சென்னை, பெரியார் திடலில்,01.04.2013 அன்று ‘இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி

thiruma_3202009ஆம் ஆண்டில், முள்ளிவாய்க்கால் யுத்தம், படுகொலை நிகழ்ந்து கொண்டிருக் கின்ற சூழலில், ஆசிரியர் அய்யா அவர்களை வந்து பார்த்தேன். யாரோடு...? இன்றைக்கு, இழத்தமிழர் பிரச்சினை பற்றியயல்லாம் கவலையில்லை; திருமாவளவனை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய ஒரே வேலை என்று வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றாரே, நம்முடைய மருத்துவர் அய்யா, அவரோடுதான் வந்து பார்த்தேன். அவரிடம்தான் முதலில் நான் பேசினேன். அவர் அரசியல் கணக்கோடுதான் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. ஆனால், திடீரென்று அவர், ‘தமிழர் தலைவர் அவர்களைப் போய்ப் பார்க்கலாம்’ என்று பெயரைச் சொல்லிச் சொன்னார்.

கூட்டத் தேதியை மாற்றிய பழ.நெடுமாறன்

நானும், அவரும் அய்யா அவர்களைச் சந்தித்து, ஒரு மணிநேரமல்ல, இரண்டு மணிநேரம் ஆலோசித்து, 2009 ஜனவரி 10ஆம் தேதி பெரியார் திடலிலே தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் கூடி, அதைப்பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்குப் பிறகு அந்தத் தகவல் எல்லோருக்கும் தரப்பட் டது. நம்முடைய தமிழர் தலைவர் அவர்களே கடிதம் எழுதினார். உடனே அய்யா பழ. நெடு மாறன் அவர்கள் மருத்துவர் அய்யாவைத் தொடர்பு கொண்டு, ‘10ஆம் தேதி வேண்டாம், 12ஆம் தேதி வைத்துக்கொள்ளலாம். இடத்தைப் பின்னர் முடிவு செய்துகொள்ள லாம்’ என்றார். அந்தத் தகவலைத் தமிழர் தலைவரைச் சந்தித்து, நானும், மருத்துவரும் கூறினோம்.

‘இது எல்லோருக்கும் பொதுவான இடம்தானே? இங்கே வைகோ வந்திருக்கிறார், நெடுமாறன் வந்திருக்கிறார், தா. பாண்டியன் வந்திருக்கிறார். அவர்களுக்கு என்ன இங்கே சிக்கல்? ஏன் வரக்கூடாது, எதற்காக இடத்தை மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள்’ என்று வருத்தப்பட்டார். ஆனாலும்கூட, இனத்திற்கு நல்லது நடந்தால் சரி, எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று பெருந்தன்மையோடு சொன்னார். 

இந்த நிலையிலே, 12ஆம் தேதி காலை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை, அவருடைய கோபாலபுர இல்லத்தில் சந்தித்தோம். நானும், ஆசிரியர் அவர்களும், மருத்துவரும், அவருடைய கட்சித் தலைவர் கோ.க.மணி அவர்களும் சென்றிருந்தோம்.

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன்...

எங்களைப் பார்த்ததும், தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, எங்களோடு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார் கலைஞர். ‘நாங்கள் என்ன செய்ய முடியும்? பேச வேண்டிய இடத்திலெல்லாம் பேசி விட்டோம்; சொல்ல வேண்டிய அளவிற்கு அழுத்திச் சொல்லிவிட்டோம். ஆனாலும்கூட மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது போரை நிறுத்துவது எப்படி என்பது தெரியவில்லை. வேண்டுமானால், நான் உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று சொன்னார்.

உடனடியாக ஆசிரியர் அவர்கள், அந்தக் கோட்பாட்டிலே உடன்பாடில்லாத காரணத் தினால், உடனடியாக மறுத்தார். உண்ணா விரதம் எல்லாம் நமக்கு ஒத்துவராத போராட் டம்; அதிலும் இந்த வயதில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது; அது தேவையில்லை என்று மறுத்துவிட்டார். மருத்துவரும் அதனை மறுத்தார்.

இன்றைக்கு இந்தக் கூட்டம் நடைபெறாது 

பேசி முடிந்து வெளியே வந்த பிறகு, எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. மருத்துவருக்குச் சொல்லப்படுகிறது. என்ன சொல்லப்படுகிறது என்றால்..,  10ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம், 12ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்ட கூட்டம். ‘இன்றைக்கு இந்தக் கூட்டம் நடைபெறாது; வேறொரு தேதியில் நடைபெறும் என்றும்; இடம் பிறகு சொல்லப்படும்’ என்றும்.

அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்று...

எங்களுக்குப் புரியவில்லை. அப்பொழு துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம், கலைஞரைப் பார்த்துவிட்டு வருகின்ற காரணத்தினால், நானும், குறிப்பாக ஆசிரியர்  அவர்களும், அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்ளக் கூடாது என்று அவர்கள் சேர்ந்து முடிவெடுத்து, ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியிலே இணைந்திருக்கின்ற தா.பாண்டியன் அவர்கள் அதனை விரும்ப வில்லை; அ.தி.மு.க. கூட்டணிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற மருத்துவரும் அதனை விரும்பவில்லை; அ.தி.மு.க. கூட்டணியிலே இடம் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக் கின்ற வைகோவும், அதனை விரும்பவில்லை. தி.மு.க. தலைவரைச் சந்தித்துவிட்டு வருகிற ஆசிரியரும், திருமாவளவனும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால், அம்மாவிற்குக் கோபம் வரும் என்று அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்று கருதி, எங்கள் இரண்டு பேரையும் கழற்றிவிடுவதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆக, இனப்பிரச்சினை என்பது முக்கிய மல்ல; அம்மா கோபப்படக்கூடாது என்பதுதான் பிரச்சினையாக இருந்திருக்கிறது.ஈழத்திற்காக ஒன்று சேரவேண்டும் என்பது முக்கியமல்ல; இங்கே தி.மு.க.வோடு சேர்ந்து எந்த வேலையும் செய்யக்கூடாது; திராவிடர் கழகத்தோடு சேர்ந்து எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது.

பிறகு, மருத்துவரிடம் நான் தொடர்பு கொண்டு, எப்பொழுது நடக்கிறது, எங்கே நடக்கிறது என்று வலிந்து வலிந்து கேட்ட போது, கடைசியாக அந்த நாளையும், தேதியையும் சொன்னார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

தியாகராயர் நகரில், தாஜ் பேலசில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு நானே வலிந்து சென்று கலந்துகொண்டேன். பேசி முடித்தவுடன், ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த அமைப்புக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆலோசித்துக் கொண்டிருந் தோம். நான் சொன்னேன், ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாம் என்றேன்.

உடனடியாக மருத்துவர் அவர்கள் மறுத்துச் சொன்னார். ஈழத் தமிழர் என்றெல்லாம் வேண்டாம். ஈழத் தமிழர் என்று சொன்னால் பாண்டியன் வரமாட்டார், பாண்டியன் அதிலே கலந்துகொள்ள மாட்டார். ஆக, என்ன பெயர்... ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்று முடிவாயிற்று.

தி.மு.க.வைத் தனிமைப்படுத்த வேண்டும்

நான் இந்தக் களத்திலே கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்து ஏறத்தாழ 25 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். இலங்கைத் தமிழர் என்ற சொல்லாடலை இதுவரை நாம் பயன்படுத்தியதே இல்லை. ஈழத்தமிழர் என்றுதான் பேசி இருக்கிறோம்; எழுதியிருக்கிறோம், அப்படித்தான் வாதாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், முதன் முறையாக அப்படிச் சொல்லச் சொன்னதும் எனக்கு ‘அருவருப்பாக’ இருந்தது. இருந்தாலும், தா. பாண்டியனுடைய வரவிற்காக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. நானும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து பயணத்தைத் தொடங்கினேன். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ‡ ஆக நான்கு மாதங்கள். அப்பொழுதெல்லாம், அவர்கள் என்ன முயற்சியை மேற்கொண்டார்கள் என்றால், இலங்கையில் போரை நிறுத்தவேண்டும் என்பதைவிட, இங்கே கூட்டணி வைக்க வேண்டும்; தி.மு.க.வைத் தனிமைப்படுத்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் வெளியே வரவேண்டும். இதுதான் அவர்கள் அன்றைக்குக் கொடுத்த அழுத்தம்.

நான் என்ன சொன்னேன்? விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற இயக்கம்-அரசியல் கட்சி என்று வருகிறபோது, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க.,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்த மூன்று இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்போம். ஆதரிக்கின்றவர்கள் ஆதரிக் கட்டும். தோற்றாலும் பரவாயில்லை என்றேன்.

ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தி.மு.க.வை ஒழிக்க வேண்டும். அ.தி.மு.க.விற்குத் துணை நிற்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு அன்றைக்குப் பிரச்சினையாக இருந்தது........... ...............கூட்டணி வைப்பதிலேதான் அவர்கள் குறியாக இருந்தார்களே தவிர, அ.தி.மு.க.விற்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதிலேதான் அவர்கள் குறியாக இருந்தார்களே தவிர, இனத்தைப் பாதுகாப்பதற்கு எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்று ஏன் அவர்கள் முன்வரவில்லை. எது தடுத்தது? தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு. அதற்கு நாம் கடைசி வரையில் போராடவேண்டும். விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. தற்குறிகள் டெசோ இயக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். போலிகளை அம்பலப்படுத்துவது நம்முடைய கடமை. ஈழம் வெல்லும், அதனைக் காலம் சொல்லும்!

Pin It