பசுபதி பாண்டியன் படுகொலை
நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்
காவல் நிலையத்தில் பாலியல் வன்முறை

கடந்த மே மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, சட்டம் - ஒழுங்கில்தான் தன்னுடைய முதல் கவனம் அமையுமென்று கூறினார். நான் ஆட்சிக்கு வந்த உடனேயே திருடர்கள், சங்கிலி பறிப்போர் அனைவரும் ரயிலேறி ஆந்திராவுக்குப் போய்விட்டார்கள் என்று கூறினார்.

ஆனால் இன்றோ, பிற மாநிலங்களில் உள்ள திருடர்கள், வன்முறையாளர்கள் அனைவரும் விமானம் ஏறித் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டனரோ என்று அஞ்சத்தக்க நிலை உருவாகியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராகிய பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனம்பட்டி கிராமத்தில், அவருடைய வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அண்மையில் அ.தி.மு.க.வினரால் "நக்கீரன்' இதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. காவல்துறையினர் கண்முன்பாகவே நடைபெற்ற அத் தாக்குதலில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் காயப்பட்டனர். அதுமட்டுமின்றி, நக்கீரன் அலுவலகத்திற்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப் பட்டன. இத்தனைக்கும் பின்னால், நக்கீரன் கோபால், அவருடைய தம்பி குருசாமி, நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், கோவி.லெனின், உதவி ஆசிரியர் தமிழ்நாடன் ஆகியோரின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தாக்கியவர்களை விட்டுவிட்டுத் தாக்கப்பட்டவர்களின் மீது வழக்குத் தொடுத்து, அ.தி.மு.க. அரசு, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம்? "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்று அட்டைப்படத்தில் ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இருந்ததுதான் அ.தி.மு.க.வினரைக் கோபப்படுத்தி விட்டது என்று கூறுகின்றனர். ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் எத்தகையது என்பதைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. அது அவருடைய தனி உரிமை. அச்செய்தி உண்மையா இல்லையா என்னும் விவாதமும் எழுந்துள்ளது. உண்மையில்லாத எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவது ஊடக அறம் ஆகாது.எனவே, தவறான செய்தி ஒன்றினை நக்கீரன் வெளியிட்டிருக்குமானால், அவ்விதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் நமக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

எனினும், அரசியல்வாதிகளைப் பற்றியும், திரை உலகினரைப் பற்றியும் கிசுகிசக்களை எழுதும் பழக்கம், ஊடகங்களில் நெடுநாள்களாகவே இருந்து வருகின்றது. இப்போக்கு வரவேற்கத்தக்கதன்று. தாறுமாறான செய்திகளையும், தரக்குறைவான செய்திகளையும் வெளியிட்டு, விற்பனையை உயர்த்திக்கொள்ளும் போக்கு, இங்கே பல பத்திரிகைகளிடம் உள்ளது.

குறிப்பாக, தினமலர், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற ஏடுகளில், இதுபோன்ற கிசுகிசுக்கள் இடம் பெறாத நேரங்களே இல்லை என்று சொல்லலாம். கலைஞரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தினர் பற்றியும் எத்தனை இழிவான செய்திகளை இவைபோன்ற இதழ்கள் வெளியிட்டு மகிழ்ந்துள்ளன என்பதை நாம் அறிவோம்.

இப்போக்குத் தொண்டர்களிடையே கோபத்தை உருவாக்குதல் இயல்பே என்பதையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால் நக்கீரன் அலுவலகத் தாக்குதல், கோபப்பட்ட தொண்டர் களின் தன்னிச்சையான ஒன்றாகத் தெரியவில்லை. இடைவெளிவிட்டு, இடைவெளிவிட்டு, ஒவ்வொரு அணி அணியாக வந்து தாக்கியுள்ளனர் என்பதும், ஒவ்வொரு அணிக்கும் ஒருவர் தலைமை தாங்கியுள்ளார் என்பதும், அது திட்டமிட்ட தாக்குதலே என்பதை உறுதிப்படுத்துகின்றது. மின்சாரமும் நிறுத்தப்பட்டது என்பதை அறியும் போது, அரசே முன்நின்று கலவரத்தைத் தூண்டியுள்ளது என்பது உறுதியாகின்றது.

அதுமட்டுமின்றி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நக்கீரன் இதழ்களைப் பறிமுதல் செய்து தெருவில் போட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர். இத்தாக்குதல் "நக்கீரன்' என்னும் இதழ் மீதோ, கோபால் என்னும் தனிமனிதர் மீதோ தொடுக்கப் பட்டதன்று. ஆளும் கட்சியைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ யாரும் எதுவும் பேசவோ, எழுதவோ கூடாது என்னும் அச்சுறுத்தலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பதையே இது காட்டுகின்றது.

எப்போதுமே ஜெ.ஆட்சி என்பது, வன்முறைக்கு வழிவிடுகின்ற ஆட்சியாகவே இருந்து வருகின்றது. காவல் நிலையங்கள் மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு எதிராகச் செயல்படுகின்ற நிலையையும அவரது ஆட்சியில் காண முடிகிறது. மிகக் கொடூரமான வாச்சாத்தி நிகழ்வு அன்று அவர் ஆட்சியில்தான் நடைபெற்றது. சிதம்பரம் பத்மினி, முத்தாண்டிக்குப்பம் வசந்தா என்று ஒரு பட்டியலே உள்ளது. இப்போது திருக்கோவிலூர் அருகே உள்ள சிற்றூர்க் காவல்நிலையம் ஒன்றில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சூழலில் ஒன்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனநாயகத்திற்கான இடம் இங்கே குறைந்து கொண்டே வருகிறது. வன்முறைகள், அடக்கு முறைகள் ஆகியனவற்றின் மூலமும், காவல்துறையைக் கொண்டுமே ஆட்சியை நடத்திவிட முடியும் அ.தி.மு.க. அரசு கருதுகிறது. தடிகொண்டு அடக்கிய பாசிச அரசுகளின் நிலை என்னவாயிற்று என்ற வரலாற்றை தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் திரும்பிப் பார்ப்பது நல்லது.

Pin It