அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் மனுநீதியைப் மறுபதிப்புச் செய்கின்ற ஆபத்தான வேலைகள் முன்னெடுக்கப் படுகின்றன. சாதியின் பேரால் நடத்தப்படுகின்ற சமூகக் கொடுமைகள், அடுத்ததாகக் கலை வடிவத்தில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியின் நாட்டியா என்னும் அமைப்பின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக அடையார் டைம்ஸ் நாளிதழில் விளம்பரப்படுத்தி இருந்தனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த, பேராசிரியர் சரசுவதி, உடனே அக்கல்லூரிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்நிகழ்ச்சி குறித்து சில ஐயங்களையும், அதற்கான விளக்கங்களையும் கேட்டிருக்கிறார். காரணம், விளம்பரத்தில் அந்நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு அப்படிப்பட்டதாக இருந்தது.

“Devadasi Traditional System and Bharathanatiyam” என்பதுதான் அந்தத் தலைப்பு. தேவதாசி முறை பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்ற நடிகை சொர்ண மால்யா மேற்கண்ட தலைப்பில் விரிவுரை யாற்ற இருப்பதாகவும் அவ்விளம்பரம் சொல்லியது. ‘தேவதாசி முறை என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று. பெண்களை இழிவுபடுத்திய சமூகக் கொடுமை அது. அந்தத் தலைப்பில் மாணவிகளுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்’ என்று பேராசிரியர் சரசுவதி கேட்க, கல்லூரித் தரப்பில் பேசியவர், ‘இதைக் கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு எதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்?’ என்கிற தொனியில் பேசியிருக்கிறார்.

அவர் பேசிய விதத்தையும், அந்நிகழ்ச் சியை வழங்குபவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்த நபரின் பெயரையும் பார்க்கும்போது, ஏதோ சரியில்லை என்பதாகத் தோன்றவே, கல்லூரிக்கே நேரில் போய்ப் பேசிவிடுவது என்ற முடிவுக்கு வந்து, ஓவியா, வழக்கறிஞர் அஜிதா,

கவின்மலர், ஆகியோரோடு நானும் கல்லூரிக்குப் போய்ப் பேசிய போது ஒரு சிறு மாற்றத்தை மட்டும் காண முடிந்தது.

நிகழ்ச்சியின் தலைப்பை Evolution of Bharathanatiyam என்று மாற்றி அச்சிட்ட ஒரு அழைப்பிதழைக் காட்டினார்கள். பேராசிரியர் சரசுவதி தொலைபேசியில் வாதிட்டதன் விளைவாக இந்த மாற்றம் என்பது புரிந்தது.

இது தேவதாசிகளுக்கும் பரதநாட்டி யத்திற்குமான தொடர்பை வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் சொல்கின்ற நிகழ்ச்சி மட்டுமே என்று விளக்கம் அளித்தார்கள்.

நாளை மறுநாள் (26.07.2013) நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.

அதன்படி ஓவியா, கவின்மலர், நான் உள்ளிட்ட மூவரும் நிகழ்ச்சிக்குச் சென்றோம். சொர்ணமால்யா கணேஷ் அவருடைய பவர் பாயிண்ட் ஸ்லைடில் போட்டிருந்த தலைப்பே, அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உணர்த்தியது. “Devadasis - wives of God” என்றே தலைப் பிட்டிருந்தார்.

ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் தன்னுடைய ஆராய்ச்சி அறிவினை அவர் கொட்டித்தீர்த்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஓர் அழகான நாகப்பாம்பு ஒலிவாங்கியின் முன் நின்று நச்சினைக் கக்குவதைப் போல இருந்தது.

தேவதாசிகள் இன்ன சாதி என்று யாராலும் சொல்ல முடியாதாம். பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனராம். ஆண் குழந்தை இல்லாதவர்கள், ஆண் குழந்தை வேண்டும் என்று ஏற்கனவே இருக்கும் பெண் குழந்தையைப் பொட்டுக்கட்டி விடுவதாக நேர்ந்து கொள்வார்களாம். எனவே, இன்ன சாதி என்று குறிப்பிட முடியாத படிக்கு, அவர்கள் நாட்டிய சமூகத்தவர் என்று ஒரு குழுவாகத்தான் இருந்தார்களாம். அவர்களில் நட்டு வாங்கம் செய்து வந்த ஆண்களை ஒன்றிணைத்து, இசை வேளாளர் என்னும் சாதிப்பிரிவை ஏற்படுத்தியதே திராவிடர் கழகம் போன்ற, தேவதாசி முறைக்கு எதிரான இயக்கங்கள் தானாம்.

இது மட்டுமா? இன்னும் தொடர் கிறது அவருடைய ஆய்வுரை...

தேவதாசி வாழ்க்கை அந்தப் பெண்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. தேவதாசி குடும்பத்தில் பிறக்கின்ற பெண்கள் எல்லோருமே தேவதாசி என்கிற உன்னதமான பதவியை அடைந்துவிட முடியாதாம். 5 வயது தொடங்கி ஏழு ஆண்டுகள் அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, கோயில் சார்ந்த சடங்குகளையும், விரதங்களையும் நியமப்படி கடைப்பிடித்த பிறகுதான் தேவதாசியாக அங்கீகரிக்கப்படுவாளாம். அப்படியானால், தேதாசியாக்கப் படும்போது அந்தப் பெண் 12 வயது சிறுமியாக இருப்பாள். ஒரு தேவதாசி 25 வயதில் ஓய்வு பெற்று விடுவாராம்.

இங்கே நமக்கு ஒரு கேள்வி... 25 வயதுக்கு மேலானவர்களின் நாட்டி யத்தை இறைவன் விரும்பமாட்டாரா? கலைதான் அங்கே பிரதானம் என்றால் வயது ஒரு தடையாகுமா? பத்மா சுப்பிரமணியமும், சொர்ணமால்யாவும் 25யைத் தாண்டியும் ‘கலைச்சேவை’ செய்யவில்லையா?

இதிலிருந்தே தேவதாசிகள் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டிருக் கிறார்கள் என்பது தெளிவாகவில்லையா?

சொர்ணமால்யா பரதநாட்டியக் கலைஞராகவும் இருப்பதால், தேவதாசி முறையை ஏற்றிப் போற்றும் போது, அவருடைய உள்ளார்ந்த சிலாகிப்பு அப்படியே முகத்தில் எதிரொலித்தது. மாணவிகள் அவருடைய பேச்சை கவனமாக செவிமடுத்ததைப் பார்த்த போது, அச்சமாகத்தான் இருந்தது-சமூகத்தில் எல்லா நிலைகளிலும் முதல் இடம் அளிக்கப்பட்டு, அனைவராலும் போற்றப்பட்டார்களாம். அவர்கள் இறந்துவிட்டால், கோயிலின் கருவறை யிலிருந்து பட்டாடை வருமாம் பிணத்தின் மீது போர்த்துவதற்கு. சுவாமி ஊர்வலத்தின் போது, வேத விற்பன்னர் கள் கூட சுவாமிக்குப் பின்னால்தான் வருவார்களாம். தேவதாசிகளோ சுவாமிக்கு முன்னால் நடனமாடிச் செல் வார்களாம். தேவதாசிமுறை ஒழிக்கப் பட்டுவிட்டதால், பரதநாட்டியம் பல நுணுக்கமான கூறுகளை இழந்துவிட்ட தாம். இத்தனை சிறப்புமிக்க தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்களே என்கின்ற ஆதங்கத்தை அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் காணமுடிந்தது. இதை ஒழிக்க வேண்டும் என்று பேசிய முத்து லெட்சுமி அம்மையார், இந்தப் பிரச்சி னையை அரசியல் பார்வையோடுதான் பார்த்தாராம்.

கேள்வி நேரத்தின் போது, நம்முடைய கடுமையான எதிர்ப்பை அங்கேயே ஓவியா இப்படிப் பதிவு செய்தார்...

“இந்த உரையை முழுமையாக வரிக்கு வரி மறுக்க வேண்டும். காலமும் இடமும் இங்கு இல்லாததால், அடிப்படையான சில கேள்விகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். பத்தினி, பரத்தையர் இரண்டுமே ஆண்கள் பெண்களுக்கு படைத்துத்தந்த உலகங்கள்தான். இதில் பத்தினியைக் காப்பாற்றுகின்ற பொறுப்பு புருசனுக்கும், பரத்தையரைக் காப்பாற்று கின்ற பொறுப்பு ராஜாவுக்கும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதில் சிலாகிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் வைக்க விரும்பும் கேள்வி என்னவென்றால், தேவதாசிகள் என்பவர்கள் பிறவியோடு இணைக்கப் பட்டிருந்தார்களா? இல்லையா? தேவதாசி வாழ்க்கை முறை அவர்களின் விருப்பத் தேர்வாகவா இருந்தது? 25 வயதை ஓய்வு பெறும் வயது என்றீர்கள். அப்படி எனில் இந்த வாழ்க்கைக்கான முடிவெடுக்கும் போது அவர்களின் வயது என்ன? அக்குழந்தைகள் மீது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் திணித்தது சமூகக் கொடுமை இல்லையா? இச்சமூகக் கொடுமையை எதிர்த்த முத்துலெட்சுமி அம்மையாரிடம், ஒரு பத்துப் பேர் பெயர்களை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, அவர்கள் வாழ்க்கைக்கு வழிகேட்கிறீர்கள். ஒரு சமூக அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களிடம் இப்படிக் கணக்குக் கேட்பது முறையன்று. பாதிக்கப்பட்டவர்களின் கணக்கை எங்களால் சொல்ல முடியும். ஆனால் இதனால் அந்த வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் கணக்கை உங்களாலோ, எங்களாலோ சொல்ல முடியாது. அது ஒரு முடிவில்லாத எண்ணிக்கை”.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவான வாழ்க்கைக்குள் தள்ளிய தேவதாசி முறையைப் புதுப்பிக்க நினைக்கும் சொர்ணமால்யா போன்றவர் களை அழைத்து, மாணவிகள் மத்தியில் தவறான கருத்துகள் பதிவதற்குக் காரண மான கல்லூரி நிர்வாகம்

கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். பார்ப்பனியமும், பார்ப்பனியச் சிந்தனைகளும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை நன்கு அறிந்திருக்கும் திராவிட இயக்கங்களும், இன்னபிற முற்போக்கு ஜனநாயக அமைப்புகளும் போராட்டக் களங்களில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர வேண்டும்.

“இது ஒரு சாதியச் சமூகமாகத்தான் இருக்கும் என்று சொன்னால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று அம்பேத்கர் சொன்னார். “பரதநாட்டியத் தின் வளர்ச்சிக்கு தேவதாசி முறை போற்றப்பட வேண்டும் என்று சொன்னால் அந்தக் கலையே அழிந்து போகட்டும்”.

Pin It