விளக்குகள் இல்லை. வாகனம் நிறுத்தும் இடத்தில் கூட்டம் நடந்ததால், மகிழுந்தின் முகப்பு விளக்குகள் தந்த மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. ஒலி பெருக்கி இல்லை. அவரவர்க்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகப் பேசினார்கள். இருக்கைகள் கிடையாது. பார்வையாளர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வயதில் சிறியவர்கள் நன்றாகச் சப்பணமிட்டு நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர். வயது முதிர்ந்த பெரியவர்கள், கால்களைப் பாதி மடக்கியும், அதுவும் முடியாதவர்கள் முழுவதுமாக நீட்டியும் உட்கார்ந்திருந்தனர். இத்தனை இடர்ப்பாடுகள் இருந்த போதிலும் கூட்டம் சிறப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் நடந்தது.

சரி, என்ன கூட்டம், எங்கு நடந்தது, எப்போது நடந்தது?

கூட்டம் நடந்த விதத்தைப் பார்த்தால் அவசரநிலைக் காலத்தில் நடந்த இரகசியக் கூட்டம் போலத் தெரிகிறதே என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் உங்கள் ஊகம் தவறானது.

கூட்டம் நடந்தது 1975இல் இல்லை - தமிழ்த் தேசியத் தலைவர்கள் போற்றிப் பாராட்டும் புரட்சித்தலைவியின் ஆட்சி நடக்கும் 2012 (15.06.2012)இல்தான் இந்தக் கூட்டம் நடந்தது. நடந்த இடமும் ஊருக்கு வெளியே உள்ள ஏதோ ஒதுக்குப்புறமான பாழடைந்த கட்டடமும் இல்லை - தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில், பரபரப்பான அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகம்தான் கூட்டம் நடந்த இடம்.

கூட்டமும், அரசுக்கு எதிரான போராட்ட வியூகம் வகுப்பதற்கான ‘தடைசெய்யப்பட்ட இயக்கத்தின்’ கூட்டம் இல்லை - திராவிட இயக்கச் சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் சின்னக்குத்தூசியாரின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பெயரில் சிறந்த கட்டுரைகளுக்கும், வாழ்நாள் சாதனையாளருக்கும் பரிசுகளும், விருதும் வழங்குவதற்கான கூட்டம், ஓர் இலக்கியக் கூட்டம் அவ்வளவுதான். அங்கே கூடியவர்கள் ‘தேசத்துரோகி’களும் இல்லை - இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுகவைச் சேர்ந்த திருச்சி செல்வேந்திரன், மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, பேராசிரியர் சரசுவதி, மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும், பத்திரி கையாளர்கள், திராவிட இயக்க உணர்வாளர் கள், சின்னக்குத்தூசியாரிடம் பெருமதிப்பு கொண்டுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

ஜனநாயகம் வாழ்வாங்கு வாழ்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், ஓர் இலக்கியம் கூட்டம் இப்படி ஒரு நிலையில் நடக்க வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது?

ஜுன் 15 சின்னக்குத்தூசியாரின் பிறந்தநாள். கடந்த ஆண்டு மே மாதத் தோடு அவர் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். எழுத்துலகில் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், அவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பவும் கருதிய அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருக்கும் அவருடைய தோழர்கள், ‘சின்னக் குத்தூசியார் நினைவு அறக்கட்டளை’ யைத் தொடக்கினர். சமூக அக்கறையுடன் எழுதிவருகின்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஆண்டுதோறும் விருதுகளும், பரிசுகளும் வழங்கிட வேண்டும் என்பது அறக்கட் டளையின் நோக்கம்.

அதன்படி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, மூன்று கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த அரசியல் கட்டுரையாக, இரா. உமா எழுதிய ‘மரண தண்டனை: மானுட மறுப்பு’ என்னும் கட்டுரையும், சிறந்த சமூக - பண்பாட்டுக் கட்டுரையாக பழ. அதியமான் எழுதிய ‘இறப்பில் உயிர்க்கும் பண்பாடு’ என்னும் கட்டுரையும், சிறந்த பொருளாதாரக் கட்டுரையாக கி. இலக்குவன் எழுதிய ‘ஏகாதிபத்தியங்களின் எண்ணெய் அரசியல்’ என்னும் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. புலவர் வெற்றியழகன், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவ்விருதினையும், பரிசுகளையும் 15.06.2012 அன்று சின்னக்குத்தூசியாரின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அறக்கட்டளை சார்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்க முடிவுசெய்து, தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் உள்ள அரங்கம் முறைப்படி முன்பணம் கட்டிப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சரியாக, நிகழ்ச்சிக்கு முதல் நாள், அரங்கத்திற்குச் செய்யப்பட்ட முன்பதிவை ரத்து செய்துவிட்டதாகக் கூறி அதற்கான ஆணையையும், முன்பணத்தையும் கொடுத்துவிட்டனர். வேறு வழியின்றி, நீதியரசர் சந்துரு அவர்களின் முன்பு இவ்வழக்கினை அறக்கட்டளை நிர்வாகிகள் எடுத்துச்செல்ல, நடந்த அநீதியை உணர்ந்து கொண்ட நீதியரசர், ‘உடனே அதே அரங்கத்தில் நிகழ்ச்சி நடக்க அனைத்து விதமான ஒத்துழைப்பினையும் தரவேண்டும்’ என்று அரசு வழக்கறிஞக்கு ஆணையிட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள், அரங்கத்தைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட அனைவரும் வந்து காத்துக்கொண்டிருந்த நிலையில், வளாகத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில், கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற சூழ்நிலையில் கூட்டம் நடந்தது. ஏறத்தாழ 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேசிய அனைவருமே ‘ஜெயா அரசின் கருத்துரிமைக்கு எதிரான போக்கி’னைக் கண்டிக்கத் தவறவில்லை.

ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு இத்தனை இடர்ப்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது?

சின்னக்குத்தூசியார் கலைஞரின் மீது அளவற்ற ஈடுபாடும், அன்பும் கொண்டவர். முரசொலியில் தொடர்ந்து எழுதியவர். காஞ்சி சங்கராச்சாரியையே வந்துபார் என்றவர். அக்கரகாரத்தில் பிறந்திருந்தாலும், அறிவாசான் பெரியாரின் கொள்கையில் இம்மியும் சமரசம் செய்து கொள்ளாதவர். துணிச்சல் மிக்க பத்திரிகை ஆசிரியரான நக்கீரன் கோபாலோடு தோழமை உடையவர். இவை எல்லாம்தான் தடைக்குக் காரணம் என்ற முடிவுக்கு நம்மை வரவைக்கிறது, ஜெயா அரசின் அணுகுமுறை.

திராவிட இயக்கச் சார்புடையவர் என்றபோதும், எல்லாத் தரப்புப் பத்திரிகையாளர்களுக்கும், அவர்கள் கேட்கும் செய்திகளை எந்தவித வேறுபாடும் காட்டாமல் வாரி வழங்கி வந்த பல்கலைக்கழகம் அவர். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக அவருடைய எழுதுகோல் எழுத்துலகில் பயணித்திருக்கிறது. சமூகத்தின் எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு இந்த அரசு இடையூறு செய்திருக்கிறது என்றால், இந்தப் போக்கினை ஆட்சித் தலைமையின் அறியாமை என்பதா, ஆணவம் என்பதா?

இவ்வழக்கு விசாரணையின்போது, நீதியரசர் சந்துரு, “சின்னக்குத்தூசி என்கிற ஒரு பத்திரிகையாளர் தன் வாழ்க்கையில் திருமணமே செய்த கொள்ளாமல், சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாகத் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சன் அறையில் புத்தகங்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தவர். அவர் கடந்த 50 ஆண்டுகளாக இளம் பத்திரிகையாளர்களின் என்சைக்ளோபீடியாவாகவே இருந்துள்ளார். பத்திரிகையாளர்கள், பழைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பழைய தலைவர்கள் பற்றிய சந்தேகங்களை எப்போது வேண்டுமானாலும் அவரிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். காமராஜரிலிருந்து இன்றுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஒருபோதும் முயன்றதில்லை. அவரது கட்டுரைகள் அனைத்தும் சமூக அக்கறையுடன்தான் இருக்கும். அப்படிப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரது பெயரில் இளம் பத்திரிகையாளர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து விழா நடத்தி உதவிகள் செய்வதைத் தடுப்பது சரியல்ல” என்று நீதிமன்றத்திலேயே புகழ் மாலை சூட்டினார்.

முன்பு ஒரு முறை, பொதுவுடைமைப் போராளி ஐ.மாயாண்டி பாரதி குறித்தும் நீதிமன்றத்தில் பெருமைபட நீதியரசர் சந்துரு கருத்துரைத்திருக்கிறார். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்பதைப் போல, இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளனுக்கும் கிடைத்திராத சிறப்பினைச் சின்னக்குத்தூசியாருக்குத் தந்திருக்கிறார் நீதியரசர் சந்துரு.

இத்தனை பெருமைமிகு பத்திரிகையாளருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்பு, பத்திரிகை உலகில் பெரிய அதிர்வுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு சில பத்திரிகைகள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன. திமுக தலைவர் கலைஞர் கண்டன அறிக்கை வெளியிட்டார். 

ஆனால் பத்திரிகையாளர்கள் வாய்மூடி அமைதியாக இருந்தனர். ஒரு சிறு கண்டனக் கூட்டம் கூட போடப்படவில்லை. ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட அவமதிப்பைக் கண்டிக்க இவர்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறையைக் கண்டித்தால் தண்டிக்கப் படுவோம் என்ற அச்சமா? எது அவர்களைத் தடுத்தது என்று நமக்குப் புரியவில்லை. எது எப்படி இருப்பினும் பத்திரிகையாளர்களின் இந்தப் பின்வாங்கல் போக்குக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சக பத்திரிகையாளர்களின் தன்மைதான் இப்படி இருக்கிறது என்றால், அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட ‘நினைவில் அகலா நண்பர்கள்’ கூடத் தங்கள் தோழனுக்கு, இந்த அரசு இழைத்த அவமதிப்பைக் கண்டிக்க முன்வரவில்லை. அய்ம்பது ஆண்டுகால நட்பை விட, அம்மையாரின் ஆணவப்போக்கை விமர்சித்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாகப்படுகிறது போலும்.

இதழியல் அறத்தை இறுதி வரைக் கடைப்பிடித்து, ஒரு பத்திரிகையாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் சின்னக்குத்தூசியார். அவருடைய பெருமையை, இந்தச் சிறுமதியாளர்களின் சலசலப்புகளால் குறைத்துவிட முடியாது.

Pin It