பேராசிரியர் அ.மார்க்ஸிடம் முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் தமிழகத்தின் உணர்ச்சிவசமான தமிழ்த்தேசியவாதியும் இல்லை. விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளனும் இல்லை. புறநிலை யதார்த்தத்தை முன்வைத்து மார்க்சியப் பகுப்பாய்வின் அடிப்படையில் உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முயல்பவன். தமிழகத்தின் ஆகப்பெரிய மார்க்சியப் படிப்பாளிகளாகவும் மனித உரிமையாளர்களாகவும் கருதிக் கொள்ளும், பரப்புரையாற்றிக் கொண்டிருக்கும் அ.மார்க்ஸினுடையதும், எஸ்.வி.ராஜதுரையினுடையதும் ஈழம் குறித்த ‘தற்போதைய’ அல்லது விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னான பார்வைகள், வழமையான தமிழர் துவேஷ இனவிஷமேறிய இலங்கை சிங்கள மார்க்சியர்களது பார்வையினை எந்தவிதத்திலும் தாண்டாத நோக்கு எனக் கருதுபவன் நான். ஈழத்தைப் பொறுத்து இவர்களுடைய மனித உரிமைப் பிரகடனங்கள் ‘பசப்பானவை’ எனக் கருதுபவன். தமிழ்ச் சூழலில் அ.மார்க்ஸின் பின்நவீனத்துவப் பன்மைத்துவப் பார்வை மற்றும் அடையாள அரசியல், எதிரியை வரையறுப்பதில் தவறும் ஒரு ‘அரைகுறைப் பார்வை’ என்று கருதுபவன். இவையெல்லாம் அரசியல் ரீதியிலான முரண்கள் என்றும், நாகரீகமாக விவாதிக்க வேண்டியவை என்றும் கருதுபவன்.  அ.மார்க்ஸிடம் இத்தகைய நாகரீகத்தையோ அரசியல் பண்பாட்டையோ எதிர்பார்ப்பது ‘மூடத்தனம்’ என்றும் கருதுபவன். அதற்கான எனது நியாயங்கள் தர்க்கபூர்வமானவை எனவும் கருதுபவன்.

இங்கு நான் அதிகமும் எழுத நினைப்பது அ.மார்க்சின் விரிவான அரசியல் குறித்தோ அல்லது அவரது கோட்பாடு எழுத்துக்கள் குறித்தோ இல்லை. விவாதங்களையும் கருத்து மாறுபாடுகளையும் எதிர்கொள்கிற அவரது ‘மனநிலை’ குறித்தும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்கிற அவரது ‘நிதானம்’ குறித்தும்தான் எனது இந்த எழுத்து. இது ஒரு கேவலமான நிலை. அறிவார்ந்த வன்முறையிலிருந்து உடல்சார்ந்த வன்முறையாகவே இது பரிமாணம் பெறும். பாரிஸ் முதல் ராமேஸ்வரம் வரை என தமிழக-புகலிட நிகழ்வுகளை அறிந்தவர்க்கு இதற்கான சான்றுகள் அவசியமில்லை. எல்லாக் கருத்து மாறுபாடுகளையும் ஜென்மப் பகையாகவும், தனிநபர் வன்மமாகவும், சாதியச் சதியாகவும் புரிந்து கொண்டிருக்கிற அ.மார்க்சின் மன அமைவுதான் இதற்குக் காரணம். அ.மார்க்ஸ் தேர்ச்சி வாய்ந்த ஒரு அரசியல் 'தந்திரோபாயவாதி'யே ஒழிய உண்மையைப் பேசுகிற 'நேர்மையாளன்' இல்லை.

அ.மார்க்சுக்கும் எனக்கும் நிலத்தகராறு ஒன்றும் இல்லை என்பதில் நான் புத்திசுயாதீனமான முடிவில் இருக்கிறேன். அவர் கருதுகிற மாதிரி அ.மார்க்சுடன் எனது ‘ஜென்மப் பகைக்கான’ அப்படியான ஆதாரம் எதுவேனும் அவரிடம் இருந்தால், அதனைத் தயவுகூர்ந்து எனக்கு ஒரு பிரதி அனுப்புமாறு அவரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அ. மார்க்ஸ் எழுதுகிறார் :

வழக்கமாக என்னிடம் 'ஜென்மப் பகை காட்டும் ஒரு லண்டன் தமிழ் எழுத்தாளர்' தனது காழ்ப்பைக் கக்கியது மட்டுமன்றி இந்நூலிலுள்ள ‘புதுவிசை’ கட்டுரையை மார்க்சிஸ்ட் கட்சி ஏடு என்பதால் அதற்குத் தக நான் பேசியுள்ளேன் என்பதாகக் ‘கண்டுபிடித்து’த் தனது வழக்கமான மூடத்தனத்தையும் (இந்த வார்த்தையை நான் மிகவும் கவனமாகவே இங்கு பிரயோகிக்கிறேன்) வெளிப்படுத்தியிருந்தார். பிரதியைக் கூர்ந்து கவனிக்கும் அரைகுறை அறிவுடையவருக்குக் கூட அது வெளிநாட்டுத் தமிழ் வாசகர்களை மனங்கொண்டு வெளிநாட்டிலிருந்து வரக் கூடிய இதழொன்றுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். லண்டனிலிருந்து வெளிவரும் பவுசரின் எதுவரைக்காக எழுதப்பட்ட அக்கட்டுரை புதுவிசையில் வெளிவர நேர்ந்தது ஒரு தற்செயல். அது அந்த இரு இதழாசிரியர்களுக்கும் தெரிந்த விஷயம். பிரதி என் கைக்கு வராமல் அச்சகத்திலேயே, என்னுடைய ஒப்புதலுடன் மாற்றி அச்சிடப்பட்ட கட்டுரை அது (அ.மார்க்ஸ் : ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் : புலம் : நவம்பர் 2009 : பக்கம் : 10).

அ.மார்க்சின் மேற்கோளை வாசிக்க உண்மையில் எனக்குத் தலைசுற்றுகிறது. அ.மார்க்சின் நிதானமற்ற ‘நிர்மூடத்தனமான எழுத்து’ (இந்த வார்த்தையை நான் மிக-மிக-மிகக் கவனமாகவே இங்கு பிரயோகிக்கிறேன்) என்பதற்கு அற்புதமான எடுத்துக்காட்டு இதுதான். எனது பெயர் குறிப்பிடாமல் எழுதுகிற அ.மார்க்சின் ‘தூய்மை மற்றும் தீண்டாமை மனநிலை’ குறித்தெல்லாம் நான் இங்கு கட்டுடைப்பைச் செய்ய விரும்பவில்லை. ‘அழுக்கு, அருவருப்பு, வன்மம்’ குறித்தெல்லாம் அதிகம் பேசத் தெரிந்த ‘மேதை’ அவர் என்பதால் அந்த ‘ஏரியாவை’ அவருக்கே விட்டுவிடுகிறேன்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களே, நான் எழுதுவதை ‘ஆளாளுக்கும் பிரதேசத்துக்கும் எல்லாம் தகுந்த மாதிரி’ எழுதுவதில்லை. உங்களுக்கு அது கைவந்த கலை போலத் தெரிகிறது. இருக்கட்டும். வெளிநாட்டு வாசகருக்கு எழுதிய அந்தக் கட்டுரையை, எந்த வாசகர் குறித்தும் உங்களுக்கு உண்மையிலேயே ‘சாதாரண அறிவு’ இருக்குமானால், அத்தனை 'தெளிவு' இருக்குமானால், எதற்காக ஐயா உங்கள் ‘ஒப்புதலுடன்’ தமிழகத்திலுள்ள ‘புதுவிசை’யில் அக்கட்டுரை வரவேண்டும்? ‘

"சுய நிர்ணய உரிமையையே மறுப்பது எப்படி மார்க்சியமாக இருக்க இயலும்? ராஜபக்சேவே விரும்பி தமிழ் ஈழம் கொடுத்தால் கூட நீங்கள் போய் தடுத்துவிடுவிர்கள் போல உள்ளதே?" (அ.மார்க்ஸ் : ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் : புலம் : நவம்பர் 2009 : பக்கம் : 11)

என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையிலேயே அவர்களைப் பார்த்துக் கேட்கிற நீங்கள், அவர்களது கட்சியின் அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக ‘புதுவிசை’ ஆதவன் தீட்சண்யா உங்கள் கட்டுரையை தமிழகத்தில் ‘வேண்டி விரும்பிப் பிரசுரித்ததில்’ அரசியல் இல்லையா? அதைத் தாங்கள் ‘ஒப்புதலுடன்’ பிரசுரிக்க அனுமதித்ததில் அரசியல் இல்லையா? ‘ஓவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு அரசியல்’ என்று நீங்கள் சொல்வதெல்லாம் வெறும் ‘பீலா’தானா?

இது ஒரு புறமிருக்கட்டும். இதுவும் நீங்கள் சொன்னதுதான் :

தமிழ் ஈழப் பிரச்சினையில் தொண்டுநிறுவனங்கள் புகுந்து குட்டை குழப்பும் நிலை குறித்தும் நாம் எச்சரிக்கையாகவே இருப்பது அவசியம். இருமாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பல லட்சம் டாலர் செலவில் நடத்தப்பட்ட மாநாடு, இன்னும் இது போன்ற பெரும் நிதிப் பின்புலத்துடன் நடத்தப்படும் பல மாநாடுகளின் உள்நோக்கங்கள் குறித்த ஆய்வு நமக்குத் தேவை (அ.மார்க்ஸ் : ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் : புலம் : நவம்பர் 2009 : பக்கம் : 27).

பேராசிரியர் அவர்களே, இந்த மாநாடு சம்பந்தமான ஆய்வறிக்கை எதில் வந்தது என தங்களுக்குத் தெரியுமா? பவுசரின் ‘எதுவரை?’யில்தான் வந்தது. அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் பவுசர் ஜெர்மனி மற்றும் திருவனந்தபுரம் என நடந்த இந்த நிதிநிறுவன மாநாடுகளின் பிரதான பங்கேற்பாளர். ‘எதுவரை?’ கட்டுரையில் இலங்கை சிவில் சமூக உரிமைகள் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறது. நீங்கள் அவமானகரமானது எனச் சுட்டிக் காட்டுகிற அரசியல் நிலைபாடுகள் கொண்ட இரு இதழ்களின் ஆசிரியர்களும் ‘தங்களுக்குள் உடன்பாடு கண்டு’, தங்களது மேலான ‘ஒப்புதலுடன்‘ நீங்கள் ஒரு இதழுக்கு எழுதிய கட்டுரை இன்னொரு இதழில் ‘மாற்றி அச்சிடப்பட்டு வருவதன்’ பின்னால், ‘எதுவரை?’ ஆசிரியருக்கோ, ‘புதுவிசை’ ஆதவன் தீட்சண்யாவுக்கோ அல்லது உங்களுக்கோ அரசியல் நோக்கங்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள்? சரி, அதுதான் இல்லை என வைத்துக் கொள்வோம். ‘புதுவிசை’ ஆசிரியரும் ‘எதுவரை?’ ஆசிரியரும் நீங்கள் சொல்கிற திருவனந்தபுரம் மாநாட்டுக்கு இணைந்து சென்றது ‘தற்செயலானதானதாகத்தான் இருக்கும்’ என நீங்கள் சொல்கிறீர்களா?

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களே, இதுவும் நீங்கள் சிந்துகிற மனித உரிமை வார்த்தைகள்தான் :

அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பெரும் ஊடக வலைப்பின்னல்கள் ஆகியவற்றை எதிர்த்து, எவ்விதப் பெரிய நிதி ஆதாரங்களுமின்றி களத்தில் நிற்கிற மனித உரிமை அமைப்புகளின் ஒரே பலம் அவற்றின் நம்பகத்தன்மையே. இந்த நம்பகத்தன்மையை அவை இருவகைகளில் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசும் ஊடகங்களும் ஆயிரம் நாவுகளால் பிரச்சாரம் செய்போதும், எந்த ஒரு பிரச்சினையின் மீதும் மனித உரிமை இயக்கங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அதுவே உண்மையாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவை மக்கள் மத்தியில் பெற வேண்டும். எந்த ஒரு குறிப்பான மக்கள் இயக்கம் அல்லது அரசியல் கட்சியின் முகப்பு அமைப்பாக அவை இல்லாததோடு, அப்படி இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையிலும் அவை நடந்துக்கொள்வது அவசியம். இரண்டாவதாக அவை நிதி ஆதாரங்களில் சுயேச்சையாக இயங்க வேண்டும். வெளியிலிருந்து எந்தவிதமான நிதி உதவியையும் அவை பெறலாகாது. பெரிய அளவில் வெளிநாட்டு நிதி உதவியுடன் ஒருவகை கார்ப்பரேட் தன்மையிலான, அரசுக்கு எதிராகத் தீவிர வசனங்களை உதிர்த்துக்கொண்டே அரசுடன் இணைந்து செயல்படுகிற தொண்டு நிறுவனத்தன்மையிலான மனித உரிமை அமைப்புகள் உருவாகியுள்ள நிலையில் நிதி ஆதாரம் குறித்த இந்தக் கவனம் முக்கியமானது (சிவில் உரிமைகள் குறித்த பன்மாநிலக் கருத்தரங்க அழைப்பிதழ் : அ.மார்க்ஸ் : ஜனவரி 2009).

மெய்சிலிர்க்கிறது பேராசிரியர் அவர்களே. திருவனந்தபுரம் பன்னாட்டு நிதிநிறுவன மாநாட்டில் ‘சிறப்புரை’யாற்றியது மட்டுமல்ல, அந்த அமைப்பின் சிங்கள மொழி நிர்வாகிகளில் ஒருவரை மனிதஉரிமைக் காவலர் என்று ‘பச்சைப்பொய்’யை எழுதிய எஸ்.வி.ராஜதுரையை பிரதானப் பேச்சாளராக அறிவித்துவிட்டு, அந்தக் கூட்டத்தின் நோக்கமாக மேற்கண்ட விஷயத்தைச் சொல்கிறீர்கள். யாருக்கு இதைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் பன்னாட்டு நிதிநிறுவனம் எனப் பேசுகிற அந்த ஜெர்மானிய அமைப்பின் நிர்வாகிதான் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதி, தனக்கும் விடுதலைப்புலிப் போராளிகள் சிங்கள ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வு தொடர்பான ஒளிநாடா வெளியானதற்கும் சம்பந்தமில்லை (http://srilankandiasporablog.wordpress.com/2009/10/19/statement) எனச் சொன்னார். எஸ்.வி.ராஜதுரை அந்த மனித உரிமை மீறல் ஒளிநாடாவுக்கும் அவருக்கும் முடிச்சுப்போட்டு, அவரை மனித உரிமைக் காவலராகச் சித்திரித்து ‘உயிர் எழுத்து’ இதழில் கட்டுரை எழுதினார்.

அ. மார்க்ஸ் அவர்களே, மனித உரிமை, பன்னாட்டு நிதி நிறுவனங்கள், சுயநிர்ணய உரிமை போன்றன குறித்த உங்கள் எழுத்துக்கும் உங்கள் நடத்தைக்கும் எத்தனை முரண்பாடுகள் இருக்கிறது பாருங்கள்! எழுத்துக்கும் நடைமுறைக்குமான இந்த முரணை நான் சுட்டிக் காட்டுவது மூடத்தனமாக உங்களுக்குப் படுமானால் உங்களது ஈழம் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் கயமை நிறைந்தவையும் நிர்மூடத்தனமானவையும் என நான் தயங்காமல் சொல்வேன்.

அ.மார்க்ஸ் அவர்களே. தமிழகத் தேசியர்கள் குறித்த உங்களது அறிவுறுத்தலை எதுவரையினூடே புகலிடத் தமிழர்களுக்கு வழங்குபவர்கள் உங்களது புகலிட ஆதரவாளர்கள். உங்களது புகலிட ஆதரவாளர்களின் புகலிட அரசியலைத் தமிழகத்திற்குத் தருபவர் நீங்கள். உங்கள் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதவன் தீட்சண்யாவும் தோழமைச் சக்திகளானது எப்படி? எதன் அடிப்படையில்? பதில் மிக எளிமையானது. ஆதவன் தீட்சண்யா உங்கள் அரசியலுக்குத் தேவையானவராக இருக்கிறார். பவுசரும் உங்கள் அரசியலுக்குத் தேவையானவராக இருக்கிறார். இவர்கள் இருவரது அரசியலுக்கும் நீங்கள் தேவையானவராக இருக்கிறீர்கள். இதன் பின்னுள்ள, ‘ஒவ்வொன்றின் பின்னுமுள்ள அரசியல்’ என்னவென்று சொல்வீர்களா?

அப்புறமாக இந்தக் கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி உங்கள் கட்டுரைகளில் நீங்கள் ‘நாம்-நாங்கள்’ என்று எழுதுகிறீர்கள். எனக்கு ஒரே குழப்பும். புதுவிசையில் சுகன், ஷோபா சக்தி, சுசீந்திரன் போன்றவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள். புகலிடத்தின் தலித் மேம்பாட்டு முன்னணிக்காகத் தமிழகத்தில் பேசுகிறீர்கள். மகிந்த அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மகிந்த ஆதரவு அரசியல் கட்சியின் முதலமைச்சர் சந்திரகாந்தன் பிள்ளையான் போன்றவர்களின் ஆதரவுகொண்ட அரசியல் செயல்பாட்டாளர்களின் பத்திரிக்கைகளில் எழுதுகிறீர்கள். அவர்களது மேடைகளில் பேசுகிறீர்கள். பிற்பாடு மகிந்த ஆதரவும் அல்லாத, விடுதலைப் புலிகளும் அல்லாத ‘மூன்றாவது பாதை’ பற்றிப் பேசுகிறீர்கள். தலித் மேம்பாட்டு முன்னணியின் முன்னோடியான தேவதாசனும், புத்தபகவானின் தீட்சைபெற்ற சுகனும் மகிந்தாவை ஆதரிப்பதாகச் சொல்கிறார்கள். சுகன் ஒரு படி மேலே போய் கருணாவுக்கு வாழ்த்துப்பாவும், ஜனநாயக மகுடமும் எடுத்துக் கொடுக்கிறார். நீங்கள் ‘நாம்-நாங்கள்’ என்று சொல்வதில் இவர்களில் எவரெவர் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டுப் பேசுங்கள். கேள்வியும் நானே பதிலும் நானே என்பது சிவாஜிகணேசன் பாணி நடிப்புக்குப் பொருந்தும், அரசியலுக்குப் பொருந்தாது. பிரதி பற்றி அதிபிரக்ஞை கொண்ட தாங்கள் தயவுகூர்ந்து இந்தத் தெளிவை முன் வைத்துவிட்டு, பிற்பாடாக, ‘நாம்-நாங்கள்’ அப்புறமாகத் ‘தோழர்களே’ என்றெல்லாம் விளித்து எழுதப் பழுகுங்கள்.

அ.மார்க்ஸ் அவர்களே, உங்களது மனித உரிமை வங்குரோத்திற்கு இன்னொரு ஸ்தூலமான எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்கள். அயர்லாந்தின் டப்ளின் மனித உரிமை விசாரணை பற்றி அறிந்திராவிட்டாலும் ராஜேந்திர சச்சாரை உங்களுக்குத் தெரியும். இந்திய இஸ்லாமிய மக்களின் நிலை குறித்த அவரது அறிக்கையை நீங்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். ராஜேந்திர சச்சார், நாவல் எல் சாதவி, டெனிஸ் ஹாலிடே, பிரான்சுவா ஹ_ரட் போன்றவர்களை உள்ளிட்ட ‘பெர்மனென்ட் பீபிள்ஸ் டிரிபியூனல்’ தனது டப்ளின் நகர விசாரணைகளையடுத்து (http://jdsrilanka.blogspot.com/2010/01/dublin-goes-in-for-kill.html), இலங்கை அரசாங்கம் ‘மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்’ புரிந்திருக்கிறது, ‘போர்க்குற்றங்கள் புரிந்திருக்கிறது’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு தொடர்பாக மேலதிகமாக ஆய்வுசெய்யப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு தனது விசாரணைகளின் பின் தெரிவித்திருக்கிறது. இதனை ‘மேற்கத்திய அமெரிக்கச் சதி’ என இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இதனை விடவும் முட்டாள்தனமான ஒரு கூற்று இருக்க முடியாது. 'பர்மனென்ட் பீபிள்ஸ் டிரிபியூன்' இதே அளவில் மேற்கொண்ட இரண்டு சர்வதேசிய விசாரணைகள் பிரசித்தமானது. நிகரகுவாவில் கன்ட்ராவுக்கு அமெரிக்கா செய்த உதவிகள், கொலம்பியாவில் கெரில்லாக்களுக்கு எதிரான அரசபடைகளின் வெறியாட்டங்கள் குறித்தும் அவர்கள் விசாரணை செய்து, பிரதானமாகக் கொலம்பிய அரசையும் அமெரிக்காவையும் அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினையிலும் விடுதலைப் புலிகள்-இலங்கை அரசு இடையிலான பேச்சவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கான சர்வதேசப் பொறுப்பை அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்கவேண்டும் என அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். என்ன காரணம்? அமெரிக்காவும் பிரிட்டனும் பயங்கரவாதிகள் என விடுதலைப் புலிகளைத் தடைசெய்தமை பேச்சுவார்த்தைகளைப் பலவீனப்படுத்தியது என அவர்கள் சொல்கிறார்கள்.


(Permanent Peoples Tribune Judges)

இலங்கைப் பிரச்சினையில் செயல்பட்ட இந்த விசாரணை ‘திட்டவட்டமாக வெளிப்படுத்திய’ குணாம்சத்தையே நான் இங்கு முக்கியமாகக் குறிப்பிடுகிறேன். இதில் இருக்கிற பிரச்சினைகள் இரண்டு. இலங்கை அரசு மனித உரிமை மீறல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் புரிந்திருக்கிறது என்பது ஒன்று. பிறிதொன்று விடுதலைப் புலிகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களை அவர்கள் பிணைகைதிகளாக வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள். ஓரு மனித உரிமை அமைப்பு என்பது அல்லது மனித உரிமையாளர் என்பவர் இங்கு மேற்கொள்ளும் தேர்வு எத்தகையது? இந்தக் கண்டனங்கள் அல்லது விசாரணைகள் குறிப்பிட்ட இரண்டு அமைப்புக்களிடமும் (விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு) கோருவது என்ன? இந்தக் குறிப்பிட்ட நெருக்கடியில் சர்வதேச நிறுவனங்களுக்கும், அறமுறைகளுக்கும் கூடுதல் பொறுப்புள்ளவர் எவர்? அரசிடம் குற்றங்களுக்கான ஒப்புதலையும் அரசியல் மாறுதலையும் கோரலாம். விடுதலைப் புலிகளிடம் குற்ற ஒப்புதலையும் அரசியல் மாறுதல்களையும் கோரலாம். இந்த இரண்டு அமைப்புக்களிலும் இறையாண்மை கொண்டது மற்றும் சர்வதேசியத்திற்கு கூடுதல் பொறுப்புள்ளது, ‘நிரந்தரமானது’ எனும் அளவில் இலங்கை அரசுக்கே அதிகப் பொறுப்பு உண்டு. விடுதலைப் புலிகள்  தலைமை அழிந்துவிட்டது. ஆனால் இலங்கை அரசு இருக்கிறது. அதனது அத்தனை ‘மனிதகுல விரோதக் கொள்கைகளின் அமைப்பு வடிவமாக’ அது இருக்கிறது. இதனைத்தான் டப்ளின் விசாரணையாளர்கள் முன்னிலைப்படுத்தினார்கள்.

தமிழகத்தின் மனித உரிமை மன்னராகத் தனக்குத் தானே முடிசூடிக் கொண்ட அ.மார்க்ஸ் இப்பிரச்சினையில் எங்கே நிற்கிறார்? அவரது பொன்மொழி இது :

சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் நிறுத்திவைத்திருந்த உண்மையை உலகின்முன் யாராலும் மறைக்க இயலவில்லை. இதன் விளைவாகவே ராஜபக்சே அரசு நடத்திய இனப்படுகொலை சர்வதேசிய அரசியலகராதியில் ‘இனப்படுகொலையாக’ இடம்பெற இயலாமலும் போனது. மக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதானாலேயே ‘நியூரம்பர்க்’ மாதிரியிலான விசாரணை ஒன்றிற்கும் இன்று வழியேயில்லாமற் போயுள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பகைமறப்புச் செயல்பாடுகள் (reconciliation) ஒன்றே இன்று இலங்கையில் காரிய சாத்தியமாக உள்ளது. (அ.மார்க்ஸ் : அரசு இறையாண்மை ஆயுதப் போராட்டங்கள் : புலம் : செப்டம்பர் 2009 : பக்கங்கள் 23-24).

பகை மறப்புச் செயல்பாடுகள் ‘ஒன்றே’ இன்று சாத்தியம் என்று சொல்ல எதற்கு மனித உரிமை முகமூடி? பகை மறப்புச் செயல்பாடுகள் எப்படிச் சாத்தியம்? அரசையும் நீதியையும் சட்டத்தையும் கொலைச் சாதனமாக்கி விட்டிருக்கிற கொலை அமைப்பில் எவ்வாறு பகைமறப்புச் சாத்தியம்? இந்தப் பகைமறப்புக்கு முன்பாக, முன்நிபந்தனையாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை, இனக்கொலை முஸ்தீபுக்கான குற்றங்களை இலங்கை அரசு ஒப்பவேண்டும் எனும் பரப்புரையை, வலியுறுத்தலை ஏன் அ.மார்க்ஸ் முக்கியப்படுத்திப் பேசவில்லை? விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதிக் குவித்திருக்கிற, கூட்டங்கள் கூட்டியிருக்கிற, புகலிடக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிற அ.மார்க்ஸ், ஏன் இலங்கை அரசு தொடர்பாக ‘நான் இப்படிச் செய்தேனாக்கும் பார்’ எனத் துண்டறிக்கைகளைத் தொகுத்துப் புத்தகம் போடவில்லை? ஏன் எதற்கெடுத்தாலும் விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் தவறுகள் செய்தவர்கள்தான். அதனையும் பேசவேண்டும். ஆனால் அதனையே முழு நேர அரசியலாகச் செய்து கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலி எதிர்ப்பையே முழு நேர அரசியலாகச் செய்து கொண்டிருந்தவர்கள்தான் அ.மார்க்சின் புகலிட நண்பர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதைத்தான் செய்து கொண்டிருந்தது. அ.மார்க்சும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார். விநோதமான சில துண்டறிக்கைகளை அ.மார்க்ஸ் ‘அரசு இறையாண்மை ஆயுதப் போராட்டங்கள்’ எனும் குறும்புத்தகத்தில் கொடுத்திருக்கிறார். நிஜத்தில் பன்னாட்டு ஆர்ப்பாட்டங்கள் எனும் செயல்பாட்டை முன்னெடுத்தவர் புகலிட நண்பர் சேனன். சேனனது தமிழக வருகையை அடுத்து அதனைத்தான் அ.மார்க்ஸ் தமிழகத்தில் முன்னெடுத்தார். சேனன் அப்போது அ.மார்க்சின் நண்பர்களாக புகலிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் (சேனன் : யுத்தத்தை எதிர்க்காத - புலத்து புலி எதிர்ப்பு மையம் :  26 பிப்ரவரி 2009) பற்றி என்ன சொல்கிறார்? :

"சிறு பத்திரிக்கைச் சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்குப் புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிகக் கவனமாக இருந்து வந்துள்ளார்கள். தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.

இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்து இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் - மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது. சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்களப் பேரினவாதமும் தமிழ்த் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பசீரின் கவிதைப் புத்தகத்தின் உயிர்நாடி பேசப்படவேயில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்புத் தமிழர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய  - சிலசமயம் 90களுக்கு முந்திய - பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஏற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.

போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. புலிகள் வழங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் போர்முளக்களுக்குள்ளால் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை. பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.

தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். புலத்தில் தலித்தியம் சார்ந்த விழிப்பு எழுப்பியமைக்கு இந்த பிதாமக்களே காரணம். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தே இல்லாத தனக்கு முந்திய போர்முலாக்களை பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலதுசாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும். இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் - தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் - ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்குப் பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.

புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள். மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் - பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரினவாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது. "

சேனன் தெளிவாகத்தான் எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடுகிற புலத்துப் புலியெதிர்ப்புப் புண்ணாக்குகள் யார் என்பது அவருக்கும் தெரியும். இதனை வாசிக்கிற புகலிட யதார்த்தம் புரிந்தவருக்கும் தெரியும். ஆனாலும் சேனனுக்கு தமது ‘முன்னாள்’ நண்பர்களான ஷோபா சக்தி, சுகன் என இன்னபிறர் பற்றி நேரடியாக எழுதத் தயக்கமும் முன்னாள் நினைவுகளும் தடையாக இருக்கிறது. ஆகவே கட்டுரையின் இறுதியில் இப்படியும் ஒரு குறிப்புப் போட்டார் :

பின்குறிப்பு : அவர்கள்-இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை - பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றைப் பிரசுரிக்க எந்த தயக்கமும் இல்லை (சேனன் : யுத்தத்தை எதிர்க்காத - புலத்து புலி எதிர்ப்பு மையம் :  26 பிப்ரவரி 2009 )

என்றாலும் பின்னூட்டங்களில் சுட்டிக்காட்டிய பின்னும் இறுதிவரையிலும் சேனன் அவர்களது பெயர்களை எழுதவேயில்லை. காரணம் :  சேனன் அன்று மிகச் சரியான அரசியல் தூரதரிசனத்துடன் உலகெங்கிலும் முன்னெடுத்த நிகழ்ச்சியை, ஒரு முரண்நகையாக ஷோபா சக்தி, சுகன் போன்ற ‘புகலிடத்து புலியெதிர்ப்புப் புண்ணாக்குகளின்’ தமிழகத்துப் பரப்புரையாளர் அ.மார்க்ஸ் தமிழகத்தில் முன்னெடுத்தார். தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தமிழ்த்தேசியர்களும் முன்னெடுத்த ‘இலங்கை-இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ஒரு மசிரும் புடுங்கமுடியாது’ என்று ஷோபா சக்தி தனது இணையதளத்தில் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. ஷோபா சக்தி, சுகன் போன்றவர்களோடு சேர்ந்து ‘நான்-நாங்கள்’ எனப் பேசிக் கொண்டிருக்கிற அ.மார்க்சுக்குத் தான் எத்தனை முகங்கள்? பிறர் இலங்கை-இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருந்தபோது இவைகளால் ஒரு மசிரும் புடுங்கமுடியாது என்று எழுதிய ஷோபா சக்தியின் வலைத்தளத்தில் அ.மார்க்ஸ் முன்னின்று நடத்திய இலங்கை-இந்திய எதிர்ப்புப் பன்னாட்டு ஆர்ப்பாட்டச் செய்தி வெளியானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரதும் பிற தமிழ்த் தேசியர்களதும் ஆர்ப்பாட்டங்களாலும், முத்துக்குமார் போன்றவர்களது மரணங்களாலும் புடுங்க முடியாத எதனை அ.மார்க்ஸ் புடுங்கினார் என்பது ஷோபா சக்தி போன்ற மூடத்தனமான ‘புலியெதிர்ப்புப் புண்ணாக்குகளுக்கே’ வெளிச்சம்! சந்தர்ப்பவாத அரசியலின் உச்சமாகவே அ.மார்க்ஸின் தமிழக ஆர்ப்பாட்டங்கள் இருந்தன. வெகுமக்களின் தன்னெழுச்சிக்கு முன்பாகத் தனது அடையாளத்தைத் தக்கவைக்கும் முயற்சியன்றி அ.மார்க்சின் ‘அந்தர்பல்டி’களுக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை.

அ.மார்க்ஸ் தமிழகத்தில் எவர் பக்கம் நின்றார் என்பதற்குப் பெரிய ஆதாரங்கள் எல்லாம் தேவையில்லை. இந்திய அரசை எதிர்த்துப் போராடியவர்களை, அவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் எனும் காரணத்திற்காக நக்கல் செய்து கொண்டிருந்தார் அ.மார்க்ஸ். மனிதஉரிமையாளர்களை அவமானப்படுத்தினார். தன்னெழுச்சியாகப் போராடப் போனவர்களை அவமானப்படுத்தினார். தமது அடையாள அரசியலின் வழி அல்லது பன்மைத்துவ நோக்கின் வழி விடுதலைப் புலிகளைச் சாதிவெறியர்கள், இந்துத்துவவாதிகள், பாசிஸ்ட்டுகள் எனப் பேசியவர்களோடு அணிசேர்ந்து பேசிக்கொண்டிருந்தார். டப்ளின் விசாரணையும், சுயாதீன ஐக்கிய நாடுகள் சபை விசாரணையும் உறுதிப்படுத்திய போராளிகள் சுட்டுக் கொல்லப்படும் ஒளிப்பதிவைப் பொய்யானது என இவரது சீடர் சுகன் சொல்லிக் கொண்டிருந்தபோது, சுகன் மீதான விமர்சனங்களிலிருந்து அவரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். புகலிடத்திலும் இவர்களோடுதான் அ.மார்க்ஸ் அணிசேர்ந்திருந்தார்.

நான் விடுதலைப் புலிகளைச் சாதியவாதிகள், இந்துத்துவவாதிகள் என்பதனை ஒப்புவதில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டார்கள், ஏகப் பிரதிநிதித்துவம் பேசினார்கள், மக்களை பிணைகைதிகள் ஆக்கினார்கள், பயங்கரவாதம் எனச் சொல்லத்தக்க சிற்சில செயல்களையும் செய்தார்கள். அவர்கள் முழுக்குவுமான பயங்கரவாதிகள் அல்ல என்பதுவே எனது நிலைபாடு. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக நாம் சித்திரிக்க முடியுமானால் அரசியல் எதிரிகளை அழிப்பதை ஒரு அரசியல் நிலைபாடாகக் கொண்டிருந்த மாரக்சிய வழியிலான பல விடுதலை அமைப்புக்களை, கம்யூனிஸ்ட் கட்சிகளை, மியூனிக் தாக்குதலை நடத்திய பாலஸ்தீனப் போராளிகளை, ஜெர்மன் செம்படை அணியினரை வரலாற்று ரீதியில் பயங்கரவாதிகளாகவே நாம் வரையறுக்க வேண்டும். அமைப்பு எனும் அளவில் ஸ்டாலினியச் சீரழிவின் வக்கரித்த வடிவம் எனவே நான் விடுதலைப் புலிகள் அமைப்பைப் புரிந்து கொண்டிருக்கிறேன். புகாரின் விசாரணை முதல் டிராட்ஸ்க்கி படுகொலை வரை நாம் புரிந்து கொண்டால், மாத்தையா விசாரணை முதல் அமிர்தலிங்கம் கொலை வரை நாம் புரிந்து கொள்ளலாம். ஸ்டாலினியம் பற்றியோ அல்லது விடுதலைப் புலிகள் பற்றியோ எமது விமர்சனம் என்பது இனியான புரட்சிகர அமைப்புக்கள் குறித்த தேடலுக்கே நம்மை இட்டுச் செல்ல வேண்டும்.

அ.மார்க்ஸ் அவர்களே, நான் தெளிவாகச் சொல்கிறேன். உங்களின் மனஅமைவின் மீது எனக்கு அருவருப்பும், உங்களது முத்திரை குத்தும் விமர்சன அணுகுமுறையின் மீது எனக்குத் தார்மீகக் கோபமும் உண்டு. காரணம் எல்லா அரசியல் மற்றும் கருத்து முரண்களையும் நீங்கள் உங்களது தனிநபர் ஆளுமைக்காகவும் அரசியல் தந்திரோபாய நலன்களுக்காகவும் தனிநபர் பகைமையாகவும், சாதிரீதியான நிந்தனையாகவும், தனிநபர் ஆளுமைகளைச் சிதைப்பதாகவும் நீங்கள் மேலெடுத்துச் செல்கிறீர்கள். கருத்துவிவாதங்களில் இதே குணநலன்களுடன் அடியாள் அரசியலையே புகலிடம்-தமிழகம் என இரு இடங்களிலும் இலக்கிய-மற்றும் அரசியல் விவாதங்களில் நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். இதனது நீட்சி இப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் சென்று சேர்ந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உங்களிடமும உங்களது புகலிட-தமிழக சீடர்களிடமும் இதனை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், உங்கள் வன்மம் - ஷோபா சக்தியின் சொற்களில் சொல்வதானால் - எனது ‘அரைமசிரைக் கூட அசைக்க முடியாது’ என்பதைத் திடமனதுடனும் தெளிவாகவும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

பாரிசிலிருந்து வந்து கொண்டிருந்த ‘அம்மா’ இதழ் விவாதம்தான் என்னளவில் உங்களது விகார மனம் வெளிப்படத் துவங்கியதன் தொடக்கம். பின்நவீனத்துவம் பற்றி ‘அம்மா’ இதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். ராஜ்கௌதமன், ரவிக்குமார் போன்றவர்கள் முன்வைக்கும் சில அரசியல் கருத்துக்களையும் உங்களது அடையாள அரசியலின் போதாமைகளையும் அதில் நான் விமர்சித்திருந்தேன். அதற்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். அது ஆரோக்கியமானது என நான் நினைக்கவியலா வகையில் இருந்தது. அதில் உங்கள் விஷமத்தனம் வெளிப்பட்டிருந்தது. என்ன எழுதியிருந்தீர்கள் அப்படி? கோவையில் கோவைச் செழியன் கொங்கு வேளாளர் அமைப்பைக் கட்டுவது போல, நான் புகலிடத்தில் அதே வேலையைச் செய்வதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள். உங்களை அறிந்தவர்களுக்கு இந்த அவதூற்றில் புதியது ஏதும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். ரவிக்குமாருடனான கருத்து மோதலில் அவரது வரவு செலவுகளில் டிரான்ஸ்பாரென்சி வேண்டுமென எழுதினீர்கள். ஞானியுடனான கருத்து மோதலில் பார்ப்பானுக்குக் குண்டிகழுவ வாளி தூக்குகிறவர் எனப் பேசித் திரிந்தீர்கள். இப்போது தோழர் தியாகுவுக்கு இந்துத்துவப்பட்டம் கட்டுகிறீர்கள். இதையெல்லாம் பார்க்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது.

நீங்கள் உங்களை தலித்தியக் காவலராகவோ இஸ்லாமியக் காவலராகவோ வரித்துக் கொள்வதில் எவருக்கும் ஆட்சேபணை இருக்க நியாயமில்லை. ஆனால் உங்களோடு கருத்து விவாதம் மேற்கொள்கிறவர்கள் அனைவரையும் இந்துத்துவவாதிகள் என்பதும் தலித்திய விரோதிகள் என்பதும் சாதியவாதிகள் என்பதும் உங்களது கயமை குணம் என்கிறேன் நான். உங்களது இந்த அவதூறு முத்திரையைத் தொடர்ந்து, உங்களது சீடர்களான ஷோபா சக்தியும், சுகனும் இதே பாணி தாக்குதலையும் அவுதூறுகளையும் மிரட்டலையும் என் மீது பிரயோகித்தார்கள். இதற்கெல்லாம் ஆதி காரணம் உங்களது அற்பமான குணம் அல்லவா? உங்களது அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக கருத்துமாறுபாட்டாளர்களை முத்திரைகுத்திச் சாய்ப்பது உங்களது அற்பமனம் அல்லவா?

இந்துத்துவவாதி என்றும் தலித்திய விரோதி என்றும் வக்கிரமாக எழுதிச்செல்லும் உங்களுக்கு உங்கள் மீதான எனது அருவருப்புணர்ச்சிக்கு முக்கியமான காரணம் சொல்ல வேண்டும். நீங்கள் ஒருத்தர்தான் தலித்தியத்திற்கும் இஸ்லாமிய மக்களின் உரிமைக்கும் கத்தைகட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நிறப்பிரிகைக் கூட்டுவிவாதங்களையும் கருத்தரங்குகளையும் நடத்திக் கொண்டிருந்தபோது கோவையில் நான் சார்ந்திருந்த பகத்சிங் இளைஞர் மன்றத் தோழர்களும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்களும், கோவை மருத்துவக் கல்லூரி, சிஐடி பொறியில் கல்லூரி போன்றவற்றில் அன்று உக்கிரம் பெற்றிருந்த தலித் மாணவர்களுக்கு எதிரான கொங்கு வேளாளர்களின் வன்முறையை எதிர்த்து, அதே வன்முறையைக் கைக்கொண்டு நாங்கள் எதிர் இயக்கம் நடத்திக் கொண்டிருந்தோம். கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களான நண்பர்கள் எம்.எஸ்.மணி, அன்பழகன், மனோகரன் போன்றோர் இதில் பங்கேற்றார்கள். வேலாண்டிபாளையும் இன்றைய ‘சங்கமம்’ தோழர்கள் அதில் பங்குபற்றினார்கள். கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன், காலஞ்சென்ற எனது அன்புத் தோழன் ஜெகநாதன், தோழர்கள் லெனின், சௌந்தர்ராஜன், கோவை வேலாண்டிபாளையும் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தோழர்கள் இதில் பங்கு பற்றினார்கள். இதுதான் கொங்கு வேளாளர்களின் ஆதிக்க வன்முறையை எதிர்த்து எமது செயல்பாடு. ஆனால் கொங்கு வேளாளர் வேலையை நான் செய்கிறேன் என எழுதுகிறீர்கள். எவ்வளவு அற்பமான-அவமானகரமான-கேவலமான மனிதர் நீங்கள்!

நீங்கள் இப்படி எழுத என்ன காரணம்? உங்களது அதிகாரத்தையும் புகலிட புலியெதிர்ப்பு போலி தலித்தியத்தையும் நான் தொடர்ந்து தோலுரித்து வந்ததுதான் காரணம். முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. எங்கே உங்கள் புகலிட தலித்தியம்? எங்கே உங்கள் புகலிட விளிம்பு நிலை அரசியல்? யாரோடு உங்களது புகலிட தலித்திய விளிம்புநிலையாளர்கள் நிற்கிறார்கள்? இதற்கு ஒரே பதில் : மகிந்தாவின் பக்கம்தான் உங்களது நண்பர்கள் இன்று நடைமுறையில் நிற்கிறார்கள். மூன்றாம் பாதைதான் உங்கள் பாதை என்று நீங்கள் எங்களுக்குக் கதை அளந்து கொண்டு இருக்கிறீர்கள்.

அடையாளங்கள் என்பது இரண்டு வகை என்பார் பின்நவீனத்துவக் கோட்பாட்டை மார்க்சிய நெறியில் புரிந்துகொள்ள முயன்ற பிரெடரிக் ஜேம்சன். ஒன்று ‘இயல்பிலேயே’ ஒடுக்கப்பட்ட அடையாளங்களின் மீது எழும் அரசியல். பிறிதொன்று ‘கட்டமைக்கப்படும்’ அடையாளங்களின் மீது கட்டப்பெறும் அரசியல். இயல்பான அடையாள அரசியல் ஒடுக்குமுறை அமைப்புகள், நிறுவனங்கள் போன்றனவற்றை எதிர்த்து தெளிவான வரையறையில், திட்டமிட்டு அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்ளும். புகலிட தலித்தியம் என்றும் விளிம்புநிலை அரசியல் என்றும் நீங்கள் தமிழகத்தில் மகுடம் கூட்டும் அரசியல், புகலிடத்தில் ‘இயல்பான’ ஒடுக்கப்பட்ட அடையாள அரசியலாக எழவில்லை. மாறாக, பிறிதொரு நோக்கை எய்துவதற்கான ‘கட்டமைக்கப்படும்’ அடையாள அரசியலாகவே ஒரு 'சில தனிநபர்களால்' அது உருவாக்கப்பட்டது. ‘வேறு’ நோக்கங்களை எய்துவதற்காக ‘தமது அதிகாரமையங்களைக் கட்டமைப்பதற்கு’ ஒரு சிலர் மேற்கோள்ளும் ‘அடையாள அரசியல்தான்’ இது.

ஆரம்பத்திலிருந்தே ஷோபா சக்தி, சுகன் போன்றவர்கள் முன்னெடுத்த அரசியல் புலியெதிர்ப்புப் போர்வையில்  ‘கட்டமைக்கப்பட்ட’ தம்மை முன்னுறுத்திய அடையாள அரசியல்தான். இதனை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். புலியெதிர்ப்பு மட்டுமே விடுதலை அரசியல் ஆகிவிடாது என நான் புரிந்து கொண்டிருந்ததாலேயே இதனை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். யுத்த முடிவின் பின் அது திட்டவட்டமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் ராணுவரீதியிலான அழிவினோடு புகலிட தலித் அரசியலும் விளிம்புநிலை அரசியலும் முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் அரசியல் என அவர்கள் பேசிவந்த வேஷமும் கலைந்துவிட்டது. உண்மையில் இனி இவர்களுக்கு எதிர்த்துப் போராட யாரும் இல்லை. உண்மையில் இவர்கள் தமது அடையாள அரசியலுக்காகப் போராட வேண்டுமானால், இவர்கள் எந்த அடையாளத்தையும் மறுக்கிற மகிந்தாவினது கொடும் அதிகாரத்திற்கு எதிராகவும், அவரது ஆதரவான அரசியல் சக்திகளுக்கு எதிராகவும்தான் போராட வேண்டும். மாறாக அ.மார்க்சினது தலித்திய நண்பர்களும் ஜனநாயகவாதிகளும் விளிம்புநிலையாளர்களும் இன்று மகிந்தாவுடனும், மகிந்த ஆதரவாளர்களுடனும்தான் நிற்கிறார்கள்.

அ.மார்க்ஸ் அவர்களே, தமிழகத்தில் உங்களது பேராசிரியர் என்கிற மேட்டிமை அந்தஸ்தினாலும், பெத்தாம்பெரிய படிப்பாளர் என்கிற வகையிலும் மிகப்பெரிய அதிகாரத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை, சொல்கிறபடி மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். விமர்சிப்பவர்களைக் கோமாளிகள், மூடர்கள், இந்துத்துவவாதிகள், தலித்திய விரோதிகள், இஸ்லாமிய விரோதிகள், சொத்து சேர்ப்பவர்கள் என முத்திரை குத்திக் கிலியூட்டுகிறீர்கள். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களே, தாங்கள் ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். மார்க்சியத்தின் பெயரால் நடந்ததையும் தேசியத்தின் பெயரால் நடந்ததையும் மாற்றுக் கோட்பாடு எனும் பெயரில் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பன்மைத்துவம், அடையாள அரசியல் எனப் பேசுகிறீர்கள். அடாத்தாக கியூபா அங்கோலாவை ஆக்கிரமித்தது என்கிறீர்கள். சீனாவை விமர்சிப்பதைப் பொறுத்துக் கொள்ளாத உங்களுக்கு, கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றொழித்த கொடுங்கோலன் பினோசேவை, மண்டையோட்டு நடனப் புகழ் போல்பாட்டை சீனா ஆதரித்தது என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன்.

சே குவேரா டீசேர்ட் போடுகிறவர்களை நக்கல் செய்கிறீர்கள். சே குவேராவின் திருவுருவைக் கலைக்க வேண்டும் என்கிறீர்கள். பகத்சிங்கிடம் சீக்கிய மதச்சார்பு வெளிப்பட்டது என்கிறீர்கள். வெனிசுலாவின் சேவாசை நக்கலடிக்கிறீர்கள். சிபிஐ-சிபிஎம்-சிபிஐஎம்எல் என எல்லோருக்கும் கடுமையாக ஆலோசனைகள் வழங்குகிறீர்கள். இதுவெல்லாம் அரசியல். நீங்கள் சொல்வதைப் பிறர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அந்தோனியோ நெக்ரியிலிருந்து பெனான் வரை மேற்கோள்களை உதிர்க்கிறீர்கள், இருத்தலியலையும் மார்க்சியத்தையும் ஸார்த்தர் ‘குழப்பினார்’ என்கிறீர்கள்.  அ.மார்க்ஸ் அவர்களே, இது தகவல் தொழில்நுட்பத்தின் யுகம். ஆர்வமுள்ள எவரும் எதனையும் வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் தமது கருத்துக்களை முன்வைக்கவும் முடியும். ஆகவே உங்கள் மேட்டிமைத்தனமும் அதிகாரமும் ஆணவமும் இங்கு செல்லுபடியாகாது என்பதனை தயவுகூர்ந்து புரிந்துகொள்ள முயலுங்கள்.

நாகரீகமான சொற்களில், கருத்து விவாதங்களைக் கருத்து அளவிலேயே எதிர்கொள்ளப் பழகுங்கள். நக்கலடிப்பதையும் முத்திரை குத்துவதையும், நிதானமில்லாமல் எழுதுவதையும் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். வன்முறைகளால், அது வார்த்தைகளிலாயினும், அல்லது முஷ்டிவிரல்களாலாயினும், எவரும் பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என நீங்களோ அல்லது உங்களது அடியாட்களான ஷோபா சக்தி மற்றும் சுகன் அல்லது சுகுணா திவாகர் போன்றவர்கள் கருதுவீர்களானால், அது நடவாது என்பதை மட்டும் தெளிவாக உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில், அரசன் அம்மணமாகத்தான் வருகிறார் என்பதைச் சொல்ல ‘அதிகாரம் பற்றிய அக்கறையோ பயமோ இல்லாத’ சின்னஞ்சிறு குழந்தைக்கு முடிந்திருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

- யமுனா ராஜேந்திரன் 

Pin It