1
வெண்மை மேவிய
தாளாக விரிந்து
விரும்பிய வண்ணங்களை கையளித்து
சித்திரங்களாய் வாழச்செய்த
மண்தேவதையின் விழிகளை
பொய்க்கச்செய்து பொருளீட்டினோம்
விலைகொண்ட நிறங்கள்
மலடாய் குவிந்து கிடக்க
வரையத் துவங்கிவிட்டோம்
துளிர்ப்பற்ற கல்லறைகளை...
2
வீணை
சரஸ்வதி வந்திருந்தாள்
வண்டு துளைத்த வீணையும்
களவு போனதாக கண்ணீர் வழித்தாள்
நெடிதாய் பழங்கதை பேசி
குற்றம் உணர்ந்தாள்
அழைத்திடு உன் பாலகனை
எழுதட்டும் என் நாவில்
இனி இசைக்க வேண்டுமென்றாள்
யாவருக்குமாகவும் வீணையை...
3
பசியாற்றுபவள்
எழுதத் துவங்கியதற்கு
முன்னான நாளின் முற்பகல்
செழுமை பரப்பி
குமரி மரங்கள் சூழ்ந்த
உண்டு உறைவிடப்பள்ளி மைதானத்தில்
இட்லி குஷ்கா ராகியென
கொத்தாய் பூத்த காளானென
குழுமியிருந்த சிறார்களிடையே
உலர்ந்த இலையென கைவிரித்து
பிச்சை கேட்டவனிடம்
தேநீர் கோப்பையைப் பொதித்து
நிஜமாக்கினாள் கணத்தை...