சுகன் கனகசபை
இலங்கை வடமாகாணத்தின் வட்டுக்கோட்டையை சேர்ந்த சுகன் கனகசபை "புளோட்' அமைப்பில் இணைந்து பணியாற்றிய போராளி. இலங்கையை விட்டு வெளியேறி பிரான்சில் தஞ்சம்புகுந்த நிலையில் புகலிடச் சமூகத்தில் தலித்தியம், சாதியொழிப்பு ஆகிய கருத்தாக்கங்களை முன்னெடுப்பதில் சுகனின் பங்கு மட்டற்றது.
தான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ தெரிவிக்கும் கருத்தியல் வலுவற்றவர்கள் "துரோகி'' என்ற முத்திரையைக் குத்தி எளிதில் கடக்க நினைப்பதை அறிந்தே வைத்திருக்கும் சுகன் கடந்த ஜூன் முதலாம் தேதி சென்னை வந்திருந்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. எல்லா கலகக்குரல்களையும் நெறிக்கும் குறுந்தமிழ் தேசியத்திற்கு எதிரான குரலாக இருக்கிறது இந்நேர்காணல் என்றெல்லாம் நாம் பேசி திரியப்போவதில்லை, ஆயினும் இதைப் படித்துவிட்டு "வாங்குன காசுக்கு ரொம்பத்தான் குலைக்கிறான் ங்கொய்யால " என்னும் " வழக்கமான சாணியடிப்பு' பதில் வருமேயானால் நிச்சயமாக இது ஒரு கலகக்குரல்தான் என்பதை அறுதியிட்டு சொல்வோம்.
1.அவரைப் பிரபாகரன் சுட்டான்
ஈழ விடுதலைப்போராட்டத்தில் போராளியாகப் பங்கெடுத்திருக்கிறீர்கள். உங்கள் பங்களிப்பிற்கான சூழல் குறித்து...?
1977 தமிழ் அரசியலின் செழிப்பான காலம். 'தமிழ்த்தேசியம் ' குறித்த விவாதங்கள் நிகழ்ந்த காலம். வலதுசாரிகளுக்கு பொற்காலமாக அமைந்த காலம். இடதுசாரிகள் மலினமான இனவாத அரசியலின் முன்னால் திகைத்துப்போயிருந்த காலம்.இந்த 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி பேசிய இனத்துவேசப் பேச்சுக்களுக்கு அன்றைய சிறில் மத்தியூக்களும் இன்றைய சிங்கள இனவாதிகள் பேசும் இனமேன்மை தேசியப்பெருமிதம் இனவெறிச்சொல்லாடல்கள் உறைபோடக்காணாது.
சிங்களவனின் தோலை உரித்து செருப்புத்தைப்பதுதான் அவர்கள் பிரகடனப்படுத்திய தமிழீழத்தின் வேலைத்திட்டமாக இருந்தது. சும்மா ஒரு தேர்தற்பிரச்சாரக்கூட்டம் நடக்கும்,ஒரு இளைஞன் மேடைக்கு வந்து தன் கையைப் பிளேட்டால் கீறுவான்,இரத்தம் வழியும்,தளபதிகளின் நெற்றியில் இரத்தத் திலகமிடுவான்,களிபேருவகையுடனும் பரவசத்துடனும் தளபதிகள் அவற்றைப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள். முத்துக்குமார் எரிந்தபோது எல்லோரும் பரவசத்துடன் அதை ஏற்றுக்கொண்டார்களே! அப்படி.
ஆனால் அவர்கள் ஒரு சிங்களவனைக் கண்ணால் கண்டிருக்கமாட்டார்கள்.மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் துரோகிகளாக நிறுத்தப்படுவார்கள்.ஏற்கனவே அல்பிரட் துரையப்பா அவர்கள் பிரபாகரனால் துரோகியாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.அவர் காமராஜருக்கு நிகரான, இலங்கை பிரதான அரசியலில் பெருந்தலைவர்.தேசிய மட்டத்திலும் உள்ளூரிலும் அசைக்கமுடியாத அளவிற்கு செல்வாக்கோடு இருந்தார். யாழ்ப்பாண மேயராக இருமுறை பதவி வகித்தார். தலித்துகளின் முன்னேற்றத்தில் அவர் மிகவும் கரிசனையோடு இருந்தார்.
அவர் செயற்பாடுகள் குறித்த எல்லாமே சிறப்பான உதாரணங்கள்தான்.ஒரு இசை விழாவிற்கு அவரைத் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தித்தருமாறு விழாக்குழுவினர் கேட்கின்றனர். அவரும் மகிழ்ச்சியோடு சம்மதித்து விழா மேடைக்குப் போகின்றார். ஆனால் அவ்விழாவில் தலித் பாடகர்கள் பாடுவதற்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தலித்துகள் அவரிடம் முறையிடுகின்றனர்.அவர் அவ்விழாவைப் புறக்கணித்து தலித்துகளுடன் வீட்டிற்குப்போகிறார்.அவர் செல்வாக்கோடு இருக்கும்போது தமிழ் அரசியலினால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. அவரைப் பிரபாகரன் சுட்டான்.
"காட்டிக்கொடுப்பவன் எங்கே!
அந்தக் கயவனைக்கொண்டுவா
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா தம்பி
அவன் சாகும்வரை அடி தீயிற் கொழுத்து!"
மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் இந்தக் கவிதையாலேயே அச்சுறுத்தப்பட்டார்கள். துரோகிகளாக்கப்பட்டார்கள். தியாகராஜா,அருளம்பலம் இப்படி அவர்கள் எல்லோருமே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். "துரோகியென்று முன்னொருநாள் தீர்த்தவெடி சுட்டவனைச்சுட்டது
சுடச்சொன்னவனைச்சுட்டது
சுடக்கண்டவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையும் சுட்டது.."
என்று சிவசேகரம் கவிதையை அறிந்திருப்பீர்கள். இப்படியே அன்றய சூழலை சொல்லியோ எழுதியோ மாளாத அளவுக்கு சிவில் சமூகம் தமிழ்தேசியத்தால் வன்முறைச்சமூகமாக மாற்றப்பட்டது. பிரபாகரனின் மனைவியார் மதிவதனி உட்பட அன்று ஏதோ பல்கலைக்கழக இடமாற்றம் தொடர்பாக மாணவர்கள் உண்ணா விரதம் இருந்தார்கள். புலிகள் ஆயுத முனயில் அவர்களைக் கடத்திச்சென்றார்கள்.
"சக மனிதன் பட்டினி கிடந்து சாவதை இதயமுள்ள ஒருவரால் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்" என துண்டுப்பிரசுரம் கொடுத்தார்கள். நியாயம் நல்லாகத்தான் இருந்தது.
"அறப்போராட்டத்தில் ஆயுதமுனையின் தாக்கம் எதிர்ப்புரட்சியின் வடிவமே" என நாம் திருப்பி அவர்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் சொன்னோம். புலிகளைத்தவிர மற்ற இயக்கங்கள் (ஓரளவு சுபவீ சொல்வதுபோல)இடதுசாரித்தமிழ்த்தேசியத்தை நோக்கி தங்களைக் கவனப்படுத்தியிருந்தார்கள். நமது இயக்கம் சிங்கள மக்களுடனான ஐக்கியம்,மலையக ,முஸ்லிம் மக்களது தனித்துவம் இவற்றிற்கு குறிப்பாக அரசியலிற்கு முக்கியத்துவம் கொடுத்தது.
"தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்" என கை நூலொன்றை நாங்கள் வினியோகித்தோம். மார்க்சியம், முதலாளித்துவ சமூக அமைப்புமுறை ,தனிச்சொத்துடமை,இவற்றைநோக்கி 'நீண்டகால மக்கள் யுத்தம் 'என்ற தளத்தில் இயங்கினோம். கம்யூனிஸ்ட்டுகளான கே.ஏ.சுப்பிரமணியம்,பொன்.குமாரசாமி,வைத்திலிங்கம், இவர்கள் நம்மிடம் நேசத்தோடு உரையாடினார்கள்.1984 நடுப்பகுதியில் நமது கழகத்தில் 25,000 இளைஞர் யுவதிகளைக் கொண்டிருந்தோம். எனது இலக்கம் 3004.
2.எலும்புக்கூடாக முன்னணித்தோழர்:
இயக்கத்தை விட்டும் ஈழத்தைவிட்டும் புலம்பெயர்ந்ததற்கான நிர்ப்பந்தம் என்னவென்று கூறவியலுமா?
தீவிரமான அரசியல் விவாதங்களை நோக்கி நகரத் தொடங் கிய சூழலில் உட்படுகொலைகளால் சமூகத்தில் விடு தலைக்காகப் போராடும் இயக்கம் என்ற மதிப்பீட்டையும் மதிப்பையும் தார்மீகப்பண்புகளையும் நமது இயக்கம் இழந் திருந்தது. குழுக்கள், குழு வாதங்கள் உருவாகத் தொடங் கின. பரந்தன் ராஜன் குழு,சந்ததியார் குழு, டொமினிக் (கேசவன்)- காந்தன் குழு (தீப்பொறி),இப்படியாக உரு வான சூழலில் தலைமையால் அவற்றை நிதானமாக கை யாள முடியவில்லை. ஜனநாயக மத்தியத்துவம், உட்கட்சி ஜனநாயகம் இவற்றிற்கான வாய்ப்போ நோக்கமோ சிரிப் பிற்கிடமாக இருந்தது. பலதோழர்கள் உட்படுகொலை யால் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தில்தான் கொன்று புதைத்தார்கள் எனில் அங்கும் வந்து கொன்று போடவும் கண்காணிக்கவும் தொடங்கினார்கள். எனது அயலூரான சுழிபுரம் பகுதியில் ஆறு புலிகளை கொன்றுபோட்டான் இயக்கம் தனது எல்லாவிதமான கட்டமைப்புகளையும் இழந்தது. தோழர்கள் சலித்து விரக்தியுற்று வெறுப்புற்று எதிர்த்து சிதிலமடைந்து சிதறிப்போயிருந்தார்கள். கேசவன் தீப்பொறி என்று தனித்து அமைப்பு கட்டத் தொடங்கினார். புலிகள் இதைப்பயன்படுத்திக்கொண்டார்கள். மாற்று இயக் கங்கள் அழிக்கப்பட்டன. ஒருவர் மிச்சமில்லாமல் கண் காணிக்கப்பட்டார்கள். புலிகளின் மலரவனும் சிவேந்தியும் எனது வீடு தேடி வந்தார்கள். தோழர்கள் தம் பிரதேசங்களை விட்டு தலைமறைவாகத் தப்பி ஓட வேண்டியதாயிற்று. இப்படி கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வந்து இறங்க வேண்டியதாயிற்று.
இற்றைக்கு மூன்று வருடங்களுக்குமுன் ஓர் நாளில் நான் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு அப்பார்ட்மென் றில் இளைஞர் ஒருவர் இறந்துகிடந்தார். இரண்டுமாதமாக அவர் இறந்துகிடந்தது தெரியவில்லை.கதவை உடைத்து ஒட்டிப்போன எலும்புக்கூடாக அவரை பொலிஸ் தூக்கிச் சென்றதாக அறிந்தேன். அவர் நமது இயக்கத்தின் முன்னணித் தோழர் என பின்னர் அறிந்துகொண்டேன்.
3.வீட்டுவாசலில் எதிரி
முப்பது ஆண்டுகால தமிழீழத்திற்கான போராட்டம் பின்னடைவையோ அல்லது ஒழித்துக்கட்டப்பட்டோ இருக்கிறது. மீண்டும் அங்கே ஆயுதப் போராட்டம் சாத்தியப்படும் என்று நினைக்கின்றீர்களா...?
"துவக்கெடுத்தோம் படை அமைத்தோம் " என்ற நிலை இனிச்சாத்தியமில்லை. வில்லங்கத்திற்கு ஆரும் ஆயுதத்தை வைச்சிரு என்று திணித்தாலும் வைத்திருக்கும் நிலையிலும் சனம் இல்லை. கண்ணுக்குத்தெரியாத எதிரியையும் ஆமிக் காரனையும் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் பிரபாகரன் போய்விட்டார். பாம்புக ளுடன் வாழப்பழகிக்கொண்ட மனிதன் நிலைதான். மிஞ்சி யிருப்பதோ பஞ்சைப்பராரிகளான கொஞ்சப்பேர்.
4.இயெனெஸ்கோவின் காண்டாமிருகம்
ஒருமொழியென்றால் இரு இலங்கை, இருமொழி என்றால் ஒரு இலங்கை என சிங்களப் பேரினவாத அரசுக்கு எச்சரிக்கை செய்த இடதுசாரி இயக்கத்தின் இன்றைய நிலைப்பாடு எத்தகையது?
இடதுசாரிக்கட்சிகளால் எதுவுமே செய்யமுடியாத அள விற்கு யுத்தத்தின் கைதிகளாக முழு நாடுமே மூழ்கிப் போயுள்ளது. "ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்று இந்த யுத்தத்திற்கான பழியை இடதுசாரிகள் மேல் போடவே சில புத்திமான்கள் முயன்றார்கள். போர் நிறுத்தத்திற்காகவும் சமாதானத்திற்காகாம் அரசியற் தீர்விற் காகவும் முழு இடதுசாரிகளுமே முயன்று வந்திருக்கிறார் கள். இயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தில் வரு வது போல ஒவ்வொரு பாத்திரமும் 'எனக்குப் பொத்துக் கொண்டு வருகிறது 'என்று சொல்லி யுத்த ஆதரவு, இன வாதம் இவற்றின் பங்காளிகளாக இருந்தவர்களே இப்போது திகைத்துப்போயுள்ளார்கள். இப்போதும் இடதுசாரிகள் தான் இலங்கைப் பல்லினங்களும் பல்சமூகங்களும் வாழும் நாடு என தொடர்ந்து பேசி வருகிறார்கள். மே-18க்குப்பின் இனி எல்லோருக்குமே நல்லகாலந்தான்.
5.இரண்டாம் எதிரி
போர் உக்கிரமடைந்த காலகட்டத்தில் முதல் எதிரியாக சிங்கள பேரின வாதமும் இரண்டாவது எதிரியாக புலிகளும் என வகைப்படுத்தப்பட்டு இன்றைய சூழலில் முதலாவது எதிரியை ஒழிப்பதுதான் நம்முடைய இலக்காக கொள்ளவேண்டும் என வர்க்க அறிவுஜீவிகளால் முன் வைக்கப்படும் கருத்து பற்றி ...?
இது யாழ் மேலாதிக்கப் பின்னணியிலிருந்து வந்த தமிழ் புத்திமான்களால் முன்வைக்கப்படுவது. யாருக்கு யார் முதல் எதிரி என்று எப்போதுமே நிச்சயிக்கமுடியாத சூழல் தான் கடந்த 20 ஆண்டுகளாக நிலவியது. "எதிரியை நினைத்த நாட்கள் என்றோ தொலைந்தன"என நமது அருந் த தியின் கவிதை ஒன்றிருக்கிறது. 1990ல் வட மாகாணத்திலி ருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் பெருமக்களின் புத்த ளம் அகதி முகாமில் முதல் எதிரி யார்? கிழக்குமாகாணத்தில் பள்ளி வாசல்களில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு முஸ்லிம் மற்றும் வடமாகாண சாதி ஒடுக்குமுறைக்குள்ளா கும் தலித்துகளிடம் இப்படியான கேள்விக்கே இடமிருப்ப தில்லை. சிங்களக்கிராமங்களில் படுகொலை செய்யப் பட்ட அப்பாவிச்சிங்கள மக்களிடம் முதல் எதிரி கோட்பாடு செல்லாது. போர்ச்சூழலிலிருந்து முதல் எதிரி இரண்டாம் எதிரி எனக்கட்டமைப்பதெல்லாம் அபத்தம். போர் உக்கிரம டைந்தால் எல்லாவகைகளிலும் சமாதானத்தைக் கோருதல் தான், வலியுறுத்தல்தான் சிறப்பாக இருக்கமுடியும். நமது சூழலில் சமாதானத்தைக்கோரியவர்கள்தான் முதல் எதிரி யாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
6. சாதிய சமூகமாயிருக்கும்போது
தேசிய இனப்போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் சாதியம் நெகிழ்ச்சியடைந்திருக்கிறது என்ற கூற்றில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா...?
என்னே ஒரு அபத்தம்!! தேசியமும் தெளிவில்லை இனமும் தெளிவில்லை போராட்டமும் தெளிவில்லை சாதியம் குறித்தும் தெளிவில்லை. இந்தச்சாதியம் இப்படி எத்தனை யுத்தங்களைப் போராட்டங்களைக் கண்டிருக்கும். சாதியம் நெகிழ்ச்சியடைந்திருக்கிறது என்றால் அந்தச்சூழலிற்கு அது தன்னைத் தகவமைக்கிறது என்றுதானே பொருள். மேட்டிமைச் சாதியினர் தொடர்ந்து தலித் அரசியலை மறுத்துவருவதன் கூற்றாகவே இதைக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு சாதிய சமூகம் குறித்து கரிசனையில்லை. அனேகமாக அவர்கள் உயர்சாதிப்பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.இனப்போராட்டம் குறித்து வர்க்கம் சார்ந்து இங்கு யாரும் கேள்வி எழுப்புவதில்லை. இருப்பது சாதிய சமூகமாயிருக்கும்போது அதற்குப்பதில் சொல்லவேண்டியிருக்கிறது. சாதியொழிப்பு குறிப்பான வேலைத்திட்டத்தைக் கோருகிறது. தலித்துகளின் அதிகா ரத்தைக் கோருகிறது. இனவிடுதலையை முன்மொழியும் அல்லது அதில் ஆர்வமாயிருக்கும் கும்பலுக்கு தலித் அரசி யல் சிக்கலுக்குரியதொன்றாகவே எப்போதும் இருக்கிறது. சாதியம் குறித்துப் பேசும்போது இனவிடுதலைக்கு அவை பின்னடைவை ஏற்படுத்துவதாக பேசுவது மேற்சாதி மனோபாவம் இல்லாமல் வேறென்ன!
எனது ஊரில் நமது பாவனையில் இருந்த விளையாட்டு மைதானத்தை இப்போது வெள்ளாளர்கள் அபகரித்திருக்கி றார்கள். தமிழீழப்பிரகடனம் நிகழ்ந்த இடத்தில் உள்ள கோவில் கேணியில் குளித்ததற்காக தலித்துகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். அந்தக்கேணி முள்ளுக்கம்பி வேலியால் தலித்துகள் குளிக்காதவாறு அடைக்கப்பட்டிருக்கிறது. தெணியானின் வெளியில் எல்லாம் பேசலாம் சிறுகதை படித்திருக்கிறீர்களா! உங்களுடைய கேள்வியை நோக்கி நடப்பு நிலவரத்தை ஒட்டிக் காறித்துப்புகிறது. சமகால ஈழத்து தலித் சிறுகதைகள் இவற்றை நுட்பமாகப் பேசுகிறது. தெணியான் ,தேவா ஹரோல்ட் ,தேவதாசன் சிறுகதைகளை நீங்கள் படிக்கவேண்டும்.
7.வெள்ளாளப்புத்தி
சாதிய எதிர்ப்பாளர்கள் மத்தியில் இந்து மதத்திற்கு மாற்றாக இந்தியாவில் விளங்கிக்கொண்டதைப்போல் பெளத்தத்தை முன்னிறுத்தி விவாதங்கள் ஈழத்தில் நடந்திருக்கிறதா....?
பகவான் புத்தரின் கருணையின் வழியே நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட் கிறீர்கள். வடமராட்சி அல்வாய் கிராமத் தில் ஆசிரியர் க.முருகேசு அவர்கள் தலைமையில் பெளத் தத்திற்குமாறியது முதற்கட்டம். இது 1953 ல். "எல்லோரும் வாருங்கள்! புத்தமதமே நமக்குக் கதியளிக்கும்" என்பதே அன்றைய பேசுபொருள். துண்டுப்பிரசுரங்களாகவும் பிரச் சாரக் கூட்டங்களாகவும் இத்தலைப்பு அமைந்திருந்தது. அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தலித் மக்கள் அனுமதிக்கப்படாத சூழலில் இந்நிகழ்வை ஒட்டி மேலும் பெளத்தம் தழுவுதல் முனைப்புப் பெற்றது. இதற்குத் தலைமை தாங்கிய பேராசான் முருகேசு அவர்கள் மஞ்சள் ஆடை அணியுமாறும் பெளத்த நடைமுறைகளை பின்பற்று மாறும் அழைப்பு விடுத்தார். தனது இல்லத்திற்கு 'சித்தார்த்தர் அகம்' எனவும் பெயர் வைத்தார்.
இரண்டாவது கட்டம் 1962 க்குப்பின் வருகிறது. கரவெட்டி பிரதேசத்தில் தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல்கள், கல்வி மறுப்பு ,கொத்தடிமைக்கு நிகரான சாதி இழி தொழில்கள் இவை சார்ந்து ஏற்படுகிறது. 1945ல் சிறுபான் மைத்தமிழர் மகாசபையின் முதலாவது அரசியற் கோரிக் கைகள் காலகட்டமாயின் 1962 இரண்டாவது அரசியற் கோரிக்கைகளுக்கான காலம். அப்போது தோற்றம்பெற்ற அமைப்பு "வட இலங்கை பெளத்த சங்கம்". இதன் அமைப் பாளராக பெருந்தலைவர் வைரமுத்து அவர்கள் பெளத்தம் தழுவி தலித் மக்கள் மத்தியில் அயோத்திதாசருக்கு நிகராக உருவாகிறார். கரவெட்டி- சிறீ நாரதா வித்தியாலயம். புத்தூர்- பன்யாசீக வித்தியாலயம். அல்வாய் - சேமகே வித்தி யாலயம். அச்சுவேலி - சிறீ விபசீ வித்தியாலயம். பூநகரி மற்றும் தலித் மக்களின் பிரதேசங்களில் பெளத்த பாட சாலைகளையும் பெளத்த தர்மத்தின் போதனைகளையும் கொண்டு செல்கிறார். நூற்றுக்கு மேலான மாணவர்களை தென்னிலங்கைக்கு அனுப்பி உயர்கல்விக்கு ஏற்பாடு செய்கிறார். இன்றைய தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தலைவர் யோகரட்ணம் அவர்கள் அதன்வழி வந்தவரே. தலைவர் யோகரட்ணம் கல்விகற்றது சிறீ வதேகம ரத்தின சார பிரிவேனா. அவரது ஆசான் பண்டித் கணேகம சரணங் கார தேரர். இவர் மகாத்மா காந்தி இலங்கை வந்தபோது அவருக்கு ஒத்தாசையாக இருந்து அவர்கூடவே இலங்கை முழுதும் சென்றவர்.
"வட இலங்கை பெளத்த சங்கம்" தனது செயற்பாடுகளை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் செவ்வனே தொடர்ந்தது.இது வெள்ளாளர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் எரிச்சலை யும் ஏற்படுத்துகிறது. அவர்கள் தமது கல்லூரியான சிறீ சோமாஸ்கந்தா கல்லூரியிலும் தலித்துகள் படிக்க அனுமதிக் கவில்லை. தலித்துகள் பெளத்தப்பாடசாலையிலும் படிக்க அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவக் கல்லூரிகளிலும் படிக்க அனுமதிக்கவில்லை. ஏற்கனவே வெள்ளாளர்கள் கிறிஸ்த வத்திற்கு மாறி கிறிஸ்தவபாடசாலைகளில் தங்களை நிரப் பியிருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சி.கதிரவேற்பிள்ளை தலித் மக்களுக்கு தனியாக புத்தூர் கிழக்கில் சிறீமுருகன் தமிழ்ப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்து வைத்து தனது வெள் ளாளப் புத்தியைக் காட்டிக்கொண்டார். அரசாங்கம் 1962ல் பாடசாலைகளை தேசியமயமாக்கியது. தேசியமயமாக்கி 15 ஆண்டுகளின் பின்பே புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரியில் தலித் ஒருவர் 1976 இல் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் வெள்ளாளார்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழ லில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு பெளத்தம் தழுவுதலுக்கு கிடைக்கவில்லை. அதை வலதுசாரிகளும் எதிர்த்தார்கள். வெள்ளாளப் பின்னணியிலிருந்து வந்த இடதுசாரிகளும் எதிர்த்தார்கள். மதமாற்றம் தீர்வல்ல என்றார்கள். கொம்யூ னிஸ்டுகள் செல்வாக்கோடு இருந்து ஆலயப்பிரவேசம் போன்ற போராட்டங்களூடாக இந்து மதத்திற்குள்ளேயே தலித்துகளை வைத்திருக்கும்போது வட இலங்கை பெளத்த சங்கம் ஆதரவற்றுப்போனது. பின்னர் நவாலியூர் சோம சுந்தரப்புலவரின் பேரன் நடராஜா அவர்கள் பெளத்த துறவி யாகி பெளத்த போதனைகளை பரப்பியிருக்கிறார். கடைசி யாக ஓரளவு ஜனநாயகரீதியாக நடத்தப்பட்ட 1977 தேர் தல் காலத்தில் தமிழீழக்கோரிக்கை உச்சம்பெற்ற அந்த நேரத் தில் ஆட்சி அதிகாரம் கோரி வெள்ளாளத் திரட்சி ஒன்று ஏற்படுகிறது. தலித்துகள் மட்டத்தில் இதுமேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்போது தலித்துகளிடமிருந்து ஒரு துண்டுப்பிரசுரம் வருகிறது. அதன் தலைப்பு இதுதான்; "சாதித்துவ வெறியிலிருந்து விடுபட தமிழ்ப் பெளத்தர் களாவோம்". அத்துடன் அந்தக்கன்னை அறுபட்டுவிட்டது.
தமிழ்ப்பகுதிகளில் பெளத்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துவரும் சூழலில் நாம் அது குறித்த விவாதங்களை நிகழ்த்தவேண்டும். சென்ற ஆண்டு புலிகளால் திருகோண மலையில் தமிழ்ப்பெளத்த துறவியான நந்த ரத்தின தேரர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். தற்போது டாக்டர்.தியாகராஜா மீளவும் அதுகுறித்த விவாதங்களை எழுப்பிவருகிறார். 1)தமிழ்மக்களும் தழுவிய மதங்களும்; கி.மு.3000 லிருந்து கி.பி.2000 வரையான சமய வரலாற்றுச் சுருக்கம். 2)ஈழத்தில் பெளத்தம் ஆகியவை அவரது நூல்கள்.
தலித்தியத்தை பிழைப்புவாதமென்றும் வடக்கில் கம்யூனிஸ்டுகள் பலம் பெற்று வருவதை தடுக்கும் நோக்கோடுதான் வட்டுக்கோடைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதென்றும் செந்தில்வேல் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இக்கூற்றை எவ்வாறு அளவீடு செய்கிறீர்கள்?
கொம்யூனிஸ்டுகள் பலம்பெற்று வருவதை தடுக்கும் ஒரே நோக்கோடு கொண்டு வரப்பட்டதுதான் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்பது நமது விருப்பத்திற்கேற்ப எளிமையாகப் புரிந்துகொள்ளல். அத்தீர்மானம் கொண்டு வரப்படாதிருந்தாலும் கொம்யூனிஸ்டுகளால் ஒன்றும் செய்திருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை இல்லாதிருந்தது. அது ஒருபகுதி உண்மையே! அது இனத்துவ அரசியலின் ஒரு கட்டம். அந்த தீர்மானத்தை கொண்டுவந்த அமிர்தலிங் கம் அன்ட் கொம்பனியே மாவட்ட அபிவிருத்தி சபை போன்றவற்றை ஏற்றுக்கொண்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைமையில் இருந்தது, இப்படியாக வெள்ளாளத்துவ அரசியலின் பேரம் பேசுதலுக்கான நுட்பமான சொல்லாட லாகவும் ஆண்ட பரம்பரை தமிழ் அரசியல் என்ற பரந்த தளத்திற்கு அது நகர்ந்துவிட்டது. ஆயுத சாகசங்களின்முன் கொம்யூனிஸ்டுகளை யாரும் கணக்கெடுத்ததாகவும் இல்லை. தலித்தியத்தை பிழைப்புவாதம் என்று சொல்லி வெள்ளாளர்களிடம் நல்லப்பிள்ளையாக இருக்கலாம். கை தட்டு வாங்கலாம். மார்க்ஸியத்தின் பேரால் கூறப்பட்ட முட்டாள்தனமான கூற்று அது. ஆனால் தமிழீழத்தை கொண்டாடிய புலிகளின் ஆதரவாளர்களாக செந்திவேல் போன்ற கொம்யூனிஸ்டுகள் ஏன் பின்னர் மாறினார்கள்? அருந்ததியர் இன்று உள் ஒதுக்கீடு பெறுமளவிற்கு தலித்தி யம் வளர்ச்சியடையும் புள்ளிகளை தோழர்.செந்தில்வேல் அவர்கள் அறியவேண்டும். 'தேசிய இனப் போராட்டத்தை' ஆதரிக்கும் செந்தில்வேல் அவர்கள் தலித்தியத்தை ஆதரிப்ப தற்கு எதுதான் தடையாக இருக்கிறதென்று தெரியவில்லை.
இந்தியாவைப்போல் சாதியம் இறுக்கமாக இல்லை என்றொரு கருத்து நிலவுகிறதே....?
ஆம்! இங்கே பெளத்தத்தின் விழுமியங்கள் இன்னும் இருக் கின்றன. நாடு தழுவிய பெளத்தத்தின் பெரும்பான்மை யின் முன் சிறுபான்மையினரான யாழ்ப்பாண மேற்சாதிய நிறுவனத்திற்கு அதன் இறுக்கங்களை காப்பாற்றுவதற்கு நெருக்கடிகள் இருக்கின்றன. அந்த நெருக்கடியிலிருந்து கிளைத் ததுதான் தமிழீழம் கோட்பாடு. சாதிய சமூகம் எழுப்பும் கேள்விகளிலிருந்து மிகச்சுலபமாக தப்பி ஓடுவ தற்கு இந்த கருதுகோள் உதவலாம். அனைத்துத் தளங்களி லும் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தமிழ்ப்பிரதேசத்தில் சாத்தியமற்று இருக்கும்போது இந்தியாவிலும் விட சாதியம் இலங்கையில்தானே இறுக்கமாக இருப்பதாக கொள்ள முடியும்.
8.சிங்களவர்களையும் இந்தியர்களையும் வெளியேற்றுதல்
ஒரே ஒரு கைச்சாத்தின் மூலம் மலையகத்தமிழர்களை நாடற்றவர் களாக ஆக்கிய சிங்கள அரசுக்கு எதிராக வடக்கு - கிழக்கு தமிழர்கள் மத்தியில் என்னவிதமான எதிர்வினை இருந்தது?
அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரம் டி. எஸ். சேன நாயக்கா சொன்னார்: "அவர்கள் அரசியல்ரீதியாக பெரிய சுமை. பொருளாதார ரீதியாக பெரிய சொத்து" இது 1948 நவம்பர் 15ல் கைச்சாத்திடப்படுகிறது இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் 18 வது சரத்து. தொடர்ந்து இந்திய பாகிஸ் தானிய பிரஜாவுரிமைச் சட்டம் 1949ம் ஆண்டு 3 வது சரத்து.
தமிழர் அரசியற்தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அதற்கு ஆதரவாக இருந்தார். வடபுலத்து தமிழர்களுக்கு மலையகத் தமிழர்கள் என்போர் வந்தேறு கூலிகள். தோட்டக்கூலிகள். வீட்டுவேலையாட்கள். அடிமைகள். இவர்களின் பிரஜா உரிமை நிராகரிக்கப்பட்டதென்பது அவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. அது அவர்களை எந்தவகையிலும் பாதிக்கவில்லை.
இன்னொரு தமிழர் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சொன்னார்; "இன்று அவர்களுக்கு நாளை நமக்கு". ஒட்டு மொத்தத் தமிழர்களும் பாதிக்கப்பட்டதாக அவர் கருத வில்லை. அவர்கள் வேறை ஆக்கள் நாளை நமக்கும் இது நிகழலாம். ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் 1952ல் எஸ்.தொண்டமான்,அசீஸ்,கே.குமாரவேல்,ஈழத்துக்காந்தி கே.ராஜலிங்கம், கே.ஜி.எஸ்.நாயர், சி.வி.வேலுப்பிள்ளை, எம்.செல்லச்சாமி ஆகிய மலையகத்தமிழர் தலைவர்கள் இந்த பிரஜாவுரிமை பறிப்புச்சட்டத்திற்கு எதிராக 1952 ஏப்ரல் 29ம் தேதி பாராளுமன்றம் பிரதமர் அலுவலகம் முன் பாக சத்தியாக்கிரகம் இருக்கிறார்கள். எம்.ஈ.அபேயகோன் என்ற சிங்களத் தலைவர்கூட அவர்களுடன் போராட்டத் தில் இருக்கிறார். ஆனால் ஒரு யாழ்ப்பாண தமிழ் அரசியற் தலைவர்கூட அவர்களுக்கு ஆதரவாக இல்லை. 50,000 தொண்டர்களுடன் 100 நாட்கள் நடாத்தப்பட்ட இந்த சத்தி யாக்கிரகப் போராட்டம் தமிழ்த்தலைவர்களின் ஆதரவின் மையால் தோல்வி கண்டு கைவிடப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வு திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல.
1937 பெப்ரவரி 14 ம் தேதி ஐசக் தம்பையா இல்லத்தில் இந்தியத் தமிழர்கள் தொடர்பாக விசேடக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. எஸ்.எச்.பேரின்பநாயகம் அதில் கலந்து கொள்கிறார். யாழ்ப்பாணம் உயர் கல்விமான்கள் ஒன்றாக கூடிய கூட்டம் அது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: "இந்தியர்களை எல்லையின்றி இலங்கைக்குள் வர அனும தித்தால் அவர்களுடைய உதவியைக்கொண்டு சிங்களவர் களை இலங்கையிலிருந்து வெளியேற்றிவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். சிங்களவர்களை வெளியேற்றுவ தன் முன்னர் இந்தியர்களால் நாமே வெளியேற்றப்பட்டு விடுவோம்-எச்சரிக்கை!!!". அதேகூட்டத்தில் கரகோசத்தின் மத்தியில் கு.நேசையா சொல்கிறார்: "சமீபகாலமாக ஹட்டன், டிக்கோயா, சிலோனீஸ் தோட்ட கிளார்க்மார் சங்கத்தார் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 'இந்தியரின் போட்டியிலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரி கண்டக்ரர், டீ மேக்கர், லிகிதர்கள் முதலான உத்தியோகங்களை வகித்துவரும் இலங்கையர் குறிப்பாக இலங்கைத்தமிழர் இந்தியர்களால் வேலை இழந்து வருகிறார்கள். வியாபாரத்தலங்களிலுள்ள கணக்குப் பிள்ளை, வைத்தியர், சிப்பந்திகள், பள்ளிக்கூட ஆசிரியர் கள் முதலான பதவிகளில் இந்தியர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எல்லாப்பதவிகளும் இந்தியர் களுக்குத் திறந்துவிடப்படுமானால் எல்லாம் இந்தியமய மாகிவிடும்'
மக்களிடம் படிப்பது, அதை மக்களுக்கே திருப்பிகொடுப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கிய ஈழத்து இலக்கியப் பரப்பின் இன்றைய தன்மை குறித்து எதுவும் கூற முடியுமா?
நல்லது கெட்டது எல்லாவற்றையுமே இந்த யுத்தம் அழித் தொழித்துவிட்டது. இலக்கியத்தில் மட்டும் எப்படி மிச்சம் மீதி இருக்கமுடியும்? யுத்தக் கிரிமினல்கள் இரண்டொரு கவிதையோ கதையோ எழுதியிருந்தால் அவர்கள் கிரிமினல் களில்லாது போய்விடுவார்களா? தாங்கள் எப்படி போர்க் குற்றவாளிகளாயிருந்தோம் என்பதை இப்போது ஒப்புதல் வாக்குமூலங்களாகவும் வதந்திகளாகவும் கசியவிட்டுக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டுதானிருக்கிறீர்கள். 'தமிழர்' தரப்பிலிருந்து இந்த யுத்தத்திற்கான நியாயத்தை யும் குறிப்பாக மாற்றுக்கருத்தாளர்கள், மாற்றுச் செயற்பாட் டாளர்களின் கொலை தொடர்பாக தமது செல்லப்பூனை யின் பிஞ்சுக்கால்களுக்கு செல்லக்கை கொடுத்தவர்கள் இப் போதும் தாங்கள் திகைத்துப் போயிருப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வருகைதரு பேராசிரியர்களின் தமிழ்ப்பண்பாட்டின் மீட்டுருவாக்கம் குறித்த இலக்கிய விமர்சன செல்நெறிகளும் இப்போது கவிண்டு கொட் டுண்டு கேலிக்குரியதாகிப் போய்விட்டது. போகட்டும்!
நாங்கள் எப்போதும் தளத்தில் அரசியற்பாசறைகள், தொழிற்சங்க அமைப்புகளைக்கட்டுதல் கிராமிய உழைப் பாளர் அமைப்புகள் மக்கள் அமைப்புகளைக் கட்டுதல் இவற்றிலும் தென்னிலங்கை நோக்கிய பயணத்திலும் எங் களை முழுவதுமாக ஈடுபடுத்தியிருந்தோம். ஜே.வி.பி. முன் னணித்தோழர்கள் பலர் நமது அமைப்பில் இருந்தார்கள். நாங்கள் வன்முறைமேல் காதல்கொண்ட மனநோயாளிகள் அல்ல என திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டேயிருந் தோம். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலில் வரும்" நடந்து வந்தான்னா அந்த இடமே விளக்கேத்தின மாதிரி பிரகாசமாயிடும்.."என்ற மாதிரியான காதலிகளைக் கொண்டிருந்தோம். ஆனால் அடிப்படையில் தற்காப்பும் ஆயுதப்பயிற்சியும் நமக்கு இருந்தது. நமது அமைப்பு தளத் தில் இராணுவ அமைப்பல்ல. நாம் எந்தவிதமான இராணுவத் தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. அது குறித்துத் தெளிவாகவே இருந்தோம். இப்படியான தாக்கு தல்கள் பாலஸ்தீனம் மாதிரியான அகதிமுகாங்களை மட் டுமே உருவாக்கும் என பிரச்சாரப்படுத்தியிருந்தோம். அப் போது பலஸ்தீனத்தின் சப்ரா சட்டிலா முகாங்களை இஸ்ர வேல் தாக்கி அழித்த ஓராண்டை நினைவு கூறியிருந்தோம். அரசியலற்ற ஆயுதங்கள் அடிமை வரலாற்றையே திருப்பி எழுதும் என்பது அப்போது நமது பரப்புரையாக இருந்தது.
முள்வேலிகளுக்குப் பின்னால் ஈழத்தமிழர்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இன்றைய சூழல் குறித்து ஏதேனும் கூறமுடியமா?
இப்படியான முகாங்களின்பேரால் 4.7 மில்லியன் மக்கள் 60 வருடமாக அதே முகாமில் அனைத்துலகு தழுவி தற்போது இருக்கிறார்கள். இலங்கை நிலைவரத்தின்படி இந்த முகாம் களின் உருவாக்கம் நாலாவது கட்டம். முதற்கட்டம் மலை யகத்தமிழர் நாடு கடத்தப்பட்டபோது கொழும்பில் ஏற்ப டுத்தப்பட்டது. இரண்டாவது 1983 கொழும்புக் கலவரத் தில். மூன்றாவது முஸ்லிம்பெருமக்கள் துரத்தியடிக்கப் பட்டபோது 1990இல். நாலாவது ஜெயசிக்குறுவின் பின்னி ருந்து இன்றுவரை. தற்போதைய முகாம் நிலவரத்தில் முகா மில் உள்ளவர்கள் பெரும்பாலோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு போற்றுதற்குரிய சேவையிலீடுபடும் உளவியல் மருத்துவர் தெரிவிக்கிறார். இலண்டனில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் வைத் தியர்கள் இருக்கிறார்கள். ஆக இரண்டுபேர் மட்டுமே அங்கு சென்று சேவையிலீடுபடுகிறார்கள். சிங்கள மருத்துவர்கள் பலர் அங்குள்ளனர். முஸ்லிம் பெருமக்கள் அமைப்புகள் பல அவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளை செய்கின்ற னர். வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை மீளப்பெறு!
முகாங்களை உடனடியாக மூடு! என்றெல்லாம் கோரிக்கை வேண்டுகோள் அழுத்தம் கொடுத்தெல்லாம் முடிந்துவிட் டது. அவர்கள் அகாதகத்திலிருந்து வரும் எந்த ஒரு செய்திக் காகவும் காத்திருக்கவில்லை. முள்ளுக்கம்பிகளின் ஓரம் நிற்கும் சிறுவர்களினதும் ஏதிலிகளினதும் பரிதவிப்பு தம்மையும் தேடி யாராவது வரமாட்டார்களா என்பது. முகாம்களின் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக அரசு டன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனங்கள் தன் பங்குக்கு மேலும் நிலைமையைச் சிக்கலாக்குகின்றன. தண்ணீர் பெரிய பிரச்சனையாயிருக்கிறது.
மலசலக்கூட பிரச்சனையில் தலித்துகளே துப்புரவற்று கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் தலித்துகளே அவற்றை தினமும் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும் அம் முகாமிலிருக்கும் ஆதிக்க சாதியினர் எதிர்பார்ப்பதாக அங்கு சேவையில் ஈடுபடும் எனது நண்பர் தெரிவிக்கிறார். மற்றும் அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து ஒன்றாக சமைத்துச் சாப் பிடுவதற்கு விருப்பமின்றி தனியே தாங்கள் சமைத்துண்ண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் அதை முகாம் களில் நிலவும் சாதி அரசியல் என தனியே குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் இழந்து ஏதுமற்று முகாம்களில் இருக் கும் மக்களை அவர்களுக்கான நிரந்தரமான வாழ்வாதாரத்து டன் அரசு மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.
கடைசியாக குறிப்பிட்டு சொல்ல ஏதேனும் உண்டா?
ஆம்! சிலவாரங்களுக்குமுன் இது நிகழ்ந்தது! எனது ஊரான வட்டுக்கோட்டையில் நமது பாவனையிலிருந்த பொது விளையாட்டு மைதானத்தையும் நூல்நிலையத்தையும் வெள்ளாளார்கள் அபகரித்திருக்கிறார்கள். நூல்நிலையத்தை பிடுங்கி எறிந்துவிட்டு மைதானத்தில் பல பயன் தரும் மரங் களை நட்டிருக்கிறார்கள். வேலி அடைத்திருக்கிறார்கள். 1981இல் யாழ் பொதுநூல்நிலையம் எரிக்கப்பட்டதற்கு இதை நான் ஒப்பிடவிரும்பவில்லை. ஆனால் இந்த நிலை மையை ஆரிடம் சொல்லிஅழுவது!அரற்றுவது.! ஜேர்மனி யில் அகதிகள் தொடர்பான கருத்தரங்குக்கு வந்திருந்த இலங்கைத்தூதரிடம் இதை முறையிடலாம், மனுக் கொடுக்கலாம் என யோசித்தேன்! பின்னர் விட்டுவிட்டேன். ஏன் கொடுக்கவில்ல என்று கேட்பீர்கள்! என்னிடமுள்ள தமிழ்த் தனம்தான் காரணமாக இருக்கலாம். அதை விட்டொழிக்க வேண்டும். பருத்தித்துறை அடுத்த திக்கம் என்ற ஊரிலும் இப்படி சிலநாள்முன்பு நடந்திருக்கிறது.