ஏறத்தாழ இரண்டு வாரங்களாகப் பரபரப்புக் காட்டிய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி, அறுவரில் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நால்வரும், அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று விடுவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றே. ஆறாவது இடத் திற்குத்தான் போட்டி நிலவியது. தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் ஏ.ஆர். இளங்கோவனும் அந்த இடத்திற்குப் போட்டியிட்டனர்.

கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தவுடன், 23 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும்தானே உள்ளனர், உங்கள் கட்சி வேட்பாளர் எப்படி வெற்றி பெறுவார் என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது, தலைவர் கலைஞர் தனக்கே உரிய நிதானத்துடன், “வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் போட்டியிடுகிறோம்” என்றார்.

மனிதநேய மக்கள் கட்சியினர் ஆதரவு தெரிவித்தபின், 23 வாக்குகள் 25 ஆயின. புதிய தமிழகம் வாக்குகள் அதனை 27 ஆக்கின. கடைசி நேரத்தில் வந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குகள், மொத்தம் 32 வாக்குகளுக்கு உறுதியளித்தன. ஒரு வாக்கு செல்லாத வாக்காக ஆகிவிட்டதால், இறுதியில் 31 வாக்குகளைப் பெற்றுக் கனிமொழி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில்,தி.மு.க.வின் அரசியல் அனுபவமும்,தே.மு.தி.க.வின் அரசியல் முதிர்ச்சியின்மையும் பளிச்சென்று வெளிப்பட்டன.

தே.தி.மு.க.வின் தலைவர் விஜயகாந்த், இந்தத் தேர்தலை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.தங்களிடமிருந்த 22 வாக்குகளைத் தி.மு.க. மற்றும் பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவாக அறிவித்துவிட்டு,அடுத்த ஆண்டு வரப்போகும் மாநிலங்களவைத் தேர்தலில், ஓர் இடத்தை எளிமையாகப் போட்டியின்றிப் பெற்றிருக்க முடியும். அப்படிச் செய்வதன் மூலம், அடுத்த ஆண்டு, தில்லி அரசியலிலும் தே.மு.தி.க. கால்பதிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

தில்லி செல்ல வாய்ப்புள்ளது என்ற நிலையும்,தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையும், கட்சியின் உறுப்பினர்களுக்குப் புதிய ஊக்கத்தைத் தந்திருக்கும். இனிமேல் ‘தொகுதி மேம்பாட்டிற்காக’ முதலமைச்சரைத் தனியாகச் சென்று சந்திக்க வேண்டிய நிலை, அடுத்தடுத்த சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு ஏற்படாது.

இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததன் மூலம் இரண்டு பாதிப்புகள் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளன.காங்கிரஸ் உள்பட எந்தக் கட்சியும், அக்கட்சிக்குப் பின்னால் வரத் தயாரில்லை என்பது தெளிவாகியுள்ளது.தனித்து நிற்கும் கட்சியை விட்டு,வேறு கட்சிகளுக்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் செல்வதற்கான நிலையும் உருவாகியுள்ளது.

விஜயகாந்த் எடுத்த இத்தவறான முடிவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.‘தான்’ என்னும் அவரு டைய தன்முனைப்பு ஒரு காரணம் என்றால்,தவறாக வழிகாட்டும் பண்ருட்டியின் அறிவுரைகள் இன்னொரு காரணமாக இருக்கலாம். எப்படியோ, தே.மு.தி.க. கட்சி,தேயும் விஜயகாந்த் கட்சியாக ஆவதற்கு அவர்களே வழிவகுத்து விட்டனர்.இத்தேர்தலில்,பிற கட்சிகள் எப்படி நடந்து கொண்டன என்பதையும் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தலில்,தி.மு.க.வின் வாக்குகளைப் பெற்றே,பா.ம.க.வின் அன்புமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.தி.மு.க.வின் தலைவர் கலைஞரின் பரிந்துரையின் அடிப்படையில்தான், மத்திய அமைச்சராகவும் ஆனார். அதற்கான நன்றிக் கடனை இந்தத் தேர்தலில் பா.ம.க.ஆற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் அவர்கள் தேர்தலைப் புறக்கணித்து விட்டனர்.

பா.ம.க.வினராவது புறக்கணிப்புடன் நின்று விட்டனர். ஆனால் பொதுவுடைமைக் கட்சியின ரின் போக்கோ, இன்னும் மோசமாக இருந்தது.

அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்வதற்காக அனைத்து அவமானங் களையும் அவர்கள் தாங்கிக் கொண்டனர். அக்கட்சியின் தலைவர்கள், தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து காத்துக்கிடந்தனர்.ஆனால் முதலமைச்சர்,அவர்களைச் சந்திக்கவில்லை.5 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபிறகு, அவர்களைத் தில்லியில் சந்தித்து, ஆறாவது இடத்தில் வெற்றிபெறத் தன் வாழ்த்துகளைச் சொன்னார்.நம் பொதுவுடமைக் கட்சித் தோழர்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை! அதனையும் கேட்டுக் கொண்டனர்.

பிறகு, விஜயகாந்த் மீது இருந்த கோபத்தினால், ஐந்தாவது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, அந்த இடத்தில் தோழர் து. ராஜாவை ஆதரித்தார் ஜெயலலிதா என்பது உலகறிந்த செய்தி.
இந்த நிலையில்தான், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய பிருந்தா காரத், தி.மு.க.வை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். ‘பேச்சுக்கே இடமில்லாத’ அளவிற்கு அப்படி ஒரு கோபத்தை அவர்கள் தி.மு.க. மீது காட்டினர்.

தி.மு.க.வின் ஆதரவு இல்லாமல்,கடந்த தேர்தல்களில் து.ராஜாவும்,டி.கே.ரங்கராஜனும் மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆகி இருக்க முடியாது என்னும் உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.போகட்டும்...தலைவரின் வழிகாட்டலில்,தளபதியின்கடும் உழைப்பில் கிட்டியுள்ளது வெற்றிக்கனி.

மீண்டும் கூட்டணியா?

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் வாக்குகளைத் தி.மு.ககோரியது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. மீண்டும் கூட்டணி என்று சில ஏடுகள் எழுதுகின்றன.
 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் நேரடியாக வாக்களிப்பார்கள். மக்களே வாக்காளர்கள். அந்த வாக்காளர்களிடம், வேட்பாளர்கள் வாக்கு கேட்பார்கள்.  வாக்காளர் யாராக இருந்தாலும்,எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் எல்லா வேட்பாளர்களும் வாக்கு கோருவர். அதுதான் மரபு.

மாநிலங்களவைத் தேர்தல் சற்று வேறுபட்டது.அதில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே வாக்களிப்பார்கள். எனவே இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர்கள். அந்த வகையில்,ஒரு வேட்பாளர்,தனக்கு வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களிடம் வாக்குகளைக் கேட்க வேண்டுமா, வேண்டாமா?  27ஆம் நாள் தேர்தலில், காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களே.அவர்களிடம் வேட்பாளர்களில் ஒருவராகிய கனிமொழி வாக்கு கேட்பதுதானே நியாயம்?

வாக்கு கேட்பது வேறு,கூட்டணி அமைப்பது வேறு.இரண்டையும் ஏன் நாம் குழப்ப வேண்டும்?

(23.06.2013 அன்று தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன்)

Pin It