மேலே எண்கள் கொடுக்கப்பட்டு வரிசையாக எழுதப்பட்டு இருக்கும் குறிப்புகள் இந்தி ஆட்சி மொழி என்று எண்ணி, அறிவித்துச் செயல்பட்டதிலிருந்து திராவிட இயக்கப் போராட்டத்தின் விளைவாக இன்றைய நிலையில் ஆட்சி மொழி, தேசிய மொழி பற்றிய நிலைகளை எடுத்துரைத்து இருக்கின்றோம். அரசியல் நிர்ணய சபையில் பல்வேறு விதமான விவாதங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனால் மிக அதிமான கருத்து மோதல்களுடன் அலசப்பட்டது மொழி பற்றிய சிக்கல்தான் ! 1946 டிச.10ஆம் நாளே அரசியல் நிர்ணய சபையில் மொழிப் பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்ட முதல் நாள். அப்பிரச்சினை பற்றி முதலில் பேசிய ஆர்.பி.துலேக்கர் இந்துஸ்தானியில் பேசினார். அவைத் தலைவர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. மொழி பற்றி விவாதிக்கப் பட்ட பிற அமர்வுகளில் அரசியல் சட்டமே இந்தியில் தான் எழுத வேண்டும். வேண்டுமானால் அதிகாரப் பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பைத் துணைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று அவையைக் கட்டாயப்

படுத்த முயன்றனர். இப்படி யயல்லாம் சபையில் நடை பெற்று பின்னர் நமது மேலையக் குறிப்புகளில் சுட்டிக்காட்டியுள்ள இன்றைய நிலையை ஆட்சி மொழி பிரச்சினை அடைந்து இருக்கிறது.

ஜெயமோகன் வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை ; மறுக்கிறார். உண்மைகளை எடுத்துரைக்கவில்லை. கல்கத்தா இராஜதானியில் கல்வியிலும், இதர நிலைகளிலும் வங்க மக்கள் கிடுகிடுவென வளர்ந்தனர் ; உயர்ந்தனர். இதற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சியின் தலைமைப் பீடமாக கல்கத்தா அமைந்தது. சென்னைக்கு வெள்ளை யர்கள் கல்கத்தாவுக்கு முன்பே வந்து இருந்தனர். ஆனால் கல்கத்தாவில்தான் அவர்கள் தலைமையை அமைத்துக் கொண்டனர். இதனால் ஆங்கிலக் கல்வியும் முறைப்படுத்தப்பட்ட பள்ளிகளும் முதலில் அங்கே தோன்றின. சென்னை மாகாண மக்கள் இதனால் பெரிதும் பின்னுக்குத் தள்ளப் பட்டனர். ஆங்கிலேயர்கள் சமஸ்கிருத பள்ளிகளை, மதரஸாக்களை ஒன்றும் செய்யவில்லை. அவை எப்போதும் போல் இயங்கின. தாய் மொழிக் கல்வி பயிலுவோரை ஊக்குவித்தனர். கல்வி கற்போரின் கணக்கை முதல் முதலாக எடுத்தவன் ஆங்கிலேயன். ஆட்சி மொழியும்,  ஆளுகிறவனும் வெள்ளைக்காரன் ஆனதினால் ஆங்கிலத்தின் பயன் அதிகமாயிற்று. அறிவியல் சார்ந்த அத்தனை செய்திகளும் விவரங்களும் ஆங்கிலத்தில்தான் இருந்தன. ஆகவே ஆங்கிலத்தை அறிவின் மொழி என்றார் பெரியார். தமிழன் எதிலும் பிந்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து எச்சரிக்கை செய்து வந்தார். அதில் கடுமையான உச்சத்திற்கு சென்று பேசுவார். கோபமாக எடுத்து ரைப்பார். இதைத்தான் ஜெயமோகன் உணர்ச்சியின் மொழி என்கிறார். ஜெய மோகன் உணர்ச்சி இல்லாமலா இவ்வளவு பெரிய நூலை ‡ ‘ இன்றைய காந்தி ’ யை மொழிந்தார்? தாய் மொழிப் பயிற்சி மட்டுமே பெற்று உலகோடு தொடர்பற்ற நிலை தமிழனுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற கவலையில் மொழிந்த கருத்துகளை வைத்துக் கொண்டு, மட்டையடி குட்டையடி என்று பேசுகிறார் ஜெயமோகன்.

பெரியார் மீது பொத்தாம் பொதுவில் வார்த்தை ஜாலங்காட்டி அவரைக் குற்றம் சுமத்த முயலுகிறார். அவரது நெடிய பொது வாழ்க்கையில் சறுக்கல்கள் இருக்கலாம். அதற்கும் காரணங்கள் இருக்கும். அதை ஒருபோதும் அவர் மறைத்ததில்லை. ஜெயமோகன் சொல்லுவது போல பெரியார் புறக்கணிக்கக் கூடிய நபர் அல்ல. அவர் புறக்கணிக்கக் கூடியவர் இல்லை என்பதால்தான்  ஆங்காங்கே ஜெயமோக னுக்கு பெரியார்  நினைவு வந்து, இந்நூலில் அவரை விமர்சித்துக் கொண்டே செல்கிறார். ஆங்கிலத்தின் இடத்தை காந்தி அறிந்து இருந்தார். அவர் நடைமுறைவாதி ஜெய மோகனுக்கு ! பெரியார் ஆங்கிலத்தைப் படியுங்கள் என்று தமிழர்களைப் பார்த்துச் சற்றுக் கடுமையாகச் சொன்னால் அவர் காந்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவர் அல்ல. அப்படி ஒப்பிட்டுப் பார்த்துவிட்டால் ஜெயமோகனின் சிந்தனை சூன்யமாகி விடுகிறது. அவருக்குச் சிந்தனை நின்று விடுகிறது? அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

முதலில் ஆட்சி மொழி என்று இந்தியைச் சொன்ன காந்தி, பின்னர் இந்துஸ்தானியை ஏன் கூறுகிறார்? இரண்டையும் படிக்கச் சொல்வதுபோல் ஒரு கருத்து மயக்கம் இருக்கிறது. நேரு சொன்னதற்குப் பின்தான் இந்துஸ்தானியைக் காந்தி வலியுறுத்தினாரா என்றும் பார்க்க வேண்டும். தாண்டன் குழுவிலிருந்து காந்தி ஏன் விலகினார்  என்பதைப் பற்றியயல்லாம் ஜெயமோகன், காந்தியும்  இந்தியும் என்கிற அத்தியாயத்தில் விளக்கமாகக் கூறவில்லை. மொழியைப் பற்றி அரசயில் நிர்ணய சபை விவாதங்களை அவர் எடுத்துரைக்கவில்லை. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் வெங்கடேஷ் என்பவர், ‘ காந்தி சொன்னார் என்பதற்காத் தாங்கள் இந்தியை ஏற்பீர்களா? ’ என்பதற்கு வெளிப்படையாக ஜெயமோகன் பதிலே சொல்லவில்லை. தொட்டுவிட்டால் சமூகப் பிரச்சினைகளில் எல்லாச் சிக்கல்களும் வரும். சந்தித்துதானே ஆக வேண்டும். இந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிற ஆசை ஜெயமோகனுக்கு வந்தபின் ஓடி ஒளிவது ஏன்? எல்லாவற்றையும் எடுத்துரைக்கத்தானே வேண்டும்? தொடர்புடைய அனைவரையும் சேர்த்துக் கொண்டுதானே ஜெய மோகன் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? இல்லையயன்றால் அவர் பிரச்சினையைத் தொட்டு இருக்கக் கூடாது ‡ என்பதே நமது மதிப்பீடு ஆகும்.

இறுதியாக ‘ காந்தியும் இந்தியும் ’ பற்றி நாம் அறிந்தது என்பது இதுதான் :

காந்தி இந்தியாவுக்கு ஓர் ஆட்சி மொழி வேண்டும் என்று விரும்பினார். அம்மொழி சமஸ்கிருதம் ஆதிக்கம் நிறைந்த இந்தியாகவோ, பாரசீகம் ஆதிக்கம் நிறைந்த இந்தியாகவோ இருக்கக் கூடாது என்று காந்தி கருதினார். அவர் விரும்பிய மொழி இந்துஸ்தானி. அம்மொழி இந்தியும், உருதுவும் கலந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்கு அடுத்தே அவர்ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கருத்து, மொழிக் கொள்கையிலும் செல்லுபடியாகவில்லை.

Pin It