ila-ganesanகடந்த வாரம், மத்திய அரசு நாளேடுகளில் அரைப்பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. ஆங்கில நாளேடுகளில் ஆங்கிலத்தில் விளம்பரம், தமிழ் நாளேடான தினத்தந்தியில் இந்தியில் விளம்பரம்.

தந்திக்கும், இந்திக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் தமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் இந்த விளை யாட்டு எதற்காக? நாம தமிழ் இயக்கம் நடத்திய சி.பா. ஆதித்த னாரின் தந்தி ஏட்டின், உரிமையாளர்களாவது, அந்த விளம்பரத்தை மறுத்திருக்க வேண்டாமா?

பா.ஜ.க. ஆட்சி தொடங்கிய நாளிலிருந்தே இந்த ‘இந்தி விளையாட்டும்’ தொடங்கிவிட்டது. தன் தாய்மொழியான குஜராத்தியைக் கூட விட்டுவிட்டு, வெளிநாட்டுத் தலைவர்களுடன் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்தியில் பேசுகிறார், பிரதமர் மோடி.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், சுற்றறிக்கைகள், விடுதிக் கட்டணம் பற்றுச் சீட்டுகள் ஆகியவை இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில், ‘விரும்புகின்ற’ மாணவர்களுக்கு இந்திப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

இப்போது இந்தியாவின் ஒரே சிக்கல், இந்தி வேண்டுமா, வேண்டாமா என்பதுதானா? மற்ற அனைத்துச் சிக்கல்களுக்கும், பா.ஜ.க. அரசு தீர்வு கண்டு முடித்துவிட்டதா?

‘ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்னும் சங்பரிவாரங்களின் ஆதிக்க நோக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான முதல் படிதான் இந்தித் திணிப்பு. அதனை நேரடியாகச் செயல்படுத்தும் நேர்மையும், அவர்களிடம் காணப்படவில்லை. மக்களின் மனநிலை எவ்வாறுள்ளது என்று ஆழம் பார்க்கும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளனர்.

1965ஆம் ஆண்டு போன்றதன்று 2014 என்கிறார் இல.கணேசன். இந்தி எதிர்ப்பு உணர்வெல்லாம் தமிழ்நாட்டில் இப்போது இல்லை என்கிறார் எச். ராஜா. இவைபோன்ற தவறான முடிவுகளின் அடிப்படையில்தான், கொல்லைப் புற வழியாக இந்தித் திணிப்பு முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

உண்மைதான், 1965க்கும் 2014க்கம் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. அன்று தமிழகம் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்த்தது. இன்று இந்தியாவின பல மாநிலங்கள் அதனை எதிர்க்கும் நிலையில் உள்ளன. தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இந்தியில் அச்சடிக்கப்பட்ட பற்றுச்சீட்டை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர்கள், பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்தாம்!

அன்று இந்தியா, ஆங்கிலமா என்ற வினாதான் நம் முன் வைக்கப்பட்டது. இன்றோ, இந்திய மட்டுமா, இந்திய அரச மைப்புச் சட்டம் ஏற்றுக்கொண் டுள்ள 22 மொழிகளுமா என்ற வினா எழுந்துள்ளது.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் என்பதை அன்று தமிழறிஞர்கள் விளக்கினார்கள். இன்றோ, இந்தியால் இந்தியாவே எவ்வாறு கெடும் என்பதைப் பிற மாநிலங்களும் அறிந்துள்ளன.

இன்றைய சூழ்நிலையில், இந்தியை எதிர்த்துத் தமிழ்நாடு மட்டும் போராடிப் பயனில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளும் இணைந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதை நோக்கிய முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.

இந்தித் திணிப்பு என்பது, இனிமேல் தமிழ்நாட்டின் சிக்கல் அன்று, இந்தியா எதிர்கொண்டுள்ள சிக்கல்!

Pin It