ஆராய்ச்சிகளின் முடிவில் பிரமிப்புகளும் தோன்று கின்றன; சில ஆதங்கங்களும் உண்டாகின்றன.

மக்கள் பழமொழி ஆய்வாளர் சிலருக்கு, பழமொழி உலகம் சின்னஞ்சிறு உலகமாக இருக்கிறதே என்றஆதங்கம் வந்ததுஇப்படித்தான். பழமொழிகளின் மையப்பொருள்கள் குறித்து சற்று யோசித்துப் பார்க்கிறேன். படைப்பிலக்கியம், கலைச்சொல்லாக்கம் போன்ற வழிகளைத் தவிர்த்து வேறு சில வழிகளிலும் வார்த்தைகள் பெருகுகின்றன. நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது (சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்) நண்பர்களை ‘மச்சி’ என்று அழைத்ததில்லை. எதற்கெடுத்தாலும் ‘சூப்பர்’ என்று சொல்கிற வழக்கம் இல்லை. ‘சப்பை மேட்டர்’ என்றால் அன்றைக்குப் பொருள் விளங்காது. (இன்றைக்கும் சரியாகப் பொருள் தெரியவில்லை). எப்படி என்ற வார்த்தையை ‘எப்பூடி’ என்று ராகம் போட்டுப் பேசியதும் இல்லை, எழுதியதும் இல்லை. வடிவத்தைக் குறிக்கும் பிகர் (Figuer)  என்ற வார்த்தை இன்று சினிமா விடலை மொழியில் பெண்ணைக் குறிப்பது ஏன் என்று தெரியவில்லை. கெமிஸ்டிரிக்கும் காதலுக்கும் எப்படி சம்பந்தம் உண்டானது என்றும் புரியவில்லை (எனக்கும் அவளுக்கும் கெமிஸ்டிரி ஓர்க்அவுட் ஆகல மச்சி! டிராப் பண்ணீட்டேன்! ) பழமொழி பேசும் வார்த்தைகள் - எல்லாம் சின்னஞ்சிறு உலகத்துக்குள்ளேயே வட்டமடிப்பதாக அவர்கள் கணித்தனர்.1

திரைப்படமும் தொலைக்காட்சியும் பளபளப்பான பெரிய உலகங்கள்! தினசரி புதுப்புது வார்த்தைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு இருக்கின்றன. அவிழ்த்து விடும்வார்த்தைகள் சிக்கென்று வந்து ஒட்டிக் கொள்கின்றன.

அரசியல் பாராட்டுகளிலும் வார்த்தை உலகம் ஊதிப்பருக்கிறது. சுவரொட்டிகளுக்கும், பேனர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர் மதுரை! வாசித்துப் பார்த்தால் புகழ்ச்சி மழை! பெரும்பாலும் தம்பட்டம்! புதிய புனைவுகளுக்கும், மொழி விளையாட்டுகளுக்கும் சுவரொட்டி,பேனர் வகையறாக்கள் வசதியான மைதானம்!

* தென் தமிழகத்தின் கணினி மையம் நீ!

* தலைவா! எங்களின் ஈமெயிலே!

* எங்கள் இதயக் குரலின் செல்போனே!

* அரசியல் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரே!

இப்போது நாட்டுப்புற உலகத்துக்குத் திரும்புகிறேன். ஆயவாளர்கள் சொன்ன ‘சிறிய உலகம்’! சினிமா, அரசியல் களங்களின் வீச்சு இங்கில்லை. பழகிப்போன வார்த்தைகளின் சின்னஞ்சிறு உலகம்!

சொலவடைத் தமிழை வாரி எடுக்கிறேன். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான்! உதாரணம் சொல்ல, சொலவடைகளில் வருபவை அன்றாடம் பயன்படுத்தும் சின்னச் சின்னப் பொருள்கள். அவற்றில் ஒன்று ‘உழக்கு’. சிறிய அளவைச் சுட்டும் போதெல்லாம் பெரும்பாலும் வழக்கு வந்துவிடுகிறது. சில நேரங்களில் ‘ஆழாக்கு’. உழக்குச்சொலவடைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

* ஊசினமொச்சையில -/ ஒழக்கு வாங்கமாட்டாதவன்

பாம்பே அல்வாயில / பத்து டன் கேட்டானாம்!

* ஒழக்கரிசி அன்னதானம்! / விடியவிடிய மேளதாளம்!

* கறக்கிறது ஒழக்கு / ஒதையிறது பல்லுப்போக!

* ஒழக்கு உள்ளூருக்கு / பதக்கு பரதேசிக்கு!

(பதக்கு - இரண்டு மரக்கால் அளவு. மரக்கால் - 8 படி. இது இடத்துக்கு இடம் மாறுபடும்)

* ஆழாக்கரிசி! மூழாக்குப் பானை!

முதலியார் வர்ற ஜம்பத்தைப் பாரு!

செயல்பாடுகளை விமர்சிக்கையிலும், நாக்குக்கு அவசரமாகக் கிடைக்கும் வார்த்தை உழக்குதான்!

* தவிடு திங்கிற கழுதைக்கு / ஓழக்குப் பிடிக்க ஏலாது! / * குருடி அவல் எடுக்க / ஒழக்குப் பிடிக்க ஒரு ஆளு! / விளக்குப் பிடிக்க ஒரு ஆளு!

அரசியல், சினிமா போல நாட்டுப்புற உலகில் தம்பட்டம் கிடையாது. தங்களைத் தாங்களே சுருக்கிக் கொள்வார்கள். அவர்களின் உலகமே உழக்களவு தானாம்! உயிரும் உழக்களவுதான்!

* ஒழக்குக்குள்ள கிழக்கா? மேக்கா? / உருண்டுக்கிட்டு கெடக்கேன்! / * ஒழக்கு உயிருக்குப் பதக்கு நோக்காடு!

நியாயம் பேசுகிற போதும் அளவுகோலாக வருவது உழக்குதான்!

கலப்பாலை ஒருமிக்க குடிச்ச பூனைய ஒழக்காகிலும் கறக்கச் சொன்னா கறக்குமா?

நக்கல் பேச்சுகளின் போது ஏகத்துக்கு வருவதும் உழக்குதான்!

அப்படிச் சொல்லு வழக்கை! / அவ கையில கொடு ஒழக்கை! / அவ போகட்டும் கெழக்கே!

சின்னஞ் சிறு உழக்கை வைத்து இத்தனை பேச்சு பேச முடியுமா? என்ன அழகான உழக்குத் தமிழ்!

உழக்கு மட்டுமா? துடுப்பு, அகப்பை, விளக்குமாறு என அவர்களின் வார்த்தை உலகம் வீட்டுக்குள் கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள்களோடு பின்னிக் கிடக்கிறது. துடுப்பு என்பது களிகிண்டும் அகப்பை. அது, பேச்சுக்களின் மற்றொரு நண்பன்-உழக்கைப் போல!

துடுப்பு வழியாகக் கிளம்பிய விமர்சனக் கேள்வி இது:

துடுப்பு இருக்க / கை ஏன் நோகμம்?

துடுப்பு ஆயுதமாகும் தருணம் இது: / கடுப்பெடுத்த மாமியா / துடுப்பெடுத்து வந்தாளாம்! / வசைபாடுகையில் சுழற்றிய துடுப்பு இது. / களி கிண்டும் துடுப்பே! / ஒனக்கென்ன வெறைப்பே!

கடைசிச் சொலவடையில் வந்த துடுப்பு ஒரு மனிதனை அல்லது மனுசியை உருவகமாகச் சுட்டியது. காவியங்களில் காளைகளும், வேங்கைகளும், தோகை (மயில்)களும் மனிதர்களைச் சுட்ட சொலவடைகளில் அகப்பைகளும், விளக்குமாறுகளும் மனிதர்களைச் சுட்டுகின்றன.

* வீடு பூரா / வெளக்குமாறு! / * சொருகிக் கிடந்த அகப்பையும் / சோறு அள்ளப் புறப்பட்டாச்சு! / * திருப்பதிக்குப் போனாலும் / அகப்பை அரைக்காசு! / * நாட்டாமை செய்யுதாம் / ஆட்டுப் புழுக்கை!

கணக்குப் பாக்குதாம் / கட்டை வெளக்குமாறு!

சிறு பொருள்களைப் போல, சிறு உயிர்களும் மனிதர்களாகின்றன. அடிக்கடி மனிதனின் குறியீடாக வரும் உயிர் ‘எலி’.

* எலிக்கு எதுக்கு / இன்ஸ்பெக்டரு வேலை?

* அறுப்புக் காலத்தில் / எலிக்கும் அஞ்சு கூத்தியா!

எவ்வளவு சிறு உலகம்! ஆனால் எப்படிப்பட்ட உயிர்த்துடிப்போடு இருக்கிறது? எவ்வளவு இயல்பாக இருக்கிறது!

காலம் காலமாய் நாம் ஜீவனற்ற செயற்கைப் பேச்சுகளுக்கே பழகிவிட்டோம். இலக்கியம் தொடங்கி வைத்த செயற்கைப் பேச்சுகள்!

கண்ணீரோடும், கையில் சிலம்போடும் அரசவைக்கு வந்த கண்ணகியை அரசன் ‘மடக்கொடி’ என்றும் - ‘தேமொழி’ என்றும் விளித்துப் பேசுவான்.2 கோசலை, கைகேயி போன்ற வயதான தாயாரையும் கூட தோகை, மான் என்றே கம்பர் குறிப்பிடுவார்.

படிக்கிற காலத்தில் வகுப்பறையில் நான் அதிகம் கேள்விகள் கேட்டதில்லை. ஆனால் முதுகலை வகுப்பில் ஆசிரியரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி இன்னும் நினைவில் இருக்கிறது. ‘கண்ணீர் சிந்தி வந்த கண்ணகியை விளிக்க காதலர் உலக வார்த்தைகளான மடக்கொடி, தேமொழி போன்றவற்றை அரசன் பயன் படுத்துவதேன்?’ என்று ஆசிரியரிடம் கேட்டேன். ஆசிரியர் சுருக்கமாக ‘இது செய்யுள் மரபு’ என்றார்.

என் கேள்வி, இன்னொரு மாணவனையும் எழுப்பிவிட்டது. அவன் திராவிட முன்னேற்றக் கழகத்து ஆர்வலன். அண்ணாவின் கட்டுரைகளைப் படித்தவன். அவன் எழுந்து ‘துடுப்பு வீசும் போது தெறித்த நீர்த்திவலைகள் பெண்களின் மெல்லிய உடைகளில் பட்டு அவர்களின் உள்ளுறுப்புகள் தெரியக் கண்டு படகு செலுத்தும் எயினார்கள் களைப்பு நீங்கி உற்சாகம் பெறுவதாகக் கம்பர் பாடியுள்ளாரே!3 இதுவும் செய்யுள் மரபுதானா?’ என்று கேட்டான். ஆசிரியர் முகம் சுருங்கிவிட்டது என்று சொல்லத் தேவையில்லை. ஆமாம்! என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் கடுப்போடு அசைத்தார்.

செயற்கையான - மிகையான தமிழ்ப்பேச்சுகள் எல்லாம் நமக்கு உறுத்துவதில்லை. மாறாகச் சில நேரங்களில் இனிப்பதுமுண்டு.

ஆனால், சொலவடையின் இயல்பான, நேரடிப்பேச்சு ஒரு மாதிரியான நெருடலை உண்டு பண்ணியதைப் பல முகங்களில் - பலர் பேச்சுகளில் - பலர் எழுத்துகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு மிதிபட்டுக் கிடக்கும் மனிதனுக்கு ‘‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து’’ என்பது போல நடைமுறை சாதுர்யங்களைப் பரிந்துரைக்கும் சொலவடைகளின் பொருளைத் தங்கள் மேதாவித்தனம் கொண்டு திருத்திய தமிழ்க் காவலர்களின் பட்டியல் நீளமானது.

வெடுக்கெனப் பேசும் சில சொலவடைகளைச் சொல்லும் போது, பிட்டத்தில் முள் தைத்ததைப் போல சிலர் நெளிந்ததையும் பார்ததிருக்கிறேன். பிறருக்கு விதி வகுத்து, தான் கட்டுப்பாடற்றுத் திரியும் அதிகாரத்தை விமர்சிக்கும் இந்தச் சொலவடை ஓர் உதாரணம்:

எல்லோரையும் சொல்லி

ராஜா குசு விட்டானாம்!

ஒரு பல்கலைக் கழக அரங்கில் இந்தச் சொலவடையைச் சொன்னபோது சிலருக்குப் பசி போய்விட்டது.

உழக்குத் தமிழ் சிறிய உலகத் தமிழ்தான்! ஆனால், உயிருள்ள தமிழ். அதனால் உறுத்துகிறது; காரம் ஏறி உறைக்கிறது; நீவி விடும் தமிழுக்குப் பழக்கப்பட்டவரைக் கொஞ்சம் குத்தவும் செய்கிறது! * * *

அடிக்குறிப்புகள்

1. Archer Taylor, The Proverbs, p 88..

2. சிலப்பதிகாரம், வழக்குரைகாதை.

3. கம்பராமாயணம், குகப்படலம்.

Pin It