அய்.அய்.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களால் திணிக்கப்படும் ஜாதிப் பாகுபாடுகளால் பட்டியலின பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மனத்துயரத்திற்கு உள்ளாகிறார்கள். அது தற்கொலைகளில் முடிகிறது. நிறுவனத்தின் கல்விச் சூழலே மாணவர்களைப் புறக்கணித்து அவமதிப்பதாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வுக்குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இதுகுறித்து இந்து ஆங்கில நாளேடு நவம்பர், 16,2026 அன்று வெளியிட்ட கட்டுரை...

மும்பையில் மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜாதியப் பாகுபாடு சம்பவம், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.இத்தகைய சம்பவங்களை ஒரு மாணவரின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது, ஜாதியப் பாகுபாடு எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதையும், மாணவர்களின் மனஉளைச்சலுக்குக் காரணமாக அமையும் ஆதரவற்ற கல்விச் சூழலின் பங்கையும் மறைத்து விடக்கூடும்.the hindu articleமாணவர்களின் தற்கொலைகள் உடனடியாகத் தெரியக்கூடிய சம்பவங்களைத் தாண்டியும் கவலைகளை எழுப்புகின்றன என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், 2025ஆம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மனநல ஆதரவுக்காக நடைமுறையில் உள்ள அமைப்புகளை ஆய்வு செய்ய தேசியப் பணிக்குழு (NTF) ஒன்றை அமைத்தது. தேசியப் பணிக்குழு நடத்திய ஆய்வுகள், உயர்கல்வி நிறுவனங்களில் நுட்பமான பல்வேறு வடிவங்களில் ஜாதியப் பாகுபாடு தொடர்ந்து நிலவுவதை வெளிப்படுத்துகின்றன.

அந்த அறிக்கையில், வாய்மொழித் தேர்வுகளில் பாகுபாடு காட்டுதல், இடஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களை அவமதித்தல், இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை அணுகுவதில் தடைகளை ஏற்படுத்துதல், ஜாதியப் பாகுபாடு குறித்து கேள்வி எழுப்புபவர்களைத் துன்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஜாதி, வர்க்கம், பாலினம் மற்றும் பிற வகையான பாகுபாடுகள் குறித்துப் பாதுகாப்பாக விவாதிப்பதற்கான இடங்கள் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதையும் தேசியப் பணிக்குழு கண்டறிந்துள்ளது. முறையான புகார் தீர்வு அமைப்புகள் இருந்த இடங்களில்கூட, அவை குறித்த விழிப்புணர்வும் அவற்றின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தன.

 அதிகாரமற்ற சமத்துவ மையம்

தேசியப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கை, பல கல்வி வளாகங்களில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாக சம வாய்ப்பு மையம் (Equal Opportunity Cell - EOC) இருப்பதாகக் குறிப்பிடுகிறது. தேசியப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின்படி, மொத்தம் 1,456 உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 1,264 நிறுவனங்கள் (87%) சம வாய்ப்பு மையத்தை (EOC) அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இருப்பினும், அவை பெயரளவில் இருப்பது மட்டுமே, திறம்படச் செயல்படுகின்றன என்பதற்கு உத்தரவாதமாகாது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் 2012ஆம் ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளின் கீழ் மொத்தம் 2,473 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 2,430 புகார்கள் தீர்க்கப்பட்டதாகவும், 43 புகார்கள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, 10 மாநிலங்கள் எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 25 மாநிலங்கள் நிலுவையில் புகார்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளன.

முறையான ஜாதியப் பாகுபாட்டுப் புகார்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம், குறைகள் இல்லாதது அல்ல. நிர்வாக ரீதியிலான பழிவாங்கல், கல்வி ரீதியிலான குறிவைத்தல் அல்லது தங்களுடைய கல்வி எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் மாணவர்கள் புகார் அளிக்கத் தயங்குவதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தக் கவலைகளுக்கு மேலும் ஆதாரமாக, தேசியப் பணிக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்விக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அமைகிறது.பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 உயர்கல்வி நிறுவனங்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது. அன்றாடக் கல்வி வளாகச் செயல்பாடுகளே எவ்வாறு ஜாதிய அடிப்படையிலான விலக்கல்களை மீண்டும் மீண்டும் உருவாக்குகின்றன என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்காக நடத்தப்படும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள், 'SC/ST மாணவர்களுக்கு மட்டுமானவை' என்ற பெயரில் அடையாளப் படுத்தப்படுகின்றன. அவர்களின் கல்வித் திறன் குறித்த முன்முடிவுகளும், அவர்களைப் பகிரங்கமாக 'இடஒதுக்கீட்டுப் பிரிவினர்' என்று அடையாளப்படுத்தும் நடைமுறையும், வளாகங்களில் ஜாதிய இழிவையும் ஒதுக்கலையும் மேலும் வலுப்படுத்துகின்றன. தொடர்ச்சியாக விசாரணைக் குழுக்களும் ஆணையங்களும் அமைக்கப்பட்ட போதிலும், ஜாதியப் பாகுபாடு குறித்த புகார்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தோரட் குழு (Thorat Committee), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குக் கற்பித்தல், மதிப்பீடு, ஆசிரியர்களுடனான தொடர்புகள், விடுதி வாழ்க்கை மற்றும் வளாகச் செயல்பாடுகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியது.

சுமார் 69 விழுக்காட்டினர் ஆசிரியர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அதேபோல், சுமார் 72 விழுக்காட்டினர் கற்பித்தல் வகுப்புகளின்போது ஏதோ ஒரு வகையான பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறினர். சுமார் 88 விழுக்காட்டினர் சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சம வாய்ப்பு மய்யங்கள் மற்றும் பட்டியல் ஜாதி / பழங்குடியினர் பிரிவு மையங்களை (SC/ST Cells) அமைப்பதற்கும், ஜாதியப் பாகுபாட்டிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் வழிவகுத்த 2012ஆம் ஆண்டின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்தது.

இந்த விதிமுறைகளுக்குப் பதிலாக, 2026 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகளைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புகார்களைக் கையாள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் இந்தப் புதிய விதிமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. (பாகுபாடு என்பது தலித் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் குறிக்கும் என்று மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்தது. பார்ப்பன உயர்ஜாதி மாணவர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்ப்புக்குப் பணிந்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரியது), உச்ச நீதிமன்றம் 2026ஆம் ஆண்டின் விதிமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

புகார்களுக்குத் தீர்வு காண்பதில் உள்ள குறைபாடுகளைத் தாண்டி, மனநல ஆதரவு வழங்குவதிலும் பல்வேறு குறைபாடுகள் நீடிக்கின்றன. தேசியப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையின்படி, தனது ஆய்வுக்குப் பதிலளித்த 2,119 உயர்கல்வி நிறுவனங்களில் 65 விழுக்காடு நிறுவனங்கள் மனநலச் சேவை வழங்குநர்களை அணுகுவதற்கான வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தவில்லை.மேலும், 73 விழுக்காடு நிறுவனங்களில் முழுநேர மனநலச் சேவை வழங்குநர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் முறையான நடைமுறைகள் இருப்பதால் மட்டுமே அவை தானாகவே அனைவருக்கும் சமமான இடங்களாக மாறிவிடுவதில்லை.

அந்த நடைமுறைகள் எவ்வளவு பாரபட்சமின்றியும் திறம்படவும் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும், பழிவாங்கப்படுவோம் என்ற அச்சமின்றி மாணவர்கள் அவற்றை அணுக முடியுமா என்பதையும் பொறுத்தே அவற்றின் நியாயத்தன்மை அமைகிறது. கல்வி ரீதியிலான அழுத்தம், ஜாதியப் பாகுபாடு, போதிய மனநல ஆதரவு இல்லாமை மற்றும் திறனற்ற புகார் தீர்வு அமைப்புகள் ஆகியவை ஒன்றுக்கொன்று வலுசேர்த்து, பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்கு உதவியை நாடுவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைத்து விடுகின்றன.

- சஃபிரா ஹுசைன் & சஞ்சய் குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.