108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே. 

நிர்வாகிகளின் கரங்கள் மேலோங்கியுள்ள நிலை

தொழிலாளி வர்க்க இயக்கங்கள் முதலாளித்துவ எதிர்ப்பு என்ற போராட்டக் கூர்முனையை இழந்து நிற்கும் இன்றைய நிலை, தனியார் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் தனியார் நிறுவன முதலாளிகளின் சுரண்டல் வேட்டைக் காடுகளாக தொழில் நிறுவனங்களை ஆக்கியுள்ளது. அந்தப் பின்னணியில் அனைத்து நிறுவனங்களுமே தொழிலாளர் சட்டங்கள் நியதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு வேலைக்கு அமர்த்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டுத்தனமாகச் சுரண்டு, அதற்குப் பின் வேலை செய்யத் திராணியற்றுப் போனாலோ, உரிமைகள் கோரினாலோ வேலையை விட்டுத் தூக்கி எறி என்ற அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களாக ஆகி விட்டன.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

 இந்தப் பின்னணியில் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த தொழிலாளரின் நியாயமான எதிர் பார்ப்புகளான அரசு துறையில் வேலை, பணி நிரந்தர வாய்ப்பு, அங்கீகரிக்கப்பட்ட நியதிகளின் படி ஊதியம் போன்றவற்றை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உடைத்து நொறுக்கித் தகர்த்துத் தவிடுபொடியாக்கி விட்டது. 

இந்த வேலையில் சேரும் போது நாம் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று அவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். வாரம் ஒரு நாள் விடுப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் அவர்களது கனவிலும் வந்திருக்காது. ஒரு நாளைக்கு 150 ரூபாய் என்ற அளவிற்கே ஊதியம் கிட்டும் என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். வருங்கால வைப்புநிதிக்கு நிறுவனம் கட்ட வேண்டிய தொகையையும் சேர்த்து நாமே கட்ட வேண்டியிருக்கும் என்பது தொலைதூரச் சிந்தனையாகக் கூட அவர்களின் மனதில் உதயமாகி இருக்காது. ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் பணியில் அமர்ந்த அவர்களை எதிர் கொண்டவை இத்தகைய எந்த நாகரீக சமூகமும் காணக் கூசும் அவலங்களே. 

கல் ஒன்று மாங்காய் இரண்டு

தமிழக அரசு, அரசுத் திட்டம் என்று ஒன்றை அறிவித்துவிட்டு அதற்காக உலக வங்கிக் கடன், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து பணம் மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதி இவையனைத்தையும் ஒரு தனியாருக்குக் கோடிக்கணக்கில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, அத்திட்டத்தின் மக்கள் ஆதரவு தன்மை குறித்த விளம்பரங்களை ஆளும் கட்சித் தலைமைக் குடும்பத்திற்குச் சொந்தமான ஊடகங்களுக்குக் கிடைக்குமாறு செய்து அதற்குக் கணிசமான பணத்தைக் கட்டணமாக அவ்வூடகம் வசூலிக்க வழிவகை செய்துவிட்டு  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கூற்றுக்கிணங்க அரசுக்கு நற்பெயர், தனது வீட்டிற்கு நல்ல பணம் என்ற அடிப்படையில் ஆளும் கட்சியின் தலைமை சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

பெரிய தொழிற்சங்கங்களின் பயன்பாடு கருதும் போக்கு

இந்த நிலையில் எதிர்பார்ப்புகள் நிர்மூலமாகி மனதுடைந்து நிற்கும் அத்துறை ஊழியர் தாங்கள் யாரை அணுகினால் உடனடிப் பலன் கிடைக்கும்  என்ற              அடிப்படையில் அணுகத் தேர்ந்தெடுத்த அமைப்புகள் சி.ஐ.டி.யு. போன்ற அமைப்புகளாக இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் அதுபோன்ற அமைப்புகள் தங்கள் கொடிகளாக  செங்கொடிகளை கொண்டிருக்கின்றன. வெளிப்படையாக அவை தொழிலாளர் வர்க்க நலன் குறித்த கோசங்களை முழக்குகின்றன. இடதுசாரி அமைப்புகளிலேயே அதிக வலுவானதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தோற்றம் அதற்குள்ளது. இந்த அடிப்படைகளில் மேலோட்டமான  பொது அறிவுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்படும் எவரும் அத்தகையதொரு அமைப்பையே இதுபோன்ற நிலையில் தேர்வு செய்ய விரும்புவர்.

ஆனால் நடைமுறையில் அந்த அமைப்பும் அக்கொடுமையினை பெரிய அளவில் கண்டு கொள்ளாது, இவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள் முடிந்தது எதையாவது முடியும் போது செய்வோம் என்ற அடிப்படையிலான நிலை எடுப்பதைக் கண்ணுற்று நியாயமாகவே அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இடதுசாரிக் கட்சிகள் என்று கூறப்படுபவைகளும் அவற்றின் வெகுஜன  அமைப்புகளும் இந்த அடிப்படையிலான செயல்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையைத் தான் நாம் போராட்டக் கூர்முனை மங்கிய நிலை என்று குறிப்பிட்டோம். இத்தகைய வெளித் தோற்றத்திற்கு பெரியவையாகவும் நடைமுறையில் சமூக மாற்றக் கோட்பாட்டை இழந்து விட்டவையாகவும் இருக்கும் அமைப்புகளுக்குப் பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் தொழிற் சங்கங்களை அமைக்கும் வாய்ப்புகளே பெரிதாகத் தெரியும். அந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர் எதிர் கொள்ளும் பிரச்னைகளை எடுத்தால் அதற்காகச் சந்தா மூலமாக அவற்றிற்கு கிட்டும் வருவாயும் குறைவு. அதே வேளையில் அவர்கள் அச்சிறிய நிறுவனத் தொழிற்சங்க அரங்குகளில் செலுத்த வேண்டிய உழைப்பும் அதிகம். இன்று நாடாளுமன்ற அரசியலில்   கோட்பாடுகள் ரீதியான அடிப்படைகளின்றி  ஈடுபடுபவையாக ஆகியுள்ள இக்கட்சிகளும் கிடைக்கும் பலன் எடுக்கும் வேலைக்கு உகந்ததாக உள்ளதா என்று பார்ப்பவையாகவே ஆகிவிட்டன. இதுவே வெளிப்படையான உண்மை.

இந்த நிலையில்தான் கைநிறையப் பிரச்னைகளுடன் மனம் நிறையக் கசப்பான அனுபவங்களுடனும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று நின்று கொண்டுள்ளனர். அதாவது ஊழியர்களுக்காகப் போராடிய பல மூத்த தொழிலாளர்கள் தற்காலிகப் பணி நீக்கங்களை எதிர்கொண்ட நிலையிலும் தன்னலமற்ற தொழிலாளரின் ஆதரவோடு தம்மைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளின் தீர்வுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தோடு உள்ளனர்.

எதைச் செய்வது என்ற கேள்வி

 நம்மில் பலர் ஏற்கனவே உறுப்பினர்களாக ஆகியுள்ள தொழிற்சங்கங்களைத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்தி செயல்பட வைப்பதா அல்லது சட்டப் பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதா என்பவையே அவர்கள் முன் எழுந்து நிற்கும் கேள்விகள். அவர்களில் பலர் உறுப்பினராகச் சேர்ந்துள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை அதனால் உரிய முயற்சிகளை எடுத்துப் பிரச்னையைப் பெரிதாக்கி அவற்றின் தீர்விற்கு நிச்சயமாகப் பல நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால் அத்தகு நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து அதுபோன்ற அமைப்புகள் பெருமளவு விலகிவிட்டன என்பதையே நமது நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது.

நாடாளுமன்ற அரசியலில் பயன்பாடு கருதும் போக்கு அவர்களது அடிப்படைக் கோட்பாடாக ஆகிவிட்டது. அதாவது இது போன்ற பெரிய எண்ணிக்கையில்லாத தொழிலாளரின் பிரச்னைகளைக் கையிலெடுப்பது எவ்வளவு தூரம் நமது அமைப்பை வளர்ப்பதற்கும் அதனை நாடாளுமன்ற அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதற்கும் உதவும் என்ற பயன்பாடு கருதும் போக்கு அந்த அமைப்புகளுக்கு வந்துவிட்டது.

துச்சமாகிவிட்ட தொழிலாளர் பிரச்னை

இன்று தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர் நீதிமன்றங்களும் இருக்கும் நிலை அவற்றிலிருந்து உரிய தீர்வு இவர்களின் பிரச்னைகளுக்கு குறுகிய காலத்தில் கிட்டும் என்று நிச்சயமாகக் கூறமுடியாத  நிலையிலேயே நம்மை வைத்திருக்கிறது. தொழிலாளர் அமைப்புகளின் பணத்திற்குத் தலை வணங்கும் போக்கு அது தேவையான அளவு நமக்குப் பயன்படுமா என்று நம்மை யோசிக்க வைத்துள்ளது. தொழிலாளர் நீதிமன்றங்களின் சகிக்க முடியாத கால தாமதம் தொழிலாளரைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியுள்ளது. மேலும் தொழிலாளர் நீதிமன்றங்களுக்குத் தேவைப்படும் அளவில் நீதிபதிகளின் நியமனமும் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை. தொழிலாளர் பிரச்னைகள் அரசுகளுக்கு அத்தனை துச்சமாகப் போய்விட்டன.

உலக மயத்திற்குப் பின்பு தொழிற்சங்கங்களின் போக்கே நமது முதலாளிகள் அல்லலுறுகிறார்கள் என்ற நிலையாக ஆகிவிட்ட சூழ்நிலையில் நீதி மன்றங்களும் அத்தகைய முன் சிந்தனையுடன் தான் தங்களது தீர்ப்புகளை வழங்குகின்றன. எனவே சட்ட ரீதியான தீர்வையும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் நம்பி இறங்க முடியாத நிலையே நிலவுகிறது.

இத்தகைய எதிர்மறைச் சூழ்நிலைகளை நாம் விவரிப்பதற்குக் காரணம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்ட மனநிலையின் உற்சாகத்தைக் குன்றச் செய்வதற்காக அல்ல. மாறாக நிலவும் யதார்த்த சூழ்நிலைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய தயாரிப்புகளுடன் அவர்கள் தங்கள் பிரச்னைகளின் தீர்விற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

தவறான புரிதல்கள்

பல்லாண்டுகாலச் சந்தர்ப்பவாத செயல்பாடுகளின் விளைவாக தொழிற்சங்கங்கள் குறித்த பல தவறான புரிதல்கள் தொழிலாளர்கள் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் அது அமைக்கப்பட்டு விட்டாலே பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது அவற்றில் இணைந்துவிட்டால் போதும் பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும் என்பதாகும். அதுதவிர தொழிற்சங்கங்களை நடத்துவதற்கு ஒரு வகையான நிபுணத்துவம் தேவை என்பது போன்ற தவறான புரிதலும் தொழிலாளர் மனதில் இடம்பெற்றுள்ளது.

அதாவது சாதாரணத் தொழிலாளிகளாகிய நம்மைப் பொறுத்தவரை தொழிற்சங்கம் நடத்துவது கிரேக்க லத்தீன் மொழிகளைப் படிப்பது போன்றது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. உண்மையில் தொழிற்சங்கம் என்பதன் அடிப்படையே பணபலமும் அதிகார வர்க்க ஆதரவும் பின்னணியும் கொண்ட நிர்வாகங்களை தொழிலாளர் ஒன்று சேர்ந்து போராடியே எதிர்கொள்ள வேண்டும் என்பதே. தனியாக எந்தவொரு பலத்தையும் கொண்டிராத தொழிலாளி தன்னையொத்த  தொழிலாளரோடு ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகச் செயல்படத் தொடங்கும் போது அசுரபலம் பெற்றவனாகிறான். அன்றிலிருந்து தொழிற்சங்கம் என்ற கோடிக்கால் பூதத்தின் பங்கும் பகுதியுமாகவும் ஆகிறான். அவனது உழைப்பைச் சுரண்டியே லாபமீட்டி கொழுத்துக் கொண்டிருக்கும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்கவல்ல பேராயுதத்தைத் தொழற்சங்கம் அவனுக்கு வழங்குகிறது.

போர்த்திட்ட அணுகுமுறை

தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒரு வகையில் போர்களே ஆகும். ஒரு போரில் ஈடுபடும் இரு தரப்பினரும் மிக முக்கியமாக எண்ணிப்பார்க்க வேண்டியது தங்களது எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் அத்துடன் அவனோடு மோதத் தயாராகும் தனது பலத்தையும் பலவீனத்தையுமே. அவற்றைத் துல்லியமாக இருதரப்பினரும் உணர்ந்து தெளிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒரு துறையில் செயல்படும் தொழிலாளர்கள் மிகப் பெருமளவு சார்ந்திருக்க வேண்டியது அவர்களது சொந்த பலத்தையும், அவர்களது எதிரியை எதிர்த்துப் போராட அவர்கள் மேற்கொண்டுள்ள சுய தயாரிப்புகளையுமேயாகும். இதை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் அந்நடவடிக்கைகளை வழி நடத்தும் போதுமே அதன் தலைவர்களுக்குத் திறமையும் நிபுணத்துவமும் கிடைக்கிறது. இந்த அடிப்படையோடு இணைந்திராத நிபுணத்துவம் தொழில்நுட்ப ரீதியான ஒரு எழுத்தரின் வேலையை ஒத்த தொழிற்சங்கப் பணிகள் சம்பந்தப்பட்டது மட்டுமே.

நமது பலம்

இந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் பலம் முதற்கண் அவர்களின் ஒற்றுமையில் உள்ளது. இரண்டாவதாக அவர்களைப் போன்ற ஓட்டுனர் போன்ற தனித்திறமை வாய்ந்தவர்களையும் முதலுதவிப் பணியாளர்களையும் கால் சென்டர் ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும் சொற்ப ஊதியத்திற்கு உரிய எண்ணிக்கையில் புதியவர்களைக் கண்டுபிடித்து நிர்வாகம் உடனடியாக நியமிக்க முடியாது. இது நமக்கிருக்கும் மிகப்பெரும் பலம். நிர்வாகத்தின் பலமோ ஊழல் மலிந்து போன ஆளும் கட்சியின் பின்பலத்தையும் அரசு நிர்வாகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை, தங்களுக்காகப் பாடுபட்டு அதனால் பாதிப்பிற்கு உள்ளாகியும் மனம் தளராது இன்றும் துணிச்சலோடு இப்பிரச்னையை கையில் எடுத்து முனைப்புடன் நின்று கொண்டிருக்கின்ற தொழிலாளர்களின் தலைமையில் துவக்கிச் செயல்படத் தொடங்கினாலே போதும். லட்சிய வேட்கையும் சமூகமாற்றச் சிந்தனையும் கொண்ட அமைப்புகளின் பின்பலமும் அவற்றிற்கு நிச்சயம் கிடைக்கும். இத்தகைய பின்பலத்துடன் அமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடினால் நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உரிய வெற்றி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் முன்பு ஏமாற்றியதைப் போல “அரசு வேலை நிரந்தரப் பணி, அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகள் சலுகைகள்” என நிர்வாகம் இனி யாரையும் ஏமாற்ற முடியாது. நடைமுறையில், இத்தகைய நம்பிக்கையில் பணியமர்ந்தவர்கள் இருக்கும் நிலை நிச்சயம் புதிதாகப் பணியமர விரும்புவோரது கண்களைத் திறக்கவே செய்யும்.

பல்வேறுபட்ட ஊழல் நடவடிக்கைகளில் முடைநாற்றம் வீசிக் கொண்டிருக்கும் தமிழக ஆளும் கட்சியின் அரசியலும் அதன் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் ஆட்சியும் இத்தகைய ஒற்றுமை உருவானால் பெரிதாக நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த அரசு ஒன்றுபட்ட உழைப்பாளர் சக்திகளுக்கு முன்பு இன்றில்லாவிட்டாலும் நாளை மண்டியிட்டே தீரவேண்டும்.

இந்த அடிப்படையில் உழைக்கும் வர்க்க அரசியலால் வழி நடத்தப்படும் சென்ட்ரல் ஆர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் தோழர் கருப்பன் சித்தார்த்தன் போன்றவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் உங்களது பிரச்னைகளுக்கான தீர்வினை நிச்சயம் நீங்கள் போராடிப் பெற முடியும் என்பதை வலியுறுத்தி அத்தகைய போராட்டக் களத்தில் இறங்க முன்வருமாறு புரட்சிகர வாழ்த்துகளுடன் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரை அறைகூவி அழைக்கிறோம்.

Pin It