உலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

அமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.

உள்ளொன்றும் புறமொன்றும்

ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றதும், தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பது போல் அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட்டாலும் அதன் உள்நோக்கம் எவ்வாறு உண்மையான ஜனநாயகம் அந்நாடுகளில் மலர்வதற்கு எதிராக இருக்கிறது என்பதில் தொடங்கி எவ்வாறு அமெரிக்காவின் அதிகார வர்க்க நிர்வாக, ராணுவக் கூட்டு சுதந்திரமானவை என்று கருதப்படும் அந்நாட்டின் பத்திரிக்கைகளையும் வளைத்துப் போட்டுப் பல உண்மைகளை வெளிவரவிடாமல் நாசூக்காகத் தடுக்கிறது என்பது வரை பல விஷ‌யங்கள் கேபிள் கசிவுகள் மூலமும் ஜீலியன் அசான்ஜ்-ன் பல்வேறு நேர்காணல்களின் மூலமும் அம்பலமாகிக் கொண்டுள்ளன.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கென்று அமெரிக்க அரசால் நிறுவப்பட்டுள்ள சிறைச்சாலையான குவான்டோநெமோ பே என்ற பெயர் கொண்ட சிறைச் சாலைக்குள் கொண்டு செல்லப்படுவோர் பட்டியல் கூட எவ்வாறு செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளுக்குத் தரப்படும் போது மூடி மறைக்கப்படுகிறது என்பன போன்ற விஷ‌யங்களையும் விக்கிலீக் கசிவுகள் வெளிப்படுத்தி மனித உரிமைகள் குறித்து வாய்கிழியப் பேசும் அமெரிக்க அரசின் மனித உரிமைகளைப் பராமரிக்கும் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

தகவல் தருவோர் பட்டியலில் அமைச்சர்கள்

மேலும் அமெரிக்கா உலகின் பல நாடுகளின் அரசாங்கங்களின் அமைச்சர்களைக் கூடத் தனக்கு செய்தி வழங்குவோர் பட்டியலில் எவ்வாறு வைத்துள்ளது என்பதையும் வெளியிட்டு அனைவரையும் விக்கிலீக் திடுக்கிடச் செய்துள்ளது.

அவ்வாறு பல நாடுகளின் செய்திகளை அமெரிக்கா சேகரிப்பதன் பின்னணி என்ன? அதற்கான காரணம் என்ன? என்பதையும் விக்கிலீக்கின் தலைவர் ஜீலியன் அசான்ஜ் அவர் அளித்துள்ள பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தனிவழி

ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் உலகில் மேலாண்மை செலுத்துவதற்குப் பொருளுற்பத்தி செய்யும் தொழில் துறைகளைப் பயன்படுத்தின. ஆனால் அமெரிக்காவின் வழியோ தனிவழியாக இருந்தது.

அது அதன் நிதி மூலதன ஏற்றுமதியையும், உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால் அதன் அதிநவீன ராணுவ தளவாட உற்பத்தியையுமே சார்ந்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் லாபமே அதன் முக்கிய வருவாயாக இருந்து வந்துள்ளது.

அந்த நிதி மூலதனத்தின் வளர்ச்சிக்கும் ராணுவ தளவாடங்களின் விற்பனைக்கும் பல நாடுகளைப் பற்றியும் அந்நாடுகளின் பொருளாதாரம் குறித்தும், அந்நாடுகள் உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் எதிர் கொண்டுள்ள பிரச்னை கள் குறித்தும் அறிவதும் தகவல் சேகரிப்பதும் அந்நாட்டிற்கு அவசிய மாக உள்ளது. அத்தகைய அறிவு, தகவல் களைப் பெறுவது தற்போது அதன் முக்கியத் தொழிலாக ஆகியுள்ளது.

விரிந்து பரவியுள்ள ஆதிக்கம்

அந்த அடிப்படையில் தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதன் ஆதிக்கம் பெருமளவு விரிந்து பரவியுள்ளது. தற்போது அத்தகவல்களை தன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு அளிப்ப தோடு கூட பிற நாடுகளுக்கும் அவற்றை விற்பனை செய்கிறது. அப்படிப்பட்ட தகவல்கள் திரட்டும் வேலையை அனைத்து நாடுகளும் நினைத்த மாத்திரத்தில் செய்துவிட முடியாது.

ஏனெனில் ஒரு நாட்டின் அமைச்சர் போன்ற உயர்பதவியில் உள்ளவர்களைக் கூட தனது வலைக்குள் போட வேண்டுமானால் அதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்க முடியும். அப்படிப்பட்ட செலவுகளை எந்தவொரு நாடும் எளிதில் செய்துவிட முடியாது.

ஆனால் அமெரிக்கா மட்டுமல்ல அது தவிர வேறுசில நாடுகளும் கூட இவ்வாறு உலகின் பல நாடுகள் குறித்த தகவல்களை ரகசியமாகத் திரட்டும் வேலையைச் செய்கின்றன. சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட இதனை ஓரளவு செய்கின்றன. ஆனால் அமெரிக்கா இவ்வி­யத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.

 

கண்ணுக்குத் தெரியாத விற்பனைப் பொருட்கள்

அரிசி, பருப்பு, ஆலைப் பொருட்கள் போன்ற கண்ணுக்குப் புலப்படும் பொருட்களை மட்டுமல்ல இப்போது கடன் மற்றும் சேமிப்புத் திட்டங்கள் போன்ற கண்ணுக்குப் புலப்படாத, பொருட்களையும் விற்பனை செய்ய முடியும். அதனால்தான் அமெரிக்கா இப்படித் தகவல்களை விற்பனை செய்கிறது என்று கூறுவது வித்தியாசமாகப் படவில்லை.

இன்று உலக அரங்கில் அனைத்து நாடுகளையும் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்கா மட்டுமே என்ற ஒரு சித்திரம் பலரால் முன் வைக்கப்படுகிறது. அமெரிக்க ஆட்சியாளர்கள் கணிணியின் முன் அமர்ந்து கொண்டே பல நாடுகளைக் கவிழ்க்கின்றனர் என்றெல்லாம் பூதக் கதைகள் கூறுவது- பலருக்குக் குறிப்பாகப் பல இடதுசாரி நண்பர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

அமெரிக்கா அளவிலும் பரிமாணத் திலும் மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது என்றால், அந்த அளவிற்கு இல்லாவிடினும் அதைக் காட்டிலும் குறைந்த அளவுகளில் தங்கள் நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் அவற்றைத் தங்களது செல்வாக்கு மண்டலத்திற்குக் கீழ் கொண்டு வரவும் இந்தியா போன்ற வேறு பல நாடுகளும் விரும்புகின்றன; அதில் கவனம் செலுத்துகின்றன. அதற்கு அந்நாடுகளுக்குத் தங்களைச் சுற்றியுள்ள நாடுகள் குறித்த துல்லியமான தகவல்கள் தேவைப்படுகின்றன.

அந்நாடுகள் அப்படிப்பட்ட தகவல்களைத் தெளிவாகத் திரட்டித் தருவதற்குப் போதுமான சாதனங்களை அமெரிக்காவைப் போல் மிகப்பெரிய பொருட்செலவில் ஏற்படுத்துவதைக் காட்டிலும், ஏற்கனவே அத்தகைய சாதனங்களை நிறுவி தகவல் வழங்குவ தில் ஒருவகை நிபுணத்துவம் பெற்றுள்ள அமெரிக்காவிடமிருந்து அவற்றை வாங்குவது அந்நாடுகளுக்கு எளிதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே இது சார்ந்த விதத்திலும் உறவுகள் வலுப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நடுநிலைக் கொள்கை

அதனால் இன்று இந்தியா அமெரிக்காவிடம் ஒருதலைப் பட்சமாகச் சாய்ந்துள்ளது என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் பக்கம் ஒருதலைப் பட்சமாகச் சாய்வது சரியானதல்ல என்ற கருத்து பனிப்போர் காலகட்டத்தில் - இந்திய முதலாளிகளின் நலனை மனதிற்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திலிருந்த- அன்றைய இந்திய அரசிற்கு இருந்தது.

அப்போது மிக வேகமான தொழில் வளர்ச்சியை நமது நாட்டில் எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்றிருந்த இந்திய தேசிய முதலாளி களின் அரசு இரண்டு வலுவான முகாம்கள் உலகில் இருந்த நிலையைக் கருத்திற்கொண்டு அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி அத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்த விரும்பியது. அதன் விளைவாகத் தோன்றியதே நடுநிலை நாடுகள் இயக்கமும் கொள்கையும்.

அப்போதும் கூட சோசலிச நாடுகளுடனான உறவு விஷ‌யத்தில் இந்திய அரசு சற்று எச்சரிக்கையுடனேயே இருந்தது. அதற்கான காரணம் அடிப்படையில் அது முதலாளித்துவ அமைப்பபினைக் காக்கும் அரசாக இருந்ததேயாகும்.

சோசலிசம், பொதுத்துறை என்றெல்லாம் பல முழக்கங்களை மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைத்தாலும் அடிப்படையில் முதலாளித்துவத்தைக் கட்டியமைக்கவே அது விரும்பியது. சோவியத் யூனியன் போன்ற சோசலிச நாடுகளுடனும் உறவைப் பராமரித்தாலும் அமெரிக்காவுடன் மட்டுமே அது மானசீகமாக ஒன்றியிருந்தது.

சோவியத் யூனியன் சோசலிசத்தை மிக வேகமாகப் பரப்புவதில் அக்கறை கொண்ட நாடாக இருந்தபோது முதலாளித்துவ அமைப்பு என்ற ரீதியில் சோசலிசம் குறித்து இந்தியாவிற்கு இருந்த அச்சமும் எச்சரிக்கையும் மிகவும் கூடுதலாகவே இருந்தன.

அதன்பின் குருச்சேவ் தலைமையிலான திருத்தல்வாதம் தலைதூக்கி அது நாடாளுமன்ற வழிமுறைகள் மூலமே சோசலிச ரீதியிலான சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று அறிவித்த பின் ஒருவகை நிம்மதிப் பெருமூச்சுடன் சோவியத் யூனியனுடனான அதன் உறவை இந்தியா மேலும் வலுப்படுத்தியது. இந்தோ-சோவியத் ஒப்பந்தம் போன்றவைகள் அக்காலகட்டத்திலேயே ஏற்படுத்தப் பட்டன.

பயமில்லை; பாதுகாப்பின்மையும் இல்லை

ஆனால் சோசலிசம் சோவியத் யூனியனில் வீழ்ச்சியடைந்த போது அது பல்வேறு பின்தங்கிய நிலையிலிருந்த வளர்முக முதலாளித்துவ நாடுகள் என அறியப்பட்ட நாடுகளுக்கு ஒருவிதப் பய உணர்வையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியது.

ஆனால் இந்திய அரசைப் பொறுத்த வரையில் அத்தகைய அச்சம் ஏற்பட வில்லை. ஏனெனில் இக்காலகட்டத் திலேயே யாராலும் ஆதிக்கம் செய்ய முடியாத சக்தியாக அது வளர்ந்து விட்டது. எனவே எந்தவகைத் தயக்க முமின்றி அதனுடைய வழிமுறைகளை அது மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டது.

இளைய பங்காளியான இந்தியா

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காகவும் ஏற்பட்ட அந்த சூழ்நிலைக்குத் தகுந்தது போல் இந்தியாவைப் பொறுத்த விதத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்ளத் தயங்கவில்லை.

அது மற்ற பல வளர்முக நாடுகளை தனது பொருள்களின் விற்பனைத் தளமாக மாற்றிக் கொண்டிருந்தது போன்றோ, கியூபா, கொரியா போன்ற நாடுகளுக்கு வர்த்தகத் தடைகள் போன்றவற்றை அறிவித்து பல்வேறு இடைஞ்சல்களைச் செய்த விதத்திலோ இந்தியாவை நடத்தவில்லை. இந்தியாவை ஒரு விற்பனைத் தளமாக மட்டுமின்றி தனது இளைய பங்காளியாகவும் ஆக்கிக் கொண்டது.

இந்த விஷ‌யத்தை ஏன் விக்கிலீக்-ல் தொடங்கி நாம் இத்தனை உன்னிப்பாகவும் விரிவாகவும் பார்த்து வருகிறோம் என்று இதனைப் படிக்கும் பலருக்கு தோன்றலாம். அவ்வாறு பார்ப்பதற்குத் தேவையும் காரணமும் இருக்கிறது.

அதாவது இந்திய மண்ணில் ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முட்டுக் கட்டையாக முதலாளித்துவ அரசு எந்திரமும் அதன் அடக்குமுறைப் போக்கும் மட்டும் இருக்கவில்லை; இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முதலாளித்துவ அரசுகளும் கூட இதுபோன்ற வலுவான அடக்குமுறைக் கருவிகளை உள்ளடக்கிய அரசு எந்திரத்தைக் கொண்டு சமூக மாற்ற இயக்கங்களுக்கு காலங்காலமாக முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டுதான் உள்ளன.

இத்தகைய அடக்குமுறைப் போக்கு சமூகமாற்ற இயக்கங்கள் பார்க்காததோ பழகாததோ அல்ல. அடக்குமுறைகள் சரியான சமூகமாற்ற இயக்கங்களை நீண்டகால அடிப்படையில் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தியதுமில்லை.

அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக் காட்டைக் காலங்காலமாக மதவாதத்தைப் பின்பலமாகக் கொண்டு தங்களது எதேச்சதிகார ஆட்சியை அவ்வப்போது சில சலுகைகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றி நிலைநாட்டி வந்த ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் காணலாம்.

அந்நாடுகளின் அரசுகளால் கூடச் சமூக இயக்கம் வளர்வதைத் தடுக்க முடியவில்லை. மிகக் கடுமையான இஸ்லாமிய அடக்குமுறைச் சட்டங்கள் கூட அந்நாடுகளில் தோன்றி வளர்ந்துவரும் ஜனநாயக இயக்கங் களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே சமூகமாற்ற இயக்கங்களுக்கு வெளிப்படையாகப் பெரிதாகக் கண்ணுக்குப் புலப்படாத விதங்களில் பெரும் முட்டுக் கட்டைகளாக விளங்குவது இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் பல நாடுகளில் நடத்தப்படும் இயக்கங்களின் தவறான பார்வைகளும் புரிதல்களுமே.

விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் இந்திய அரசு விவகாரங்களில் அமெரிக்கா எவ்வாறெல்லாம் தலையிட்டுள்ளது என்ற விவரங்களையும் வெளிப்படுத்தி யுள்ளன. அவற்றில் முக்கியமானவை சில அமைச்சர்களை மாற்றுவதற்கு அது ஏற்பாடு செய்தது, நக்சலிசத்தை ஒடுக்க வேண்டும் என்பதில் அது காட்டிய முனைப்பு, மேலும் இந்தியாவுடன் ராணுவ ரீதியாக அது ஏற்படுத்த விரும்பிய கூட்டு போன்றவையாகும் .

மணிசங்கர் மாற்றப்பட காரணம்

அதாவது மணிசங்கர் ஐயர் பெட்ரோலிய அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டது ஏன் என்பது விக்கிலீக் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதாவது அவர் இந்தியாவின் சுயச்சார்புக் கண்ணோட்டத்தில் பற்றுதலுள்ள திறமையான விட்டுக் கொடுக்காத பேரங்களில் ஈடுபடக் கூடியவர் என்பதே மாற்றப்பட்டதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அவர் ஈரானிலிருந்து எரிவாயுவைக் குழாய்கள் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர்; அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஈரானுக்கு எதிராகப் பகைமை முரண்பாட்டை வளர்க்க முயலாதவர் போன்ற அவர் குறித்த அமெரிக்காவின் கணிப்பின் விளைவாகவே எரிசக்தித் துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் அகற்றப்பட்டு முரளி தேவ்ரா நியமிக்கப்பட்டார் என்பது கேபிள் கசிவுகள் மூலம் வெளிவந்துள்ளது.

அதன் பின்னரே ஐ.ஏ.இ.ஏ. கூட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களித்தது எளிதாக நடைபெற்றது என்பதும் இக்கசிவுகள் மூலம் வெளிப்பட்டது.

இது வெளிப்பட்ட உடனேயே பிரகாஷ் கரத் முதற்கொண்டு இந்தியாவின் சமூகமாற்றக் கட்டம் ஜனநாயகக் கட்டமே என்று கருதும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பார்த்தீர்களா பார்த்தீர்களா இந்திய அரசு அமெரிக்காவின் முன் சரணடைந்துள்ள அவலத்தைப் பார்த்தீர்களா என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.

அக்கட்சிகள் மட்டுமல்ல ஒரு வி­யமறிந்த இடதுசாரி மனநிலை கொண்ட பத்திரிக்கையாளர் என்று அறியப்படும் என்.ராமும் விக்கிலீக்கின் தலைவர் அசான்ஜ் உடன் லண்டனில் அவர் நடத்திய நேர்காணலின் போது இக்கருத்துடன் ஒத்துப் போகும் விதத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதாவது இந்தியாவின் போக்கில் ஒரு முரண்பாடான மாற்றம் இருப்பதாக அவர் கருதினார். அதாவது இந்தியா இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சக்தி. ஆனால் அது இந்த அளவு வளராதிருந்த நிலையில் ஏகாதிபத்தியச் சார்பு அதாவது அமெரிக்கச் சார்பில் லாத ஒரு நடுநிலைக் கொள்கையைத் தனது வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அது வெகு வேகமாக ஒரு பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் நிலையில் அந்த நடுநிலைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு ஒரு அமெரிக்கச் சார்பு வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப் பிடிக்கிறது. இது குறித்து உங்கள் கருத்தென்ன என்ற கேள்வியை அவர் அசான்ஜ்-சிடம் எழுப்பினார்.

எங்கும் பொருந்தும் வார்த்தைகள்

அதாவது இந்த இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் அகராதியில் சில வார்த்தைகள் அனைத்து சூழ்நிலை களுக்கும் பயன்படுத்தத்தக்க வார்த்தை களாக ஆக்கப்பட்டு விட்டன. ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், சரணாகதி போன்ற வார்த்தைகளே அவை.

மாறுதல்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மாறுதல்கள் தான் மாறாத விதி என்ற கருத்தைக் கொண்ட மார்க்சிய வழியில் நடப்பவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் இக்கட்சிகளின் தலைவர்கள் இந்தியா இன்றைய காலகட்டத்தில் அடைந்துள்ள மாற்றங்களைச் சிறிது கூடக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இந்த வாதங்களை முன் வைக்கின்றனர்.

அதாவது இவர்களின் போக்குகள் எதையுமே திறந்த மனநிலையுடன் புற ரீதியாக ஆய்வதில்லை என்றாகிவிட்டன. புறரீதியான ஆய்வுகளை மையமாக வைத்து ஆக்கபூர்வமாகத் தங்களது சமூகமாற்றம் சார்ந்த சிந்தனைகளைச் செறிவு செய்யும் நடைமுறையே இவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.

அதன் காரணமாக தாங்கள் சிக்கெனப் பிடித்து ஏறக்குறைய 60 ஆண்டு காலமாக வைத்திருக்கும் கண்ணோட் டங்களைச் சுற்றி வளைத்தேனும் சரியயனச் சொல்வதற்குக் கிடைக்கும் செய்திகள் மற்றும் நடக்கும் வி­யங்கள் அனைத்தையும் பயன்படுத்துவது என்ற பிடிவாதவாத மனநிலையின் கோரப் பிடியிலேயே இவர்கள் இருக்கின்றனர்.

அதனால்தான் சில எளிமையான, தர்க்க ரீதியான கேள்விகளைக் கூட கேட்க மனமில்லாதவர்களாகவோ அல்லது முடியாதவர்களாகவோ இவர்கள் ஆகிவிட்டனர்.

உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே

எந்தவொரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையும் அந்த நாட்டின் அரசு கடைப்பிடிக்கும் உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமாக இருக்க முடியுமே தவிர அதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருக்க முடியாது. எந்தவொரு அரசின் உள்நாட்டுக் கொள்கையும் அது எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறதோ அதனை மையம் கொண்டதாகவே இருக்கும்.

அந்த அடிப்படையில் பனிப்போர் காலகட்டம் என்று முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் காலகட்டத்தில் இந்திய முதலாளிகளின் நலனுக்காகச் செயல்பட்ட அன்றைய இந்திய அரசு சோசலிச முகாம், ஏகாதிபத்திய முகாம் இரண்டையும் பயன்படுத்தி ஒன்றின் பக்கம் சாய்வது போல் ஒரு சமயத்தில் மற்றொன்றிற்குக் காட்டி அந்த மற்றொன்றிடமிருந்து உதவிகள், சலுகைகள், சாதகங்கள் பெற்று உள்நாட்டின் முதலாளித்துவத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்வது. அதையயாத்த விதத்தில் வேறொரு சமயத்தில் மற்றொரு முகாமின் பக்கம் சாய்வது போல் சாய்ந்து அதைப்போல் உதவிகளையும் சலுகைகளையும் முதலில் கூறிய முகாமிடமிருந்து பெற்று உள்நாட்டு முதலாளித்துவத்தின் துரித வளர்ச்சிக்கு உதவுவது என்பதைச் செய்தது. அதற்கு அணிசேரா நாடுகளின் அமைப்பு உதவியது. அதற்குந்த வகையில் அணிசேராத் தன்மைவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கை அப்போது கடைப் பிடிக்கப்பட்டது.

முகாமும் இல்லை அணிசேராக் கொள்கையும் இல்லை

தற்போது சோசலிச முகாம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் நான் அதன் பக்கம் சாய்ந்து விடுவேன் பார் என்று இந்தியா அமெரிக்காவிடம் கூறி சோசலிச முகாமின் பக்கம் சாயவிட்டுவிடக் கூடாது என்ற மனநிலையை அமெரிக்காவிடம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பேயில்லை.

எனவே தற்போது தோன்றியுள்ள மாறுதல் அணிசேராக் கொள்கை என்பதையே அதன் உள்ளடக்கத்தில் பொருத்தமற்றதாக்கி விட்டது. இந்நிலையில் தனது முதலாளிகளின் நலனை மேம்படுத்துவதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில் இந்தியா முனைப்புக் காட்டுகிறது.

இச்சூழ்நிலையை அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வலுவினையும் அது பொருளாதார சக்தியாக இன்னும் வளர்வதற்குள்ள வாய்ப்பினையும் கருத்திற்கொண்டு அதைத் தனது இளைய பங்காளியாக ஆக்கிக் கொண்டுள்ளது.

அதன் காரணமாகவே இலங்கையின் நெருக்கடி சூழ்ந்த முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட இனப்பிரச்னையை இந்திய அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய போது அதாவது தமிழீழம் கோரும் அமைப்புகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொள்ளவும் ஆயுதம் வழங்கியும் ஆதரவளித்து இலங்கை அரசிற்கு நெருக்கடி கொடுத்து அதைத் தன் வழிக்குக் கொண்டுவர விரும்பிய போது அப்பிரச்னையில் தலையிடுமாறு ஜெயவர்த்தனே அமெரிக்காவை அணுகிய வேளையில் பிரச்னையை இந்தியாவுடனேயே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அமெரிக்கா தலையிடாதிருந்து விட்டது.

அதைப்போல் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாகவே பல வி­யங்களில் செயல்படும் போக்குகளும் உருவாயின. அது மட்டுமின்றி இந்திய-இஸ்ரேல் உறவில் ஏற்பட்ட மேம்பாடும் இந்தப் பின்னணியில் ஏற்பட்டதே.

இவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடைய விஷ‌யங்களைப் பொருத்திப் பார்க்காமல் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது பல அபத்தமான முடிவுகளுக்கே நம்மை இட்டுச் செல்லும். அது இயக்கவியல் பார்வையல்ல; மாறாநிலைப் (மெட்டா பிசிக்கல்) பார்வையாகும்.

இந்தப் பின்னணியில் தான் இன்றுள்ள இந்திய அரசு இன்றைய இந்திய முதலாளித்துவத்தின் தேவைக்காக அமெரிக்காவுடன் நெருக்கம் கொண்டுள்ளது. அதன் ஒரு விளைவே இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். என்.பி.டி-யில் கையெழுத்திடாமலேயே பயன்படுத்தப்பட்ட எரி பொருளை மீண்டும் பயன்படுத்துவதற்கு உதவும் தொழில்நுட்பத்தையும் உரிமையையும் வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதொரு ஒப்பந்தம். இந்த வி­யத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் சரணாகதி அடைகிறது என்று பல அமெரிக்க அரசியல் வாதிகளை இந்த ஒப்பந்தம் புலம்ப வைத்தது.

அணுசக்தி மூலமாகப் பெறப்படும் எரிபொருள் யுத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டாலும், எரிபொருள் தேவைக்காகப் பயன்படுத்தப் பட்டாலும் இரண்டுமே இந்திய முதலாளிகளின் இன்றைய நலனுக்குத் தேவைப்படுபவையே.

எனவே வளர்ச்சியடையாத நிலையில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்துவிட்டு வளர்ச்சியடைந்த நிலையில் அமெரிக்கச் சார்பு கொள்கையை இந்தியா கடைப் பிடிக்கிறது. அது விநோதமானதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது என்று கூறுவது மிகமிக மேலோட்டமான மேலோட்டமாக அர்த்தமுள்ளது போல் காட்சியளித்தாலும் ஏற்பட்டுள்ள மாறுதல்களோடு பொருத்திப் பார்த்தால் எவ்வித உள்ளடக்கமுமற்ற கேள்வியேயாகும்.

காலிப் பெருங்காய டப்பாவின் வாசனையே

நடுநிலை என்பது ஒரு ஒப்பு நோக்குடன் முன்வைக்கப்படும் கண்ணோட்டமே. சோசலிச, ஏகாதிபத்திய முகாம்கள் என்ற செங்குத்தாக பிளவுபட்ட இரண்டு முகாம்கள் இருக்கும் போது மட்டுமே இரண்டில் எதனுடனும் சேராமல் இவற்றிற்கிடையில் நான் ஒரு நடுநிலைத் தன்மைவாய்ந்த கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன் என்ற கூற்றும் கருத்தும் எழ முடியும்.

சோசலிச முகாம் என்று ஒன்று இல்லாத நிலையில் இன்று காலிப் பெருங்காய டப்பாவிலிருந்து வரும் வாசனையை ஒத்ததாகத்தான் அந்த நடுநிலை முழக்கம் இருக்க முடியும்.

இப்போது ஒரு சரியான இடதுசாரி இயக்கம் செய்ய வேண்டியது நடுநிலைத் தன்மை இந்தியாவிற்கு இல்லாது போய்விட்டது என்பதை இந்தப் பின்னணியில் சுட்டிக் காட்டி ஒரு ஏகாதிபத்தியத்துடன் அதன் இளைய பங்காளியான ஏகாதிபத்தியமாக இந்தியா கைகோர்த்துச் செல்லும் அபாயத்தையும் ஆதிக்க வாதத்தையும் எதிர்க்கும் மனநிலையை மக்களிடம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர இந்தியா அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்துவிட்டது என்று கூறுவதாக இருக்கக் கூடாது.

அனுதாபமா? எதிர்ப்பா?

இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு மிக முக்கியமானது. அதாவது சரணாகதி அடைபவனிடம் நாம் சொல்ல வேண்டியது நீ நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று கூறுவதும் அதைச் செய்வதற்கு அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுமாகும்.

ஆதிக்க சக்திகளோடு ஒருங்கிணைந்து தன்னைச் சுற்றியுள்ள சில நாடுகளில் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அந்நாடுகளுக்கு தன் முதலாளிகளின் மூலதனம் கொண்டு செல்லப்பட வழிவகுக்கும் போக்கு இதன்மூலம் வெளிப்படுகிறதென்றால் அப்போக்கைப் பொறுத்தவரையில் அதனைக் கடுமையாக எதிர்ப்பவர்களாக கம்யூனிஸ்ட்கள் மற்றும் இடதுசாரிகள் இருக்க வேண்டும்.

இந்தப் பார்வையினைக் கொண்டிராத இவர்களோ ஆதிக்க வாதத்தில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக ஆகிவரும் இந்திய அரசைப் பாவம் போல் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியமே எதிரி; இந்தியா பாவம் என்று நமது மக்களை நம்பவைத்து இந்திய அரசு மீது அனுதாபம் கொள்ளச் செய்கிறார்கள். இவ்வாறு இவர்களது தவறான பார்வை சமூகமாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

இதனால் தான் இக்கேள்வியை என்.ராம் அவர்கள் எழுப்பிய போது அவர் ஆங்கிலத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு உள்ளது என்பதை விளக்க paradoxical என்ற வார்த்தையை உபயோகித்தார்.

ஆனால் பராபட்சமின்றி உண்மையைப் பார்க்கவும் எடுத்துக் கூறவும் இருக்கும் உரிமையை இழக்க வேண்டிய சுதேசி நிர்ப்பந்தம் எதையும் கொண்டிராத விக்கலீக் அதிபர் ஜீலியன் அசான்ஜ்-ஜோ வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்த அவரது கருத்தை interesting என்ற வார்த்தையைப் பயன்படுத்தி முன்வைத்தார்.

இவ்வாறு அனைத்துச் செய்திகளையும் நிகழ்வுகளையும் திரித்துப் பார்த்து அதைக் கொண்டு இந்திய மக்களின் பிரச்னைகள் அனைத்திற்கும் அடிப் படைக் காரணமாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தைப் பாவமானது, பலவீனமானது என்றெல்லாம் காட்டி இந்திய முதலாளித்துவத்தையும் அதன் நலன்களையும் காப்பதற்காக இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நிலைபாடுகளையும் மூடிமறைத்துக் காக்கும் இக்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்துவது இந்திய சமூகமாற்ற சக்திகளின் முழுமுதல் மற்றும் முக்கியக் கடமையாகும்.

விக்கிலீக் கசிவுகளின் மூலம் வெளிப்பட்டுள்ள தகவல்களில் பொதிந்துள்ள உண்மையின் அடிப்படையை மறுக்கும் தன்மை வாய்ந்த இக்கட்சிகளின் போக்கு இந்திய மண்ணில் சமூக மாற்றத்திற்குப் பெரும் தீங்கினை இழைப்பதாகும். அதனை மனதிற்கொண்டே இந்த விஷ‌யங்களைக் கொண்டு வருவது நமக்கு அவசியமாகியுள்ளது.

Pin It