karakattam tamilஎப்படியோ முதல் நாள் ஆட்டம் ஒரு வழியாக முடிந்தது. ஆட்டம் போட்ட களைப்பில் அரசு பள்ளிக்கூட அறையில் படுத்திருந்தாள் செல்வி. ஆட்டக்காரர்கள், தெருகூத்து ஆடும் சபாவினர், நாடகக் குழுவினர் எனத் திருவிழாவிற்கு யார் ஆட வந்தாலும் பள்ளியின் கழிப்பறைக்கு ஓரமாக உள்ள வகுப்பறையில் ஏதாவது ஒரு பிரிவில் தங்க வைப்பார்கள்.

அன்றைய பகல் பொழுது முழுவதும் செல்விக்கு ஒரே உடம்பு வலி. முதல் நாள் ஒவ்வொரு முக்கிலும் ஆட்டம் பலமாக ஆட வேண்டியிருந்தது. தெரு விளக்கொளியிலும் அவர்கள் பூசியுள்ள பவுடர்களின் ஜொலி ஜொலிப்பும் நல்ல ஈர்ப்பினை தந்தது. இரண்டு நாட்கள் ஆட்டத்திற்காகப் புதுச்சேரியைச் சார்ந்த ஏம்பலம் கிராமத்தில் தங்கியிருந்தார்கள், "மேனகா கரகாட்டக்குழு".

இரவுகள் என்றாலே வெறுப்பாய் இருந்தது செல்விக்கு, ஆட்டத்தில் அவள் இடுப்பு சதைகளை சில நேரம் பின் புறமாகத் திருகிவிடும் களவாணிகளை அவள் வேதனையைத் தாண்டி ஆசையோடு முறைப்பாள். அவள் தங்கியிருந்த அரசுப் பள்ளியில் அவளைப் பார்ப்பதற்கு நிறைய இளைஞர்கள் கூட்டமாக வந்து, அவர்கள் தங்கியிருக்கும் வகுப்பறையை எட்டிப் பார்த்தார்கள்.

விக்கிரவாண்டி கிராமத்திலிருந்து வந்ததாகக் குழுவில் பேசிக் கொண்டார்கள். அதில் செல்வியும் வந்திருந்தாள். அவளுடைய தந்தை திருவிழாக்களில் கூத்து ஆடும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அந்தப் பகுதி முழுவதும் வானம் பார்த்த விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கண்களின் பார்வை தெரியும் வரை பொட்டல் காடுகளாய் காட்சிதான் மிஞ்சும். புற்கள் எந்த நேரமும் சோர்ந்து போயிருந்தது. தண்ணீர் வேண்டி தாகமாய் நின்று தவிப்பது போலவே வெயிலைத் தாங்கி நிற்கும் நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது மானாவாரி பயிர்கள்.

இந்த நிலையிலும் நம்பிக்கையாக விவசாயி ஒருவனின் காய்ந்து போன நிலத்தில் சோளக் கொல்லை பொம்மை மட்டும் தனியாக நிற்பதைச் சொல்லி, ஆதங்கப்பட்டுப் போனாள் செல்வி.

தன் தோழியான மேனகாவோடு, தன் துன்பங்களைச் சொல்லி அழுதாள். இருவரும் சாதாரணச் சேலை தான் உடுத்தி இருந்தார்கள். எங்கள் தெருவில் மல்லிகைப் பூக்கள் வரும் பொழுது ஆவலாக வாங்கிச்சென்று வாசம் பிடித்துக் கொள்வார்கள். குடிக்கத் தண்ணீர் கொஞ்சம் குழாயில் வரும், கூலி வேலையை நம்பி வாழ முடியாது,வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பஞ்சம் பிழைக்க வெளியில் செல்வதுதான் வழி,எங்களுக்கென்று நிலபுலங்கள் எதுவும் கிடையாது.

கூத்து ஆடும் நேரம் போக அப்பா மாரி, சமையல் தொழிலுக்கும் செல்வது வழக்கமாயிருந்தது, அங்கிருந்து அவர் கொண்டு வரும் மிச்ச உணவு பண்டங்களுக்காகக் காத்திருந்த அவள் பால்ய பருவத்தின் நினைப்புகளில் மிதந்துபோனாள்.

அதிலும் அவர் எடுத்து வரும் லட்டு உருண்டைக்காக அவள் நண்பர்களோடு பந்தயம் கட்டி ,கடையில் மிட்டாய் வாங்கி தின்பாள். அவர் வாங்கி வரும் கூலிப் பணத்திலும்,விழாக்களிலிருந்து எடுத்து வரும் தின்பண்டங்களில் தான் அவள் குடும்பம் நகர்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள் செல்வி.

எங்கப்பா திருவிழாக்களுக்குக் கூத்தாடச் செல்லும்பொழுது ஆட்டக் கரகத்தின் வாத்தியார் காந்தியோடு பழக்க வழக்கம் ஏற்பட்டது. வாத்தியாரிடம் தன் குடும்பச் சுமைகளைச் சொல்லி உங்கள் குழுவில் ஆடுவதற்கு வாய்ப்பு வாங்கி சேர்த்துவிட்டார்.

மேனாகா,"உங்க அப்பா காந்திக்கு என்னைக்கும் பக்க பலமா ஆடுவேன்" என்று மேனகாவிடம், கண்ணீரோடு சொன்னாள் செல்வி. ஏதோ சொல்ல வேண்டும் போல் தோன்றியது, அதனால் தான் சொன்னேன் என்றாள். “விடு செல்வி எல்லாம் சரியாகப்போய்விடும்” என்று ஆறுதல் சொன்னாள் மேனகா. பழைய கதைகளை இருவரும் பேசிக் கொண்டேயிருக்கும் பொழுது ஜன்னல் வழியாக அதிகமானது ஆண்கள் கூட்டம். நின்று பார்க்கும் கூட்டத்தைப் பார்த்து மேகனா, "ஏன்டா நீங்க எங்கள அப்படியும் இப்படியும் பார்க்கனும்னா, நைட்க்கு ஆடற இடத்து வாங்க, இப்ப கொஞ்சம் நகருங்கடா, மூஞ்சி கழுவக் கூட விடமாட்டானுங்க போல” என்று கோபமாகக் கத்தி நகரச் சொன்னாள்.

இப்படி சொன்னவுடன் இதற்காகவே காத்திருந்தவர்களைப் போல அனைவரும் பல் இளித்தார்கள். இருந்தாலும் அவர்களை விரட்ட மேனகா எழுந்தவுடன், அவள் ஒய்யார நடையைப் பார்த்தும், பின்பக்க அசைவுகளையும் அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்தும் நின்றது இளைஞர் கூட்டம். அன்று இறுதித் திருவிழா, இரண்டாவது நாள் வெகு விமர்சையாக வான வேடிக்கையுடன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கின, வாசலில் தண்ணீர் தெளித்து மண்வாசனை மாலை வேளையின் இருளை மனம் கொள்ளச் செய்தது. சில பெண்கள் வெள்ளை கோலமாவில் கோலமிட்டனர். சில பெண்கள் தெருக்களில் பேசிக் கொண்டே பூக்களைக் கட்டிக் கொண்டும் இரவு வரும் சுவாமி ஊர்வலத்திற்குத் தேங்காய் உரித்தும் கொண்டும் இருந்தார்கள்.

கோவிலுக்கும் வீட்டிற்கும், குடும்பம் குடும்பங்களாகவும்,நணபர்களுடனும் அனைவரும் புத்தாடை உடுத்தி கையில் தாம்பூலத்தட்டுடன் சென்ற வண்ணமும், வந்த வண்ணமும் இருந்தனர். அன்று ஒரே வண்ணமயமாக இருந்தது தெருக்கள் முழுவதும்.

இவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இன்னும் அதிகமானது. கிராமத்தில் திருவிழா ஏற்பாடுகளைச் செய்யும் முக்கியஸ்தர்களிடம், தன்னோடு ஆடும் ஆண் ஆட்டக்காரர்கள் மூலமாகப் பேசி இந்தக் கூட்டத்தைக் கொஞ்சம் கலைத்துவிடுங்கப்பா, என்றாள் மேனகா. முக்கியஸ்தர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கரகாட்ட பெண்களைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தனர்.

எப்படியோ தொலையட்டும், என்று அரை ஜான் வயிற்றுக்கு வயிற்றைத் தெரியும் படி உடை மாற்ற ஆயத்தமானார்கள். ஒரு ஜன்னலுக்கும் மற்றொரு ஜன்னலுக்கும் இடையே கட்டிவைத்திருந்த துணி மாராப்புகளுக்கிடையே தன் துணிகளை மாற்றிக் கொண்டனர்.

முட்டிக்கால் வரை கால் பாவாடை,சலங்கை ,மார்பு பாதி தெரியுமாறு ரவிக்கை, வளையல்கள் என எடுத்து மாட்டினார்கள். அவர்களின் கவர்ச்சியைக் கூட்ட மேலும் முகத்திற்கு சில வர்ண சாமன்களைப் பூசி கண்ணுக்கு மை இட்டுக் கொண்டார்கள்.

ஜிகினாவை தொப்புளைச் சுற்றி ஒட்டிவிட்டதும் கவர்ச்சி தூக்கலானது . பின் புட்டத்தைத் தொட்டுப் பார்த்து, கீழே உட்கார்ந்து பார்த்தார்கள். உள்ளாடையைச் சரி செய்து கொண்டார்கள். முக்கியஸ்தர்கள் இரண்டு பேர், “யாரு அங்கே போங்கபா” என்று வெறும் குரலைக் கூப்பிட்டுக் கொண்டே, அந்த ஜன்னல் அருகில் செல்வதும், அந்த ஜன்னலுக்குள் பார்வையைச் செலுத்துமாய் இருந்ததைக் கண்ட மேனகா, “அவனுங்களே பரவாயில்லை, இவனுங்களா முக்கியஸ்தர்கள்” என்று முணு முணுத்தாள்.

இரண்டாவது நாள் ஆட்டம் பத்துமணிக்கு ஆரம்பமானது. இவர்களைப் பார்ப்பதற்கு என்று சுற்றுப் பட்டிலிருந்த கிராமத்திலிருந்தும் கூட்டம் அதிகமாய் வந்திருந்தது. பாட்டுக் கச்சேரிக்குக் கூட அவள் கூட்டம் வந்ததில்லை. இவளுங்கள பார்க்க இவ்வளவு கூட்டம், என்று ஒருவன் பேசிக் கொண்டிருந்தது பெருமையாய் இருந்தது, செல்வி மற்றும் மேனகாவிற்கு. முதல் நாள் அமர்க்களத்தைத் தந்ததால், இன்றைய இரண்டாவது நாள் இரவு கலை கட்டியது.

ஆட்டக் கரகத்தை மேனகாவும், செல்வியும், தொட்டு வணங்கினார்கள். இந்த கரக வழிபாட்டில் நம் முன்னோர்கள் நெல்மணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்தார்கள். நெல்லுக்கு மரியாதை செய்யும் விதமாகக் காலம் காலமாக இந்த ஆட்டத்தின் மூலம் ஆட்டக் கரகம் நிலைத்துத் தொடர்ந்தது.

அவர்களின் ஊரில் ஒரு போகம் தான் விவசாயம் என்றாலும் நெல் மணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆட்டக்காரர்கள் இவ்வாறு முன்னோர்களின் வழியைப் பின்பற்றுவது ஆச்சரியமாக இருந்தது. கரகத்தைத் திறந்து நெல் மணிகளைத் தொட்டு வணங்கி விட்டு மூடி வைத்தார்கள்.

மார்பையும் இடுப்பையும் மறைக்கப் பூப்போட்ட துண்டு ஒன்றைப் போட்டு முன் உடலை மூடியிருந்தார்கள. பின் பகுதியில் எந்த மறைப்பும் இல்லாமல் பாதி இடுப்பு மற்றும் பின் தொடைகள் அப்படியே தெரிந்தது. இதை அப்படியே பார்த்து நின்று கொண்டிருந்தான் சிங்காரம்.

நையாண்டி வாத்தியம் இசைக்கத் தொடங்கிய உடன் அவர்கள் மேல் போடப்பட்டிருந்த துண்டு விலக்கப்பட்டது, அனைவர் கண்களில் ஏதோ ஒரு வியப்பும் கருணையற்ற பார்வையும் பாய்ந்தோடியது. விசில் பறந்தது. அந்த கணம் தனக்கான கனவுகளைத் தாண்டி செல்வியும், மேனகாவும், தங்களை சினிமா நட்சத்திரங்களைப் போன்று நினைத்துக் கொண்டார்கள்.

சுற்றி நின்றிருந்தவர்களின் விசில் சப்தமும் ஆரவாரங்களும் அப்படித்தான் இருந்தது. ஏறத்தாழ இரண்டும் ஒன்றுதான். சினிமா பிரபலங்கள் திரையில் தோன்றுகிறார்கள். இவர்கள் நிஜமாகவே எந்தவித இயக்குநர்களின் வாயால், கட் சொல்லாமல் முழுவதுமாக ஐந்து நிமிட பாட்டிற்கு வியர்வையோடு ஆடுகிறார்கள்.

செல்வி ஒவ்வொரு முறை ஆடும் போதும் அவள் வயிற்றுக்காத்தான் ஆடுகிறோம், என்கிற வேதனையில் ஆடுவாள். எப்பொழுதுமே கிராம மக்கள் இவர்களின் பின் புலங்களை நினைப்பது இல்லை. அவர்கள் உடலை வைத்தே அவர்களைத் தீர்மானித்தார்கள். அவளைப் பொறுத்த வரை இது அவளுக்குச் சோறுபோடும் கலை. மக்களைப் பொறுத்த வரை இது அரை நிர்வாணத்தை ரசிக்கும் பொழுதுபோக்கு.

என்ன!.. பெண்களின் சில அரை நிர்வாணங்களை நேரில் பார்த்து அங்குள்ள இளைஞர்களுக்குப் பாலினம் சார்ந்த தூண்டுதலைத் தருகிறது அவர்களுடைய உடலமைப்பில் வெளிக்காட்டும் பகுதிகள். செல்வியின் உடலமைப்பின் இளமை தோற்றத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு வித விஷத்தன்மையை ஏற்றுவதாகத்தான் இருந்தது. இது மரபு ரீதியாக வரக்கூடியதாக இருந்தது. செல்வியின் அப்பா வாத்தியாருக்கு ஏற்ற உருவமும் குரலும் இருந்தது அவளிடம்.

குடி போதையில் கூட்டத்திலிருந்த சிங்காரம், நையாண்டி செட்டுகளோடு ஆட ஆரம்பித்தான். "தினக்கு, தினக்கு, தினக்குதின்னா…" என்கிற இசைக்கேற்ப சிங்காரம் ஆட்டக்காரிகளின் முன்னால் ஓடி, ஓடி ஆடினான்.

இது போன்ற இடை ஆட்டம் பிடிக்க வில்லையென்றாலும் ஆடித்தான் ஆக வேண்டும். செல்வியும், மேனகாவும் அவனோடு முன்னும் பின்னும் ஆடினார்கள். மற்ற இளைஞர்களும் அவர்களை உரச எண்ணி நெருங்கி நெருங்கிச் சுற்றி வளைத்தனர். அந்தக் குழுவில் ஆடிக் கொண்டிருந்த மணி தன் சாட்டையால் ஆடிக் கொண்டிருக்கும் இடத்தை சுற்றிச் சுற்றி அடித்துக் கொண்டே ஓடி வந்து ஆட்டக்காரிகளின் அருகில் வரும் கூட்டத்தை நகைச்சுவையாகக் கலைத்தான்.

அதே சாட்டையால் சிங்காரத்தை ஓங்கி ஒரு அடி அடித்தவுடன் சிங்காரம் ஆட்டகாரிகளை விட்டு ஓடினான். இது போன்ற உரசல்கள், பாலியல் வன்புணர்வு முயற்சி, கொடூர பார்வைகளை அவர்கள் உடல் பார்த்துப் பழகிவிட்டதால் அவர்கள் அடுத்தடுத்த பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார்கள்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் அரைமணி நேரம் கூடுதலாக ஆடவேண்டும். சிலர் பத்து ரூபாய் நோட்டுகள் சிலவற்றை மாற்றி வைத்துக் கொண்டு ஆட்டக்காரிகள் அருகில் சென்று, ஆட்டக்காரிகளின் முன்பகுதியான மார்பில் சொருக வரும்பொழுது, இதெல்லாம் பழைய மாதிரி பழக்கவழக்கங்கள் “ கையில் கொடுங்க” என்று வாத்தியார் வாங்கிக் கொள்வார், வாத்தியார் வயதானவர் என்பதால் அனைவருக்கும் சற்று இரக்கம் இருக்கத்தானே செய்யும், அவர்கள் கைகளில் எந்த ஆட்டக்காரி பிடிக்கிறதோ அவர்கள் பெயரைச் சொல்லிக் கொடுப்பது வழக்கம். நிறைய இளைஞர்களும் கிராமத்து ஆட்களும் செல்வி பெயரை அதிகம் முறை உச்சரித்தார்கள்.

இருந்தாலும் ஆட்டுக்காரிகளைப் பார்த்த பின்பு இந்த இரக்கம் குறைந்து போகும். ஆட்டம் முடித்த பின்பு அந்தக் குழுவில் உள்ளவர்கள் வரும் சில்லறைகளைப் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படியாக ஆட்டம் சென்று கொண்டிருந்த போது ,ஆட்டத்திற்கு முன்னால் சாமி சோடிக்கப்பட்ட வண்டி சென்றுகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு மறைவான மரத்தின் கீழ் சிறுநீர் கழிக்க ஒதுங்கினாள் ஆட்டக்காரி செல்வி, கூட்டத்தின் பெரும் பகுதி அங்கும் ஓடி வருவதைக்கண்டு அவசரமாக அங்கிருந்து ஓடிவந்தாள். வழக்கமாக மணி அங்கேயும் தன் சாட்டையை எடுத்து நகைச்சுவையாகப் பாசாங்கு செய்வது போல் கோபத்துடன் அடித்துக் கொண்டே ஓடி வந்து கூட்டத்தைக் கலைத்தான்.

அந்த நேரத்தில் ஊர்த் தலைவர் வீட்டிலிருந்து தேநீர் வந்தது. அந்தத் தேநீரை அருந்திக் கொண்டே செல்வி "ஒட்டு மொத்தமாக ஆண் இனத்தைச் சந்தோஷப்படுத்த எப்பொழுதும் பெண் உடலை மட்டுமே தேடுகிறார்கள் ஆண்கள், இன்று வரை ஆடிக் கொண்டேதான் இருக்கிறோம் பெண்கள் அனைவரும்” என்றாள்.

அவள் சிறுநீர் கழிக்கச் சென்றபொழுது நடந்த வேதனையைச் சொல்லி அழுதாள்.

"விடு செல்வி நீயும் நானும் எத்தனையோ ஆட்டங்களில் ஆடியிருப்போம், இது வரை இந்த வயிற்றுக்குத்தான் இத்தனை பிழைப்பு”.

“நம் உடலுக்காகத்தான் இவ்வளவு கூட்டமும். எப்பொழுதோ இந்தக் கூட்டத்தில் உள்ள கண்கள் நம்மை நிர்வாணப்படுத்தி கனவு கண்டிருப்பார்கள்”.

“இன்றும் எங்கள் கிராமங்களில் கழிப்பறை இல்லாத பெண்கள் மலம் கழிக்கச் செல்லும் போதும், குளியலறை இல்லாத வீடுகளில் குளிக்கும் பொழுதும் வன்முறையான பார்வைக் கொலைகள் அவர்கள் மீது இன்றும் நடந்தேறுகிறது” என்றாள் மேனகா.

என்ன கொடுமையான துயரங்கள். கூட்டத்திலிருந்த கண்கள் அவர்களுடைய வெளித் தோற்றத்தில் லயத்து கிடந்தது. கோவிலுக்கு நேர்த்திக் கடனாக விட்ட ஆடுகளைப் போன்று இவர்கள். சற்று பணம், பலம் படைத்தவர்களுக்குக் கேளிக்கை பொருட்களாக நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை.

இதைப் பற்றியெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கு வரும் மனிதர்களுக்கு எந்த உணர்வுகளும் கிடையாது,அவர்கள் உணர்வுகள் அனைத்தும் வெளியில் இருக்கும் இருளுக்கும் ஆட்டக்காரிகளின் உடலுக்கும் இடையே உள்ள உறவை மட்டுமே பேசிக்கொண்டும் ஆட்டத்தோடு சேர்ந்துகொண்டும் துடித்தது.

மீண்டும் நையாண்டி மேளம் அடிக்கத் தொடங்கியதும் ஆட்டம் ஆரம்பமானது. செல்வியும் மேனகாவும் முன்பைவிட தங்களுடைய வேதனையில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்திலிருந்து ஒருவன், “இவளுங்க இருவரும் நன்றாக குடிச்சிட்டு ஆடுறாங்கடா” என்றான்.

“எப்படியும் தலைவர் இரண்டு மணிக்கு மேல் விடமாட்டார்” என்றான் மற்றொருவன்.

எத்தனை பேரைப் பார்த்திருப்பார்களோ, என்று ஆள் ஆளுக்கு ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் உடல் அந்த அளவிற்கு அவர்கள் ஏழ்மையைத் தாண்டி வனப்பாக இருந்தது. முன்பகுதி, பின்பகுதி, அத்தனையும் ஆட்டத்திற்கு ஈடாக இருந்தது. இது அவர்கள் குற்றம் கிடையாது.

இறுதிப் பாடலுக்கு ஆடி முடித்து, தன்னுடைய துண்டால் தன் உடலை மூடிக் கொண்டார்கள் இருவரும். கூட்டத்திலிருந்த ஒருவன் துண்டை இழுத்தவுடன், இருவரும் பெண்களுக்குரிய நாணத்தில் முகம் சுளித்தார்கள், குழுவிலிருந்த ஆண்கள் அவர்களை விலக்கிவிட்டதும், ஆட்டம் ஆடும் வரைதான் நாங்கள் கலைப் பொருட்கள், கலைஞர்கள்.

ஆட்டம் முடிந்தவுடன் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் என்று கூறிவிட்டு நகர்ந்தார்கள். இரவு அதிக களைப்பாக மாறியது இரு ஆட்டக்காரிகளுக்கும். காலையில் புறப்பட்டார்கள். செல்வி தன்னுடைய ஊர் செல்ல, பேருந்தில் ஏறி அமர்ந்து அடுத்த வயிற்றுப் பிழைப்பிற்கான தேடலோடு பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

அவள் நீண்ட நாட்களாக ‘தன் வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை கட்ட வேண்டும் என்கிற கனவோடு’ அவள் பஸ் சீட்டில் அமர்ந்து கண்மூடினாள். பேருந்து விக்ரவாண்டியை நோக்கிப் புறப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு நடந்த சம்பவத்தை அவளால் மறக்க முடியவில்லை.

திருவிழா முடிந்த ஏம்பலம் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு ஆட்டக்காரிகளைப் பற்றி விதவிதமாக பேசிக் கொண்டார்கள் கிராம வாசிகள்.

ப. தனஞ்ஜெயன்

Pin It