காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்னும் முழக்கம், தமிழகமெங்கும் ஒரே குரலில் ஒலித்திருக்கின் றது. கட்சி எல்லைகளை எல்லாம் கடந்து, தமிழர்கள் ஒருங் கிணைவது, அரிதினும் அரிதான நிகழ்வே! ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல், மத்திய அரசின் வெளி யுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அம்மா நாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், காமன்வெல்த் மாநாடு குறித்துத் தமிழ் மக்களின் கோரிக்கையை இவ்வாறு வரிசைப்படுத்தலாம் :---

1. காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை இடைநீக்கம் செய்ய இந்தியா முயற்சி செய்ய வேண்டும்.

2. அது இயலாவிடின், அம்மாநாடு இலங்கையில் நடைபெறுவதையேனும் தடுக்க முயல வேண்டும்.

3. அதுவும் இயலா தெனின், குறைந்தபட்சம், இந்தியா - அதிலும் குறிப்பாக நம் பிரதமர் அம் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.

மேற்காணும் மூன்று கோரிக்கைகளில், மூன்றாவது கோரிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நிறைவேறியுள்ளது. அதாவது, இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான்.

அது மட்டும் போதுமானதன்று. இந்தியாவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியு றுத்தி, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தொடர்வண்டி மறியல், கடை அடைப்பு என்று பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றன. (இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகக் கூடும் என்ற தகவல்கள் கசிகின்றன).

இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றம் அவசரமாகக் கூட்டப் பெற்று, சிறப்புத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப் பட்டது. அத்தீர் மானம் குறித்துச் சட்டமன்றத்தில் வேறுபட்ட கருத்துகளும் தெரிவிக்கப் பட்டன.

“தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு அரசின் பணி முடிந்துவிடாது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர் பாகத் தொடர்ச்சியான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று குற்றம் சாற்றினார், புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி. உடனே அவர் வெளியேற்றப் பட்டு விட்டார். நம் தமிழக சட்டமன்றத்தில் தான், எதிர்க்குரல்களுக்கு இடமில்லையே!

“கடந்த மாதம் 24ஆம் தேதி நிறை வேற்றப்பட்ட தீர்மானமே போதுமானது. இது தேவையில்லை” என்று கூறி, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்தனர், சி.பி.எம். கட்சியினர்.

காடுவெட்டிக் குருவின் கைது நடவடிக்கையைக் காரணம் காட்டி, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையே பா.ம.க., புறக்கணித்தது. மற்றபடி, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடும், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், வெளிப்படையாகச் சிலவற்றைப் பற்றி நாம் பேச வேண்டியுள் ளது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் ஏற்படக்கூடிய நன்மை களையும், பங்கேற்பதால் ஏற்படக்கூடிய தீமைகளையும் நாம் கணக்கிட வேண்டியுள்ளது.

இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பதே, தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றி என்பதை முதலில் நாம் ஏற்க வேண்டும். அந்தக் காரணத்தைப் பிரதமர் நேரடியாகத் தன் மடலில் குறிப்பிடவில்லையென்றாலும், உண்மையை உலகே அறியும். தமிழகத்தில் எழுந்த போர்க்குரல்களின் விளைவாகவே, அவர் அம் முடிவை எடுக்க நேர்ந்தது என்பது யாருக்குத்தான் தெரியாது.

அதனால்தான், ‘அது ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது’ என்று கலைஞர் கூறினார். உடனே, ‘சறுக்கல், பின்வாங் கல்’ என்றெல்லாம் ‘தினமணி’ எழுதியது. என்ன சறுக்கல்? எங்கே பின்வாங்கல்?

ஆங்கிலத்தில் ‘CHOGM’ என்னும் எழுத் துகளால் குறிக்கப்படும் அம் மாநாட்டுப் பெயரின் விரிவு, ‘காமன்வெல்த் நாடுகளின் அதிபர்கள் கூட்டம்’ (Commonwealth Heads of Governments Meeting) என்பதுதான். அம் மாநாட்டில், ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபர்தான் பங்கேற்க முடியும். சல்மான் குர்ஷித் போன்ற அமைச்சர்கள், பன்னாட்டு அமைச்சர்களின் சந்திப்பில்தான் பங்கேற்க முடியும். காமன் வெல்த் மாநாட் டில் வேறு எந்த அமைச்சரும் கலந்து கொள்ள முடியாது என்பதை, அதன் விதியே (‘No member of State is invited to send its representative’) கூறுகின்றது.

எனவே, பிரதமர் கலந்துகொள்ள வில்லை என்பதே ஓரளவு ஆறுதலான செய்திதான் என்று கலைஞர் கூறியதில் எந்தப் பிழையும் இல்லை. அதே நேரம், எவருமே கலந்து கொள்ளவில்லையென் றால், நம் எதிர்ப்பு அழுத்தமாய்ப் பதியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும், காமன்வெல்த் குறித்து, நம் முதலமைச்சர் இவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டது ஒரு விதத்தில் வியப்பாகவே உள்ளது. ஈழ மக்களின் மீது அவருக்கு அவ்வளவு அக்கறை உள்ளதா என்ற வினா நம்மிடம் எழுகின்றது. அவருடைய கடந்தகால நடவடிக்கைகள் அவ்வாறு அமையவில்லை என்பதே நம் ஐயத்திற்குக் காரணம்.

அப்படியானால், இப்போது ஏன் இவ்வளவு வேகம்? வேறொன்றுமில்லை, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தான் அதன் பின்புலம் என்பதை நாம் எளிதில் ஊகம் செய்யலாம்.

தன் ஆட்சியில் நடைபெறும் தவறுகளை எல்லாம் மறைப்பதற்கு, ஈழம் இப்போது கேடயமாகப் பயன்படும் என்று அவர் எண்ணுகின்றார். அதன் விளைவாகவே இவ்வளவு விரைவையும் காட்டுகின்றார்.

இந்த உண்மையைத் தி.மு.கழகம் சட்டமன்றத்தில் கூறியிருந்தால், உடனே ‘துரோகிப்’ பட்டத்தைத் தினமணி போன்ற இதழ்கள் இலவயமாக வழங்கியி ருக்கும். ஆனால், தி-.மு.க.,வோ அதனை வரவேற்று வழிமொழிந்து விட்டது. எதிர்ப்பாளர்கள் பாவம் ஏமாந்து போனார்கள்.

ஈழத்திற்கு ஆதரவான நடவடிக்கை களை என்றும் நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் பெயரால் இங்கு நடக்கும் அரசியலையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, காமன் வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்கிறது. ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, சுப்பிரமணியன் சாமி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோர், பிரதமர் கலந்து கொள்ள எதிர்ப்புத் தெரிவிக்க, அதே கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகியோர் மாற்றுக் கருத்தை வெளியிடுகின்றனர்.

குருவின் கைதைக் காரணம் காட்டி, பா.ம.க., சட்டமன்றத்தைப் புறக்கணிக் கிறது. இடதுசாரிகளோ (சிபிஎம்) வெளிநடப்புச் செய்கின்றனர்.

இன்னும் இரண்டு நாள்கள் உள்ளன. காமன்வெல்த் மாநாட்டையட்டி, அடுத்தடுத்தும் சில காட்சிகள் தமிழ் நாட்டில் அரங்கேறலாம்!

Pin It