நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்தச் செய்வதுதான் பார்ப்பனீயத்தின் சாணக்கியத்தனமாக இருந்து வருகிறது. அதற்குச் சில கோடரிக் காம்புகள் பயன்பட்டு வருகின்றன. துக்ளக் இதழில் அப்படிச் சில நெளிந்து கொண்டு இருக் கின்றன.

15.09.2010 துக்ளக் எழுதுகிறது, "தமிழ்நாட்டில் கட்டாயத் தமிழ்த் திணிப்பு நடந்து வருகிறது" என்று. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா கணவாய்க் குசும்பு?

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு, செம்மொழித் தமிழுக்கு மாபெரும் மாநாடு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, 20 சதவீத இடஒதுக்கீடு அதுவும் பெரியாரின் மாணவர் கலைஞரின் ஆட்சியில். பொறுக்குமா ஆரியத்திற்கு. ஆத்திரத்தில் அறிவிழந்துபோய்த் தமிழ்நாட்டில் தமிழ்த் திணிப்பு என்கிறது.

ஒரு நாட்டின் அரசு தன் மொழியின், இனத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்னெடுப்பதும், அதைச் செயல்படுத்துவதும் அந்த அரசின் கடமை ; ஆட்சி முறைமை. அது எப்படி திணிப்பாகும்? அது சரி. நாடற்ற கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படிப் புரியும்.

அரசுத் துறையிலும், கல்வித் துறையிலும் முழுக்க முழுக்கத் தமிழைக் கொண்டு வரவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாம், நடைமுறைக்குச் சரிப்பட்டு வராதாம். தெனாலிராமனின் குதிரையைப் போல ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து எழுதுபவர்களுக்கு, சிகரத்தின் உச்சியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் செம்மொழித் தமிழின் அறிவியல் வளர்ச்சி எப்படித் தெரியும்? உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்து கொடுக்கும் கணினிப் பொறித் துறையில் ஆங்கிலம், சீன மொழிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ்தான் இருக்கிறது. இணையத்தளத்தில் ணுயிலிஆவிஸ்ரீலிமிவி என்று சொல்லப்படும் வலைப்பூக்கள், இந்தியாவின் மற்ற எந்த மொழிகளையும் விட தமிழில்தான் அதிக அளவில் இருக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு இணையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கிறது சீரிளமை குன்றாத தமிழ் மொழி. ஆரியம் போல் உலகவழக்கொழிந்து போகாது எம் தாய்மொழித் தமிழ்.

அத்தகைய தமிழைத் தமிழக அரசு நிர்வாகத்தில் புகுத்திக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறதாம். அரசு கோப்புகள் தமிழில் எழுதப்படவேண்டும், அரசு அலுவலர்கள் தமிழில்தான் கையயாப்பம் இட வேண்டும், பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும், திருவள்ளுவர் ஆண்டு, மாதம், நாள் எழுதப்படவேண்டும் என்றெல்லாம் தமிழ் வளர்ச்சித்துறையின் அறிக்கையில் தமிழ்வெறி வழிந்தோடுகிறதாம். எனவே இவர்களை எல்லாம் மொழி நக்ஸலைட்கள் என்றுதான் கருத வேண்டும் என்பது துர்வாச வாதம். தமிழ்நாட்டில், தமிழில் பத்திரிகை நடத்தி பிழைப்பு ஓட்டுகிறோமே என்ற நன்றியுணர்வு சிறிதும் இல்லாத துக்ளக்குகளுக்குத் துணை போகும் இந்தக் கோடரிக் காம்புகளை உயிருள்ளவைகளின் பட்டியலிலேயே சேர்க்க முடியாது.

மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் சான்றுகளோடு ஆய்ந்து கணக் கிட்டுச் சொன்ன திருவள்ளுவர் ஆண்டை கற்பனையான ஆண்டு என்கிறது, முழுக்க முழுக்கக் கற்பனைகளைக் கொண்டு கதா காலட்சேபம் நடத்திக் காலத்தை ஓட்டும் மநுவின் எச்சம்.

நீதிமன்றங்களில் தமிழ் வேண்டும் என்று உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்களின் குரல் இந்தக் கட்டுக்குடுமிகளுக்குக் காட்டுக் கத்தலாகக் கேட்கிறது. இதில் தமிழ் தெரியாத நீதிபதிகள் என்ன செய்வார்கள் என்ற முட்டாள்தனமான கேள்வி வேறு. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் ஒருவர் வேறுமாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பது பொதுவான நடைமுறைதான். தீர்ப்பு வழங்குவதில் பாரபட்சம் இருந்துவிடக் கூடாது என்பதற்கான ஒரு ஏற்பாடு. ஒன்றிரண்டு பேர்தான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே கூட, தமிழில் வாதாடலாம் என்று சொல்லும்போது, ' சோ ' க்களுக்கு எங்கே இடிக்கிறது?

அவாளுக்கு இடிப்பது எல்லாம், இத்தனையும் ஒரு சூத்திரத் தலைவனின் ஆட்சியிலே நிறைவேறுகிறதே, இன்னும் பெரியாரின் திராவிடத் தடி வீரியம் குறையாமல் சுற்றிச் சுழன்று கொண்டிருக் கிறதே என்பதுதான்.

ஆரியத்தின் அரசியல் என்றுமே அசிங்கமானது என்பது நாம் அறிந்ததுதான். அதை அடக்க வேண்டிய, அப்புறப்படுத்த வேண்டியவர்களே மறைமுகமாக அதற்குத் துணைபோவதுதான் வேதனை. திராவிடத்தை எதிர்க்கிறோம், பெரியாரைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சொந்த வீட்டுக்கூரையிலேயே கொள்ளி வைப்பவர்களால்தான் பார்ப்பனியத் திமிர் துணிச்சலாகத் துள்ளி எழு(து)கிறது.

செந்தமிழை விடுத்துச் செத்த மொழி சமற்கிருதத்தை அவை நடுவே வைத்துவிட வேண்டும் என்ற அவாளின் சூழ்ச்சியை முறியடித்த திராவிட மண்ணில் பார்ப்பனியப் புரட்டுகள் பலிக்காது என்பது திண்ணம்.

தமிழை, தமிழினத்தை, தமிழ் மரபைக் கொச்சைப்படுத்துகிற பார்ப்பனியப் புரட்டுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினால், திராவிட இயக்கத்திற்கு, திராவிட இயக்க ஆட்சிக்கு ஆதரவாகப் போய்விடுமோ என்று மெளனம் சாதிக்கும் தமிழ்த்தேசியவாதிகளின் அரசியல், ஆரியத்தின் அரசியலை விட அருவருப்பூட்டுவதாக அல்லவா இருக்கிறது. தமிழையும், தமிழனின் சுயமரியாதையையும் பார்ப்பனியத்திற்குப் பலியாக்குவதுதான் தமிழ்த்தேசியமா? முன்னதை விட பின்னது மோசமானது என்பதை உரியவர்கள் உணரவேண்டும்.

Pin It