எல்லாவித மௌனங்களையும்
உடைத்தபடி
கீச்சிடுகிறது குருவி
நெடிய பாதையின்
குட்டை மரங்களில்
அவைகளின் அழகான குடித்தனம்
படிப்பினையூட்டும் எவர்க்கும்
வானத்தையும் முகில்களையும்
தொட்டுவிடுவதான
அதனின் பகீரத முயற்சியில்
வீழ்ச்சிப் படலங்களே
எப்போதும்
சிறார்களின் கவண்களிலிருந்து
புறப்படும் கூர்கற்கள்
உயிரைப் பறிக்கும்
உக்கிரம் கொண்டவை
கவி மனதை காயப்படுத்தும்
இக்கைங்கரியங்கள்
விடலைகளால் நிகழ்த்துதல் காண
மனம் விக்கித்துப் போகும்
அவர்களினும் கொடூரனாக
செல் டவர்களின்
காந்த அலைகள்
இனத்தையழிக்கும்
விஷப் பார்த்தீனியங்களாக
குருவிகளுடனான பரிச்சயமும்
அதன் வாழ்வியலையும்
நுகர அவா
உங்களூரில் குருவிகளிருந்தால்
சொல்லுங்களேன்?
- சூர்யநிலா