கீற்றில் தேட...

குறிபார்த்துக் கொண்டிருக்கலாம்
இரண்டு கண்கள்

நலமாயிருக்கின்றேன் என்று
சொல்லிக் கொண்டிருக்கும்போது
முதுகுக்குப் பின்னால்
நிற்கிற மனிதன்
மனித வெடிகுண்டாக இருக்கலாம்

நாளை சந்திப்போம்
என்று சொல்லி திரும்பும் நொடி வரை
கண்காணித்த கண்கள்
உங்களைப் பற்றிய குறிப்புகள்
குறிப்பிட்ட நபரிடம் சேர்க்கப்படலாம்

பூமியின் வெளிவட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும்
செயற்கைகோளின் கண்கள்

உங்கள் வாசலையோ
உங்கள் கூரைகளையோ
பார்த்துக் கொண்டிருக்கலாம்

உங்கள் சன்னல்களும்
உங்கள் கதவுகளும்
யாரோ ஒருவனின்
பிளாஸ்டிக் கண்களாக இருக்கலாம்

உதடுகளில் வழியும்
சிறிய புன்னகையின் வழியாக
நுழைந்து விடலாம்
ஒரு தீவிரவாதியின் நியாயங்கள்

பிறகு உங்களால்
எப்பவும் ஆகாயத்தில் பறக்கக்கூடிய
ஒரு புன்னகையை
பெற்றெடுக்க முடியாமல் போகலாம்

ஆனாலும்
ஒரு பூவை வருடும்
உங்கள் விரல்களுக்கு பின்னாலிருக்கிறது
எதையும் மாற்றி
எழுதிவிடக்கூடிய
மானுடத்தின் தூரிகை

- கோசின்ரா