ஒரு அலைபேசி அணைத்து வைக்கப்படுவது
துயர்மிக்கதாக இருக்கிறது
எளிதாக தப்பித்துக் கொள்ள முயல்பவர்கள்
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசிக்கு
பின்னே ஒளிந்து கொள்கிறார்கள்
தற்கொலை செய்து கொண்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்
தன்னைத்தானே தொலைத்துக் கொண்டவர்கள்
பெரும் கடனாளிகள்
காவல்துறையால் தேடப்படுபவர்கள்
ஒருதலைக் காதல் அல்லது காம நோயாளிகளால்
விரட்டப்படுபவர்கள்
பிறருக்கு வாக்குறுதி கொடுத்தவர்கள்
போன்றோர்களின் அலைபேசிகளே
பெரும்பாலும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது.
ஊடலில் முகத்தைத் திருப்பிப் கொண்டுபோகும்
காதலர்களின் அலைபேசிகள் அணைக்கப்பட்ட
சில நிமிடங்களிலேயே உயிர் பெற்று விடுகிறது
திருடப்பட்ட அலைபேசி பறிகொடுக்கப்பட்ட
சில நொடிகளிலேயே அணைக்கப்படுகிறது
அணைத்து வைக்கப்பட்ட அலைபேசியை
திறக்கப்படாத கதவைத் தட்டிக் கொண்டிருப்பது போல்
சலிப்புடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் யாரேனும் சிலர்
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசி
யாரையாவது பதற்றமாக்கிக் கொண்டோ
கோபமாக்கிக் கொண்டோ இருக்கிறது
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசியில்
நுழைய முடியாத மரணச் செய்திகள்
வெளியெங்கும் துக்க வரிகள் நிறைந்த பாடல்களை
பாடித்திரிகின்றன
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசியின்
எண்கள் மெல்ல மெல்ல மறக்கப்படுகிறது
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசிக்குரியவர்
இவ்வுலகின் தொடர்பு எல்லைக்கு அப்பால்
சென்று விடுகிறார்
அணைத்து வைக்கப்பட்டுள்ள அலைபேசி
கைவிடப்பட்ட பிணம் போல் கிடக்கிறது.
- தி.ஸ்டாலின்