‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ என்பது திருமணம் தோன்றிய வரலாற்றின் தொடக்க நாட்களைக் குறிக்கிற தொல்காப்பியப் பாடல். 

ஓர் ஆணும் பெண்ணும் பழகிய பின், அதனை மறுத்துப் பிரிந்து விடுவதை அல்லது அதில் யாராவது ஒருவர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சடங்காகத் தோன்றிய திருமணம், பல்வேறு மதங்களாலும்,சாதிகளாலும் வேறுபட்ட சடங்குகளும் அடையாளங்களும் கொண்டதாக சமூகத்தில் மாறிவிட்டது.

ஒரு கட்டத்தில் அந்த சடங்குகள் இல்லாமல்,அதனை நிறைவேற்றுவதற்காக பூசாரி வகுப்பும்,புனிதப்படுத்தும் மந்திரங்களும் இல்லாமல் ஒரு திருமணம் ‘திருமணமாக’ அங்கீகரிக் கப்படாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  மதம், சாதி, சடங்குகள் இவற்றைத் தாண்டி ஒரு திருமணம் நடக்க முடியாது.

அவ்வாறான திருமணமன்றி ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியாது என்ற நிலை வெகுகாலமாக நிலைப்பட்டு விட்டது.

இப்படி, மதச் சடங்குகளுக்குள்ளும், புரோகித தலைமைக்குள்ளும் சிறைப் பட்ட தமிழர்களின் வாழ்க்கையை மீட்கும் விதமாகத்தான் நமது தலைவர் பெரியார்,சுயமரியாதைத் திருணத்தை அறிமுகப்படுத்தினார்.சுயமரியாதைத் திருமணம் 1967இல் அறிஞர் அண்ணா வால் சட்டமாக்கப்படும் வரையிலும்,1928லிருந்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற கருஞ்சட்டைத் தொண்டர்கள்,சட்ட அங்கீகார மில்லாத வாழ்க்கையைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

சமூகத்தில் வைப் பாட்டி நிலையில் அந்தப் பெண் வீராங்கனைகளும், தங்கள் சொத்துரிமை மற்றும் வாரிசுரிமையைக் கோர முடியாமல் அந்த கருஞ்சட்டை வீரர்களும் தங்கள் வாழ்க்கையைப் போராட்டக்களமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்தார்கள். 

‘சுயமரியாதைத் திருமணச் சட்டம்’ இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  இதன்பின் வெகு காலம் கழித்து அகில இந்திய அளவில் சிறப்புத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருமணச் சட்டத்தின் மூலமாகவே மத மறுப்புத் திருமணங்கள் செல்லுபடி யாகும் நிலை வந்தது. 

இவ்வாறாக, ‘சாதி’ ‘தாலி’ மறுப்பு திருமணங்களுக்கான (வேறுபட்ட சாதியினர் கலப்பு மணம் புரிதல்) அங்கீகாரத்தை, சுயமரியாதைத் திருமணச் சட்டமும், மத மறுப்பு திருமணத்திற்கான அங்கீகாரத்தை (வேறுபட்ட மதத்திலுள்ளோர் திருமணம் செய்தல்)சிறப்புத் திருமணச் சட்டமும் வழங்கின.

இந்தப் புதிய சட்டங்களைத் தொடர்ந்து பல புரட்சிகரமான தீர்ப்பு களை நீதிமன்றங்கள் வழங்கலாயின. குறிப்பாக 2000த்திற்குப் பிறகு வந்த பல தீர்ப்புகள் அடிப்படையில் ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி இணைந்து வாழும் உரிமையை அங்கீகரிக்கத் தொடங்கின. மதங்களும் அவற்றின் அடிப்படையிலான திருமண சட்டங்களும் கூறுகின்ற முறை மைகளைப் புறந்தள்ளி, விரும்பியவர்கள் இணைந்து வாழ்தல் என்ற  ‘Living Together’ வாழ்க்கையை நீதிமன்றத் தீர்ப்புகள் அங்கீகரிக்கத் தொடங்கின. 

குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கொன்றில் ‘சேர்ந்து வாழ்தல், வாழ்வின் உரிமை’ என்று நீதிமன்றம் கூறியது. ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட தீர்ப்புகள் வெளி வரும்போதும் மதவாதிகள் மருண்டுபோகி றார்கள்,  அவர்கள் நிற்கும் நிலம் அவர்கள் காலடியில் நழுவிச் செல்வதைக் கண்டு துள்ளிக் குதித்து அலறுகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்தத் தீர்ப்புகள் நீதிமன்றத்தின் வாயிலாக வெளியிடப்படுகின்றன. ஆனால் இவை காலம் எழுதும் வரலாற்று தீர்ப் புகள். மதவாதிகளின் வரலாறு முடிவை நோக்கி நகர்கிறது.  அதற்கு அவர்கள் கண்டனம் தெரி விக்கலாம்.  தடை செய்துவிட  முடியாது.

இந்த வரிசையில் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘நீதிபதி கர்ணன்’ ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.  அய்ந்து வருடங்கள் ஒரு பெண்ணோடு (ஆயிஷா) வாழ்ந்து இரண்டு குழந்தைகள் இருக் கின்ற நிலையில், அந்த ஆண் (ஓசிர் ஹாசன்) பிரிந்து சென்றிருக்கிறார்.  தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நீதி கேட்டுச் சென்ற ‘ஆயிசாவால்’ தங்கள் திருமண நிகழ்வுக்கான சான்று எதனை யும் தர இயலவில்லை.

குழந்தைகளின் பள்ளிப் பதிவேடுகளில் இவர்கள் இருவரும் தாய் தந்தையர் எனக் குறிப் பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நீதிபதி கர்ணன்,அவர்கள் வாழ்க்கை யையே சாட்சியாக எடுத்துக் கொண்டு,திருமணச் சட்டங்களின் அடிப்படையில்,ஓசிர் ஹாசன் ஆயிசாவுக்குக் கணவன் என்ற நிலையில் கட்டுப்பட்டவர் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார்.  அந்தத் தீர்ப்பை நியாயப்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதுகையில்,‘ஓர் ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டாலே அது திருமணம் தான்’ என்று கூறுகிறார். அதன் அடுத்த பக்கமாக, ‘உடலுறவு இல்லா விட்டால் அது திருமணம் இல்லை’ என்றும் சொல்கிறார்.

இந்தத் தீர்ப்பு வழக்கம் போல் மதவாதிகளின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது. அதே நேரம் முற்போக்கு முகாமிலிருந்தும் எச்சரிக்கை உணர்வுடன் சில விமர்சனங்கள் இந்தத் தீர்ப்பின் மீது தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பக்கங்கள் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

முதலாவதாக,எவ்வாறு ‘அரசியல் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டது’உலக வரலாற்றை முன்னோக்கி நகர்த்தியதோ, அது போல் திருமணமும் மதத்திலிருந்து பிரிக்கப்படுவது மிகச் சரியான வரலாற்று நிகழ்வாகும்.  அந்த அடிப்படையில், ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ எந்த மத முறைமைகளும், சடங்குகளும் தேவையில்லை என்று கூறிய இந்தத் தீர்ப்பு புரட்சிகரமானதுதான்.  அதனை எதிர்க்கின்ற மதவாதிகள் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு கூற விரும்புகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும். 

இது குறித்து ஊடக விவாதமொன்றில் தொலைபேசித் தொடர்பில் வந்த ஓர் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்,இதனை விபச்சாரம் என்று வகைப்படுத்துகிறார்.  ‘இணைந்து வாழ்தல்’ ‘Living Together’  என்ற முறையையும் விபச்சா ரம் என்றுதான் அவர் கூறுகிறார்.  ஓர் ஆணும் பெண்ணும் அய்ந்து வருடங்கள் ஊரறிய இணைந்து வாழ்ந்து, இரண்டு பிள்ளைகள் பெற்ற வாழ்க்கை,அவர்கள் திருமணம் எந்தவொரு மதச்சடங்கின் அடிப்படையிலும் நடைபெற்றிருக்க வில்லை என்ற காரணத்தினால் விபச்சார மாகிவிடுமா?

இதில் இன்னொரு நகைமுரணையும் கவனிக்க வேண்டும்.  தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இந்துத் திருமணத்தையும்,கிறித்துவத் திருமணத்தையும் ஓர் இஸ்லாமியர் ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை. தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இஸ்லாமியத் திருமணத்தையும், கிறித்துவத் திருமணத்தையும், ஓர் இந்து ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை.

தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இந்துத் திருமணத்தையும்,இஸ்லாமியத் திருமணத் தையும், ஒரு கிறித்துவர் ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை. ஆனால் எந்த மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல்,தங்கள் மனச்சாட்சியையும் தங்களுக்கான மனிதர்களின் நட்பையும் மட்டும் ஆதாரமாக வைத்து வாழ்கின்ற வாழ்க்கையை இவர்கள் ‘விபச்சாரம்’ என்று வகைப்படுத்துகிறார்கள்.  இதே இஸ்லாமிய நெறிப்படி ஓர் ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் அதனை விபச்சாரம் என்று இதில் எந்த மதத்தவரும் கருதுவதில்லை. 

இந்த மூன்று மதவாதிகளின் கூட்டு அரா ஜகத்தை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மனித சமூகம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.  மாற்று மதங்களைக் கூட சகித்துக் கொள்கிறோம்.ஆனால் மதமற்ற ஒரு வெளி உருவாகக் கூடாது என்கிறார்கள் இவர்கள். ஆக இவர்கள் ஒற்றுமையாக இல்லாமலிருந்து போடுகின்ற சண்டைகளிலும் அழிவைத் தான் நிகழ்த்துகிறார்கள். 

ஒற்றுமையாக இருந்தாலும் அழிவுக்காகத்தான் ஒன்று படுவோம் என்கிறார்கள். இவர்களை என்ன செய்ய?கடவுள் என்ற ஒன்று இல்லை என்று நிருபிக்கப்பட்டு விட்டாலும் கூட, மனிதன் வாழ மதம் என்ற அமைப்பு தேவை என்று சில நண்பர்கள் வாதிடுகிறார்கள்.  ஆனால் மதம் என்ற அமைப்பே இயற்கையான மனிதத் தன்மைக்கும் அன்புக்கும் எதிரானது அல்லது மாற்றானது என்பதைத்தான் இது போன்ற தருணங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன.

எனவே இவர்களின் எதிர்ப்பிலிருந்தே இந்தத் தீர்ப்பு நாம் வரவேற்க வேண்டிய தீர்ப்பு என்ற முடிவுக்கு எளிமையாக வந்து விடலாம்.  இந்த இடத்தில் இந்தக் கட்டுரையையும் முடித்து விடலாம். ஆனால் நீதிபதி கர்ணன் அவர்களின் வாக்கிய அமைப்புகளில் சில உண்மைகளை நாம் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It