ஆதாயம் தரும் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாதென்று அமளிதுமளியாகிக் கொண்டிருக்கின்றன மக்கள் மன்றங்கள். எம்.பி, எம்.எல்.ஏ மட்டுமல்ல ஊராட்சி மன்ற உறுப்பினராக ஒருவர் ஆகிவிட்டால் கூட அந்த பதவியே அவருக்கு சகல ஆதாயங்களையும் கொண்டு வந்து குமிக்கிற குபேர முத்திரையாகி விடுகிறது. ஒற்றைப் பதவியாலேயே ஊரை அடித்து உலையில் போடுவதாக சீரழிந்து கொண்டிருக்கிறது பொதுவாழ்க்கை. இதில் ஊதியத்தை தங்கள் கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி நிர்ணயித்த முழுநேர ஊழியர்களுக்கான படியை மட்டுமே பெறுகின்ற இடதுசாரிகள் விதிவிலக்கு.
பந்தலுக்குள் நுழையும்முன் மூக்குமுட்ட காலை ஆகாரத்தை விழுங்கிவிட்டு, மதிய உணவை மட்டும் ‘தியாகம்’ செய்து மாலை ஐந்து மணிக்கு ஆபிஸ் வேலை போல் முடிந்து போகின்றன உண்ணாவிரதங்கள். வெள்ளையாட்சியையே உலுக்கிப் பார்த்த உண்ணாநோன்பு என்னும் மகத்தான அகிம்சைப் போராட்டம் இன்று இந்திய ஆட்சியாளர்களின் உதாசீனத்தால் தீனப்பட்டுவிட்டது. இதில் யாருடைய மனசாட்சியையும் நியாய உணர்வையும் தட்டியெழுப்ப இப்படி காலவரையற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார் மேதா பட்கர்? நர்மதையாற்றின் தீரத்தில் ஓடி விளையாடிய அதன் புதல்வர்களை அதற்குள்ளேயே ஜலசமாதியாக்கி எந்த மக்களுக்கு சுபிட்சத்தை வழங்கப் போகிறார்கள்? ‘வளர்ச்சி’ என்கிற முக்காட்டுக்குப் பின்னால் எளிய மக்களின் உயிர் குடிக்கும் சுயரூபம் மறைந்து கிடக்கிறது. போதும் மேதா அவர்களே, இன்னும் எத்தனை நாளைக்கு நம்மையே வருத்திக் கொள்ளும் போராட்டங்கள்....
கத்தி கபடா ஆயுதங்களோடு இருளைப் போர்த்திக் கொண்டு மட்டுமே எப்போதும் கொள்ளையர்கள் வருவார்கள் என்று கருத வேண்டியதில்லை. இதோ புஷ்ஷை பாருங்கள், அவர் எப்படி தடபுடலாக வந்து போயிருக்கிறார்? பேச்சில், நடையுடை பாவனையில் அவர் குடித்த ரத்தமோ பெட்ரோலோ ஒருதுளியாவது சிந்தியதா... ஒரு கனவானுக்குரிய தோற்றத்தோடு என்னவொரு கம்பீரமாக அமைந்தது அவர் வந்ததும் போனதும். எல்லா கனவான்களும் அப்படித்தான் இருப்பார்கள் போலும். நாம் எளிய மனிதர்கள். கனவான்களுக்கு கருத்தாலும் உணர்வாலும் எதிரானவர்கள் என்பதை நிரூபிக்க இப்படி தலையங்கம் எழுதுவது போதாது. வேறென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. அபாயத்தை முன்னறிவிப்பதாய் இருக்கிறது எஸ்.வி.ஆர் கட்டுரை.
புதுவிசை தொடங்கியதிலிருந்து அதனொரு பகுதியாய் எங்களோடிருந்து செயல்பட்ட அன்புத்தோழன் இரா.விநாயகம் இனி வெறும் நினைவுகளாக மட்டுமே இருப்பார் என்பது பெருந்துயரம். தன் பணியிடத்தில் புதுவிசையின் அறுபது பிரதிகளுக்கான வாசகர்களை கண்டறிந்தவர். அவருக்கு எமது அஞ்சலி என்கிற வார்த்தைகள் எதையும் எங்களுக்கு மீட்டுத் தரப்போவதில்லை. வெறுமையை நிரப்புகிறோம் அவரது நினைவுகளால்.
- ஆசிரியர் குழு