தத்துவ மேதை ஜெயலலிதா ஒரு தத்து வார்த்தமான பாடலைப் பாடி இருக்கிறார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று. அதற்கு ஒரு பொழிப்புரையும் அவரே சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடல் பணத்தோட்டம் என்ற படத்தில் வருகிறதாம். அந்தப் படம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்ததாம். அப்போது காங்கிரஸ ஆட்சி நடந்து கொண்டிருந்ததாம். அண்ணாவை நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் பாடினாராம். இப்பொழுது எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டு இவர் பாடுகிறாராம் சட்டசபையில்.

மக்கள் நலன் குறித்துத் தான் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்ல முடியாமல் போய்விடும் என்பதால்தான், இவரின் கருத்துகளைச் சட்டசபையில் தெரிவிக்கவில்லையாம் அம்மையார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்கள் நலன் பற்றி, மக்கள் பிரச்சினை பற்றிப் பேச வேண்டிய இடமே சட்டமன்றம் தான். அங்கே மக்களைப் பற்றியும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றியும் பேசாமல், பாட்டுப்பாடி அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கவா மக்கள் இவரைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்? அவரின் தொகுதி மக்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

சரி ! அது ஒருபுறம் இருக்கட்டும் . மக்கள் நலன் என்று இவர் சொல்கிறாரே, அது என்ன?

சட்டசபையில் இவர் பேசும்போது திமுக உறுப்பினர்கள் கூச்சல் போட்டார்களாம்.

இது அந்தம்மாவுக்கு ஏகப்பட்ட அவமானமாம்.

தமிழகச் சட்டப் பேரவையில் எந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் இதுபோன்ற அவமானம் இதுவரை நடந்ததில்லையாம்.

அதைவிடப் பெரிய அவமானம் சட்டப் பேரவைத் தலைவர் அந்தம்மாவுக்கு வணக்கம் வைக்கவில்லையாம்.

இப்படித் தன்னைச் சுற்றியே அவமானம் அவமானம் என்று சொல்லிக் கொண்டிருப்ப தெல்லாம் மக்கள் பிரச்சினையாம் அந்தம்மா அகராதியில். இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் இந்திய நாடாளுமன்றம் தொடக்கம், எல்லா மாநில் சட்டமன்றங்களிலும், மிகமிக அமைதியாக எந்தக் கூட்டத் தொடரும் அமைந்ததாக வரலாறே இல்லை.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூச்சல் குழப்பங்களைச் சமாளிக்க முடியாமல் சோம்நாத் சாட்டர்ஜி எத்தனை தடவைகள் அவை நிகழ்வுகளை ஒத்திவைத்திருக்கிறார் என்பது இந்த அம்மையாருக்குத் தெரியாதா?  அவ்வளவு ஏன்? கலைஞர் முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் அவரிடம் இருந்த அறிக்கையைப் பறித்துப் பெரும் அமளியைச் சட்டமன்றத்தில் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா தானே!

சட்டமன்ற உறுப்பினர்களின் கூச்சலைச் சபாநாயகர் தடுக்கவில்லை என்று சொல்லும் ஜெ யலலிதா, வானளாவிய அதிகாரம் வைத்திருந்த பி.எச். பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, கா.காளிமுத்து போன்றவர்கள் சபாநாயகர்களாக இருந்தபோது கூச்சல் குழப்பங்களே நிகழவில்லை என்று சொல்லுவாரா?

அமைச்சர் இளம்வழுதி எதிர் கட்சித் தலைவரை(ஜெயலலிதாவை) அவமானப்படுத்தும் விதமாக மரபுமீறிப் பேசினாராம் சொல்கிறார் அம்மையார். அப்படி இருந்திருந்தால் அது அவை மீறலாக இருந்திருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை பத்திரிகைச் செய்திப்படி.

முதல்வர் கலைஞர், அவை முன்னவர் பேராசிரியர் அன்பழகன் போன்றோரின் வயது, அனுபவம் இவைகளைக் கூட மதிக்கத் தெரியாமல், மதிக்க மனமில்லாமல், கருணாநிதியோ, அன்பழகனோ என்று ஏக வசனத்தில் பெயரைச் சொல்லும் ஜெயலலிதாவின் பேச்சில் என்ன மரபு இருக்கிறது? இவர் பேசுகிறார் மரபுபுடலங்காய் என்று.

ஒரு பிரச்சனை பற்றி ஜெயலலிதா பேசும்போது, உறுப்பினர்கள் அவர் ஆட்சியில் நடந்த மகாமகம் குளம் சாவு பற்றிப் பேசயிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஜெயலலிதா உரிய பதிலைச் சொல்லி இருக்க வேண்டும். இதுதான் உறுப்பினர்களின் கடமை.

அதை விட்டு விட்டு மகாமகக் குளம் பற்றிப்பேசியதே பெரிய தப்பு என்பதுபோலவும், உடனே காலம் சென்ற நேரு காலத்தில் அலகாபாத் கும்பமேளா கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததைக் குறிப்பிட்டு அதை ஏன் குறைகூறவில்லை என்றும் இற்றுப்போன கயிற்றைப்போலப் பேசியிருக்கிறார் அம்மையார் !

எதிர்க்கட்சியினர் பேசினால் அவமானம் ; அதையே இவர் பேசினால் தன்மானமா?

நான் வணக்கம் சொன்னபோது சபாநாயகர் வணக்கம் சொல்லவில்லை என்று சொல்லியிருக்கும் ஜெயலலிதாவுக்கு, அதற்கான அவை மரபு என்ன என்பதைத் தெளிவாகக் கலைஞர் சொல்லி விளக்கியிருக்கிறார்.

ஜெயா தெரிவித்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்துப் பதில் வணக்கம் செலுத்தியிருக்கிறார் பேரைவைத் தலைவர். இதை மிகச் சரியான புகைப்பட ஆதாரத்துடன் தினத்தந்தி நாளிதழ் (21.01.2010) 9 ஆம் பக்கம் வெளியிட்டு இருக்கிறது.

இதெல்லாமா மக்கள் பிரச்சினை?

‘நான்’ சொன்னேன், ‘நான்’ உத்தர விட்டேன், ‘நான்’ பேசினேன், ‘நான்’ உதவித் தொகை வழங்கினேன் என்றெல்லாம் தன் அறிக்கையில் ‘நான்’ என்ற அதிகாரத் தொனியில் பேசும் ஜெயலலிதாவுக்கு அரசியலும் தெரியவில்லை, அவை மரபும் தெரியவில்லை. அவ மானம் என்ற சொல்லின் பொருளும் புரியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

பிறகு என்ன?

பாட்டுப் பாட வேண்டியதுதான் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று !

- எழில். இளங்கோவன்

Pin It