(இடதுசாரி கருத்துநிலையாளர்கள், அதிகாரத்தைச் செயல்படுத்தும் நிறுவனங் களில் தலைமைப் பொறுப்பில் செயல்படுவது அரிதிலும் அரிதான செயல். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தன்னை எந்தச் சக்தியும் வீழ்த்த முடியாது என்று நிரூபித்த மனிதராக வாழ்ந்துவரும் அரிய மனிதர் சந்துரு அவர்கள். மார்க்சிய கருத்து நிலை சார்ந்து தமது இளமைக்காலம் முதல் செயல்படும் மனிதநேயர். சென்னை இலௌகிக சங்கம், ஆறு தொகுதிகள் நூல்களை வெளியிட்டு ஆற்றிய இவ்வுரை பகுத்தறிவு என்ற கருத்துநிலையின் பல்பரி மாணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.)

இந்நூலைப்பற்றிப் பேசும் போது சில விஷயங்கள் நினைவுக்கு வரவேண்டும். கடந்த மாதம் மராட்டிய மாநிலத்தில் “தபோல்கர்” என்ற ஒரு தத்துவ அறிஞர் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஏதோ கள்ளக் கடத்தல், கருப்பு சந்தையில் ஈடுபட்டவர் அல்ல. இந்நூலில் உள்ள பல கருத்துக்களை இன்றைக்கும் எதார்த்தத்தில் சொல்லிலும் செயலிலும் காட்டிய ஒரு சிந்தனாவாதி. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்பவர்களுக்கெல்லாம் காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட பதில்கள் அவர்களுடைய படுகொலைகள்தான். அவர்களைப் படுகொலை செய்து கல்லறையில் அடைத்து விட்டாலும் இப்படிப்பட்ட தத்துவ விசாரங்கள் எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன. இம்மாதிரியான கருத்துக்களை ஒடுக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இப்படிப்பட்ட புத்தகங்களின் மறுபதிப்புகள் வெளியிடப்படுகின்றன. பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு ஆகிய மும்முனைத் தாக்குதல்களையும் இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள காலதாமதங்கள் ஆகலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கருத்துக்களை சொல்லவும், எழுதவும், பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது என்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், இந்த மாதிரியான புத்தகங் களை விலைக்கு வாங்கி படிக்கக் கூடிய எழுத்தறிவு பெற்றவர்கள் அன்று மிகவும் குறைவு. இது போன்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்களும் அதிக எண்ணிக்கையிலில்லை. அதையும் மீறி இப்படிப்பட்ட கருத்துக்களை ஆணித்தரமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்த அறிவுஜீவிகள் குழாமொன்று சென்னையில் இருந்ததற்கு நாம் பெருமைபட வேண்டும்.

இந்நூல்களையெல்லாம் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங் களில் அழிந்து விடாமல் அதை மறுபதிப்பு செய்த வீ.அரசு நல்ல பணியை ஆற்றியிருக்கிறார். இத்தொகுப்பு ஒரு மறுபதிப்பு தானேயழிய புதிய புத்தகங்களல்ல. மாணவர்கள் இப்புத்தகங் களை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அதைப்பற்றிய தங்க ளுடைய கருத்துக்களை ஆழமாக பதிவதற்கு முன் வர வேண்டும். பழைய புத்தகங்கள்தானே என்று படித்ததோடு நிற்காமல், அச் சிந்தனைகளை மறுபதிப்பு செய்து அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இது போன்ற நிகழ்வுகள் பயன்படும். ஒரு நூற்றாண் டுக்கு முன்னரே இப்படிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதனால் சமுதாயம் மாறிவிட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் “தபோல்கர்” போன்ற சிந்தனாவாதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதற்கு நாம் அவமானப்படவேண்டும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதற்குக் காரணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமயவாதம் அல்லது சமயவெறி பிடித்தவர்களுடைய செயலாகவும் இருக்கலாம். கருத்து சுதந்திரம் என்பது இங்கு மறுக்கப்படுகிறது. Salman Rushdie எழுதிய “The Satanic verses” என்ற நூலை இந்த நாட்டிலே தடைசெய்தார்கள். புத்தகத்தை வாசித்துவிட்டுதான் செய்தார்களா என்று தெரியவில்லை! அப்புத்தகம் ஒரு சமயத் திற்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி தடைசெய்தார்கள்.

அதேபோல வங்காளதேசத்தைச் சேர்ந்த Taslima Nasreen என்ற பெண்மணியினுடைய “Lajja” (லஜ் ஜை) என்ற புத்தகத்தையும் தடைசெய்தனர். ஒரு சமயக் குழுவிற்கு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே தடைசெய் என்கிறார்கள். அதற்குப் பணிந்து போக இங்கே ஒரு அரசு இருக்கிறது. அது மத்திய அரசாகவோ அல்லது மாநில அரசாகவோ இருக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின்படி மதசார்பற்ற அரசு என்று சொன்னாலும் மதசார்பற்ற என்ற வார்த்தைக்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. அதனால்தான் இது போன்ற புத்தகங்களைக் மதவாதிகளுக்கு ஆதரவாக தடைசெய்யும் போக்கு நிலவுகிறது.

புத்தகங்களுக்கு மட்டும்தானா தடை? உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசைன் அவர்கள் வரைந்த ஓவியங்கள்கூட சில மதவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர் இந்நாட்டை விட்டு விரட்டப்பட்டார். ஒரு இந்தியக் குடிமகனே இந்தியாவில் இருக்க முடியாமல் வேறொரு நாட்டில் தஞ்சம் புகக்கூடிய சூழல்தான் இங்குள்ளது. இது தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வுகளில்லை. இங்கிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்ற அயர்லாந்தில் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவருக்கு குழந்தை பிறக்க வேண்டிய நிலை.

குழந்தை பிறந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடு மென்ற சூழலில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறார். மருத்துவர்கள் தாயைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் மௌனமாக இருந்து விட்டனர்.

அந்தத் தாயும் இறந்து விடுகிறார். அயர்லாந்து மிகவும் முன்னேறிய ஒரு நாடு. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உணர்ச்சிகரமான கோஷங்களைக் கொடுத்த நாடு. அங்கே இந்திய வம்சாவளி பெண் இறந்து விட்டாள் என்றால் அதற்கு காரணம் அங்கேயுள்ள மத நம்பிக்கைதான். குழந்தையைக் கொல்லக் கூடாது. கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டம் அனுமதிக்காது. அயர்லாந்து போன்ற ஒரு முன்னேறிய நாட்டில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் மருத்துவர்களுக்கு தமது கடமையையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான காரணத்தினாலல்ல. அது மத சம்பந்தமான காரணத்தினாலென்று புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் கொடுத்த உயிரை மனிதன் பறித்துக் கொள்ளக் கூடாது என்ற மதவாதத்தின் அடிப்படையில்தான் அங்கே ஒரு இந்தியத்தாய் மரணிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற எழுச்சியினால் அந்நாட்டு சட்டம் திருத்தப் பட்டது. மருத்துவர்கள் தீர்மானித்தால் கருக்கலைப்பு செய்து தாயைக் காப்பாற்றலாம் என்ற புதிய சட்டவிதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது.

இன்றும் மத ரீதியான, பகுத்தறிவிற்கு ஒவ்வாத செயல்கள் நடைபெற்று வருவதை நாம் பார்த்து வருகிறோம். நான் மாணவ பருவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபொழுது அதன் தலைவர்களில் ஒருவராக வி.பி.சிந்தன் இருந்தார். அவர் தாய்மொழி மலையாள மென்றாலும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் வடமொழிச் சேவையை ஆரம்பித்து வடமொழி தெரிந்தவர்களை அழைத்து பேச வைப்பார்கள். அப்படிப் பேசியவர்களில் பெருபான்மையானவர்களின் பேச்சு கடவுள், மதம் சார்ந்த பேச்சாகவேயிருக்கும்.

வி.பி.சிந்தனுக்கும் வடமொழி தெரியுமென்று பேச அழைத்த போது அவருடைய பேச்சின் சுருக்கத்தை எழுதிக்கொடுக்கக் கூறினார்கள். பின்னர் அவற்றைப் படித்துப் பார்த்து தணிக்கை செய்வார்கள். இது வெளியில் யாருக்கும் தெரியாது. கருத்துக்களை அரசு நிறுவனங்கள் தணிக்கை செய்துதான் அனுமதிக்குமென்ற செய்தி எங்களுக்குப் புதிது. வடமொழியில் கடவுள் ஸ்லோகங் களைத்தான் சொல்லக்கேட்டிருக்கிறோம். வடமொழியிலும் நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியுமென்று வி.பி.சி. நம்பினார். புத்தருடைய லோகாயுத இக்கருத்துக்களைச் சொல்ல விரும்பி னார். ஆனால் அவரது பேச்சு சுருக்கத்தைப் படித்த வானொலி நிலையத்தார் இம்மாதிரி கருத்துக்களைச் சொல்ல வடமொழி சேவை ஆற்றவில்லையென்றும் பொருள் முதல்வாதம் பற்றி பேச அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

உயிரியல் பாடம் எடுத்துப் படிக்கும்பொழுது, உயிரின் தோற் றத்தைப் பற்றி கூறும்போது டார்வினுடைய பரிணாம வளர்ச்சி பற்றி கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி தத்துவம் பற்றி 1956ஆம் வருடம் வரை அமெரிக்காவில் கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்க முடியாது. ஏனெனில், பரிணாம வளர்ச்சியைப் பற்றி கற்பித்தால் உலகமே இறைவனுடைய படைப்பு என்ற கிறித்துவ மத நம்பிக்கை அடிபட்டுப் போகும்.

“ஸ்கோப்”(Scope) என்ற ஆசிரிய தம்பதியினர் பள்ளிக் கூடத்தில் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கற்பித்ததற்காக சிறையிலிடப்பட்டனர். பின்னர் அவர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களில் பரிணாம வளர்ச்சியை ஒரு கொள்கையாக சொல்லிக்கொடுக்கத் தடையாகவுள்ளது.

தாவரவியல் பட்டப்படிப்பில் இறுதியாண்டில் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர் ஒரு கிறித்துவர். எங்கள் வகுப்பிலே கடவுளின் படைப்புத் தத்துவத்தை நம்புபவர்கள் எவ்வளவு பேர்? டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை நம்புபவர் எவ்வளவு பேரென்று கேட்ட பொழுது 35 மாணவர்களிருந்த அவ்வகுப்பில் நான் ஒருவன் மட்டுமே பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புவதாக கூற நேர்ந்தது. ஒருபுறம் அறிவியலைச் சொல்லிக் கொடுத்தாலும் பெரும்பான்மையான மாணவர்களுக்கும், சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் விஞ்ஞானத்தின் மேல் முழு நம்பிக்கை இல்லாத சூழலில் விஞ்ஞானம் எப்படி வளரும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதிபதியாக பதவியேற்கும்பொழுது அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையிலுள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுத்துக்கொள்வதென்பது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும். அவ்வுறுதி மொழியை எடுத்துக்கொள்ளும்பொழுது ‘உளமார’ (solemnly), (அ) ‘கடவுள் மீது ஆணையாக’ என்று இருவிதமாகச் சொல்ல வாய்ப்புண்டு. அரசியலமைப்புச் சட்டம் 1950இல் அமுலுக்கு வந்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘உளமார’ என்று சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நீதிபதிகள் இதுவரை நான்கு பேர்கள் மட்டுமே. இந்த உறுதிமொழியில் ‘உளமார’ என்று சொல்லும் வாய்ப்பின்றி ‘கடவுள் மீது ஆணையாக’ மட்டுமே உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால் அந்த நான்கு பேர் நீதிபதிகளாகியிருக்க முடியாது.

உறுதிமொழி எடுத்துக்கொள்வது பற்றி உலகம் முழுவதும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுண்டு. ‘தனித் திராவிட நாடு’ வேண்டுமென்று கோரி வந்த தி.மு.க., 1963ஆம் ஆண்டிலிருந்து அக்கோரிக்கையை கைவிட்டதோடு மட்டுமல்லாமல், ‘தனித் திராவிட நாடு’ என்பது எமது லட்சியம் மட்டுமே; பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை என்று கூறிவிட்டது.

அதற்குக் காரணம் மேற்சொன்ன உறுதிமொழியில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்கள். இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதன் இறையாண்மையையும் ஒருமைபாட்டை யும் பாதுகாப்பேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழி திருத்தப்பட்டது. அதன்பின் அவ்வுறுதிமொழியை எடுத்துக்கொண்டாலன்றி சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத் திற்கும் செல்லமுடியாது.

இலௌகிக சங்கத்தின் கட்டுரை வெளியீடுகள் நடக்கக்கூடிய அதே காலகட்டத்தில்(1890) முடியாட்சியுள்ள இங்கிலாந்தின் தேசிய கீதம் ‘இராணியாரைக் கடவுள் காப்பாற்றட்டும்’(God save the Queen) என்று தொடங்கும். மேலும், அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ‘கடவுளின் ஆணையாக’ என்று மட்டுமே தொடங்கும். இச் சூழலில் அந்நாட்டில் சார்லஸ் பிராட்லா என்ற ஒரு பகுத்தறிவு வாதி இருந்தார். அவருடைய கருத்துக்களை தமிழிலே மொழி பெயர்த்து வெளியிட்ட கட்டுரைகள்தான் இப்புத்தகங்களின் தொகுப்பிலுள்ளது. நார்த்தாம்டன் என்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் கடவுளின் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவர் மன்றத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சார்லஸ் பிராட்லாவிடம் அவரது நண்பர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடமைக்காக அவ்வுறுதிமொழியை எடுத்துக் கொள்ள வலியுறுத்தினர். மீண்டுமொரு தேர்தலைத் தவிர்க்க எண்ணிய அவரும் கடவுள் மீது ஆணையாக உறுதிமொழி எடுத்துக்கொள்ள ஒத்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்குச் சென்றார். அவர் இறை நம்பிக்கை இல்லாதவரானதால் அவரை மன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள அனுமதிக்க வில்லை.

அவரது நடவடிக்கை ஒரு மோசடி செயலென்று சொல்லி மறுபடியும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டார். மூன்றாம் முறையாக நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற அவர், அவரது பகுத்தறிவு தோழர்களுடன் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் செல்ல முயன்றதை காவல்துறையினர் தடுத்ததில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னரே இங்கிலாந்து பாராளுமன்றம் சத்தியத்தின் பெயராலும் உறுதி மொழி எடுத்துக்கொள்ள அனுமதித்தது. இதுதான் 120 வருடத்திற்கு முந்தைய இங்கிலாந்தின் நிலைமை.

சார்லஸ் பிராட்லாவிற்கு உதவியவர்தான் அன்னிபெசன்ட். அவருடைய எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார். அதற்காக அவர் கொடுத்த விலை மிகவும் அதிகம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு மிகச்சிறந்த காங்கிரஸ் பேச்சாள ராகவும், சமூக சேவகியாகவும் செயல்பட்ட அன்னிபெசன்ட்டின் வாழ்க்கை ஒரு கண்ணீர் கதை. அவரது நடவடிக்கைகளைப் பிடிக்காத கணவர் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அன்னிபெசன்ட், தனது மகளை தன்னுடன் வைத்து வளர்த்து வர அனுமதி பெற்றார்.

அதன் பின்னர் மக்கட்தொகைப் பெருக்கத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றிய மால்தூஸ் என்பவருடைய மக்கட் பெருக்கத்தைப் பற்றிய தத்துவத்தால் கவரப்பட்டு அதை துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டு, அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் விநியோகம் செய்தார். அளவான குடும்பமிருந்தால் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.

இதைக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் என்றும் கிறித்துவ சமயக் கருத்துக்களுக்கு விரோதியென்றும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் அவர் தண்டிக்கவும் பட்டார். அப்போது இங்கிலாந்தில் “இறை மறுப்பு”(Blasphemy) ஒரு கிரிமினல் குற்றமாக இருந்தது.

இதன் பிறகு விவாகரத்து பெற்ற அவரது கணவர் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். கிறித்துவ மத விரோதியான அன்னி பெசன்ட் தனது மகளை வளர்ப்பதற்கு தகுதியற்றவர் என்று வாதாடினார். இங்கிலாந்து நீதிமன்றம் தாயிடம் வளர்ந்து வந்த பெண்ணை பலவந்தமாக பிரித்து கணவரிடம் ஒப்படைத்தது. இத்தகைய சூழலில்தான் அன்னிபெசன்ட் அம்மையார், சார்லஸ் பிராட்லா, பகுத்தறிவு சங்கம் மற்றும் மால்தூசியன் சங்கத்தினருடைய கருத்துக்கள் மிக்க செல்வாக்கு பெற்ற தாக்கத்தால் தமிழ்நாட்டிலும் அது எதிரொலித்தது. அதன் விளைவாகத்தான் இப்புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

பிரிட்டிஷ் இந்தியாவும் ஒரு மத சார்பற்ற அரசாகத்தான் இருந்தது. ஆகவே 1860ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய தண்டனை சட்டத்தில் “இறை மறுப்பு”( Blasphemy) ஒரு குற்றமாக்கப்படவில்லை. ஆனால் இரு மதத்திற்கிடையே துவேஷம் உண்டாக்குபவர்களைத் தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடமிருந்தது. இருப்பினும் மதத்தை வெறுப்பவர்களுக்கும் இடமிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சார்லஸ் பிராட்லா, மால்தூசியன் சங்கம் என்று பலரும் செயல்படக்கூடிய சூழல் இங்கிருந்தது.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வடலூர் இராமலிங்க அடிகள் உருவமற்ற கடவுளைப் பற்றி பேச முடிந்தது. அவருடைய கருத்துக்களை எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழ் சைவர்கள் எதிர்ப் பிரச்சாரமும் செய்ததில் விளைந்ததே அருட்பா -மருட்பா விவாதங்கள். இவ்வாறு மதங்கள் குறித்து கருத்துக்களைச் சொல்ல இங்கே ஒரு மேடை இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது இந்தியாவிற்கென்று அரச மதம் உண்டா என்ற கேள்வி எழுந்தபோது, நம் நாடு ஒரு மதசார்பற்ற குடியரசாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நம் நாட்டைச் சுற்றி யுள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பர்மா ஆகிய நாடுகளிலெல்லாம் அரச மதங்கள் உள்ளன. அங்கு அரச மதங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய முடியாது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவர். எனவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி நாம் பெருமைப் பட வேண்டும்.

இசுலாமியர் அல்லது கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அம்மதங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்வது கடினம். ஆனால் இங்கு இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்ப இட முண்டு. ஏனென்றால் இந்து சமயவாதிகள் எல்லா கருத்துக்களை யும் தம் மதத்திற்குள் சேர்த்துக் கொள்ள பெருமைப்படுபவர்.

சைவ நாயன்மார்கள் 63 பேரில் சாக்கிய நாயன்மாரும் ஒருவர். அவர் தினசரி சிவலிங்கத்தைக் கல்லால் அடிப்பார். அவரையும் ஒரு நாயன்மாராக ஏற்றுக் கொண்டனர். அவரைப் பற்றி திருத்தொண்டத்தொகை இவ்வாறு கூறுகிறது:-

“வார்கொண்ட வனமுலையாள்

உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு அடியேன்”

மேலும் திருச்சங்க மங்கை அவரை இப்படி வருணிக்கிறது.

“கல்லெறிவார் துவராடைப் படம்புனைவே டந்தவிரார்”

ஆகவே இந்து மதம், மதத்தை வெறுப்பவர்களையும், விரோதி களாகப் பார்ப்பவர்களையும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறது. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன் சைவ மதம், வைணவ மதம் என்றே இரு பிரிவுகளிருந்தன. இந்து மதம் என்ற சொல் அன்றைக் கில்லை. இவ்விரு மதங்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என்கிறார்கள். உண்மை என்னவென்றால் அப்பொழுது மிகப்பெரிய அளவில் சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். சமணர் பள்ளிகள் உடைக்கப் பட்டு சமண நூல்களும் தீயிடப்பட்டன. இவைதான் அன்றைய சகிப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

மதுரையருகே வைகையாற்றின் கரையோரம் திருவேடகம் என்றொரு ஊருண்டு. சமண நூல்களையெல்லாம் ஆற்றில் போட்டு மூழ்கடித்த வரலாற்றின் நினைவுச் சின்னம் அந்த ஊர். ஒரு சமயம் இன்னொரு சமயத்தை அழித்துதான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்தது. மதத்தையும் கடவுளையும் வெறுப்பவர்களைக் கூட உள்வாங்கிக் கொள்ளும் போக்கு இங்குள்ளது. இல்லா விட்டால் கண்ணதாசன் எழுதிய சினிமா பாடல் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்காது.

“தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்  (2)

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை

இல்லை என்றால் அது இல்லை.”

மேலை நாட்டிலே “மத சார்பின்மை” என்றால் “A State is divorced from Religion”, அதாவது மதத்தை தள்ளி வைத்த அரசு என்று சொல்வார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அதை புரிந்துகொண்டிருப்பது வேறொரு அர்த்தத்தில்.

1990இல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைவர் தீபாவளியையட்டி அனுப்பிய வாழ்த்து அட்டை பற்றிய வழக்கொன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வட்டையில் ஓம் என்ற எழுத்துடன் காயத்ரி மந்திரம் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் பொன்னப்பா என்ற அதன் தலைவர் அம்மந்திரத்தை அனைவரும் அனுதினமும் உச்சரிக்க வேண்டுமெனக் கேட்டு கையெழுத்திட் டிருந்தார்.

அனைத்து சமயத்தினரும் தங்களது மோட்டார் வாகனங்களுக்கு கட்டாய இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய ஒரு நிறுவனத்தின் தலைவர் அரசு செலவில் ஒரு மதத்தைச் சார்ந்த கருத்தை பரப்பியது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் அவ்வாழ்த்து அட்டை களை அனுப்பியதற்கான செலவை அக்கம்பெனி தலைவர் எஸ்.ஆர்.பொம்மை உள்ளிட்டவரிடமிருந்து வசூலிக்க வேண்டு மென்று கோரப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்து மத சார்பின்மை என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்தது. மத சார்பின்மை என்பது மதங்களுக்கு விரோதமானதல்ல, மாறாக அனைத்து மதங்களையும் அணைத்து செல்லும் அரசு என்று பொருள்படும். ஆனால் அத்தீர்ப்புக்கு சில மாதங்களுக்குப் பின் ஒன்பது நீதிபதிகளடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட் டுள்ள மத சார்பின்மை என்பது மதங்களைத் தள்ளி வைத்துள்ள அரசு என்று பொருள்படும் என்ற தீர்ப்பை வெளியிட்டது மகிழ்ச்சிக்குரியது.

நெருக்கடி நிலையின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 42வது திருத்த சட்டத்தின் மூலம் ‘51-A’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. 51-A(h) என்ற ஷரத்தில் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்துக் கொள்ளவும் மனிதாபிமானமும் மற்றும் விசாரணைக்கான உணர்வுடன் சீர்திருத்தங்கள் செய்யவும் கடமைப்பட்டவர்களென்று கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங் களை எல்லாம் ஒழுங்குபடுத்தக் கூடிய பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. “சோதிட விஞ்ஞானம்” என்ற ஒரு புதிய பட்டப்படிப்பிற்கு யு.ஜி.சி. வழங்கிய அங்கீகாரத்தையெதிர்த்து சில பகுத்தறிவுவாதிகளும் தில்லி அறிவியல் சங்கமும் இணைந்து பி.எம்.பார்கவா என்பவ ருடைய பெயரில் அவ்வழக்கு தொடரப்பட்டது.

அறிவியல் பூர்வமற்ற ஜோதிடக் கலைக்கு அங்கீகாரமளித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம் என்று வாதாடப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கொள்கை முடிவில் தலையிட முடியாதென்று உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இதுபோன்ற கட்டுரை தொகுப்புகளை மக்களிடம் எடுத்துச் சென்றால்தான் நாட்டில் பகுத்தறிவு வளரும். இவை போன்ற பல நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய தேவை இன்று அதிக அளவில் உள்ளது.

(சென்னை இளெகிக சங்கம் - ஆறு தொகுதிகள் மற்றும் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு ஆகிய இரு நூல்களை 28.10.2013 அன்று மாலை வெளியிட்டு நீதிபதி கே.சந்துரு அவர்கள் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)

Pin It