கொலைகளும், கொள்ளைகளும் நாட்டில் எப்போதாவது நடக்கக் கூடியவைதான். ஆனால், இன்று தமிழ்நாட்டில் நடைபெறுவதைப் போல அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் என்றும் நடந்ததில்லை.

ஆளும் கட்சியின் பாசத்திற்குரிய பாரதிய ஜனதாக் கட்சி, இந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் கூட, வரிசையாகக் கொலை செய்யப்படுகின்றனர். கனவில்கூட ‘அம்மாவுக்கு’ விசுவாசமாக இருக்கக்கூடிய தோழர் தா.பாண்டியனே வருத்தப்பட்டு அறிக்கை கொடுக்கும் அளவிற்குத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, கெட்டு ஒழிந்து கொண்டிருக்கிறது.

நிர்வாகத் திறன் மிக்கவர் என்று ‘மெச்சப்படும்’ முதலமைச்சரின் கைகளில்தான் காவல்துறை உள்ளது-. சென்ற ஆட்சியில், காவல் துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தும், தான் வந்தால்தான் சரிசெய்ய முடியும் என்றும் பெருமை பேசியவர், இன்றைய முதல்வர். இப்போது அவர் சரிசெய்த அழகைத் தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது!

நெல்லை மாவட்டம், வள்ளியூரில், நீதிமன்றத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். சென்னை, திருவான்மியூரில் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள நகைக் கடையில் திருட்டுப் போகிறது. கோவையில் முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி லத்திகா சரணிடமிருந்த பையைப் பறித்துக் கொண்டு திருடர்கள் ஓடுகின்றனர். பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு இல்லாத நாளோ, ஊரோ நாட்டில் கிடையாது.

நேர்மையாகத் தொழில் செய்ய முடியாவிட்டாலும் எளிமையாகக் கொலை செய்ய முடிகிறது, இந்த ஆட்சியில். பல கொலை வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு என்னாயிற்று என்று எவருக்கும் தெரியவில்லை.

பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற குரல் இன்று ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது. தி.மு.க.விலும் பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட் டுள்ளனர். அண்மையில் கூட, பெரம்பூர் தி.மு.க. வட்டச் செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலையுண்டுள்ளார்.

எந்தக் கட்சியினராக இருந்தாலும், இப்படிக் கொலை செய்யப்படுவது கடும் கண்டனத் திற்குரியது. பா.ஜ.க.வோடு நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அக்கட்சியினர் தொடர் கொலைகளுக்கு உள்ளாவது, எவ்விதத்திலும் ஏற்கக் கூடியதன்று.

இப்படிப்பட்ட சட்டம் - ஒழுங்குச் சீர்குலைவை, அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் நின்று எதிர்த்திட வேண்டும்.

அதே வேளையில், பா.ஜ.க. வினரும் ‘கொலை வெறி’யைத் தூண்டும் போக்கி னைக் கைவிட வேண்டும். வேலூர் வெள்ளையன் கொலைக்குப் பிறகு, அவ்வூரில் ஒட்டப்பட்டிருந்த, “ஏ... துலுக்க நாயே, குஜராத் மறந்துபோய் விட்டதா உனக்கு” என்பது போன்ற சுவரொட்டிகளும், கொலைகளுக்கான காரணம் ஆகிவிடும் என்பதை மதவெறியர்கள் மறந்துவிடக் கூடாது.

கொல்லப் பட்ட பா.ஜ.க. வினர் அனை வரும் அரசியல் காரணங் களுக்காகக் கொல்லப் படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டி யுள்ளது. அது குறித்து, ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள ஓர் அட்ட வணையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், கொலைகள் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வாகாது. அரசியல் காரணத்திற்காகவோ, தனிப்பட்ட பகை காரணமாகவோ தொடர்ந்து கொலைகள் நிகழ்த்தப்படுவதும், தொடர் கொள்ளை கள் நடைபெறுவதும், இங்கே ஓர் அரசு இருக்கிறதா என்னும் ஐயத்தை எழுப்பி யுள்ளது.

குமுறி அழும் தேசத்தின் குரல், கொடநாட்டு மாளிகையை எப்போது எட்டும்?

Pin It