கீற்றில் தேட...

புல் அறுக்கப் போனாள்.

குத்தெடுத்த வயிறை இழுத்து
குனிய முடியாமல்
வரப்போரம்
கைகளை அண்டக் குடுத்து
தொடையளவு நீருக்குள் முங்கினாள்.

வலி உயிரை உலுக்கியது.

மூச்சிழுத்து முக்கித் தவிக்கையில்
தண்ணீர்க்குடம் உடைந்து பீறிட
நச்சுக் கொடியில் கிளைத்த கனி
மனுவுருவாய் வெளிப்பட்டது.

நசநசவென
குருதி வழிந்தொழுக
ரணவாதை விலகி
ஆழ்ந்த நிம்மதி மூச்சு
முகத்தில் சுழியிட்டு மறைந்தது.

பன்னரிவாளில் கொடியறுத்து
கனிபறித்து வாய்க்காலில் கழுவி
மாராப்பில்
தொட்டி இட்டாள்.

கத்தாழை நாரில்
புல், விறகு, கீரை பொதிந்து கட்டி
தலை ஏற்றி நகர்ந்தாள் சுமையுடன்
எதுவும் நடவாது போல்
இன்றும்

- வசந்ததீபன்