வீச்சங்கள் குடியேறிய அறையுள்
தொங்கும் ஒட்டடைகளில்
தன் கவசத்தை உரித்துமாட்டி
தலை உப்பி வாய் நீண்டு
விரைத்த காதோடு நிரம்பியிருக்கும்
உண்மை விளம்பிகளின் உளறல்கள்
சிகரெட்டுகளின் சாம்பலோடு உதிர
பொற்கொல்லரின் நுட்பம் மிஞ்சிட
சிறுதுளியும் சிந்திடாது நிறைத்த கிண்ணத்துள்
போதையேற்றும் கன்னிகள் அலைவுற
மனம் ஒப்பாதவர்களை நார்நாறாக்கி
தொட்டுக்கொள்ளும் பதார்த்தங்களோடு மென்று
கடைசி மிடறின் கசப்பை விழுங்கி
அரை நிர்வாணியாய் வாசலில்
பிதற்றிக் கிடப்பவனைத் தவிர்த்து
வெளியேறுகிறது
தள்ளாடும் சொல்லொன்று.

மிச்சமிருக்கும் நாட்களில்...

உயிர்ப்பின் நீரோட்டம் முற்றும் அற்றுப்போகாதிருக்க
தீண்டுதலை  நம்மிடையே
நிகழ்த்திக் கொண்டிருக்கும் வெளி
கனத்துக்கொண்டே வருகிறது

பார்வையின் சாட்சியாக பரந்துகிடந்த ஆறுகள்
குறுகி வருகின்றன குற்றுயிரோடு

நம் பால்யத்தின் மகிழ்வில் பிறந்த கப்பலை
மிதக்கச் செய்த கால்வாய்கள்
கிடக்கின்றன புதர்மண்டி

திகட்டிய ஆனந்தத்தில்
அசைவுகொண்ட ஊஞ்சல் தொங்கிய
கிளைபெருத்த உயிர்கள்
அரிதாகிக் கொண்டிருக்கின்றன

வகைமைகள் அற்றுப்போக
தின்றழித்து பெருக்கம் கொள்கின்றது
பாலையெனும் ஒற்றை நிலம்

அவசரமாக ஆயுளை விழுங்கும்
இழப்பின் பட்டியல் நீள
புகைந்து கிடக்கும் நம்மின்
நெடுங்கோபத்தை சேகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது  விதைகளென

- ந.பெரியசாமி

Pin It