திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதால் மட்டுமே, மத்திய அரசு தமிழகத்திற்கும், தமிர்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுத்துவிடும் என்று எண்ணுவது அறிவுடைமையாக இருக்காது. போராடித்தான் பெற வேண்டும். போராடினாலும் கூட உரிமைகள் மறுக்கப்படுகின்றன, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு இப்போதைய சான்று முல்லைப் பெரியாறு அணை.
கேரள எல்லையில் இருந்தாலும் இதுவரையும் முல்லைப் பெரியாறு அணை, தமிழகப் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில், அதன் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருந்து வருகிறது. அணையின் பயன்பாடும் தமிழகம் கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்குமானதாகவும் இருந்து வருகிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை என்பது சாதாரண மக்களுக்கும் புரிகிறது. ஆனால், மத்திய அரசுக்கு மட்டும் இது புரியவில்லையா? அல்லது புரியாதது போல நடிக்கின்றதா என்பதுதான் நமக்குப் புரியவில்லை.
ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் மத்திய அரசின் செயலுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு நல்ல சான்று!
தென்தமிழ் நாட்டின், முக்கியமாக தேனி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் தண்ணீர்ப் பிரச்சினையைச் சரிசெய்ய முல்லைப்பெரியாறு அணையின் நீர் அவசியமாகிறது. தமிழகத்திற்கான இந்த நீர்ப் பயன்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத கேரள அரசு, அது காங்கிரஸ் தலைமையில் அமையும் அரசாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் தலைமையில் அமையும் அரசாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறது, சரியான காரணத்தைச் சொல்லாமல்!
கேரள அரசு என்ன சொல்கிறது? 131 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணை இது. அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதிகமாக நீர் தேக்க முடியாது. தேக்கினால் அணை உடையும், சுற்று வட்டாரங்கள் நீரில் மிதக்கும். ஆபத்து. . . ! ஆபத்து. . . ! இதுதான் கேரளத்தின் கூச்சல். இந்த அச்சத்தைப் போக்க நீரியல் நிபுணர்கள், கட்டுமான வல்லுனர்கள் கொண்ட குழுவால் அவ்வணையின் பலம், பலவீனம் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசுடன் துணைநின்றது தமிழக அரசு. அக்குழு ஆய்வு முடிவில் சொல்லிய செய்தி, அணை பலவீனமாக இல்லை பலமாகத்தான் இருக்கிறது என்பதாக அமைந்தது. ஆனால் கேரளா அதை ஏற்க மறுத்து விட்டது.
தமிழக அரசு, அணையின் முழுக் கொள்ளளவு நீர் நிரப்பாவிட்டாலும் 142 அடி வரையிலாவது தண்ணீர் தேக்க வேண்டும் என்றது. அதையும் கேரள அரசு மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கால், 136 அடிமுதல் 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கலாம் என்ற நியாயமான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. உடனே சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தது கேரள அரசு. இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு.
இந்நிலையில் தமிழகம், கேரளம் ஆகிய இருமாநிலங்களுடன் பேசி இணக்கமான முடிவைக் கொண்டு வரவேண்டிய மத்திய அரசு, தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து, கேரளத்துக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு என்று சொல்கிறார்களே, அதற்கு மாறாகச் செயல்பட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட, ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி என்ற செய்தியால் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழக முதல்வர், ‘இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசு இதுபோன்ற அனுமதி வழங்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.
ஆனால், செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்த தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில், வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தக் கேரள அரசுக்கு அனுமதி வழங்கினோம் என்றும், சிறிய அணை கட்டத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ளக் கேரள அரசுக்கு அனுமதி அளித்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு எதையும் நாங்கள் செய்திடவில்லை என்றும் அக்டோபர் 6 ஆம் தேதி ஒரு அறிக்கையின் மூலம் உறுதிசெய்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
செப்டம்பர் 23ஆம் தேதி கேரள அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், ‘முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மற்றொரு அணை கட்டுவதற்குப் பூர்வாங்க ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய தகவலைச் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அனுமதி வழங்கக் கூட்டம் நடத்தப்பட்ட தேதி செப்டம்பர் 16. கேரள முதல்ருக்கு ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்ன தேதி 23. ஆனால் தமிழக முதல்வருக்கு இச்செய்தியைச் சொல்லாமல் 20 நாட்களுக்குப் பிறகு பத்திரிகையின் மூலம் அறிக்கை விடுகிறார் மத்திய அமைச்சர். இதன் மூலம் கேரளாவுக்கு காதும் காதும் வைத்துப் பேசினாற் போல அனுமதி வழங்கி உடனே தகவலைச் சொன்னதன் மூலம் கேரளத்திற்கு முன்னுரிமை தந்த மத்திய அமைச்சர், 20 நாட்கள் ஆகியும் தமிழகத்திற்கு இச்செய்தியைக் கூறாமல் இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, அதை ஓர் அறிக்கையாக வெளியிடுகிறார் என்றால், தமிழர்களை ஏமாளிகள் என்றல்லவா நினைக்கிறார்.
கேரளாவின் கண்ணில் வெண்ணெய், தமிழர்கள் கண்ணில் சுண்ணாம்பு இதுதான் தேசிய ஒருமைப்பாடு! அடுத்து, இந்த அனுமதி நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்கிறார் மத்திய அமைச்சர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு 142 அடிவரை தண்ணீரை அணையில் தேக்கலாம் என்று வந்தும் அதை மறுத்து, இன்றுவரை நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவரும் செயல் நீதிமன்ற அவமதிப்பு இல்லையாம்! தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்திப் பின்னர் அணை கட்டவேண்டும் என்று கேரளா சொல்கிறது. புதிய அணை தேவையில்லை, வேண்டுமானால் இருக்கும் அணையை மேலும் பலப்படுத்தலாம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி நடந்த தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் புதிய அணை, அது பெரியதோ அல்லது சிறியதோ கட்ட அனுமதி வழங்கியதும் நீதிமன்ற அவமதிப்பு இல்லையாம்!
இவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம். கே. பிரேமச்சந்திரன் திருவனந்தபுரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முல்லைப் பெரியாறில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதைப் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி என்று தமிழகம் கருத வேண்டியதில்லை’ என்கிறார். ஆய்வு என்பதே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிதானே!
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘கடந்த 2007 ஆம் ஆண்டில் கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய அணை கட்டுவதற்கான துணைக்கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ஆய்வுப் பணிகள் தொடங்கி விட்டன. புதிய அணை கட்ட, அப்பகுதியில் 10 கிமீ பரப்பளவில் ஆய்வு நடத்த வேண்டும். 7 கிமீ பரப்பளவில் ஆய்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள 3 கிமீ பகுதி வனவிலங்குகள் சரணாலயத்தின் கீழ் வருவதால்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டோம்’ என்றும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் கூறும்போது, ‘இந்தப் பிரச்சினையில் சட்டப்படியான மற்றும் நிர்வாக ரீதியிலான மற்ற அனுமதிகள் பெறப்படுவதற்கு இது எந்த வரையிலும் தடையாக இருக்காது’ என்று கூறுகிறார்.
இந்த இரு அமைச்சர்களின் பேச்சையும் பார்க்கும்போது, கேரள அரசு, பேச்சுவார்த்தை என்று கபட நாடகம் ஆடிக்கொண்டே புதிய அணைகட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருப்பது தெரிகிறது. தமிழக அரசின் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல், மத்திய அரசு ஒருதலைப் பட்டசமாக ஆய்வுக்கு அனுமதி வழங்கியதை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன் போன்றவர்களைத் தவிர!
அதிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இப்படி நடந்து கொள்வது ஒரு மாநில அரசுக்கும் அழகில்லை; மத்திய அரசுக்கும் அழகில்லை. இது ஒரு பொறுப்பற்ற செயல் என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். கேரள அரசும், மத்திய அரசும் இதைப் புரிந்து கொள்ளவில்லை!
அணை வேண்டுமானால் கேரள எல்லையில் இருக்கலாம். ஆனால் அதன் பயன்பாடு தமிழகத்திற்கும் உரியது. ஆகவே, தமிழர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், தமிழக அரசும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் பாராட்டி இருக்கின்றன. பாராட்டு மட்டும் போதாது; போராடவும் ஒன்று திரள வேண்டும்.
தினமணி இதழ் (9. 10. 2009) தலையங்கம் இப்படி முடிகிறது, ‘நீதிமன்ற அவமதிப்பை விட்டுவிடுவோம். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் அமைச்சராக இருப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே அல்லவா அவமதிப்பு? என்ன செய்யப் போகிறார் பிரதமர் மன்மோகன் சிங்?
- தேரவாதன்