கீற்றில் தேட...

உச்சினிமாளிஅம்மன்
பிரகாரத்தை உரசி நின்ற
வேப்பமரத்தின் ஒரு கிளை
நெருப்பில் சிக்கி
சிதைந்து போயிற்று

இசக்கியின் தேநீர்கடைக்கு
வைத்த தீ
சொக்கபனையாக எரிந்தது...
மரக்கிளை மாசானத்தில்
எரியும் பிணம்போல
நரம்புகள் புடைக்க
எரிந்து வீழ்ந்து என்று
மாடக்கண்ணு கிழவி
சொன்ன ஞாபகம்

நல்ல வேளை ஒரு கிளை மட்டுமே
கடைக்கு மேலே பரவி நின்றது

உச்சினிமாளி அம்மனுக்கு
எதிரே நின்ற தங்கம்மனுக்கும்
சூறை கொடுக்கப்பட்டு
சாந்திபடுத்தப்பட்டனர்

காலங்கள் கடந்துவிட்டன
தங்க நாற்கர சாலை திட்டத்தால்
உச்சினிமாளி, தங்கம்மன்,
சுடலையாண்டி, மாவிசக்கி
அனைவரும் மாயமாயினர்

பாவம் ஒரு கிளை இழந்தாலும்
உயிரோடு நின்ற வேப்பமரமும்
வேராடு பிடுங்கப்பட்டது

மரணித்த மரத்தின்
வேப்ப முத்துக்களை
எந்தக் காகம் தின்றதோ...
கண்டிப்பாக
காக்கை எச்சங்களில்
விதைகள் வெளியேறியிருக்கும்.
உருவான விருட்சத்தை
எங்கே சென்று தேடுவது....

ஞாபகம் மட்டும்
என்னுள் புதைந்து
விருட்சமாக வளர்கிறது.
பயமாக இருக்கிறது
கிளைகள் தடைகடந்து
வெளியேறிவிடுமோ என்று...

- ப.சுடலைமணி