மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர், படைப்பாளர், ஆய்வறிஞர், தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர் ம.ரா. அடிப்படையில் சமூக, மனித மன முரண்களைக் கலை இலக்கியமாகச் சித்தரிப்பதன் வழியாக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஓர் எழுத்தாளர். அவருடன் புதிய புத்தகம் பேசுது இதழுக்காக உரையாடிய சில பகுதிகள்..
- - இரா.தெ.முத்து, முத்தையா வெள்ளையன்
நீங்கள் படைப்பிலக்கியத்திலும் இயங்கி வருகிறீர்கள். பொதுவாகப் படைப்பு மனநிலை பற்றிக் கூறுங்கள்.
போதாமை இருக்கிறபோதுதான் படைக்கணும் என்ற உந்துதல் ஏற்படும். அப்படி ஏற்பட்டாலும் கூட படைப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு தேவை இருக்கணும். அந்தத் தேவை என்பது கூட அதிருப்தியிலிருந்து வருவதுதான். இருப்பது சரியில்லை என்கிற அதிருப்தி. உங்கள் கண்களோடும், உங்கள் வாழ்க்கைப் பின்னணி யோடும் உங்கள் அனுபவங்களோடும் ஒரு நிகழ்வை வேறு யாரும் பார்க்க முடியாது. அவரவர்கள் அவர்களின் வாழ்க்கைப் பின்னணியோடும் கண்களாலும் பார்த்துச் சொல்கிறபோது தன் மனதால் இப்படி இதைப் பார்க்கலாமே என்று தோன்றுவது படைப்பு மனநிலை.
கடவுளைச் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு போக யாருக்காவது தோணும் போதுதான் கடவுள் பைக்கு அடக்கமாகப் படமாகிறார். கடவுளை நிறுத்தி வைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறபோதுதான் கோவில் வருகிறது. சித்தன்ன வாசலுக்குப் போய்ப் பார்த்தால் அங்குள்ள விதானத்தில் தாமரைக் குளத்தையும் பறவைகள் பறப்பதையும் ஓவியமாகப் பார்க்கலாம். ஏன் இப்படி வரையவேண்டும் என்று யோசித்துப்பார்க்கும் போது, தரையில் வரைந்தும் இருக்கலாம் அல்லது சுவரில் வரைந்தும் இருக்கலாம். பொதுவாக நாம் பார்த்திருக்கிற தாமரைக்குளம் கண்ணுக்கு நேராகவோ, கீழாகவோதான் இருக்கிறது. ஆனால் சித்தன்னவாசலில் பார்க்கிற குளம் தலைகீழாக இருக்கிற குளம். தாமரைக்குளம் சிரசாசனம் செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? யானையையும் தலைகீழாக அந்த ஓவியன் படைத்திருக்கிறான். வானத்தில் நீங்கள் ஒரு தாமரைக்குளத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் சித்தன்னவாசலில் பார்க்கலாம். மனதால் பார்க்கவும் கேட்கவும் முடிகிறவர் படைப்பாளியாகிறார் என்று தோன்றுகிறது.
இங்கு எல்லாருமே படைப்பாளிகள்தான். யார் படைப்பாளி இல்லை? ஆக்கத்தெரிந்தவர்கள் அனைவருமே படைப்பாளிகள்தான்.
உங்கள் முதல் தொகுப்பைப் பற்றி.....
முதல் தொகுப்பு இராண்டாம் தொகுப்பு என்பதெல்லாம் காலத்தின் வரையறைதான். திருவள்ளுவர் எழுதிய முதல் குறள் ‘அகர முதல’ என்பதாகக் கருத முடியுமா? திருக்குறளின் இறுதியிலுள்ள ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்பது கூட முதற் குறளாக எழுதப்பட்டிருக்கலாமே!
‘அந்திப் பொழுதில்’ என்பது எனது முதல் தொகுதியாக வெளிவந்தது. ‘அந்திப் பொழுதில்’ என்கிற கதை, கிராமச் சமூகத்தில் சாதியக் கட்டுமானங்கள் வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் கட்டுடைகிற நிலையைக் கருவாகக் கொண்டது. வெளிநாட்டுக்காரர்களும் வெளியூர்க்காரர் களும் வந்து பார்க்கிற அருங்காட்சியகமாகக் கிராமக் கோயில்கள் ஆகிக் கொண்டிருக்கிற காலம்; கிராமத்தி லிருந்து கடவுள்களும் நகர், மாநகர், வெளிநாடு என்று புலம்பெயர்ந்து கொண்டிருக்கிற காலம்; கோயிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற குருக்களுக்கு வாழக் கையை நகர்த்த வருமானம் குறைகிறது. கடவுளோடு குருக்கள் வீட்டுக் குழந்தைகளில் சிலர் புலம்பெயர்ந்தாலும் பலர் அந்தக் கிராமத்தை விட்டுச் செல்லமுடியாத வாழ்க்கைப் பழக்கச் சூழல். கிராமத்திலேயே தங்க நிர்ப் பந்திக்கப்படும் வாழ்க்கை ஆனாலும் சாதீய வேலைப் பிரிவினைகளின்படி கோயிலில் மணியடித்துப் பூசை செய்து மட்டும் வாழக்கையை நடத்த முடியாத பொருளாதாரநிலை. கிராமங்களிலும் வாழ்வியல் சடங்கு முறைகளில் குருக்களுக்கு இடமில்லாமல் போகிறது. அதனால் பூசை செய்த நேரம் போக மற்ற நேரங்களில் சமுதாயச் சடங்குகளில் ஈடுபட்டுப் பெற்று வந்த வருமானமும் நின்று போகிறது.
எனவே, கோயில் பூசையோடு குருக்கள் வேறு வேலை தேட வேண்டிய கட்டாயம். கிராமச் சூழலில் வேறு வேலை என்பது விவசாயம்தான். கூலி விவசாயியாகப் போக முடியாது. எனவே குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தை மீட்டுத் தானே விவசாயம் செய்யப் போகிறார். கோயில் பூசை என்கிற வேலைப் பிரிவுக் கோட்டைத் தாண்டி விவசாயம் செய்யப் போகிறவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குருக்கள், விவசாயி என்கிற இரண்டு நிலைகளிலும் இயங்க முடியாத நிலையில் கோயில் சாவியைக் கோயிலுக்குள் எறிந்துவிட்டுப் பூணூலைக் குளத்தில் கழற்றிப் போட்டுவிட்டு மண்வெட்டியைத் தோளில் ஏந்திக் கொண்டு குருக்கள் நடக்கிறார். கிராமச் சாதியக் கட்டுமானத்தின் அந்திப் பொழுதில் அரங்கேறுகிற காட்சி இது. இந்தக்கதை அப்போது இலக்கிய வட்டங்களின் குறிப்பாகக் கோமல் சுவாமிநாதன் போன்றவர்களின் விவாதத்திற்கு உட்பட்ட கதையாகும். மாற்றம் வேறு, வளர்ச்சி வேறு. தண்ணீர் ஆவியாவது மாற்றம். மொட்டு மலராவது வளர்ச்சி. இரண்டிலும் மாற்றங்கள் இருந்தாலும் வளர்ச்சியை நோக்கிய மாற்றங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வராதவை. மலர் மீண்டும் மொட்டாவதில்லையே! கலை இலக்கியப் படைப்புகள் சமூகத்தில் நிகழும் மாற்றங்களை வளர்ச்சியை நோக்கிய மாற்றங்களாக வளர்த்தெடுக்கின்றன.
எழுதுவதில் ஒரு சுயநலம் இருக்கிறது. வயிற்றுப் பாட்டிற்காக ஆயுட்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக் கிறோம். யார் யாருடைய ஏவலிலோ யாருக்கான காத்திருப்பிலோ ஆயுட்காலம் அழிகிறது. நம்மோடு நாம் மட்டுமிருக்கிற தனிமை இன்பமானது; படைப்பு கருக்கொள்ளும் காலமது. நம்மோடு நாமிருக்கிற நாம் விரும்புகிற உலகோடு நாமிருக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறு இல்லை. அந்த மகிழ்ச்சி வாயில்களை அவரவர்கள் கண்டறிந்து கொள்கிறார்கள். எனக்கு எழுதுவதும் படிப்பதுமாக அந்த வாயில்கள் அமைந்து போயின.
கல்வியாளரான உங்கள் படைப்புகள் மக்கள் சார்பான பார்வையில் இருப்பதற்கான சூழலை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
திட்டமிட்டுச் செய்யப்படுவதில்லை. கல்வியாளர், மாணவர் என்பதெல்லாம் மாறும் நிலைகள். மனிதனாக இருக்க முயற்சி செய்வதே மாறாத நிலை. புற வாழ்க்கை நிலை என்னவாக இருந்த போதிலும் மனநிலையில் வாழ்க்கையின் ஒட்டும் உறவும் தனியாகத்தான் இருக்கின்றன. வேடங்களுக்குள் இருக்கும் இயல்பு முகம், வெளிப்படும். கலை இலக்கியப் படைப்புகளில் வேடந்தாங்கல் காட்டிக் கொடுக்கும்; சூனியமாக்கும். போட்டுக் கொண்டிருக்கிற வேடங்களில், தான் இல்லை என்பதைப் படைப்பு மனநிலை உணரும் மற்றவர்களுக்கும் உணர்த்தும். யாராக? என்னவாக இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்குக் காட்ட அல்ல, தானே உணரவும் தேடவும்தான் படைப்பு. தானே உணர்வதும் தேடுவதுமான முயற்சிகளின் மனச் சிராய்ப்புகளை, தழும்புகளைத் தனக்குள் கண்டறிந்து கொள்வது அவற்றைத் தடுக்கவும் போக்கவுமான வழிகளையும் விதிகளையும் காட்டும். வசதியான வாழ்க்கை நிலையில் படிக்கத் தெரிந்தவர்களுக்குப் பொழுது போக்கக் கூத்தாடும் விருப்பமில்லாமல் அவர்களும் அமைதியிழந்து அவலச் சூழல்களின் ஆட்டத்தில் சிக்குண்டுருப்பதைக் காட்டுவதில் படைப்பு சாகாவரம் பெறுகிறது. சாகாவரம் பெற்றவர்கள் மனிதர்கள். தனிப்பட்டவருக்கு மரணம் உண்டு. சமூகம் சாவதில்லை.
தமன்பிரகாஷ், சுவாமிநாதன் ஆகியோருடன் நீங்களும் சேர்ந்து கணையாழி இதழைக் கொண்டு வந்தீர்கள். அந்த அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது?
கணையாழியை இவர்களோடு சேர்ந்து கொண்டு வந்ததில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. ஆரம்பத்தில் நான் கணையாழியின் வாசகன்தான். கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்த போது கணையாழி குறுநாவல் போட்டியில் நான் எழுதிய ‘வழி’ என்ற குறுநாவலுக்குப் பரிசு கிடைத்தது. இது நடந்தது எண்பதாம் ஆண்டுகளில். அதன் பிறகு தொடர்ச்சியாக எழுதி உள்ளேன். ஒரு கட்டத்திற்குமேல் கணையாழி நின்று போய் விட்டது. பிறகு நண்பர்களிடம் பேசி, கொண்டு வந்தோம். அதன் பிறகு பத்தாண்டுகள் தொடர்ந்து வந்தது. நாங்கள் போன பிறகு கணையாழியின் முகத்தை மாற்றவில்லை. அகத்தைக் காப்பாற்றினோம். அவர்கள் கொடுத்தபோதே அப்படித்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.
அப்போது எழுத்தாளர் சிவகாமியை ஒரு நேர்காணல் செய்தோம். அந்த நேர்காணலில் தலித் பிரச்சனைகளைத் தலித்துதான் எழுத வேண்டுமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் ‘பன்றி விட்டையை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு செல்லும் போது அந்த வாசனை உங்களுக்குத் தெரியுமா? இந்த வேலையெல்லாம் செய்து விட்டுத்தான் நான் பள்ளிக்கூடம் செல்வேன். இதை உங்களால் பதிவு பண்ண முடியுமா? ஆகவே அதை அனுபவித்தவர்களால்தான் அந்த உணர்வுகளைப் பதிவு செய்ய முடியும்’ என்றார். இது அப்படியே கணையாழியில் வெளிவந்தது. அதற்குக் கணையாழியும் இடம்கொடுத்தது.
நீங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற பிறகு என்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன?
இயல்பாகப் பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி உரிமையுடையது. பல்கலைக்கழக இலக்குகள் நோக்கி அதை வளர்த்தெடுப்பதற்கும், சிந்திப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சிக்குழுவும், பேரவையும் இருக்கின்றன. புதியதாகக் கட்டடம் கட்டுவது, இத்தனை கோடி ரூபாய் நிதியாகக் கொண்டு வந்து சேர்ப்பது போன்றவைகளை மட்டும் முழுமையான வளர்ச்சிகளாகச் சொல்ல முடியாது. மனங்களில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இதற்காக ‘அம்பலம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்குக் கட்டணமெல்லாம் இல்லை. இந்த அமைப்பு சுற்றுச் சூழலைக் காப்பதும், சுயமரியாதையைப் போற்றுவதுமான குறிக்கோள்களைக் கொண்டது. குறிப்பாக இந்தப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருப்பவர்கள் இந்த வாழ்க்கை நெறி பெற முயற்சி செய்கிறோம். கையூட்டுப் பெறுவதிலும் கொடுப்பதிலும் முதலில் பங்கப்படுவது சுயமரியாதைதான் என்பதை உணர்கிற மன நிலையை வளர்த்தெடுக்கிறோம். வளாகத்திற்குள் ஏதேனும் தவறு நடந்தால் தெரிவிக்க அங்கு ‘தன் நெஞ்சு அறிவது’ என்ற ஒரு பெட்டி இருக்கிறது. நான் தவறு செய்திருப்பதாக நினைத்தால் கூட எழுதிப்போடலாம். அதில் புகார் தருபவரின் பெயர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும். அந்தக் கடிதங்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். அது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தது ‘தமிழ் உலா’ என்ற திட்டம். இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க, இலக்கியத்தில் இடம் பெற்ற இடங்கள், ஊர்கள், கோவில்கள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை அன்று இரண்டு பேருந்துகளில் மாணவர்கள், அந்தந்தத் துறை சார்ந்த ஆசிரியர்கள், உள்ளூர்ப் பொதுமக்கள், பத்திரிகைக்காரர்கள் பங்கு பெறலாம். அந்த இடத்தைப் பற்றி இலக்கியம் சிற்பக்கலை தெரிந்த ஆசிரியர்கள் சொல்வார்கள். அதைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் திட்டமும் உள்ளது.
புலமையாளர்களை அழைத்து விருந்தினர்களாக ஒரு மாதத்திற்குத் தங்க வைக்கிறோம். அவர்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணி எதுவும் கிடையாது. அவர்கள் விரும்பினால் மாணவர்களைச் சந்திக்கலாம், வகுப்புகள் எடுக்கலாம். இவர்களுக்கு உணவும், உறைவிடமும், வழிச்செலவும் கொடுக்கப்படுகின்றது. இப்போது எழுத்தாளர் கோணங்கி தங்கி ஒரு புதினம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால் இங்கு மரபுவழிக் கலையான நிகழ்த்துகலை செயல்வழியாகக் கற்றுத்தரப்படக் கவிஞர் கனிமொழி, எம்.பி. ஒரு கோடி ரூபாய் தந்து உதவியிருக்கிறார்.
ஓலைச் சுவடிகளைச் சேகரிக்கும் திட்டம் தொடர்ந்து நடை பெறுகிறதா?
National Manuscript Mission என்ற மத்திய அரசு நிறுவனம் இந்தியா முழுவதும் எங்கெங்கு ஓலைச்சுவடிகள் இருக்கின்றன என்று ஆய்வை நடத்தினார்கள்... அந்த ஆய்வின் மூலம் தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் ஓலைச்சுவடிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளன. மேலும் அந்த ஓலைச்சுவடிகள் எங்கெங்கு உள்ளன போன்ற விபரங்ளுக்குப் பட்டியல் தயார் செய்து அந்தச் சுவடிகளைப் பார்வையிட்டு அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
இதைப் பெறுவதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத் திற்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஓலைச்சுவடி உள்ளவர்களிடம் மாவட்ட வருவாய்த்துறை வழியாகப் பெறலாம் என்று முடிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதங்கள் எழுதினோம். அதனால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் போன்றோர்கள் சுவடி உடையவர்கள் வீட்டிற்கே சென்று முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியில் சில சுவடிகளைத்தான் பெற முடிந்தது. பலர் சுவடிகளைக் கொடுக்க முன் வரவில்லை. கண்ணன், சுபாஷினி என்பவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை என்று வைத்து இருக்கிறார்கள். அவர்களை வெளிநாடுகளில் உள்ள ஓலைச்சுவடிகளைப் பெறுவதற்குத் தொடர்பு கொண்டோம். பிறகு அவர்களுடன் தமிழ்ப் பல்கலைக்கழகமும் சேர்ந்து இங்குள்ள ஓலைச்சுவடிகள் உள்ள வீட்டிற்கே சென்று, Portable scanner கையடக்கக் கருவி மூலம் நகல் எடுத்துவிட்டு ஓலைச்சுவடிகளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். இப்படியாக எட்டு மாவட்டங்களில் முடித்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத் திருக்கிறது.
தமிழ்மொழி செம்மொழி ஆக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் என்ன மாதிரியான ஆய்வுகள் வரவிருக்கின்றன?
முதலில் தமிழ் மொழி செம்மொழியாக ஆக்கப்படவில்லை. அறிந்தேற்கப்பட்டது. ஆக்கப்படுவது என்பது வேறு. செம்மொழியாக அறிந்தேற்பது வேறு. சமஸ்கிருதம் செம்மொழியாக ஆக்கப்பட்டது. உலகத்தில் சில மொழிகள்தான் செம்மொழி என்று அறிஞர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் முதன்முதலாகச் செம்மொழி என்று அறிவித்த அரசு இந்திய அரசுதான் அதுவும் முதன் முதலாக அரசால் அறிந்தேற்கப்பட்டது தமிழ் மொழிதான். இதற்குப் பிறகுதான் சமஸ்கிருதம் அறிவிக்கப்பட்டது. இப்போது வேறு வேறு இந்திய மொழிகள் கோரிக்கை வைத்து இருக்கின்றன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இருபத்தைந்து துறைகள் உள்ளன. இங்கு நிலஅறிவியல், தொல்லறிவியல், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வி, இந்தியமொழிகளுக்கான துறை, ஓலைச்சுவடி, கல்வெட்டுத் துறைகளும் இருக்கின்றன. தமிழக வரலாறு, பண்பாடு தொடர்பான ஆய்வுகளை உள்ளடக்கியதாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இருக்கிறது. மற்ற மொழிப் பல்கலைக்கழகம் போல இதைப் பார்க்க முடியாது. எனவே செம்மொழியாக அறிந்தேற்கப்பட்ட முதல் மொழியாகிய தமிழின் வளம், இன்றைய உலகத் தேவைகளுக்கும் பயன்படும் கடந்த காலத்திய தமிழர்களின் சிந்தனைத்திறன், புலமை வளம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் தொடரும்.
தமிழ் கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது?
தமிழைக் கற்பித்தல் என்பதில் இரண்டு முறை இருக்கிறது. தாய் மொழியாகத் தமிழைக் கற்பிப்பது ஒன்று. மற்றொன்று பிற மொழியாளர்களுக்குத் தமிழைக் கற்பிப்பது. இந்த இரண்டு முறைகளிலும், கற்பித்தல் என்பது அடிப்படையில் வேறுபாடானது.
இன்றைக்கு ஆங்கில மொழியில் கல்வி கற்கும் சூழலில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கும் போது, தாய் மொழிக்காரர்களுக்குத் தமிழ் என்பதே பிற மொழியாளர்கள் தமிழ் கற்றுக் கொள்வது போல தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அந்தத் தோற்றம் உண்மையில்லை. தமிழ்நாடு என்பது சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களை மட்டுமே கொண்டது அல்ல.கிராமங்களில் தமிழில்தான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தைக் கூட தமிழில்தான் சொல்லித் தருகிறார்கள். இன்னொன்று மற்ற துறைகளைத் தமிழில் கற்றுத்தரும் போது, தாய் மொழியான தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்கனவே சுற்றுச்சூழல் மொழியாகத் தமிழ் மொழியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பங்கள் தெரியும். சாதி, மதம், வட்டம் எனும் எல்லைகளைக் கடந்து தமிழைப் பொது மொழியாக்க வேண்டும். மொழியைக் கற்றுத்தருவது என்பது அந்தந்த வட்டார மொழிக்கு அப்பாற்பட்டு அந்தக் குழந்தைக்குத் தமிழ்நாடு முழுவதும் பேசுகின்ற மொழியைப் புரிந்து கொள்வதற்கான பொது மொழியை, எழுத்து மொழியைக் கற்றுத் தருவது என்பதுதான்.
ஆங்கிலத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்புகிற முறை வந்த பிறகு அந்த மொழிக்காரர்களும் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். தாய்மொழியைக் கற்றுத் தருவதில் உலகம் முழுவதும் இருக்கின்ற பிரச்சனைதான் தமிழுக்கும் இருக்கிறது. இந்தக் கற்பித்தல் முறையில் மரபு வழிப்பட்ட முறையும், நவீன முறையும் இருக்கிறது. நாம் மரபு வழிப்பட்ட முறையில்தான் கற்பித்தலைச் செய்து வருகிறோம். கரும்பலகை என்பது இப்போது வெண்பலகையாகவும் பல்வேறு வண்ணங்களில் முறைகளில் வந்துவிட்டது. ஆகவே இன்றைய அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் இனி கற்பிக்க வேண்டும்.
பொதுவாக மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் காலத்தைக் கடந்தும் நாம் மொழியால் உரையாடமுடியும் என்பதற்காகத்தான். அதே நேரம் எல்லாருக்குமான ஒரே மொழியை உருவாக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. எல்லா மனிதருக்குமான பொருட்களைக் கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் அவை தனி மனிதர்களின் கண்டுபிடிப்புகள். ஆனால் மொழி என்பது சமூகத்தின் கண்டுபிடிப்பு. ஒருவரோடு ஒருவர் உரையாடுவதற்கு உறவாடுவதற்கு அவரவர்கள் மொழி என்பது தடையாக இருக்கக் கூடாது. இதைத்தான் நவீன தொழில்நுட்பம் செய்ய வேண்டும்; செய்து கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு இப்போது மொபைல் டிரான்சிலேட்டர் என்று கைபேசியில் மொழியாக்கம் செய்வதற்கான முறை ஒன்றைப் புதியதாகக் கண்டு பிடித்துள்ளனர். இதில் முப்பத்தைந்து மொழிகள் உள்ளன. தமிழைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறு கின்றன. இந்த மென் பொருளில் இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே இடம் பெறுகிறது. இதில் சீன மொழி இரண்டு பிரிவாக உள்ளது. ஒன்று Traditional Chinese. மற்றொன்று Simple Chinese. இதில் உள்ள திரையில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் எந்த மொழியில் வேண்டுமோ அந்த மொழியில் மொழி பெயர்த்துக் கொடுக்கும். அப்போது அந்த மொழி தெரியாமலே நீங்கள் செயல்படலாம். அதே சமயம் அந்த மொழியில் படிக்கத் தெரியாதவர்களிடம் நீங்கள் உரையாட அதே மொழிபெயர்ப்பை அந்தக் கைபேசி உச்சரிக்கவும் செய்கிறது. இந்த வேலைகளைச் சில வினாடிகளிலே செய்து விடுகிறது. இதனால் மொழிக்கான தடை நீக்கப் படுகிறது. அவரவர்கள் அவர்களுக்கான தாய் மொழியை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். எல்லா மொழிக்காரர்களோடும் உறவாட முடியும். ஒரு மனிதர் நிறைய மொழிகளைக் கற்றிருந்தாலும் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளவும் முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே இந்தப்பயன்பாட்டு முறையில் தமிழ் இடம்பெற வேண்டியது அவசியமாகும்.
இந்த மாதிரி அறிவியல் தொழில் நுட்பங்களால், பிற மொழிகளைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கையை நடத்த முடியும் என்பது உடைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தத் தொழில் நுட்பத்தில் நமது மொழியை எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய்ச் சேர்க்கிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் கற்பித்தலுக்குப் பயன்படும். இப்போது இருக்கின்ற தமிழ் மொழியில் சீர்திருத்தம் தேவையில்லை. ஆயிரக்கணக்கான சித்திர எழுத்துகளைக் கொண்ட சீன எழுத்துகளும், ஜப்பானிய எழுத்துகளும் கணினியிலும், கைபேசியிலும் பயன்படும் போது தமிழ் எழுத்துகளை குறைக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
நம்முடைய பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்துகளைச் சொல்லித் தரும் போது முதலில் ÔஅÕ எழுதுவதற்குக் குழந்தைகளுக்குச் சிரமமாக இருக்கிறது என்று ‘ட’ விலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ‘ட’ வுக்குப் பிறகு ‘ப’. இதற்குப் பிறகு ய, ம என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். தாய் மொழியில் எழுத்துகளைக் கற்றுத் தருவதில் புதிய முறைகளை மேற்கொள்கிறோம் என்று இதைச் செய்து வருகிறார்கள். பெரியவர்களால் என்ன முடியும், என்ன முடியாது என்பதை வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு என்ன முடியும், என்ன முடியாது என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள். பொதுவாக எல்லாக் குழந்தைகளும் நேர்க்கோடு போட்டு எழுதாது. சுழியில் எழுதத் தொடங்கும். மரபுவழிக் கற்றல் முறையிலிருந்து முற்றிலுமாக நம்மால் விடுபட முடியாது. தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் 3 குறியீடுகளைக் கொண்டே எழுத இயலும்.
இந்த 3 குறியீட்டில் 247 எழுத்துகளையும் அடக்கிவிட முடியும். தமிழில் ஒலி எழுத்து வரி எழுத்து என்று இரண்டு முறைகள் உண்டு. இந்த ‘அ’ என்ற எழுத்தின் ஒலி வடிவம் உலகத்தில் உள்ள எல்லா முதல் எழுத்துகளுக்கும் இதே ஒலி வடிவம் இருக்கிறது. 247 வரி எழுத்துகளும் ‘அ’ என்ற எழுத்துக்குள் இருக்கிறது. இந்த எழுத்துகளை மூன்று குறியீடு களாகப் பிரித்துக் கொண்டால் தமிழில் உள்ள 247 வரி எழுத்து களையும் எழுதி விடலாம்.
இதைக் கணினிக்காகச் செய்து பார்த்த போது இப்படிப் புரிந்து கொள்ள முடிந்தது.
புதிய கலைச் சொற்கள் உருவாக்கும் திட்டம் உள்ளதா?
அரசு நிதி உதவிபெற்று இந்தத் திட்டத்தையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. செம்மொழி மாநாட்டின் பொருண்மையில் கூட கலைச்சொல் உருவாக்கம் பற்றி உள்ளது. கலைச்சொற்களை உருவாக்குவதில் நமக்கு உள்ள இடர்ப்பாடு என்பது கலைச் சொற்களை நாம் ஏன் தமிழில் உருவாக்க வேண்டும்? வேறு மொழியில் இருக்கிற சொற்கள் அப்படியே இருந்து விட்டால் என்ன? என்ற விவாதத்தில் இரு சாரார்களும் இருக்கின்றனர் என்பதுதான். அதில் ஒரு சாரார் தமிழ்ப் பற்றினால் சொல்கிறார்கள் என்கின்றனர். அவர்கள் தமிழ்ப் பற்றினால் சொன்னாலும் கூட அதற்கான தேவை என்ன என்று பார்க்கிற போது Bycle என்பதை நாம் மிதிவண்டி என்று சொல்கிற போது, அந்த வார்த்தையின் மூலம் அறிவியலைப் புரிந்து கொள்ள முயற்சிக்க இந்தச் சொல்லாக்கம் பயன்படுகிறது.
நமக்கு மிதி வண்டிக்கு முன்பு வண்டி என்றும் மாட்டு வண்டி என்றும் தெரியும். மிதிப்பதால் மட்டுமே செல்லுகின்ற வண்டி என்பதை வெறும் சொற்களை மாற்றி மொழிப்பற்றினால் மட்டுமே சொல்வதாகப் பொருள் இல்லை. Bycle என்பது எல்லோருக்கும் புரிந்தாலும் கூட அது வெறும் குறியீடாகப் புரியும். உண்மையான அர்த்தத்தில் புரியாது.
கலைச்சொற்களை மொழிபெயர்க்கிறபோது தமிழ்ப்பற்றின் காரணமாக ஒரு சொல்லை உருவாக்கினால் அது மக்களின் பயன்பாட்டிற்குப் போய்ச் சேருவதில் இடர்ப்பாடு இருக்கிறது. மொழி பெயர்க்கிற போது நான்கு விதிகளை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். (1) வினை (2) பயன் (3) மெய் (4) உரு. இப்போது ஒன்றை மொழி பெயர்க்கிற போது அந்த வினை அதாவது வினைத்திறன், செயல்பாட்டை வைத்து மொழி பெயர்த்தால் மக்களுக்குப் போய்ச் சேர்ந்து விடும். இரண்டாவதாக, பயனை வைத்து மொழி பெயர்த்தாலும் மக்களைச் சென்று அடைந்துவிடும். மூன்றாவதாக வடிவத்தையும், நான்காவதாக வண்ணத்தையும் வைத்துச் சொல்லும் போது எளிதில் மக்களிடம் சென்று சேர்ந்து விடும். இதைவிட்டு விட்டுத் தனித்தமிழ்ச் சொற்களை முன்னரே புழக்கத்தில் உள்ள சொற்களிலிருந்து உருவாக்கினால் மக்களிடம் சென்று சேருவதில் இடர்ப்பாடு வராது.
ஆனால் எழுத்துப் பெயர்ப்பாகவே இருந்து விட்டுப் போகட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நம்மிடம் இல்லாத ஒன்று புதியதாக வரும் போது பிறமொழிச் சொற்களைத் தற்காலிகமாகக் கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தக் கடனோடு வாழவேண்டும் என்று நினைப்பதில் நியாயமில்லை.
மெக்கன்சி பற்றிய நூல் உருவாக்கம் பற்றிச் சொல்லுங்கள்?
கர்னல் காலின் மெக்கன்சி என்பவர் 1786-ல் சென்னைக்கு வருகிறார். Surveyor General of Madras Presidency என்பது இவரில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அவருக்கு வேலை என்பது நிலத்தைப் பார்வையிட்டு வரி மதிப்பீடு செய்வது தான். இப்படி அவர் போகிற இடங்களில் எல்லாம் உள்ள கல்வெட்டுகளைப் படி எடுத்தார். ஒலைச் சுவடிகளையும் சேகரித்தார். பின்னாளில் இந்தியா முழுதும் Surveyor General ஆகிறார். இந்திய வரலாற்றில் கல்வெட்டை முதன் முதலில் படி எடுத்தவரும், சுவடியைச் சேகரித்தவரும் இவரே. ஒரு ஊரைப் பற்றி முதலில் ஆய்வு செய்தவரும் இவரே. அதாவது சென்னைக்குப் பக்கத்தில் உள்ள பழவேற்காடு என்ற ஊரைப் பற்றி 1816-ல் ஆவணப்படுத்தி இருக்கிறார். அந்த ஆய்வில் ஊரில் என்ன என்ன சாதியினர் உள்ளனர்? காரை வீடுகள் எவ்வளவு? கூரை வீடுகள் எவ்வளவு? தொழில் என்ன? மீன் பிடிப்பவர்கள் எவ்வளவு பேர்? எந்த எந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கின்றனர்? எந்த எந்தக் காலப் பகுதியில் என்ன என்ன மீன்கள் கிடைக்கும்? பெண்கள் என்ன வேலை செய்கின்றனர் போன்ற தகவல்களைச் சேகரித்து இருக்கிறார். இது போலப் பல துறைகளைப் பற்றி இந்தியா முழுவதும் சென்று தகவல்களைச் சேகரித்தார். இப்படிச் சேகரித்த தகவல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கல்கத்தா ஹ¨க்ளி நதிக்கரைக்குச் சென்று இந்திய வரலாற்றை எழுத எண்ணினார். பின்னாளில் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இன்றும் பல மேலைநாட்டு ஆய்வாளர்கள் இவரின் தகவல்களை அடிப்படையாகக் கொள்கின்றனர். இவர் இறந்த பிறகு அந்தக் குறிப்புகளைஅவர் மனைவியிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனி விலைக்கு வாங்கிக் கொண்டது. அவர் தமிழ்நாட்டைப் பற்றிச் சேகரித்த குறிப்புகள் அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் உள்ளன.
செம்மொழி மாநாடு பற்றி.......
1995 க்குப் பிறகு தமிழ் மாநாடு எதுவும் நடைபெறவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற மாநாடு இது. செம்மொழியாக இந்திய அரசு அறிந்தேற்றதற்குப் பிறகு தமிழக முதலமைச்சர் முன்னின்று நடத்துகிற மாநாடு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். முன்பு நடந்த மாநாடுகளை விட செம்மொழி மாநாட்டிற்குக் கூடுதலாகப் பொறுப்புகளும், கடமைகளும் இருப்பதாக உணர்கிறேன்.
அரசியல் மற்றும் மற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால் ஒரு அறிவியல் மனப்பான்மையுடைய எந்த அறிஞனும் உலகின் தொன்மையான மனிதகுலத்தின் மனப்புள்ளியைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறபோது அதற்குத் தேவைப்படுகிற மொழியும் இலக்கியமும் தமிழாகத்தான் இருக்க முடியும். அதனால் செம்மொழி மாநாடு நடத்த வேண்டியிருக்கிறது. ஆகவே இதைத் தமிழ் மீது, தமிழன் மீது ஆர்வத்தால், பற்றின் காரணமாகச் சொல்லவில்லை. உலகமக்களிடம் நமக்கு இருக்கிற அக்கறையும் இன்றைய நெருக்கடிகளுக்குக் காண வேண்டிய தீர்வுகளை நாம் கண்டறிவதற்கும் செம்மொழி மாநாடு தேவைப்படுகிறது என்பதாக நான் உணருகிறேன்.
இன்றைக்கு உலகமயச் சூழலில் வெறுமனே தமிழ் மொழியை மானுடவியல் ஆய்விற்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்கிற வெளி நாட்டவர்களை மட்டும் அழைத்துக் கொள்ளுகிற மாநாடாக இல்லாமல், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களையும், அவர்களுடைய உணர்வுகளையும், அவர்களின் தேவைகளையும் செயற்படுத்த வழிவகை காணக் கூடிய மாநாடாகவும் இது அமையும்.
இந்த மாநாட்டில் பிற நாடுகளில் தமிழ்ப் படைப் பிலக்கியம், பிற நாடுகளில் தமிழர்கள் என்பது பற்றி யெல்லாம், ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட இருக்கின்றன. இன்றைய நெருக்கடிமிக்க உலக வாழ்க்கைச் சூழலுக்குத் தமிழர்கள் ஏதேனும் தீர்வு சொல்ல முடியுமா என்று யோசிப்பதுதான் இது. உலகம் முழுவதும் உள்ள நெருக்கடிக்குத் தமிழ் என்ன சொல்லிவிட முடியும் என்ற பார்வை இருந்தது. பொதுவாக மனிதர்கள் பல்வேறுவிதமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களின் வாழ்வியல் மதிப்பீடு வேறு விதமாய் இருக்கிறது. அப்போது மதிப்பீடுகளை வைத்து, மனதைப் பார்க்க வேண்டியிருக் கிறது. அந்த மனதின் ஆழ்மனப் புள்ளியைக் கண்டறிந்து சரி செய்வதற்கு இலக்கியத்தை விட்டால் வேறு வழி இல்லை. ஆனால் இன்றைய இலக்கியம் இன்றைய மனப்புள்ளியைத் தான் சொல்லும். ஆரம்பக் கால இலக்கியங்களே ஆரம்பக்கால மனப்புள்ளியைச் சொல்லும். அந்த மனப்புள்ளியின் அடிப்படையில் நோயின் மூலத்தை சரி செய்வதற்கும் சங்க இலக்கியங்களே ஆதாரம். இதற்குச் செம்மொழி மாநாடு தேவை என்று தமிழக முதல்வர் அவர்கள் எண்ணியிருக்கலாமென்று கருதுகிறேன்.
இந்த மாநாடு பற்றி நவீன படைப்பாளிகளிடம் ஐயப்பாடும் ஈர்ப்பின்மையும் இருக்கிறதே?
கடந்த கால மாநாட்டு அனுபவங்கள் இந்த மாதிரிக் கண்ணோட்டத்தை அவர்களுக்குத் தந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இதுவரை நடந்த மாநாட்டில் நவீன படைப்பாளிகள் ஈர்ப்புக்காட்டியது உண்டா? என்ற வரலாற்றையும் பார்க்க வேண்டும். அப்படி இந்த மாநாட்டையும் நினைப்பது முன் முடிவாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இந்த மாநாட்டில் மாறிய பாலினமான திருநங்கைகள் பற்றி, தலித்தியம், சிறுபத்திரிகைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. மற்றவர்கள் நவீனத்திற்குப் போவது என்பது வேறு. நாம் நவீனத்திற்குப் போவது என்பது தொன்மையின் தொடர்ச்சியாகத்தான் போக முடியும். தொன்மையில்லாமல் நவீனத்திற்கு நம்மால் நகர முடியாது. ஏனெனில் நமக்குத் தொன்மை இருக்கிறது. இந்த மாநாட்டின் செயல்பாடுகள் அல்லது நடைபெறக்கூடிய ஆய்வுகள் தான் அவர்களை இணக்கமாக ஆக்க முடியும் என நினைக்கிறேன். படைப்புத்திறனும் பல்துறைசார்ந்த பட்டறிவும் கல்வித் தகுதியால் மட்டும் கைவரப்பெறுவதில்லை என்பதால் எந்த மாநாட்டிலும் இல்லாதபடி இந்த மாநாட்டுப் பங்கேற்புப் படிவத்தில் கல்வித்தகுதி கேட்கப்படவில்லை. படைப்புகள் குறித்து விவாதிக்கத் தனி அரங்கமும் இருக்கிறது. வேறு எந்த வகையில் அவர்களை ஈர்க்க முடியும்? யோசிப்போம்.
நீர்த்துப்போன சமூகத்தின் அந்தரங்க அபாயத்திலிருந்து தெறித்து விழுந்த மதுத்துளிகள்!