ரொம்பத் தாமதமாகத்தான் நான் கீரனூர் ஜாகிர்ராஜாவின் எழுத்துக்களை வாசிக்க வாய்த்தது.அவருடைய ‘கருத்த லெப்பை’ மற்றும் ‘மீன்காரத்தெரு’ ஆகிய இரு நாவல்களுக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாவல் பரிசு அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது. அப்போதும்கூட நான் அவருடைய நாவல்களை வாசித்திருக்கவில்லை. நடுவர்குழுத்தோழர்கள் சிறப்பாக அந்நாவல்கள் பற்றிப் பேசியது ஆர்வத்தைத்தூண்டியது.

கருத்த லெப்பையும் மீன்காரத்தெருவும் சேர்த்தே வாசித்தபோது நிமிர்ந்து உட்கார வைத்தது. இது தமிழில் ஒரு முக்கியமான எழுத்துக்காரனை அடையாளம் காட்டுகிறது என்று உடனே தோன்றியது. மூன்றாவது நாவல் துருக்கித் தொப்பியை வந்த உடனே படித்துவிட்டேன். நான்காவது நாவல் வடக்கே முறி அலிமாவையும் சீக்கிரமே படித்து விட்டேன். அதுபற்றி உட்கார்ந்து எழுதத்தான் உடனடியாக அவகாசமின்றித் தள்ளிப் போய்விட்டது.

* * *

‘‘இந்தப் பிரதியில் ஏன் இத்தனை

வீச்சமெடுக்கிறது என்று

கேட்காதீர்கள்

இந்தச் சமூக அமைப்பு

ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது

என்று வேண்டுமானால்

கேளுங்கள்ÕÕ என்று நாவலின் முகப்புப் பக்கம் வரவேற்கிறது.

வடக்கேமுறி என்கிற வீட்டில் பிறந்த அலிமா என்கிற ஒரு பெண்ணின் கதை இது என்று நினைத்து உள்ளே நுழைகிறோம். உலகம் அவளை 1.பைத்தியம், 2.திருடி, 3.கஞ்சா விற்பவள், 4.விபச்சாரி, 5.கொலைகாரி, 6.சி.ஐ.டி.ஆபீசர்,7.வாழ்ந்து கெட்டவள்,8.காதலனால் வஞ்சிக்கப்பட்டவள் 9.தலாக் கொடுக்கப்பட்டவள், 10.எய்ட்ஸ் நோயாளி, 11.அரபு ஷேக் கைவிட்ட கேஸ் 12.மாந்த்ரீகம் செய்பவள் 13.சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என்று ஆளுக்கு ஒரு விதமாகப் புரிந்து கொண்டிருந்தது. அலிமா மேற்படி பட்டியலிலுள்ள ஒவ்வொரு வேடத்துக்குக்கும் பொருந்துகிறவளாக இருந்ததும் சுவாரஸ்யமான விஷயம்தான் என்று முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதைச்சுருக்கத்தை அல்லது கதையையே சொல்லி முடித்து விடுகிறார்.இனிமேல்தான் கதையே ஆரம்பமாக வேண்டும். ஆகவே ஒரு கதை அல்ல இந்த நாவல்.ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல இந்த நாவல் என்று தன் ஆடுகளத்தை - ஆட்டத்தின் தன்மையை முதல் அத்தியாயத்தில் நமக்கும் தனக்குமாக நிர்ணயித்துக்கொள்கிறார்.இதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்தான். நாவல் நெடுகிலும் இது அல்ல நான் சொல்ல வந்தது. இதுவும் அல்ல நான் சொல்ல வந்தது என்று ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டே வருகிறார் ஒவ்வொரு அத்தியாயத்திலும். பின் எது பின் எது என்று வாசகன் பின் தொடரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக இருக்கிறது.

மேற்பட்டியலில் உள்ள 13 ரகமான மனுஷிகள் பார்வையில் இந்தச் சமகால வாழ்வைச் சொல்லிப் பார்க்கிறது இந்நாவல் என்று சொல்லலாம். அல்லது இந்த 13 ரக மனுஷியை எதிர்கொண்டவர்களின் கதையினூடாக நம்மை நாமே பார்த்துக்கொள்ளச் செய்கிறது இந்நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையில் இந்த பதிமூன்றும் அல்லாத வேறு ஒருத்திதான் அலிமா. அவள் உண்மையில் எப்படியானவள் என்பதைத் தேடிய பயணமே இந்நாவல் என்றும் சொல்லலாம்.

அலிமா ஒரு நாடோடி.கழிப்பறைச் சுவர்களில் தன் கதையைக் கரித்துண்டு கொண்டு எழுதுபவள். அதைப் பின்தொடர்ந்து பிரதியெடுத்துப் பதிப்பிக்க வேண்டும்.சராசரியாக ஒரு சிறுகதையை எழுத அவளுக்கு 50 கழிப்பறைகள் தேவைப்படுகின்றன. கரித்துண்டுகள் எத்தனை தேவைப்படும் என்பதை அவள் சொல்ல வில்லையே என்கிற கவலை எனக்கு வந்தது. ‘பட்சி’ கதையை எழுத மட்டும் 53 கழிப்பறைகள் தேவைப் பட்டன. ‘எண்ட யாத்ரா’வை எழுத அவளுக்கு 3800 கக்கூஸ்கள் தேவைப்பட்டன.

பேனாப்பிடித்து -இப்போது கணிணியின் மௌஸ் பிடித்து எழுதும் - எழுத்தாளன் என்கிற என் அகங்காரத்தின் மீது வலுவான அடியை அலிமாவின் கழிப்பறை-கரித்துண்டு படிமம் கொடுத்துவிட்டது.தொடர்ந்து வாசிக்க முடியாமல் ‘ இனி தாள்களில்தான் எழுத வேண்டும். அது துர்ப்பாக்கியம்தான்’ என்கிற வரியில் உறைந்து நின்றேன். தாள்களில் உறைந்து கிடக்கும் பிறவிகளாயிற்றே நாம். தவிர கக்கூசில் உட்கார்ந்து வாசிக்கும் வாசக மனநிலை பற்றியும் மேசை வாசகராகிய நம்மை இவ்வரிகள் யோசிக்க வைக்கின்றன.

வாழ்க்கையின் புதிர்கள் மற்றும் மனித மனம் என்னும் மர்மங்கள் நிறைந்த காட்டு வழியில் பயணித்து இந்நாவல் நம் வாழ்வை நோக்கித் தெளிவாகப் பேசுகிறது. அலிமா சிறு பிராயத்தில் கபுறுகளின் மீதேறி விளையாடும் அந்த ஒரு அத்தியாயம் தமிழ் உரைநடை இலக்கியத்தின் உன்னதமான பக்கங்கள்.

பிரம்பால் ஒவ்வொரு கல்லறையின் மீதும் அடித்து சிறுமி அலிமா எழுப்பும் கேள்விகள்.. வட்டி வாங்கினதுண்டா? உங்க பாரியாளத் தலாக் கொடுத் திங்களா? உங்க தள்ளிய கொடுமப்படுத்தினீங்களா? பாவப்பட்டவன் வயித்திலே அடிச்சீங்களா? ஒவ்வொரு கல்லறைக்கும் ஒரு கேள்வி.ம்.. சொல்லுங்கோ.. நா அல்லாக்குப் பேத்தியாக்கும்..சொல்லுங்கோ நான் அல்லாண்ட மகளாக்கும்...மரணத்தின் நெஞ்சில் பிரம்பால் அடித்து வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பும் எழுப்புதல் பக்கங்கள் அவை.

மரபான,மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இந்திய ஸ்த்ரீகளின் எல்லாவிதத் திரைகளையும் நெருப்பில் பொசுக்கிவிட்டுப் புறப்பட்ட நாடோடி அலிமாவுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது எப்போதும் தெரியாது.அவள் கால்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது.அவளுடைய கால் தடத்தையும் கக்கூஸ் சுவர் எழுத்துக்களையும் பின்பற்றிச் சென்று எழுதப்பட்டுள்ள இந்நாவல் ஒப்பனையே இல்லாத - தான் வெறுத்தவர்களை மனதார வெறுத்தும் நேசித்தவர்களை ஆழமாக நேசித்தும் வாழ்ந்த ஒரு அற்புதமான மனுஷியைப் பற்றி அவளால் நிராகரிக் கப்பட்ட ஒரு பாவப்பட்ட ஒருதலைக் காதலனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் சொல்லத் தெரிந்த அந்தக் காதலனுக்கு அலிமாவின் மனதில் இடம் பிடிக்கும் வித்தை மட்டும் பிடிபடாமல் போனதுதான் வாழ்வின் புதிர்.

அதைவிடப்பெரிய புதிர் அவளுடைய கதையை முழுவதுமாக ஒரு தன் வரலாற்று நாவலாக அவளுடைய பெரியப்பன் ‘வனத்தில்’ வீட்டில் உட்கார்ந்து ஏற்கனவே எழுதி முடித்து விட்டிருந்தான் என்பதுதான். இன்னும் அச்சில் வராத அதைப் படித்துவிட்டு அலிமாவின் பெரியம்மா சாரா தன் கணவனோடு சண்டைக்கு நிற்கிறாள்:

அலிமாவின் ஜாதகத்தை உங்களால் எப்படிக் கணிக்க முடிந்தது.

அது ஜாதகமில்லை. ஒரு புனைவு.கதை.ஜோடனை.கற்பனை.நான் ஜோதிடனில்லை.

கற்பனை எப்படி நிஜமாகும்?

புனைவுக்கும் யதார்த்தத்துக்கும் இடைவெளி அதிகமில்லை என்று சிலர் சொல்வதைப் போலிருக்கிறது உன் கேள்வி..நான் எழுத மட்டுமே செய்தேன்.

அலிமாவின் வாழ்க்கை அந்நாவலின் ஒவ்வொரு வரியின்படி அத்தனை துல்லியமாக நடந்தேறியதைப் பெரியம்மாவால் செரிக்க முடியவில்லை. எழுதும்போது அலிமா நம்ம மகளாச்சே என்று கொஞ்சம் யோசித்து எழுதியிருந்தால் அலிமாவை நாம் இழந்திருக்க மாட்டோமே என்பது அவளுடைய ஆத்திரமாக இருந்தது. அதைவிடவும் அவளுக்குப் பீதியளித்த இன்னொன்று. அவன் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலின் நாயகி சபுரா.

இப்போது சாரா கருவுற்றிருக்கிறாள். பிறக்கப்போவது பெண்குழந்தைதான் என்றும் அவள் பெயர் சபுராதான் என்றும் அவளுக்குத் தோன்றுகிறது. பிறக்கப்போகும் அந்த மகவுக்கு சபுரா என்று பேர் வைக்க ஏனோ அவளுக்குத் தோன்றுகிறது. பல்லாயிரம் தடவை அந்தப் பெயரை அழித்துப் பார்த்தும் அவள் நாவும் மனமும் சதா சபுரா  

சபுரா என்றுதான் உச்சரிக்கிறது.ஒன்று அவள் அக்கருவைக் கலைத்துவிட வேண்டும் அல்லது சபுராவின் கதையை எழுதுவதை அவன் நிறுத்த வேண்டும் என்று சாரா தன் கணவனின் சட்டையைப் பிடித்து நிற்கிறாள்.

ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து லௌகீகமாகப் பாடம் கற்றுக்கொள்ளாமல் தனியனாய்த் தவறி விழுந்த விதையாய்த் தவித்த அந்த எழுத்தாளனைப்பற்றிய ‘எழுத்தாளர்களைக் கொன்றுவிடலாம்’ என்கிற அத்தியாயம் தமிழ்ப் புனைவுலகில் முற்றிலும் புதிய ஒரு குரல் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளனாக இருக்க நேர்ந்ததன் துயரம் அல்லது கழிவிரக்கம் தாண்டிய ஒரு கர்வமும் பெருமிதமும் ‘இரக்கமற்ற காலத்தின் குரல் நான்’ என்கிற தலைநிமிர்வும் தெறிக்கும் இந்த அத்தியாயம் ஒரு புதிய அத்தியாயம்தான். அதைத்தாண்டிக் குறியீடாக இப்பக்கங்கள் உணர்த்தும் செய்திகள் ஏராளம்.இவ்விதமே இந்நாவல் முழுவதும் மர்மங்களும் முடிச்சுகளும் அவிழ்ப்புகளும் வெளிச்சங்களுமாக நிறைந்திருக்க நம் முகத்தின் மீது நாமே ஒளிபாய்ச்சிக் கொள்ளும் கூச்சத்துடன் வாசிக்க நேர்ந்தது.

அலிமாவின் பயணத்துக்கேற்ற ஒரு அநேர்கோட்டு வடிவத்தைத் தேர்வு செய்தது நாவலை மேலும் செறிவுள்ளதாக்குகிறது. சரளமாகப் பாய்ந்து வரும் சொற்பிரயோகங்களும் மொழியும் வாசக மனதை வெகுவாக வசீகரிக்கிறது.

இஸ்லாமிய வாழ்வைக் களமாகக் கொண்டு ஜாகிர் ராஜா எழுதுவது அறிந்த உலகை எழுதுவதற்காக மட்டுமே. அவரை ஒருபோதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தவே முடியாது.இஸ்லாத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கிய ‘கருத்த லெப்பை’ நாவலைப்போல தமிழில் எந்த இஸ்லாமிய எழுத்தாளரும் இதுவரை படைத்ததில்லை.

மதச்சார்பற்ற பகுத்தறிவின் குரலாக அவரது எல்லாப் படைப்புகளும் திகழ்வதைப்போலவே இந்த நாவலும் பகுத்தறிவின் வெளிச்சத்தில் வாழ்வின் புதிர்களைப் பற்றி அலிமாவை முன்வைத்து நம்மோடு பேசுகிறது.

 

வடக்கே முறி அலிமா

மருதா பதிப்பகம்

சென்னை-92

பக்கம்: 144 | ரூ. 80

Pin It