத்து, இருபதுன்னு கொடுக்கக்கூடாதா? அல்லது 99, 209ன்னு கொடுக்கக் கூடாதா? அது என்ன 11, 21? மொதல்ல உங்க மூடநம்பிக்கைய ஒழிக்கணும்’.

(மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், முனைவர் அ.அறிவுநம்பி)

Pin It