நாடறிந்த எழுத்தாளர், திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் அவர்களுக்கு 30.03.2010 அன்று 86 ஆம் அகவை தொடங்குகிறது. 85 அகவை நிறைவடைகிறது. அவர் பிறந்த நாள் 30.03.1925

திருநெல்வேலி புத்தா பண்பாட்டு மையமும் சித்திர சபையும் இணைந்து தி.க.சி யின் 86ஆவது பிறந்த நாள் விழாவைத் திருநெல்வேலியில் 21.03.2010 அன்று நடத்தின. எழுத்தாளர் ச. செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் ப. செயப்பிரகாசம், பேராசிரியர் தொ. பரமசிவன், கவிஞர் கலாப்பிரியா, பேராசிரியர் ‘மேலும்’ சிவசு, ‘யுகமாயினி’ ஆசிரியர் சித்தன், கவிஞர் மதுமிதா உள்ளிட்ட பலர் தி.க.சி. யின் எழுத்துப் பணியையும், மக்கள் பணியையும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி வளர்த்த செய்திகளையும், அவரது மார்க்சிய ஊற்றத்தையும், தமிழ்த் தேசியப் பற்றையும் வியந்து பாராட்டினர். படைப்பாளிகளின் படைப்பாளி என்று கூறினர்.

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தி.க.சி. பெயரால் அறக்கட்டளை ஏற்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய தி.க.சி பின்வரும் கருத்துகளை வலியுறுத்தினார்.

எழுத்தாளர்கள் ஆணவம், மேட்டுக் குடித்தனம், குறுங்குழுவாதம் ஆகிய நோய்களால் பாதிக்கப்படக்கூடாது. அந்நோய்களிலிருந்து விடுபட்டவர் வல்லிக்கண்ணன். தமிழக அறிவு சீவிகளிடம் இம்மூன்று குணங்களும் இருந்து கொண்டு பிறரை வதைக்கின்றன.

தமிழ்ச் சமூகம் அடிப்படையான மாற்றம் காண வேண்டும். இன்றைய ஊடகங்கள் உண்மைகளைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச் சலவை செய்கின்றன.

உலகச் செம்மொழி மாநாடு தமிழை வாழ வைக்கவா, தற்பெருமையைப் பறைசாற்றவா என்ற கேள்வி உள்ளது. தமிழை வாழவைக்க மாநாடு நடத்துவதாக இருந்தால் அனைத்துக் கல்வியும் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டுதான் அளிக்கப்படும் என்று சட்டமியற்ற வேண்டும் என்றார் தி.க.சி.

தோழர் தி.க.சி. அவர்களுக்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-தி.க.சி. கேள்வி

Pin It