வரலாற்று நிகழ்வுகளையும், வரலாற்று மாந்தர்களையும் மையமாகக் கொண்டு, எத்தனையோ புதினங்கள் தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை, நல்ல இலக்கியப் படைப்பு என்றளவில் படித்தவர்கள் மனத்தில் இடம்பெறும்.

karuvaki_book_release

கவிஞரும் எழுத்தாளருமான தோழர் இளவேனில் ‘காருவகி' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதயிருக்கிறார். காருவகியின் வெளியீட்டு விழா, 10.06.2012, ஞாயிறு அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்தது. அழகான தமிழ்ப் பெயரைச் சூடி வெளிவந்திருக்கும் இந்நூல், கலிங்கப்போர், அசோகனின் மனமாற்றம் என்ற வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பலதுறைகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்ட இவ்வெளியீட்டு விழாவின் மேடைப் பிழிவிலிருந்து உங்களுக்காக...

இரா. ஜவஹர் (மூத்த பத்திரிகையாளர், மார்க்சிய சிந்தனையாளர்)

மார்க்சிய சிந்தனையாளனாக ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, மார்க்சிம் கார்க்கியின் நாவல்கள் பற்றி, முற்போக்கு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான முல்க்ராஜ் ஆனந்த் எழுதியதைப் போல இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் எழுதினார், ‘கார்க்கியின் நாவல்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. கார்க்கின் நாவல்கள் போராடத் தூண்டுகின்றன’. இளவேனிலின் காருவகியைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது. காருவகியில் நான் கண்ட சிறப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே கூறுகிறேன்.

காருவகி... போர்களைப் போராட்டக் கூடிய நாவல்களுக்கு மத்தியில், போர் என்பது எவ்வளவு மோசமானது, கேவலமானது என்பதைச் சொல்கிறது; பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது; விறுவிறுப்பான நடையில் வாசிப்பை இனிமையாக்குகிறது; ஆழமான, சுவையான தர்கங்களைக் கொண்டுள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் (திரைப்பட இயக்குனர்)

வரலாறுகளைப் படிக்கத் தொடங்கும் போதுதான், அவை எத்தனை பிழைகளோடு இருக்கின்றன எனத் தெரியவருகின்றது. எழுதி வைக்கப்பட்டுள்ள வரலாறுகள் தப்பும், தவறுமாக இருக்கின்றன என்பது அவற்றுக்குள்ளே ஆழமாகச் செல்லும் போதுதான் புரிகிறது. சரியான வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்கு இளவேனில் போன்ற இடதுசாரிக் கலைஞர்கள் பெரும்பான்மையாக முன்வரவேண்டும். காருவகி அந்த வேலையைச் செய்திருக்கிறது.

கோபண்ணா (தேசிய முரசு ஆசிரியர்)

கலிங்கப் போரில் அசோகனை எதிர்த்துப் போரிட்ட மன்னன் யார் என்ன வினாவினை எழுப்பி, சான்றுகளோடு அதற்கு விடைகளைச் சொல்லி, மேலும் நம்மை வரலாறுகளைப் புரட்டி தேடச் செய்கிறது இளவேனிலின் காருவகி. கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடிக்கும் வரை, சரியான வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடியவில்லை அல்லது சொல்லித்தரப்படவில்லை என்பதை நேருவின் உலக சரித்திரம், கண்டுணர்ந்த இந்தியா ஆகிய நூல்களைப் படித்தபோது தெரிந்து கொண்டேன். அதேபோன்று, காருவகியும் ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லி நம்மை அதிர வைத்திருக்கிறது.

சிகரம் செந்தில்நாதன் (வழக்கறிஞர், இலக்கிய விமர்சகர்)

ஒரு நாவலின் பாத்திரப்படைப்புகளை விட, அது ஏற்படுத்துகிற தாக்கம்தான் முக்கியமானது. காருவகி அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிற நாவலாக இருக்கிறது. கலிங்கத்துக்கும் தமிழகத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இளவேனிலின் இந்த நூல் ஒரு உந்து சக்தியாக இருக்கும். நாம் அறிந்த வரலாறுகளை விட அறியாத வரலாறுகள்தான் ஏராளமாக இருக்கின்றன. சங்க காலம் முதல் தொடர்ந்து கலிங்கத்தின் மீது தமிழ் மன்னர்கள் குறிப்பாக சோழர்கள் போர் தொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். அண்மையில் சுனிதி குமார் சாட்டர்ஜி என்ற வரலாற்றுப் பேராசிரியர் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர், கலிங்கப் போரில் அசோகன் எந்த மன்னனுடன் போரிட்டான் என்ற வினாவினை எழுப்பி விடை காண முயன்றிருக்கிறார்.

அந்தக் கேள்விக்கான விடையை நம் இளவேனில் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். சுனிதி குமார் சாட்டர்ஜி, அசோகனுடன் போரிட்டவன் ஒரு ஆரியனல்லாத மன்னன் என்ற முடிவுக்கு வருகிறார். அவனுடைய பெயரான காரவேலன் என்பதில் உள்ள வேலன் என்னும் சொல்லின் அடிப்படையில் பார்க்கும்போது, அவன் ஒரு தமிழ் மன்னனாக இருக்கக்கூடும் என்றும் சுனிதி குறிப்பிடுகிறார். கலிங்கத்தின் மீது படையெடுத்ததோடு மட்டுமின்றி, கலிங்கத்தையே தமிழர்கள் ஆண்டிருக்கிறார்கள் என்பதை இங்கிருக்கிற திராவிட இயக்க ஆய்வாளர்கள் அல்ல, வங்காளத்தில் இருக்கின்ற ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சொல்கிறார்.

இதைப்பற்றி தென்னாட்டுப் போர்க்களங்கள் என்னும் தன்னுடைய நூலில், இது குறித்து ஏற்கனவே சொல்லியிருந்த போதும், அதை இலக்கியமாக மட்டும் பார்த்துவிட்டார்கள் என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகின்றது.

ச. தமிழ்ச்செல்வன் (த.மு.எ.க.ச, தலைவர்)

‘ஒட்டிப் புளுகுவது இலக்கியம்’ என்று சொல்வார் புதுமைப்பித்தன். உண்மையை ஒட்டிப்புளுகுவதுதான் இலக்கியம். அதில் உண்மை எவ்வளவு இருக்கிது, புனைவு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து ஒரு நாவல் மதிப்பிடப்பட வேண்டும். சாண்டில்யன் போன்றோர் 100 விழுக்காடு புளுகுகளையே இலக்கியமாக்கினார்கள். அதையும் கொண்டாடத்தான் செய்கிறோம். ஆனால் காருவகி கொஞ்சம் புனைவோடு, வரலாற்று உண்மையைப் பேசுகிறது. இளவேனிலின் மனத்தில் சில வரலாற்று உண்மைகள் பொறியாகத் தோன்றியிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து பல செய்திகளைச் சேர்த்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். போரைப் பற்றிப் பேசுகின்ற போருக்கு எதிரான நாவல் இது என்பது இதன் சிறப்பு. தெற்கும் வடக்கும் சந்திக்கின்ற இடமாகக் கலிங்கம் இருக்கிறது. வடக்கிலும், தெற்கிலும் அன்று நிலவிய வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை நமக்குச் சொல்கிறது இந்நாவல்.

க. திருநாவுக்கரசர் ( மூத்த திராவிட இயக்க ஆய்வாளர்)

இதில் மதம் பேசப்படுகிறது, தத்துவம் பேசப்படுகிறது. மனித சமூகத்திற்குத் தேவையானவற்றை இந்த 256 பக்கங்களில் இளவேனில் தந்திருக்கிறார். மோரியர்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. அகநானூற்றில் 251 மற்றும் 69 ஆகிய பாடல்களில் மோரியர்களைப் பற்றி வம்ப மோரியர் என்று சொல்லப்பட்டி ருக்கிறது.

பொன்னியின் செல்வன் நூலுக்கு, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய இருவரின் நூல்களே அடிப்படையாக இருக்கின்றன. இந்த நூல்களைப் படித்துவிட்டு, பொன்னியின் செல்வனைப் படித்தால், அங்கே இவர்கள் இருவரும்தான் நிற்பார்கள். ஆனால் காருவகி என்னும் நூலின் தலைப்பிலேயே நம் மனத்தில் நிற்கிறார். அறிஞர் தமிழண்ணலோடு நடத்திய உரையாடலை இந்நூலில் தந்திருக்கிறார். அதில் அவர் காருவகி என்பதற்கு, மழைமோகினி, மயில் என்றும் பொருள் உண்டு என்று சொல்கிறார். இந்த நாவலை ஜெகசிற்பியனோ, சாண்டில்யனோ எழுதியிருந்தால் மழைமோகினி என்று கவர்ச்சியாகத்தான் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இளவேனில் காருவகி என்னும் தூய தமிழ்ப் பெயரை வைத்திருக்கிறார்.

நாள்தோறும் ஆய்வு செய்யச் செய்ய நமக்குப் புதிய வரலாற்றுச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சங்ககாலத்தில் சாதிகள் இல்லை என்று பெரியார் ஒருமுறை சொன்னார். அண்மையில் லெனின் தங்கப்பா, சங்க காலத்தில் சாதியக் குழுக்கள் இருந்தன என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஆய்வுகள் பல புதிய செய்திகளை, விவாதக் களத்திற்குக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு படைப்பாளியாக இளவேனில் தன் ஆய்வை வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார். இந்நூலில் கெளடில்யர் அசோகனிடம் பேசுகின்றன உரையாடலில், பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி இல்லை என்பதை இளவேனில் உணர்த்திச் செல்கிறார்.

Pin It