அட்சய திருதியையைத் தொடர்ந்து இப்போது புதிதாக ‘ரம்பா திருதியை’ எனும் புரளி மக்களை ஏமாளிகளாக்கும் தொடங்கியுள்ளது. 19. 11. 2009 அன்று சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் இந்த ரம்பா திருதியை திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் பெண்கள் அதாவது திருமணமாகாத பெண்கள் தங்க வளையல் வாங்கிப் போட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகமாம். ஏற்கனவே அட்சய திருதியையால் கால் சவரன் தங்கம் வாங்க அரை சவரனை அடகு வைத்தார்கள். அந்த நகையும் ரம்பா திருதியையால் தொலைந்தது தான் மிச்சம். 

தங்கம் இன்று ஏழைப் பெண்களின் திருமண வாழ்க்கையை தீர்மானிக்கிற இடத்தில் இருக்கின்றது. ஆனால் அந்த தங்கத்தைச் சேர்ப்பதற்குப் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் சக்தி இல்லை. வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை இன்றும் பார்க்கிறோம். வரதட்சணையாக போட தங்க நகை இல்லாமல் நின்று போன பெண்களின் திருமணங்கள் ஏராளம். அழகுக்காக வந்த தங்கம் இன்று வரதட்சணையாக மாறிவிட்டது.

1920 களில் ரூ. 21 க்கு விற்ற தங்கம் 2001 இல் 3. 368 லிருந்து, இன்று வேகமாக முன்னேறி 2009 நவம்பரில் 13,016 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் என்னவோ அப்படியேதான் இருக்கின்றது. அன்றாடக் கூலிகள், மாத ஊதியம் பெறுகின்றவர்கள், விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் எப்படி தங்கத்தைச் சேர்க்க முடியும்?

அட்சய திருதியை பற்றிய பொய்யை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சிறந்த பிரச்சாரம் தேவைப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் தங்கம் இல்லா திருமணம் செய்ய முன்வர வேண்டும். இது வரதட்சணையை பலவீனப்படுத்தும். ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடாது.

அட்சய திருதியை - ரம்பா திருதியை போன்ற சொல்லாடல்களும், அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் தங்கம் குவியும் என்பதெல்லாம் மூடத்தனங்கள். மக்களின் அறியாமையை இப்படி அறுவடை செய்யும் முதலாளிகளுக்கு இது போன்ற இந்துத்துவ மூட சிந்தனை உறுதுணை செய்கிறது என்பதை ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டால், எல்லாத் திருதியைகளும் ஒழியும். ஏழைகள் ஏமாற்றப்பட மாட்டார்கள்.

Pin It