கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு தமிழர்களுக்குச் செய்யும் அநீதிகளுள் இதுவும் ஒன்று.

கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்த போது, அது குறித்து முறைப்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, அதன்பிறகு இலங்கையிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கவில்லை என்று தலைவர் கலைஞர் சொல்லி இருப்பது கவனத்திற்கு உரியது.

கச்சத்தீவு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன.

பாக் நீரிணையில் உள்ள பதினொரு குறுந்தீவுகளுள் ஒன்று கச்சத்தீவு. இராம நாதபுரம் சமஸ்தானத்தை 1622 முதல் 1635 வரை ஆட்சி செய்த மன்னர் கூத்தன் சேதுபதியின் ஆட்சியின் கீழ் கச்சத்தீவு இருந்தது என்பதற்கு அன்றைய தாமிரச் செப்பேடு சான்று.

1802ஆம் ஆண்டு ஆங்கிலேயர் நில அளவைத் துறை பதிவேட்டில் கச்சத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தம் என்ற பதிவும் இருக்கிறது.

1905ஆம் ஆண்டு தொண்டியைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாட்சி கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் வசதிக்காக, வழிபாடு செய்ய கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தைக் கட்டியுள் ளார். இப்படிப் பல சான்றுகள் இருந்தும் மத்திய அரசு இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

1974ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா சந்திப்பை அடுத்து, அதே ஆண்டு சனவரி திங்களில் தமிழக முதல்வர் கலைஞரிடம் இந்திரா காந்தி கருத்துகேட்டு கடிதம் எழுதினார்.

அதற்குப் பதில் கடிதம் அனுப்பிய கலைஞர், கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதல்ல என்பதற்கான சான்றுகளுடன், இச்சான்றுகளை இலங்கைப் பிரதமர் இந்தியா வரும் போது நேரில் விளக்க வேண்டும் என்று சொல்லி கச்சத்தீவை இலங்கைக்குத் தரக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இருந்தபோதும் தமிழகத்தின் சார்பில், கலைஞரின் மறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டது.

இன்னும் சொல்லப்போனால், 1857 ஆண்டுகளில் இலங்கை நாட்டின் வரை படத்தில் கூட கச்சத்தீவு இல்லை. அப்படி இருக்க 1920 தொடக்கம் கச்சத்தீவை சொந்தம் கொண்டாடும் இலங்கைக்கு இந்தியா ஏன் தன் இறையாண்மையை விட்டுக்கொடுக்கிறது என்பது விளங்கவில்லை.

மத்திய அரசு தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கச்சத்தீவு வரலாறையும் தெரிந்து கொண்டு, தமிழக மீனவர்களுக்குப் பாதகமான முடிவை எடுக்கக் கூடாது.

தெளிவாகச் சொன்னால், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெற்றுத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

Pin It