14-2-2020 வெள்ளிக்கிழமை வெளிவந்த தினமணியில் கோதை சோதிலட்சுமி ‘மனுதருமமும் சில மாயைகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இறை மறுப்பாளர்கள் (மறைமுகமாகப் பெரியார் அவர்கள்) மனுதருமத்தின் மாண்பை உணராமல், வர்ணக் கட்டமைப்பை உருவாக்கிச் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை உண்டாக்குவது என்றும் பெண்களை இழிவுபடுத்துவது என்றும் அந்நூல் பற்றிச் சில மாயைகளைத் தோற்றுவித்து விட்டார்கள் என்று தம் கருத்தை வெளியிட்டிருந்தார்.

அதற்கு நான் மாயையா? மெய்ம்மையா? என்ற தலைப்பில் மனு நூல், சாதிப் பாகுபாட்டை வகுத்துக் குமுகத்தில் எத்துணையோ ஏற்றத்தாழ்வை உண்டாக்கிவிட்ட வெங்கொடுமையையும் பெண்களை எவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியுள்ளது என்ற கீழ்மையையும் அந்நூலில் உள்ள கூற்றுகளைக் கொண்டே சுட்டிக்காட்டி மறுப்புக் கட்டுரை எழுதினேன். அது தமிழ்ப் பணி, சிந்தனையாளன் ஆகிய இதழ்களில் வெளிவந்தது.

தற்போது 14-8-2020 வெள்ளிக்கிழமை வெளிவந்த தினமணியில் அதே கோதை சோதிலட்சுமி ‘துள்ளி வருகுது வேல்’ என்ற தலைப்பில் இறை மறுப்பாளர்கள் மேல், தம் வெறுப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். ஊடகவியலாளரான அவருக்கு வெள்ளிக் கிழமைகளில், ‘விருப்பு வெறுப்பான சனி’ பிடித்துக் கொள்ளுமோ என்ற வினாவுக்கு என்னிடம் உரிய விடையில்லை, அவருக்கு இறைமறுப்பாளர் பற்றிய அச்சவுணர்வு அவ்வளவு இருக்கக்கூடாது என்பதே என் அறிவுரையாகும். அவர்தம் கட்டுரையில் எழுதியுள்ள வழுக்களுக்கு நான் அமைதியாக மறுப்புத் தெரிவிக்க விருப்புற்றிருக்கிறேன்.

திருவாசகத்தில் ‘அச்சப்பத்து’ பதிகத்தில் மாணிக்க வாசகர் “யானைக்கும் கொடிய புலிக்கும் கூட அஞ்ச மாட்டேன். இறைவனை ஏற்காதவர்களைக் கண்டு அஞ்சுவேன்” என்கிறார். இறை மறுப்பாளர்கள் இன்றைக்கு நேற்றல்ல என்றைக்கும் இருந்தே வருகிறார்கள். இறை நம்பிக்கையை இந்த மண்ணிலிருந்து அகற்றிவிட முடியவில்லை; அகற்றவும் முடியாது என்று அக்கட்டுரையாளர் அச்சப்பட்டுக் கொண்டே அச்சப்படாதது போலக் காட்டிக் கொள்கிறார்.

மானிடனின் - பெரியாரின் பகுத்தறிவு வளர்ச்சி மலர்ந்து கொண்டே இருக்கும் வரை, இறைவன் இருக்கின்றானா என்னும் வினா தொடர்ந்து கொண்டே இருக்கும். இறை நம்பிக்கையை எவ்வாறு அகற்றிவிட முடியாதோ அவ்வாறே பகுத்தறிவாளர் இருக்கும் வரை இறைவனின் இருப்பைப் பற்றிய வினாவை விலக்கி விடவே முடியாது.

மணிவாசகர் ‘அறிவுறுத்தல்’ என்ற பதிகத்தில் “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்” என்று பாடுகிறார். இங்கே மணிவாசகருக்கே தாம் உண்மையான அடியார் இல்லையோ என்ற நம்பிக்கை இன்மையைத் தம் நெஞ்சுக்கு அறிவுறுத்திக் கொள்கிறார்.

மேலும் அதே பதிகத்தில்,

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்

மனம் நின்பால்

தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மையெல்லாம்

தொழவேண்டி”

என்று மணிவாசகர் பாடியுள்ளார். வானவர்கள் (கடவுளர்) தாம் வாழ வேண்டி மானிடரை-அடியாரை வாழ்த்துகிறார்கள். அவர்கள் மனம் கடவுளரைப் பணிவது, வானவர்கள் தாம் உயர்ந்து, தம்மையெல்லாம் தொழ வேண்டும் என்பதற்காக என்று மணிவாசகர் கூறுகிறார். கடவுளர்க்கே ‘தன்னலம்’ இருப்பதாகக் கூறுவது பொருத்தமா என அறிவிடம் கேள்வி தொடுத்துப் பாருங்கள்.

எத்தனையோ காலங்களாக இங்கே சநாதன தர்மம் கேள்விக்கு உட்பட்டிருக்கிறது என்று கட்டுரையாளர் கூறுகிறார். ஆமாம். எத்தனையோ காலங்களாக இங்கே சநாதன தருமம் தமிழர் நெறியில் - தமிழர் மரபில் அடாதன புகுத்தி அடிமைச் சிறையில் அடைத்து இறுமாந்து இனமானத்தைத் தின்றழித்தது என ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்.

தமிழர் நாகரிகம் என்பது இறைமறுப்புக் கொள்கையல்ல. ஐவகை நிலங்கள் பகுக்கப்படும் போதே அவற்றுக்கான தெய்வங்களும் முதற்பொருளாகச் சொல்லப்பட்டுவிட்டன என்று ஆசிரியர் கூறுகிறார்.

தமிழர் நாகரிகம் என்பது இறைப்பற்றாளர் கொள்கை மட்டுமே என உம்மால் துணிந்து கூறமுடியுமா? தமிழர்க்கு அது வாழ்க்கைக் கடலில் ஒரு துளிக்கூறு. அவ்வளவுதான்.

ஐவகை நிலங்கள் பகுக்கப்படும்போது அவற்றுக்கான தெய்வங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவை முதற்பொருளாகக் கூறப்படவில்லை. நிலமும் பொழுதும்தான் முதறபொருளாகக் கூறப்பட்டிருக்கின்றன. கருப்பொருளில், தெய்வம் ஒன் றாகப் பல பொருளோடு சொல்லப்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் அகத்திணை இயலைப் படியுங்கள். அது நன்கு புலனாகும்.

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாகும். அக்குறிஞ்சித் தெய்வம் சேயோன் – செவ்வேள் - முருகன். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத் தொல் காப்பியம் கூறுகிறது. பரிபாடலில் பதினேழாம் பாடல் செவ்வேள் சிறப்புகளைப் பண்ணோடு இசைக்கிறது. அப்பாடலில் திருப்பரங்குன்றத்தின் பெருவளம், பெரு நலம் பேசப்படுகின்றன. அக்குன்றத்தின் அடியிலே மாலைதோறும் மகிழ்வோடு உறைவோர் வானுலகத் தையும் விரும்பமாட்டார் என்றும் அப்பாடல் குறிப்பிடுகிறது.

“மாலை மாலை அடியுறை இயைநர்

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாவுர்”

(பரிபாடல் 17-அடிகள் 8, 9)

அதே பாடலில் மக்கள் “இறைவனே யாமும் எம் சுற்றமும் எப்பொழுதும் உன்னுடைய அழகிய நெடிய குன்றத்தைப் பாடி உன்புகழை ஏத்தித்தொழுது வேண்டு வோம். யாம் இன்பம் நிறைந்த நாளைப் பெறுக என்று உன்னை வணங்குவோம்” என்று போற்றுகின்றனர். இங்கே குன்றம் (நிலம்தான்) முதற்பொருளாக நிற்கிறது. அதன் முதன்மைச் சிறப்பு குறிக்கப்படுகிறது என்பதை அறிக.

மேலும் 5ஆம் பரிபாடல் செவ்வேள் முருகன் பற்றியது. அப்பாடலில் அடியார்கள் வேண்டுவதைக் காண்க.

“யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல

அருளும் நின்பால் அன்பும் அறனும் மூன்றும்...”

(பரிபாடல் அடிகள் 78, 79, 80)

என்னும் தமிழ் நெஞ்சத்துப் பெருமிதப் பண்பாட்டை அறிக.

இது தமிழ்க் கடவுள் முருகனிடம் தமிழ் நெஞ்சம் வேண்டும் பண்பாட்டுத் தனித்தன்மையாம். கட்டுரை ஆசிரியர் சநாதன சரவணனைக் கொண்டு வந்து தமிழ் முருகனோடு சேர்க்க வேண்டாம்.

முருகன் கையிலேந்தியிருக்கும் வேல், அறிவின் குறியீடு என்று கூறுகிறார் கட்டுரையாளர். இப்போதாவது அவர் பெரியாரை அணுகி வந்துள்ளார் என்று கூறலாமோ? பெரியாரும் இந்த அறிவைத்தானே - வேலைத்தானே தமிழர் (மாந்தர்) எல்லாரும் ஏந்த வேண்டும் எனத் தம் வாழ்நாளெல்லாம் முழங்கி வந்தார். கானமுயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்று திருவள்ளவரும் பெரு முயற்சிக்கும் பெரு வெற்றிக்கும் - வேலைக் குறியீடு செய்துள்ளார்.

இறை நம்பிக்கை கொண்டுதானே கண்ணுக்குத் தெரியாத தீ நச்சு நுண்மியின் கொடுமையைக் கடந்து வருகிறோம் என்கிறார் கோதை சோதிலட்சுமி. அப்படி யென்றால் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு வடிவம் சமைத்துக் கோயில்களில் காணவிட்டுத் தொழவைத்த மக்களுக்கு அங்கே வரவிடாமல் கதவடைத்தது ஏனோ? அத்தீ நுண்மியின் தொற்றுப் பரவி மக்களின் உயிர்க் கேடு மிகும் என்பதால் தானே? இஃது அறிவியலின் பார்வைதானே? பெரியார் பகுத்தறிவின் வெற்றிதானே?

சாதி, மதம், கடவுள், பெரியோர், சிறியோர், தலைவர், தொண்டர், மருத்துவர், செவிலியர், ஏழை, பணக்காரன், உள்நாட்டான், வெளிநாட்டான் என்று வேற்றுமை பாராமல் அந்நுண்மித் தொற்று பல நூறாயிரம் உயிர்ப் பற்றை அறுத்திருக்கிறதே. அதற்கு ஆறுதல் அளிப்பதற்கு எத்தனையோ ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அறிவு அற்றம் காக்கும் கருவி அன்றோ?

இறைப்பற்றாளர்கள் பெரும்பாலோர் கொடிய நோய் வந்தே இறுதி எய்தி இருக்கிறார்கள். செத்தவரை எழுப்பும் வல்லமை அருள் பெற்றவர்களும் செத்தே போயிருக்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான். உவமைக்கவிஞர் சுரதா, “செத்தவரைத் திருவருளால் எழுப்பலாமென்றால், செத்தவரை எழுப்பியவர் ஏன் செத்துப்போனார்” என்று துணிச்சலாகப் பகுத்தறிவுக் கேள்வி எழுப்பினார்.

வெறும் பிதற்றல்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் ‘சரணம் சரணம் ஷண்முகா சரணம்’ என்று இறைவனை நினைந்து அமைதியாய் முன்னேறுவதே சாலச் சிறந்தது என்று கட்டுரையை அவர் முடித்திருக்கிறார். தமிழ்த்தெய்வம், சங்கத் தமிழ்த் தலைமைப் புலவன். மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே முருக வழிபாடு என்றெல்லாம் பரக்கப் பேசிவிட்டு, இறுதியில் வடமொழியில் மந்திரத்தை ஓதி முடித்திருப்பது, வெட்கக் கேடாக உள்ளது.

“ஆரிய வேத மந்திரங்கள் இயற்றப்படு முன்னரே தமிழில் மந்திர நூல்கள் இருந்தன. தொல்காப்பியம் கூறும் எழுவகைச் செய்யுள் நிலைக்களங்களுள் மந்திரமும் ஒன்று.”

‘வாய்மொழி’ என்னும் ஒருநிலைக்களமே மந்திரம் ஆகும்.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப”

(தொல்.1434)

என்கிறார் தொல்காப்பியர். மறை என்பது மந்திரம் எனவும் வாய்மொழி எனவும் படும். மன்னும் திரம் (திறம்) மந்திரம். ‘சிவபோற்றி’ என்பதே தமிழர் கொண்டதும் உண்மையானதும் ஆன திருவைந்தெழுத்தாம். அவ்வாறே ‘முருக போற்றி’ என்பதே தமிழர்க்குரிய ஆறெழுத்து மந்திரம் ஆகும். (தேவநேயப் பாவாணர்).

இதை, முனைவர் மு.பெரி.மு. இராமசாமி - ‘நக்கீரர் ஓர் ஆய்வு’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

எனவே கட்டுரையாளர் இனியேனும் போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகப் பிதற்றாமல் ‘உண்மை அறிவே பேரின்பம்’ (சச்சிதானந்தம்) என்னும் அறிவு நலத்தோடு கட்டுரை எழுதுக.

இவர் மட்டும் இல்லை. கலாரசிகன் (தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்) 15.3.2020 ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த ‘தமிழ்மணி’ பக்கத்தில், தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. கி. சிறிதரன் எழுதிய ‘வழிகாட்டும் கல்வெட்டுகள்’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதி இருக்கிறார். அதற்கு ஆறு பத்திகளில் ஆறாம் பத்தியில் மட்டும் நூல் பற்றிப் பொத்தாம் பொதுவாகச் சில வரிகள் எழுதி விட்டு, முதல் ஐந்து பத்திகளில் இறை மறுப்பாளர், சமய மறுப் பாளர் (பெரியார்) பற்றியே சாடியிருக்கிறார்.

அவருக்கும் நான் மறுப்புக் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை, தமிழ்ப்பணி இதழில் (நிறுவநர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் - ஆசிரியர் திருவள்ளுவர்) மேத் திங்களில் வெளிவந்துள்ளது. சிந்தனையாளன் இதழிலும் ஆகத்துத் திங்களில் வெளிவந்திருக்கிறது.

அவர் போலவே கம்பவாரிதி இலங்கை செயராசுவும் தினமணியில் ‘பிழையும் பிழைதிருத்தமும்’ என்ற தலைப்பில் 4 தொடர் கட்டுரை எழுதித் திடீரென்று முடித்துக் கொண்டார். அவரும் பகுத்தறிவாளரைச் சாடி வம்ப வாரிதியாக மாறிவிட்டார். அவர், சிந்தனையா ளன் இதழ் ஆசிரியர் வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்திருக்கும் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 20 தொகுதிகளைப் படித்துப் பார்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ என்ற நூலைப் படித்தறிய வேண்டும். ‘ஆரிய மாயை’ என்ற நூலையும் படித்து உண்மையான அறிவுத் தெளிவு பெற வேண்டும்.

இறை மறுப்பாளர்களுக்கு - பகுத்தறிவாளர்களுக்கு அரணாக அமைந்திருப்பது ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னும் நூலாகும். அதன் ஒரு பகுதியில் வரும் கூற்றே என் கட்டுரைக்கு முடிவுரையாகும்.

இடம் : பாஞ்சாலம் (ஐக்கிய மாகாணம்)

காலம் : கி.மு.700

பிரவாகன் - சத்திரியன் : வசிட்டரும், விசுவாமித்திர ரும் தோற்றுவித்த தேவதைகளும் வேள்வியும் மந்த புத்தியுள்ளவர்களைத்தான் திருப்திப்படுத்த முடியும்; அறிவாளிகளையும் புத்திக்கூர்மையுள்ள சந்தேகவாதி களையும் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரவாகன் தயார் செய்யும் படகு மிகவும் உறுதியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் அரசர்களையும் சேனாதிபதிகளையும் சுகபோகிகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும். பிராமணர்களுக்கு இந்தச் சத்திரியனின் புதிய உறுதியான கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும். இந்த அகண்டவெளி – பிர்மம் – பிர்மஞானம் - இறந்தவர்கள் மறுபடியும் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நுண்ணிய புலன் மூலம்தான் முடியும் என்பதே என் புதிய கண்டுபிடிப்பாகும்.

- பேராசிரியர் இரா. சோதிவாணன்