தன்னைவிட மெதுவாய்த் துடிக்கும் தன் இதயம்
அறையப்பட்டிருந்த சிலுவையை சுமந்து நகர்கிறது இளஆமை.
சபிக்கப்பட்ட வாழ்வு அதன்
ஓட்டைவிடக் கொஞ்சம் பெரிதாய் இருந்தது. ஒவ்வொரு சிற்றடிக்கும்,
விரிந்தே போய்க்கொண்டிருந்த ஆகாசத்தை அனிச்சையாய்ப் பார்த்துவிட்டு
தன்னால் காணமுடியாத கனாக்கள் இருப்பதாய்த்
தலை கவிழ்ந்தபோது அது எழும்பியது
எழும்பிப் பறந்தது
மேலே மேலே
கால் நகங்களில் கிழிபட்டுப் போகும் காற்றோடு இமைகள் உரிந்து விரைய
தன் மொழியறியா படிமங்கள் கபாலத்திரையில் நிழல்பாய்ச்சிப் பாய
நீலநிறமானது ஆமை
தரிசனத்தின் உச்சமட்டத்தில் திடுமென சரிந்து
கனவின் இடுதிரை
அவிழ அவிழ
முளைவிட்ட இமைகளோடு
கீழே கீழே விழுந்து
மலையடிவாரக் கரும்பாறையில்
சிலுவை உடைந்து சிதறியது
கவ்விவந்த செம்பழுப்புக் கழுகு பின் அதைக் கொத்தித் தின்றதையும், அதன்
சகோதர சகோதரிகள் நூற்றியிருபது ஆண்டுகள் கழித்து
அந்தமான் கடற்கரையில் ஆளுக்கு இருநூறு
முட்டைகள் இட்டுப் புதைத்து வந்ததையும்
அறியாமலே மரித்துப்போனது
ஆனாலும்.


ராஜாராணி

ராணி உட்பட எல்லோரும் வினவுகிறார்கள்
வெட்கமாய் இருக்கிறது நான்தான் ராஜா என்று சொல்ல

ராணி பாவம்
பட்டத்தை பறிகொடாதிருக்க
அவள் பிச்சைக்காரியாய் நடிக்கவேண்டியிருக்கிறது
இல்லை எப்போதும்
பிடிபட்ட கள்ளக்காதலனை நினைத்து விசும்பவேண்டும்
மந்திரியின் கண்களில் நர்த்தகித்து நர்த்தகித்து
ஆவியாகிவிட்டாள் அவள்

தளபதி எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்
ஒரு தப்பெண்ணத்திற்காய்
ஒரு தவறுக்காய்

கருவறையில் திருடிய காவலன் நகங்கடித்துவிழித்தவாறு
கள்வன் ஓடுகிறான் களியாட்டமிட்டு
மயானம் போல் விழித்திருக்கும்
ஊமைத்தெருவில்.
*
திருநாட்டில்
கொடும்பஞ்சம் கொலைப்பட்டினி
லட்சம் யுவதிகளை மோந்தயரும் மன்னனுக்கு
ஏதும் விளங்கவில்லை
ராணிக்கோ இன்னும் தீரவில்லை
சில்லறைகளைத் திருடும் பழக்கம்
மந்திரி உதட்டுச்சாயத்தைத் துடைத்துக்கொண்டிருக்க
குதிரைக்குளம்பொலியும்
வேட்டை நாய்களின் நெடுமூச்சிறைப்பும் வீதிகளை நிறைக்க

என்பும் தோலுமான மக்கள் மன்றாடிக் கசிந்தனர்
கள்வனின் பாதகமலங்களில்

தொல்நினைவில் உணர்ச்சிவசப்பட்ட அவனை
பிணையிட்டு இழுத்துச்செல்கிறது வெல்படை
பலியிடத்திற்கு.
**
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வமும்
கொழுவிருந்த பெருநாளொன்றில்
ஒட்டுமொத்த அமைச்சரவையும்
ஒருமித்த கவலை தெரிவிக்கிறது
திருடர்களின் புனர்ஜென்மாந்திர நம்பிக்கை குறித்து
***
மீண்டும் ஒரு ராஜா
மீண்டும் ஒரு ராணி
மீண்டும் மீண்டும்...

- சபரிநாதன்

Pin It