நவம்பர் 25 - பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாள். குடும்பம், தொழிலகம், சமூகம் ஆகிய எல்லாத் தளங்களிலும் பெண்களின் மீதான, பல்வேறு விதமான வன்முறைகள் இன்றும் குறைந்தபாடில்லை.

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் என்ற பொறுப்பான பதவியில் இருப்பவர் ரஞ்சித் சின்கா. கிரிக்கெட் சூதாட்டம் குறித்த கூட்டவிவாதத்தில் ‘விளையாட்டில் நேர்மையும் நன்னெறியும்’ என்ற தலைப்பில் பேசிய அவர், அது குறித்துப் பேசியிருக்க வேண்டும்.

மாறாக, பாலுறவு வன்முறையைத் தடுக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்ட பெண் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பதப் போல, கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடைசெய்ய முடியா விட்டால், அதை ஏற்க வேண்டும் என்று தரங்கெட்ட ஓர் உதாரணத்தைச் சொல்லியிருக்கிறார்.

இக்கூற்று, பார்ப்பனியப் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க வெறி.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய துறையின் உயர் அதிகாரி இப்படிப் பேசினால் அவர் அந்தத் துறையில் பணியாற்றத் தகுதியில்லை என்றுதானே பொருள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் காட்டிவரும் சாதனைகள் ஆண்களின் ஆளுமைக்குக் குறைந்ததா என்ன?

பெண்களின் திறமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனை, அவர்களின் ஆளுமையை முன்னிறுத்த மனமில்லாத மனுஸ்மிருதிப் பார்ப்பனியப் பண்பாட்டின் வெளிப்பாடுதான் ரஞ்சித் சின்காவின் பேச்சில் தெரிகிறது.

வன்முறைகள் பல வடிவங்களில் நிகழ்கின்றன பெண்கள் மீதான வன்முறைகளும் அப்படித்தான்.

பெண்களுக்குப் பாலியல் வன்முறை ஒன்றுதான் என்பதன்று. குடும்பங்களில் பெண்களை அடித்து உதைப்பது, சமையற்காரி வேலைக்காரியாக அடிமைப்படுத்துவது, அவர்களின் பேச்சுரிமையைத் தடை செய்வது, கணவன் இறந்தால் விதவை என்று சொல்லி ஒதுக்கி நாசப்படுத்துவது, விருப்பமில்லாத பாலுறவும் கூட வன்முறைக் குற்றங்கள்தான்.

குறிப்பாகச் சொன்னால், பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதும், சொற்களால் அவர்கள் உள்ளத்தைக் காயப்படுத்துவதும் உளவியல் அடிப்படை யில் செய்யும் வன்முறை.

இந்த வேலையைத்தான் ரஞ்சித் சின்கா செய்திருக்கிறார்.

பெண்களைத் தாய் என்றும் சகோதரி என்றும் பேசும் மனுவாத ரஞ்சித் சின்கா சிந்தனைகளும் பேச்சுகளும் நமக்குத் தேவையில்லை.

பெண்ணைப் பெண்ணாக, இணையான தோழமையாக, சக மனிதராக அவர்களின் உரிமையைப் பிடுங்காமல், அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செய்யாமல் இருக்கும் சமூக நீதிதான் நமக்கு வேண்டும்.

ரஞ்சித் சின்காவின் ஆணாதிக்கப் பேச்சு கண்டனத்திற்கு உரியது. பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளில் இதனை உணர்த்துவோம், உணர்வோம் - பெரியார் வழியில்.

Pin It